வாசகன், எழுத்தாளன் எனும் நிலைகள்

அன்புள்ள ஜெ

இப்போது என்ன படித்துக்கொண்டிருக்கிறீர்கள்?

என்னுடைய ஒரு சந்தேகம். புரியாமல் கேட்கிறேன் என்றால் கோபம் வேண்டாம். நீங்கள் எழுதிய ஒரு கருத்து படித்தேன். ‘புகழுக்காக எழுதுவது இலக்கியம் அல்லமக்கள் ஏற்பு இலக்கியத்திற்கு ஒரு நிபந்தனையே அல்லசமகால மதிப்பும் இலக்கியத்திற்கு முக்கியம் அல்லஉண்மையிலேயே இங்கு எவரிடமிருந்தும் எதையும் நான் எதிர்பார்க்கவில்லை. அங்கீகாரம்புகழ்பணம் எதையும்இவர்களுக்கு அளித்துச்செல்ல வந்தவனே ஒழிய பெற்றுக்கொள்ள வந்தவன் அல்ல என்னும் தன்னுணர்வே என்னை ஆள்கிறது’ (பாமரரின் வெறுப்பை எதிர்கொள்ளுதல்)

இது எல்லாருக்கும் சாத்தியமாகுமா? அப்படி இருந்து எழுதுவதே முக்கியம் என்றால் ஏன் நீங்கள் விருதுகள் அளிக்கிறீர்கள்? ஏன் எழுத்தாளர்களைக் கௌரவிக்கிறீர்கள்? நீங்கள் வாசகர்களை நோக்கித்தானே எழுதுகிறீர்கள்?

ஜி.சாந்தகுமார்

அன்புள்ள சாந்தகுமார்,

இப்போது படித்துக்கொண்டிருப்பது என்ன என்று கேட்டதும் ஒரு மாதிரி குழம்பிவிட்டேன். என் வாசிப்புகள் மிக சிடுக்கானவை. தஸ்தயேவ்ஸ்கி, டால்ஸ்டாய் ஆகியவற்றுடன் டெக்ஸ் வில்லர் காமிக்ஸ். இப்படி வாசிக்கலாமா என்றால் நான் ஒன்றில் இருந்து கொஞ்சம் இறங்கி இன்னொன்றுக்குச் செல்லவேண்டியிருக்கிறது என்பதே பதில்.

நான் சொன்ன அக்கருத்தை திரும்பத் திரும்ப பல முறை சொல்லியிருக்கிறேன். ஆனால் நம் சூழலில் இதைப்போன்ற கருத்துக்களுக்கு இயல்பான புரிதல்கள் அமைவதில்லை. நாம் வாழும் உலகியல்சூழலின் பொதுமனநிலைக்கு நேர் எதிரான மனநிலை இது. ஆகவே சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியுள்ளது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை முற்றிலும் புதிய வாசகர்கள் வந்து அதே கேள்வியைக் கேட்கிறார்கள்.

நான் சொல்லியிருப்பது எந்த ஒரு இலக்கிய எழுத்தாளனும் கொள்ளவேண்டிய மனநிலையைத்தான். இலக்கியம் என்பது அந்த மனநிலையில் இருந்துதான் உருவாக முடியும். தொடர்ச்சியாக இலக்கியச் சூழலில் சொல்லப்பட்டுவரும் கருத்துதான் அது.

சுந்தர ராமசாமியிடம் 30 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் சொன்னார். ‘நீங்க மாயக் காமஉறுப்புகளை மாட்டிக்கிட்டு நம்ம மேலே உரசிட்டிருக்கிற ஜென்மங்கள்னு எழுத்தாளர்களைச் சொல்றீங்க… அநாகரீகமா இருக்கு”

“இருந்துட்டு போகட்டும்… கொஞ்சம் அநாகரீகமாவே இருப்போம்னு எழுதினதுதான்” என்றார் சு.ரா.

“அந்த எழுத்தாளர்களோட வாசகர்கள் உங்களை வாசிக்க மாட்டாங்க”

“அதனாலே எனக்கு என்ன நஷ்டம்?”

“உங்கள அவங்க வெறுப்பாங்க…உங்க புக் எல்லாம் விக்காது…”

“நான் என்ன பண்ணணும்னு சொல்றீங்க?”

“ஜனங்களுக்குப் பிடிக்கிறது மாதிரி எழுத்தாளர் எழுதணும்ல? இல்லேன்னா வாசகர்கள் வெலகிடுவாங்கள்ல…”

சட்டென்று சீற்றம் கொண்டு சு.ரா சொன்னார். “எனக்கும் பொதுஜனங்களுக்கும் நடுவிலே எந்த ஒப்பந்தமும் கெடையாது. வாசிக்கிறவங்க எனக்கு ஒண்ணும் குடுக்கலை. நான்தான் அவங்களுக்கு குடுக்க வந்திருக்கேன். இங்க யார்  கிட்டே இருந்தும் எனக்கு ஒண்ணுமே வேண்டியதில்லை”

வெவ்வேறு கட்டங்களில் எல்லா நல்ல இலக்கியவாதிகளும் அதைச் சொல்லியிருப்பார்கள். அந்த மனநிலை இல்லையேல் எழுதவே முடியாது.

ஆனால் அது எளியது அல்ல. இன்று நான் சந்திக்கும் புதிய எழுத்தாளர்களிடம்கூட, ஒரே ஒரு கதை எழுதியவர்களிடம்கூட, இதையே சொல்கிறேன். அண்மையில் புதியவாசகர் சந்திப்பிலும் அதைச் சொன்னேன் “கதைகளையும் கருத்துக்களையும் கலையையும் இந்தப் பண்பாட்டுக்குக் குடுத்திட்டுப் போக வந்தவர் நீங்க. அதுக்குப் பதிலா திரும்ப  எதையுமே எதிர்பார்க்கவேண்டாம். அப்டி உங்களை வைச்சுக்கிடுங்க. அந்த நிமிர்வு நீங்க சந்திக்கிற எல்லாவகை அற்பத்தனங்களையும் சோர்வுகளையும் எதிர்கொள்ளவைக்கும்”

ஏனென்றால் நாம் வாழ்ந்துகொண்டிருப்பது அத்தகைய சமூகத்தில். இங்கே அறிவியக்கத்திற்கே மதிப்பில்லை. இலக்கியம் மிகக்குறைவானவர்களாலேயே வாசிக்கப்படுகிறது. ஏதேனும் ஒரு கட்டத்தில் ‘எழுதி என்னத்தைக் கண்டேன்?’ என்று நினைக்க ஆரம்பித்துவிட்டால் அதன்பின் இலக்கியம் உருவாகாது. இழப்புணர்வும் சோர்வும் அறுதியாகப் பெரும் கசப்புமே எஞ்சும்.

அத்துடன் இங்குள்ள பாமரக்கும்பல் அறிவியக்கத்தை அஞ்சுகிறது. அதை மட்டம்தட்ட, இழிவுசெய்ய ஒரு தருணத்தையும் விடுவதில்லை. இது மிகச்சிறு சூழல் என்பதனால் எழுதி ஏற்படைபவர் சிலர் எனில் ஏற்படையாதவர்கள், எழுதவும் இயலாதவர் மிகப்பலர். அவர்களின் காழ்ப்புகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆக, இங்கே எழுதி ஒருவன் ஈட்டுவது என்னவென்றால் அந்த வசைகளாகவே இருக்கும்.

அத்துடனொன்று, உண்மையில் இலக்கிய இயக்கமென்பது மிகச்சிக்கலான ஓர் அறிவுச்செயல்பாடு. பலநூறு முரணியக்கங்களின் தொகை அது. நாம் செய்யும் பணியின் விளைவு உண்மையில் என்ன என்று நம்மால் காணவோ மதிப்பிடவோ முடியாது. எங்கோ ஒரு நல்விளைவு இருக்கிறது என நம்பிச் செயல்படவேண்டியதுதான். ஆகவேதான் அந்த ஆப்தவாக்கியம் “Be the giver”

எல்லா எழுத்தாளர்களும் வாசகர்களை நோக்கியே எழுதுகிறார்கள். ஆனால் வாசக ஏற்புக்காக, வாசகன் விரும்புவனவற்றை எழுதுபவன் எழுத்தாளன் அல்ல. எழுத்தாளன் மனதில் ஓர் இலட்சியவாசகன் இருக்கிறான். அது ஓர் உருவகம்தான். அந்த உருவகத்தை நோக்கியே எழுத்தாளன் பேசுகிறான். அந்த இலட்சியவாசகன் வெறும் மாயையாகக்கூட இருக்கலாம். புதுமைப்பித்தன் சொன்னதுபோல இன்னும் உருவாகி வராதவனாகவும் இருக்கலாம். அவனை நோக்கியே பேசவேண்டும்.

மற்றபடி பாராட்டும், விமர்சனமுமாக கண்முன் நிறைந்திருக்கும் வாசகப்பரப்பை உத்தேசித்து எழுதினால் நாம் நமக்குரியதை எழுதவே முடியாது. எவ்வளவோ காரணங்களுக்காக எழுத்தாளன் எழுதலாம். தன் அகத்தேடலுக்காக, தன்னை முன்வைப்பதற்காக, தன் உணர்ச்சிகளைக் கொட்டுவதற்காக, தன் கருத்துக்களை வலியுறுத்துவதற்காக. ஏன், வெறுமே தன்னை உற்சாகப்படுத்திக் கொள்வதற்காகக்கூட கதைகள் எழுதலாம். நான் சலிப்பாக உணர்ந்தாலே ஏதாவது கதை எழுத ஆரம்பிப்பேன். என்னைப் பொறுத்தவரை கதை எழுதுவதென்பது முதன்மையாக என் ரசனைக்காகவே. ஆனால் வாசகனை மகிழ்விக்கும் நோக்கம் வந்துவிட்டதென்றால் இலக்கியம் இல்லாமலாக ஆரம்பிக்கும். வாசகனின் ஆதிக்கம் எழுத்தை சிதைக்கத் தொடங்கும்.   

‘பண்பாட்டுக்குக் கொடுத்துவிட்டுச் செல்ல வந்துள்ளேன்’ என்ற தன்னுணர்வு ஆணவம் அல்ல, அதுவே இலக்கியவாதியின் ஆளுமையை உருவாக்கும் அடிப்படை மனநிலை. எதையேனும் எதிர்பார்த்து அலைக்கழியும் எளிய எழுத்தாளர்களுண்டு. அவர்களுக்கு இந்த மனநிலை புரியாது. இலக்கியவாதிகளேகூட இந்த மனநிலையை தங்களுக்குள் தாங்களே சொல்லிச் சொல்லி நிறுத்திக்கொண்டாலொழிய ஆழமாக அந்த நிமிர்வு உருவாகாது. முதுமையில் ‘எழுதிந நேரத்திலே வேறென்னமாம் செஞ்சிருக்கலாம்’  என்று என்னிடம் புலம்பிய தீவிர இலக்கியவாதிகள் பலருண்டு.

எனில் ஏன் விருது அளிக்கிறோம்? எதையும் எதிர்பார்க்காமல், ‘அளித்துவிட்டுச் செல்ல வந்தேன்’ என்ற நிலையில் இருப்பது எழுத்தாளனின் மனநிலை. ஆனால் அவ்வாறு தன் பங்கை பண்பாட்டுக்கு அளித்தவர்களுக்கு மதிப்பும், கௌரவமும் அளிப்பதுதான் வாசகர்களின் மனநிலையாக இருக்கவேண்டும்.  ஒட்டுமொத்தச் சமூகம் அளிக்காததை நான் அளிப்பேன் என உணர்பவனே நல்ல வாசகன்.

நான் எழுத்தாளனாக நின்று விருதளிப்பதில்லை,  இலக்கியத்தில் என்னை  வாசகனாகவே உணர்கிறேன். என்னைப்போல் உணரும் மற்ற வாசகர்களும் இணைந்து ஒரு வாசகச் சமூகமாக நின்றுதான் எங்கள் விருதுகள் அளிக்கப்படுகின்றன. ஓர் இலக்கியவாதிக்கு அளிக்கப்படும் மிகச்சிறந்த விருது வாசகச்சமூகத்தால் அளிக்கப்படுவதே.

இப்படிச் சொல்கிறேன். எழுத்தாளனாக நான் எதையும் இந்தச் சமூகத்தில் இருந்து எதிர்பார்க்கவில்லை. என்னால் இயன்றதை எழுதி  இங்குள்ள மொழிக்கும் பண்பாட்டுக்கும் அளித்துவிட்டுச் செல்வதே என் பணி.  இங்குள்ள பாமரர் என் உலகிலேயே இல்லை. அந்நிமிர்வே என் ஆற்றல். அந்நிமிர்வால்தான் நான் இலக்கியமென்னும் இயக்கம் மேல் பெரும்பற்று கொண்டிருக்கிறேன். ஆகவே இங்கிருக்கும் படைப்பாளிகள் மேல் பெரும் பிரியமும், சாதனையாளர்கள் முன் பணிவும் கொண்டிருக்கிறேன். அந்நிமிர்வும் இப்பணிவும் ஒரே மனநிலையின் இரண்டு பக்கங்கள்தான்.

இந்த மனநிலைதான் சமூகசேவையாற்றுபவர்களுக்கும் தேவை. கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதனோ சிவராஜோ எந்த ஏற்புக்காகவும் பணியாற்றவில்லை. எதையும் திரும்ப எதிர்பார்க்கவில்லை. ஆனால் அளிப்பது நம் கடமை. அந்த விருதுகளோ ஏற்புகளோ அவர்கள் பெறும் பிரதிபலன்கள் அல்ல, அவர்கள் மேல் நாம் கொண்டுள்ள மதிப்பின் சின்னங்கள் மட்டுமே. நாம் கொடுத்தோம் அவர்கள் பெற்றார்கள் என்னும் மனநிலையே இருக்கலாகாது. விஷ்ணுபுரம் விருதுகள் ஒவ்வொரு முறையும் அந்த ஆசிரியர் முன் பணிந்துதான் அளிக்கப்படுகின்றன.

இன்னொரு விரிந்த பார்வையில் தனிவாழ்க்கை, குடும்பவாழ்க்கை ஆகியவற்றில்கூட ‘அளித்துச்செல்பவன் நான்’ என்னும் மனநிலை அளிக்கும் விடுதலையுணர்வு மகத்தானது. இயல்பாக அமையாதுதான். ஆனால் நமக்கு நாமே சொல்லிச் சொல்லி நம்மை நாமே ஏற்கச்செய்ய முடியும்.

இதையே திரும்பத் திரும்ப வெவ்வேறு சொற்களில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ‘விளைவை கணக்கிடாமல், தனக்குரிய பயனைக் கருதாமல் செய்யப்படும் செயல்களே யோகம் எனப்படுகின்றன. யோகமெனச் செய்யப்படும் செயல்கள் மட்டுமே மெய்யான ஊக்கத்தையும் நிறைவையும் அளிப்பவை’

ஜெ

முந்தைய கட்டுரைவாசிப்பை காட்சியாக்குதல்
அடுத்த கட்டுரைபேரன்னைகள், கடிதம்