இன்கடுங்கள்- கடிதம்

சங்கசித்திரங்கள் மின்னூல் வாங்க

சங்கசித்திரங்கள் வாங்க 

அன்புள்ள ஆசிரியருக்கு

இறுதி வாக்கில் நான் வாங்கிய முதல் நூலான தங்களின் சங்கச் சித்திரங்களை சில நாட்களுக்கு முன்புதான் வாசித்து முடித்தேன். கொஞ்சம் நீண்டு போய்விட்டது (ஒரு பதிற்றாண்டு என்பது கொஞ்சமல்ல, மிக நீண்ட காலம் தானோ!). ஏழெட்டுப் பாடல்களைப் படித்து விட்டு ஒரு பெரும் இடைவெளிக்குப் பிறகு அடுத்த ஏழெட்டுப் பாடல்களென பல கட்டங்களிலாக படித்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு பாடலும் ஒரு தனி அனுபவமாதலால் தொடர்ந்து படிக்கவேண்டிய கட்டாயம் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது நமக்குப்பிடித்த பண்டத்தை ஒரே அடியாகத் தீர்த்துவிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக பையத்தின்று தீர்ப்பது போல.

பள்ளிநாட்களுக்குப் பிறகான மிகநீண்ட இடைவெளிக்குப்பின்  இந்நூலில்தான் சங்கப்பாடல்களை மீண்டும் எதிர்கொண்டேன். தொடக்கத்தில் கவிதைக்குள் செல்வதே மிகக்கடினமாகத்தான் இருந்தது. ஆனால் பழந்தமிழின் இனிமையும் கூடவே வந்தது. பழந்தமிழில் பழக்கப்படாதவர்களுக்கு தொடக்ககாலக் கடுமையையும் என்றும் யார்க்கும் இனிமையையும் ஒருசேர வழங்கவல்ல சங்கப்பாடல்களுக்கு இந்நூலின் முதல் பாடலில்வரும் ‘இன்கடுங்கள்’  என்ற சொல்லாட்சியைப் பெயராகச் சூட்டினால் தகும் என்றே நினைக்கிறேன். சில பாடல்களைக் கடந்தபின் (தங்களின் வாழ்வனுபவங்களோடு) மெல்ல கடுமை நீங்கி பின் மயங்கித் திளைக்கச் செய்யும் ‘இன் கள்’ளாக மாறிவிடுவது விந்தைதான். கள்ளின் பழமை கூடுந்தோறும் பணத்தை வாரியிறைத்து வாங்கும் இவ்வையத்தாரின் பித்தை குடியாமக்கள் அறியவிரும்பினால் சங்கப்பாடல்கள் என்னும் பழம்பெரும் கள்ளை புதிய கோப்பையில்/ கோணத்தில் சுவைக்கத்தரும் இந்நூலை நுகர்தலே சிறந்த வழி.

தென்கோடியில் தங்களின் நண்பருடன் தொடங்கும் முதல்பாடலிலிருந்து தமிழகம் மற்றும் கேரளத்தின் பல பகுதிகளைக் கடந்து இமையமலை கனடா என நீளும் பரந்துபட்ட தங்களின் அனுபவங்களினூடாக கவிதைகளைப் பொருள் கொள்வதும் ஒரு இனிய பயணம் தான்.  எத்தனை மனிதர்கள் எத்தனை வாழ்க்கைகள், இனிமைகள், இழப்புகள், கொண்டாட்டங்கள், பதற்றங்கள், மௌனங்கள். நண்பனோடு சுற்றித்திரியும் இளமைக்காலம், கால்கள் மண்ணில் ஊன்றாத காதல் தருணங்கள், கடலினும் பெரிதான கடத்தற்கரிய கனமிகு கங்குல்கள், அல்லலுற்று அலைக்கழியும் ஆன்மாவை ஆற்றுப்படுத்தும் ஓர் அரிய இரவு எனத் தங்கள் சொந்த வாழ்வின் உச்சத் தருணங்களை இலட்சக்கணக்கான வாசகர்களும் கவியனுபவத்தோடு உணர்ந்திருப்பார்கள். வாழ்க்கை கவிதையை உணரச்செய்கிறது. கவிதை வாழ்க்கைத் தருணங்களை அழகாக்குகிறது.

இந்நூலின் வாசிப்பில் சில விளையாட்டுத் தருணங்களும் இருந்தனபள்ளி நாட்களில் பழந்தமிழ்ப் பாடல்களோடு நீயாநானாஎனப் போட்டிபோடும் ஒரு வழக்கம் உண்டுபாடநூல்களில் பாடல்கள் யாப்பின் சிதைவுறா வடிவிலேயே வழங்கப்படுவது மாணவர்களை அவற்றிலிருந்து விலகிச்செல்ல வைக்கும் காரணிகளில் ஒன்றுஅச்சொற்களை சரியாக சீர்பிரித்து பொருள்கொண்டுவிட்டாலே போதும்பின் அது நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும்அரசு பள்ளியாதலால் அன்றெல்லாம் ஆசிரியர்கள் வராத பாடவேளையென்று நாளுக்கு ஒன்றேனும் உண்டாகும்அந்நேர பொழுதுபோக்குகளில் ஒன்றுசெய்யுள்களை சீர் பிரித்து பார்ப்பதுசரியாக கண்டடைந்தால் ஒரு சிறு தற்பாராட்டன்றி வேறொரு வெகுமதியும் இல்லைஅந்தவழக்கம் இன்னும் விட்டுப்போகவில்லை என்றே நினைக்கிறேன்.

இந்நூலில் ஏறக்குறைய எல்லா இடங்களிலும் எளிதில் பொருள்கொள்ளும் வண்ணம் சொற்களைப் பிரித்து அளித்திருப்பதைக் காணமுடிகிறதுஇருப்பினும் பழக்கதோஷத்தில் தேவையில்லாமல் மோதி மூக்கடிபட்ட இடங்களும் உண்டுஉதாரணமாக

முதைச் சுவற் கலித்த முற்றா இளம்புல்

மூதா தைவந் தாங்கு

விருந்தே காமம் பெருந்தோ ளோயே

என்ற பாடலில் நமக்குத் தெரிந்த சொற்களைக்கொண்டு  சீர் பிரிக்க முயன்று ‘மூதாதை வந்தாங்கு’ என்று பிரித்துத் தோற்றதுதான்  மிச்சம்.’மூதா (முதிய ஆ/ பசு)’ என ஏற்கனவே அது சரியாகத்தான் பிரிக்கப்பட்டுள்ளது என்றும் ‘தைவரல்’ என்ற அன்றைய புதுவரவானது வருடுதல்/ தடவுதல் என்பதைச் சுட்டுகிறது என்றும் பின்னர் வரும் தங்களின் ‘உரையினிடையிட்ட பொழிப்புப்பா’வைக்  கண்டபிறகுதான் தெளிந்தது.

[இக்காலத்தில் கிடைக்கும் நூல்களில் மெனக்கெட்டு சீர் பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை போலும்இணைய நூல்களில் மேலும் ஒருபடி கூடுதலாகவே சென்றுவிடுகிறார்கள் என்றே தோன்றுகிறதுகம்பராமாயணத்தில் தசரதன் கைகேயியையும் பரதனையும் துறப்பதாக வசிட்டனிடம் கூறுவதை

சொன்னேன் இன்றேஇவள் என்

தாரம் அல்லள்துறந்தேன்;

மன்னே ஆவான் வரும் அப்

பரதன்  தனை உம்  மகன்  என்று

உன்னேன்முனிவா! ”             (நன்றி: Project Madurai)

என அச்சிட்டுள்ளனர். முதல் வாசிப்பில் ‘பரதன் தனை உம் (? வசிட்டனின்) மகன் என்று உன்னேன், முனிவா!’என்று உரைப்பதாக எண்ணி ஒருகண குழப்பம் ஏற்பட்டு பின் தெளிந்தது.  வாசிப்பை எளிமையாக்குகிறேன் என்று ‘தனையும்’ என்ற சொல்லையெல்லாம் ‘தனை உம்’ எனப் பிரித்து, கொடுத்த பொறுப்பிற்கு மேலே வேலை பார்த்திருக்கிறார்கள். இனி சீர்களைப் பிரித்து அல்ல, கூட்டிப் படிக்கும் காலமும் வந்துவிட்டது!].

சில சொற்களைக் கண்டதும் நம் மனம் இட்டுச்செல்லும் முன்முடிவுகளுக்கும் சில இடங்கள் பாடம் கற்பித்தன. ஒரு பாடலில் தலைவியைச் சீண்டவரும் தலைவனை நோக்கிநீமாறு நின்னோடு சொல்லல் ஓம்பு என்றார் எமர் (விலகு உன்னோடு பேசலாகாது என்றனர் எம்வீட்டார்)’ எனத் தலைவி சொல்லும் வரியைப் படித்ததும் கேரளத்தில் ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் கேட்கும்நீமாறு, ஞான் நோக்கட்டே (விலகு நான் பார்க்கிறேன்)’ என்ற கூற்று நினைவுக்கு வந்து, இப்பாடலை எழுதிய கவிக்கு எவ்வகையிலேனும் சேரநாட்டு தொடர்பு தென்படுகிறதா என்று அடுத்த இருபது வரிகளைப் படிக்காமல் கடந்து எழுதியது யாரெனப்பார்த்தேன். அவர் கண்டிப்பாக சேரநாட்டவர் அல்ல. ஏன்  பாண்டிய/ சோழ நாட்டைச் சேர்ந்த ஏதோஒரு புலவன் கூட அல்லன். பாடியது சோழனே. ஆம் சோழன் நல்லுருத்திரன் சொன்னார்இன்றைய வேற்றுமை கொண்டு பண்டைய ஒருமையைக்  காணற்க, நீ மாறுஎன்று.  நான் மாறினேன்.

நூலில் பலமுறை பயின்றுவரும் இரு சொற்களைக் குறித்தும் இங்கு கூற விழைகிறேன்.  முதலில் யானைஇந்நூலில் யானைகள் இத்தனை அவதாரம் கொண்டுவருவது சங்கஇலக்கியத்திற்கும் யானைக்கும் உள்ள நெருக்கத்தாலா அல்லது அவற்றைத் தேர்ந்தெடுத்து அளித்த தங்களுக்கும் யானைக்குமுள்ள நெருக்கத்தாலா என்பதறியேன்சிறிய தலையையும் திண்மையான உடலையும் கொண்டு பிடியானையைக்காண மத்தகம் கொதிக்க ஓடிவரும் இளங்களிறுபழைய வழிகள் மயங்க புதியவழிகளை உருவாக்கி பாலையில் பயணிப்போரை திசை குழம்பச்செய்யும் விரிந்த செவிகளும் பருத்த கால்களும் கொண்ட பெருங்களிறுசெங்களத்தில் கொல்லப்பட்ட அவுணர்களின் குருதி தோய்ந்த தந்தங்களுடன் நிற்கும் செங்கோட்டு யானைபிடியானை மீது மஞ்சு படரவே அதனைக்காணாது பதறிப் பிளிறும் காதல்களிறுஇவ்வாறு புறத்தின் மாவீரனாகவும் அகத்தின் பெருங்காதலனாகவும் மாறிமாறி யானை வருகிறது.

அடுத்ததாக மனம் கனக்கும் சில யானைக்கணங்கள். முதலில் மனிதமனத்தின் பெருந்துயரை வெளிப்படுத்தும் பெருமூச்க்கு உவமையாகும் நள்ளிரவில் உறங்கும் யானையின் மூச்சு. பின்பு துரோகத்திக்கும் அவமானத்திற்கும் உள்ளான மனம் கொள்ளும் ஓயா எண்ணப்போராட்டங்களுக்கு உவமையாக பெரும்பாறை அருகிருந்தும் துஞ்சும் களிறுமீது (இயற்கையின் எல்லையை மீறி) படரும் அந்த மாணைக்கொடியை, நம்மில் பலருள்ளும் உறையும் அகயானை உணரும் கணம் வாழ்வில் ஒன்றேனும் உண்டாகும். மற்றொரு பாடலில் யானை மாய்ந்தபின் அது நிறைந்து ஆடி நின்றிருந்த கொட்டில் இப்பொழுது பாழ்வெளியாகி அசிங்கமான குரூர வெளிச்சம் அத

இறுதியாக மூதூர். இப்பாடல்களில் ஊரைக் குறிக்க சிலச் சொற்கள் பயன்படுத்தப் பட்டிருந்தாலும், ஊரின் பெயரை நேரடியாகச் சொல்லாமல் பொதுப்பெயர்களாகவே குறிப்பிடப்பட்டுள்ளன. ஒரு பாடல் ‘பேரூர்’ என்கிறது. மற்றொரு பாடல் தலைவியின் துயரை உணர்ந்துகொள்ளாத ஊரை ‘பேதையூர்’ எனஏசுகிறது.  ஆனால் மீண்டும் மீண்டும் வருவது ‘மூதூர்’ எனும் சொல். தலைவன் தலைவி இன்னாரென்று அறியாத கலஞ்செய் கோவே பாடலில் ஊரின் பெயரைச் சொல்லாமல் ஊரின் சிறப்பை மட்டும் உணர்த்த ‘நனந்தலை மூதூர்’ என பொதுப்படக் குறிப்பிடப்படுகிறது. மற்றொரு பாடலிலோ தலைவன் சோழன் கிள்ளிவளவன் என்றும் அவனது ஊர் உறையூர் என்று அறிந்தும்கூட ஊர்ப்பெயரை நேரடியாகக் கூறாமல் வெறுமனே சிறப்பித்து ‘பேரிசை மூதூர்’ என்கிறது.  ஆனால் மற்றொரு அகப்பாடலில் ஒரு பரதவப் பெண்ணை நாடிவரும் செல்வமிகு தலைவனை நோக்கி ‘பெருநீர் விளையும் எம்சிறுநல் வாழ்க்கை நும்மொடு பொருந்தாது, எம்மனோரிலும் செம்மல் உளர், புலவு நாறுதும் செலநின்றீமோ’ எனத் தோழி தன்னிமிர்வோடு மறுக்குமிடத்தில் மட்டும் ‘நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க் கருந்தேர்ச் செல்வன் காதல் மகனே’ எனத் தலைவனின் ஊரான ‘நியமம்’ என்பதை பெயரிட்டுக் கூறுகிறார் கவி.

புறப்பாடல்களில் பெரும்பாலும் கதைமாந்தர்களும் அவர்களின் காலமும் இடமும் நன்கறியப்பட்டவையாதலால் ஊர்ப்பெயரை  குறிப்பிட்டுச்  சொல்லக்கூடும், பல இடங்களில் பொதுவாக  சொல்லிச்செல்வதும் உண்டு. ஆனால் பெயர் சூடாத தலைவனும் தலைவியும் களமாடும் அகப்பாடல்களோ காலமற்றவை இடமற்றவை. என்றைக்கும் யார்க்குமென சுட்டி நிற்பவை. திரு. ராஜ் கெளதமன் அவர்கள் உரைப்பது போல பெரும்பாலான அகப்பாடல்கள் சங்ககாலத்தையும் கடந்து பெருங்கற்கால நாகரீகம் வரை பின்னோக்கியும் இன்று நம்மோடும் நாளை நம் எதிர்கால சந்ததிகளோடும் ஒரே உணர்வை கடத்தவல்லவை. அவற்றை ஒரு குறிப்பிட்ட பெயருடைய நபருடனோ அல்லது ஊருடனோ  பிணைப்பதென்பது ஒருவித தளையென சங்கக்கவிகள் கருதியிருக்கக்கூடும்.   ஆகவேதான் அவை தலைவனும் தலைவியும் ஐவகை நிலங்களும் மட்டுமெனத் திகழ்பவை.

அவ்வாறிருக்க ஒரு அகப்பாடலில் ஊரின் பெயரைச் சூடி வருவது சற்றே வியப்பாகத்தான் இருந்தது. முதலில் நியமம் என்ற பேரில் பண்டைய தமிழகத்தில் ஊர்கள் இருந்தனவா என்று தோன்றியது.  சில மாதங்களுக்கு முன்பு ஆலயக்கலை வகுப்பிற்காக படித்த திரு. குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின்தமிழகக் கோபுரக்கலை மரபுஎன்ற நூலில் சோழநாட்டில் இடம்பெயர்ந்து எழுந்த கோபுரங்களில் ஒன்றான செந்தலை ராஜகோபுரத்தை எழுப்ப அருகிலிருக்கும் காவிரிக்கரை ஊரான நியமத்திலிருந்த பழங்கோவிலொன்றின் தூண்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டுள்ளார். அத்தூண்கள் சாதாரணமானவையல்ல. ஆதித்த சோழன், பாண்டியன் மாறஞ்சடையன், தொள்ளாறெறிந்த நந்திவர்மன் மற்றும் பெரும்பிடுகு முத்தரையன் ஆகிய நான்கு மரபு மன்னர்களின் கல்வெட்டுகளும் மூன்று புலவர்களின் பாடல்களும் கொண்டவை என்ற குறிப்பையும் தருகிறார்.  

மதுரையில் வேந்தனின் வெற்றிக்கொடிகள் முதல் பல்வேறு குழுக்களின் கொடிகள் வரை அசையும்ஓவுக் கண்டன்ன இருபெரு நியமத்து (ஓவியம் போன்ற அணிமிகு இருபெரு நியமங்கள்)’ என நியமம் இருந்ததை மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனார் கூறுகிறார். ‘விழவு அறுபு அறியா முழவுஇமிழ் மூதூர் கொடிநிழல் பட்ட பொன்னுடை நியமத்துஎன்றும்மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு பொன்னுடை நியமத்து பிழி நொடை கொடுக்கும்என்றும் சேரநாட்டிலும் நியமம் இருந்ததாக பதிற்றுப்பத்து கூறுகிறது. ஆகவே சேர சோழ பாண்டிய நாடுகளில் நியமம் என்ற பெயரில் இடங்கள் இருந்தன. அவை ஊராகவோ அங்காடித் தெருக்களாகவோ இருந்திருக்கின்றன (‘உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும்என கோவிலைக் குறிக்கவும் அச்சொல்லைப் பயன்படுத்துகிறது சிலம்பு). எவ்வாறாயினும்பல்கொடி நுடங்கும் ஓவு அன்ன அல்லது பொன்னுடைபோன்ற அடைமொழிகளன்றி தோன்றாத பொன்மலிந்த செல்வமிகு இடங்களாகவோ அல்லது பல்வேறு மன்னர்கள் புழங்கி தங்களின் தடையங்களை விட்டுச்செல்ல விரும்பும் ஒரு முக்கிய இடமாகவோ திகழ்ந்திருப்பது உறுதி

மேலும் நியமம் (சட்டம்) என்ற சொல்லிலேயே ஒருவித அதிகாரத்தோரணை இழையோடுவதாகத் தோன்றுகிறது (கேரளத்தில் சட்டப்பேரவையைநியமசபாஎன்கிறாரகள்). பொதுவாக தலைவிக்காக காதல்தூது செல்பவளும் தலைவன் வருவான் வருந்தாதே என ஆற்றியிருக்க உதவுபவளுமான சங்ககாலத் தோழி இப்பாடலில் தலைவனிடம் காதலுக்கு எதிராக மொழிவது சாதாரண மீனவப்பெண்ணான தலைவிக்கும் கடுந்தேர்க்குச் சொந்தமான செல்வனின் மகனான தலைவனுக்கும் உள்ள இடைவெளியை மேலும் கூர்மையாக குறிப்புணர்த்துவதற்காகவா ஒரு அகப்பாடலில்நியமம்என்ற ஊரின் பெயரையும் குறிப்பிட்டுச்சொன்னது?

இன்பமும் துன்பமும் காதலும் வீரமுமென மாறிமாறி  ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் முடித்தபின்  முத்தாய்ப்பாக அமைந்தது இந்நூலின் இறுதிப்பாடலின் இறுதிவரி. அதுவே இந்நூல் வாசிப்பின் எனக்கான விழுப்பயன் எனவும் கருதுகிறேன்.

ஆம்,

இன்னாதம்ம இவ்வுலகம்! இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே!”. 

ஆசிரியருக்கு நன்றி

அன்புடன்,

இரா. செந்தில்

முந்தைய கட்டுரைதொடங்குதல்…
அடுத்த கட்டுரைஅஜந்தாவும், அருட்பெருஞ்ஜோதியும்