தொடங்குதல்…

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

வெண்முரசு வாசிக்க வேண்டும் என்று ஆவல் இருந்தாலும், பக்கங்களின் எண்ணிக்கையை நினைத்து தள்ளி போட்டுக்கொண்டே இருந்தேன். மேலும் விஷ்ணுபுரம் ஓரளவு வாசித்து அதை பற்றி யோசித்ததில் புரிந்தும்(?) புரியாமலும் குழம்பி பாதியில் நிறுத்திவிட்டேன். குழு வாசிப்பும் பழக்கமில்லாததால் ஒரு பரிசோதனை முயற்சியாக தான் குழுவில் இணைந்தேன், முடிந்த வரை தொடர்வோம் என்று நினைத்து. வெற்றிகரமாக முதல் நாவலை குழு வாசிப்பில் முடித்தது சந்தோஷம். சரியாக வழிநடத்தும் அட்மின் அவர்களுக்கு நன்றி.

சில அத்தியாயங்கள் படிக்க சுவாரஸ்யமாகவும், சிலது கடனே என்று படித்தது மாதிரி நினைவு. நீங்கள் கேட்டு கொண்டது போல் விமர்சனம் எழுத கதைமாந்தர் பெயர்களை குறித்து வைத்து கொள்ளவும் இல்லை, சில பெயர்கள் நினைவில் இல்லை. சில அத்தியாயங்கள் மிக குழப்பமாகவே இருந்தது எனக்கு. இனி வரும் அத்தியாயங்களில் அதற்கான விடை கிடைக்கலாம் என்று அமைதியாகி விட்டேன்.

சுருக்கமாக முதற் கனல் பற்றி இப்போது தோன்றுவது,

ஜெயமோகனின் எழுத்தை மிகவும் ரசித்தேன். எத்தனை அழகாக அழுத்தமாக தத்துவார்த்தமாக அணுகி இருக்கிறார் என்று வியப்பாக தான் இருக்குது. நதி மூலம் ரிஷி மூலம் மட்டும் அல்ல, அரசமூலமும் அராயகூடாது போலிருக்கு. வாரிசில் அத்தனை அறம் மீறிய செயல்கள். கோபமாகவும் பரிதாபமாகவும் அருவெறுப்பாகவும் தோன்றியது. பல அரசியரின் கண்ணீரில் நீந்தி தான் மாபெரும் இதிகாசம் உருவாகியிருக்கிறது போல. இனி வரும் காலங்களில் எத்தனை எத்தனை பெண்களின் இயலாமையை கருப்பைவலியை படிக்க போகிறோமோ என்று நினைத்தாலே ஆயாசமாக இருக்கிறது. விவேகமற்ற ஒரு வாக்குறுதிக்காக வாழ் முழுவதும் use and throw வாக மாறிய பீஷ்மரின் நிலை பரிதாபத்துகுரியது. பீஷ்மர் அம்பையின் உரையாடல் அருமை என்றால் விசித்திரவீரியனுக்கும் அம்பிகையின் உரையாடல் பேரழகு. உடல்நலத்தில் குன்றி இருந்தாலும் உள்ளநலத்தில் ஆண்மை தெறிக்கின்றது. காலக்குறைவு அரண்மனையிலும் அவனை ஞானி ஆக்கியிருக்கிறது.

மகன், தோழி, பணிப்பெண், பீஷ்மர், வியாசர் என எல்லோரிடம் நடக்கும் சத்தியவதியின் உரையாடல் அரச நாற்காலியின் குள்ள நரித்தனத்தை உணர்த்தியது.

நாவலின் தொடக்கத்தில் வரும் ஆஸ்த்தீகன் &co வை முழுவதுமாக மறந்த நிலையில் அவர்களை வைத்து முடித்திருப்பது ஒரு முழுமை தன்மையை காட்டியது

லக்‌ஷ்மி

வாசிப்பை நேசிப்போம் 

வெண்முரசுபதிவுகள்_முதற்கனல்

முந்தைய கட்டுரைஇன்று கோவையில் பிரம்மானந்தர் சந்திப்பு
அடுத்த கட்டுரைஇன்கடுங்கள்- கடிதம்