பாமரரின் வெறுப்பை எதிர்கொள்ளுதல்

 

குடியும் கோமாளிகளும்

மஞ்ஞும்மல் பாய்ஸ்- கடிதம்

மஞ்ஞும்மல் பாய்ஸ்- குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம்

அன்புள்ள ஜெ

மஞ்ஞும்மல் பாய்ஸ் பற்றிய உங்கள் எதிர்வினை மிகையானது என்பது என் எண்ணம். அதையொட்டி இங்கே உங்கள் வழக்கமான சில்லறை எதிரிகள் வசைபொழிந்தனர். அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தையும் தவறவிடக்கூடாது என நினைப்பவர்கள். அவர்களுக்கு கவ்வுவதற்கு வாகான சப்ஜெக்ட் நீங்கள்தான். பெரிய விஷயங்களெல்லாம் அவர்களால் அப்படியே மழுப்பப்படும். 

ஆனால் உங்கள்மேல் மதிப்புள்ளவர்கள் பலர் கூட நீங்கள் எழுதியதை கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். பலர் உங்கள் மீதிருந்த மரியாதையே போய்விட்டது என்று எழுதியிருந்தார்கள்.

கேரளத்தில் உங்கள் மேல் பெரிய மதிப்பு உண்டு என அறிந்திருக்கிறேன். அங்கிருந்து வரும் வசைகளைப் பார்க்கையில் வருத்தமாக உள்ளது. உங்கள் கருத்துக்களை நீங்கள் இப்படி முன்வைத்திருக்கவேண்டுமா?

மகேஷ் சுப்ரமணியம் 

 

அன்புள்ள மகேஷ்,

நான் எப்போதும் சொல்லிவருவதுதான் இது. நான் இயல்பாக எதிர்வினையாற்ற விரும்புகிறேன். அது மிகையாகிப்போவது அவ்வப்போது வழக்கம்தான். ஆனால் என் இயல்பை நான் முழுமையாக மாற்றிக்கொண்டால் என் உணர்ச்சிகரத்தை இழந்துவிடுவேன், அது இலக்கியவாதியாக எனக்கு இழப்பு. நானறிந்து எல்லா நல்ல இலக்கியவாதிகளும் இப்படித்தான் இருந்துள்ளனர்

அவ்வப்போது உருவாகும் மிகையுணர்ச்சிகளும், அகக்கொந்தளிப்புகளும் 20 வயது முதல் இருந்து வருகின்றன. இன்றும் அப்படித்தான். நண்பர்கள், குடும்பம் அனைவருக்கும் தெரிந்ததுதான் அது. அந்த தீவிரமான பாதிப்பு பலநாட்கள் நீடிக்கையில்தான் அது கதை ஆகிறது. 1999 முதல் யானைகளின் காலடியில் பீர்ப்புட்டிகள் குத்தி உருவாகும் அழிவுகளை கண்டு வருகிறேன். கொலை அல்லது தற்கொலை வரைச் செல்லும் உச்சகட்ட உணர்ச்சிகளை அடைந்திருக்கிறேன்.   

அந்த உணர்வுக் கொந்தளிப்புகள் இல்லாமலாகும்போது கதை எழுதுவதை நிறுத்திக்கொள்வேன் என நினைக்கிறேன். அவ்வாறு நிகழ்ந்தால் உண்மையில் நல்லதுதான் என்றும் படுகிறது இப்போதெல்லாம். ஆனால் எழுதுவது வரை இப்படித்தான் இருக்க முடியும். என்னில் எரியும் தீயில் ஒரு சிறு பகுதியையே நான் என் வாசகர்களில் மூட்டமுடியும். தன்னை அழிக்காமல் கலை நிகழ்வதில்லை. அவ்வண்ணம் நிகழும் எழுத்துக்குத்தான் குமாஸ்தா எழுத்து என்று பெயர். 

அத்திரைப்படத்தை பார்த்தபோது சட்டென்று எழுந்த கடும் ஒவ்வாமை, ஒன்றுடனொன்று தொடுத்து உருவான நினைவுகள் அப்பதிவை எழுதச்செய்தன. அந்த உணர்வுகள் உண்மையானவை. அவை மிகமிகத் தீவிரமாகவே என்னில் நிகழ்ந்தன. ஆகவே அந்த பதிவு மிகையானது என எனக்குத் தெரிந்தாலும் அதை நான் நிராகரிக்கவில்லை. அது என் வெளிப்பாடு, ஆகவே நான்தான் அது.

யோசித்துப்பார்க்கையில் அது ஒருவகையில் நல்லது என்னும் எண்ணம் இன்று உருவாகிறது. யானைடாக்டர் போன்ற ஒரு கதை எத்தனை லட்சம் விற்றாலும் இந்த குடிக்கும்பலைச் சென்றடையாது. என் கருத்து அந்தச்  சினிமா திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கையில் வெளிவந்தமையால், அந்த கடுமையான சொற்களால் தான் இத்தனை கவனிக்கப்பட்டது. இவ்வளவு பேசப்பட்டது. அடிப்படையில் நான் சொன்னது சென்று சேர்ந்தும் விட்டது.

தமிழகத்திலும் கேரளத்திலும் மிகப்பெரும்பான்மையினர் சினிமாவை மட்டுமே கவனிக்கிறார்கள். அதைப்பற்றிய விவாதங்களை மட்டுமே அறிகிறார்கள். அவ்வழியாகச் சில அடிப்படைக் கருத்துக்கள் அவர்களிடம் சென்று சேர்ந்தால்தான் உண்டு. மஞ்ஞும்மல் பாய்ஸ் விவாதத்தை ஒட்டி மூன்றுநாட்கள் இடைவிடாமல் எனக்கு தொலைபேசி அழைப்புகள் வெளிவந்துகொண்டிருந்தன. எல்லாமே வெவ்வேறு சிறு,பெரு செய்தி ஊடகங்கள். அவர்கள் எவரும் யானைடாக்டர் கே பற்றி ஓர் நிகழ்ச்சி நடத்த மாட்டார்கள். அவ்வாறு நடத்தினால் மக்கள் அதைப் பார்க்கவும் மாட்டார்கள்.  ஆகவே இது நல்லதுதான்

வசைகள் உண்டு. பல லட்சம்பேர் வெறுக்கவும்கூடும். இருக்கட்டும், அவர்கள் எனக்கு எவ்வகையிலும் ஒரு பொருட்டு அல்ல. அவர்களிடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவுமில்லை. ஆனால் முதற்கட்ட வசைகள், திரிப்புகள் ஆகியவற்றைக் கடந்தால் நான் சொன்ன அடிப்படையான விஷயம் மக்களின் கவனத்தில் எப்படியோ எஞ்சும். எனக்கு கேரளத்திலும் தமிழகத்திலுமுள்ள சாமானியர்கள் மேல் நம்பிக்கை உண்டு. குறிப்பாக கேரளச் சாமானியர்கள் மேல்

இந்த விவாதத்திற்குப்பின் மலையாளிகள் காடுகளில் நடந்துகொள்ளும் விதம் பற்றிய ஒரு குற்றவுணர்வு அல்லது கண்டனம் கண்டிப்பாக அவர்களிடம் இருக்கும். அவர்களை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்று அவர்கள் எண்ணிக்கொள்வார்கள். ஆகவே அடுத்த முறை காட்டில் ஒரு குடிக்கூத்தாட்டத்தை கண்டால், அதை அன்றாடப்படுத்தும் ஒரு சினிமாவைக் கண்டால் அருவருப்படைபவர்கள் உருவாகி வந்திருப்பார்கள். அந்த அளவுக்கு சிறு மாற்றம் நிகழ்ந்தாலே அது நல்ல விஷயம்தான். அதற்காக வசைகளைப் பெறுவதில் எனக்கு தயக்கமில்லை.

உண்மையில் மெல்ல மெல்ல அந்த மனநிலை உருவாகி வருவதை நான் காண்கிறேன். கேரளத்திலேயே பலர் அவ்வாறு எழுதியிருக்கிறார்கள். மலையாளமனோரமா எடுத்த ஒரு சிறு வாக்கெடுப்பில் இந்த விவாதம் உச்சத்தில் இருந்த நாட்களிலேயே 53 சதவீதம்பேர் என் தரப்பையே ஆதரித்துள்ளனர். அவர்கள் பெருகத்தான் செய்வார்கள். குடிக்கேரளம் ஒன்றுண்டு, கூடவே கல்விக்கேரளமும் ஒன்று உண்டு. இந்த விவாதமும் அதையே காட்டுகிறது – அதை நம்பலாம் என்னும் உறுதி வந்துள்ளது.

என் பதற்றங்களை இச்சூழலில் நிகழ்வதைச் சற்றேனும் உணர்ந்திருப்பவர்களே புரிந்துகொள்ள முடியும். சென்ற இரண்டு வாரத்தில் மட்டும் தினமலர் , தினத்தந்தி செய்திகளில் ஏழு வெவ்வேறு தமிழக இளைஞர் குழுவினர் காடுகளுக்குள் மதுப்புட்டிகளுடன் சென்று பிடிபட்டுள்ளனர். அபாயகரமாக காட்டுக்குள் சிக்கிக்கொண்டும், பூச்சிகளால் தாக்கப்பட்டும் காயமடைந்துள்ளனர். காயமடைவது நல்லது என்றே நினைக்கிறேன். ஆனால் இவர்கள் காட்டுக்குள் அள்ளி இறைக்கும் கண்ணாடிச்சில்லுகள் இன்னும் ஐம்பதாண்டுக்காலம் அங்கே கிடந்து பேரழிவை உருவாக்கும்

இன்று இந்த சினிமாவைக் கண்டு உடனே குப்பிகளுடன் காட்டுக்குள் நுழையும் ‘பொதுமக்கள்’ அல்லது ‘இளையதலைமுறை’ என்னை முகநூலில் எப்படியெல்லாம் எழுதுவார்கள் என்பதில் என்ன வியப்பு உள்ளது? மஞ்சும்மல் பாய்ஸ் போல  குடிதவிர இன்னொன்றை அறியாத கும்பல் எப்படி என்னை வசைபாடுமென எனக்கு தெரியாதா என்ன? அரசியலோ, சமூகவுணர்வோ அறியாத அந்த வெற்றுக் குடிப்பொறுக்கிகளை ‘உழைக்கும் வர்க்கம்’ என்றும் ‘அடித்தளவர்க்கம்’ என்றும் அடையாளப்படுத்தும் அரசியல்வாதிகளின் கண்ணில் நான் என்னவாக தெரிவேன்?

தங்களுடைய போதையுலக வாழ்க்கையையே சினிமாவாக எடுத்து அதை கேரள யதார்த்தம் என உலகு முன் காட்டும் ‘மட்டாஞ்சேரி மாஃபியா’ எவ்வளவு சக்தி வாய்ந்தது. எவ்வளவு ஊடக பலம் உடையது. அவர்கள் சும்மா இருப்பார்களா என்ன? மட்டாஞ்சேரி மாஃபியா என ஒரு சொல்லாட்சி இருப்பது இந்த விவாதத்திற்குப் பின் கேரள இதழாளர்கள் எழுதியதன் வழியாகவே எனக்கு தெரியவந்தது. ஏற்கனவே அவர்கள் மேல் கடும் விமர்சனங்கள் உள்ளன. இந்தச் சர்ச்சையால் அந்த விமர்சனங்கள் கூர்கொள்கின்றன.

 

“I criticized the Kochi film clique because someone had to”: B Jeyamohan

 

நான் திரும்பத் திரும்பச் சொல்லும் ஒன்று உண்டு. புகழுக்காக எழுதுவது இலக்கியம் அல்ல. மக்கள் ஏற்பு இலக்கியத்திற்கு ஒரு நிபந்தனையே அல்ல. சமகால மதிப்பும் இலக்கியத்திற்கு முக்கியம் அல்ல. உண்மையிலேயே இங்கு எவரிடமிருந்தும் எதையும் நான் எதிர்பார்க்கவில்லை. அங்கீகாரம், புகழ், பணம் எதையும். இவர்களுக்கு அளித்துச்செல்ல வந்தவனே ஒழிய பெற்றுக்கொள்ள வந்தவன் அல்ல என்னும் தன்னுணர்வே என்னை ஆள்கிறது.

பொதுமக்களின் வெறுப்பு என்பது இலக்கியவாதிக்கு எவ்வகையிலும் இழிவு அல்ல – அந்தப் பொதுமக்கள்  எவரையெல்லாம் ஏற்கிறார்கள், எவரையெல்லாம் கொண்டாடுகிறார்கள் என்று பார்க்கையில் அந்த வரிசையில் நிற்கவே கூடாது என்னும் உணர்வே உருவாகிறது. இன்று யூடியூபில் முழு அறியாமைகளை அள்ளிக்கொட்டும்  குறைந்தது நூறுபேர் என்னைவிட மும்மடங்கு மக்களால் ஏற்கப்பட்டு கொண்டாடப்படுபவர்கள். நான்  எதிரணியிலேயே நிற்க விரும்புவேன்.

நவீன இலக்கியத்தின் அடிப்படையே விமர்சனம்தான். சமூக விமர்சனமே நவீன இலக்கியத்துக்கும் மரபிலக்கியத்துக்குமான அடிப்படையான வேறுபாடு. மரபிலக்கியம் மக்கள் விரும்புவதைச் சொல்கிறது, மக்களை அறிவுறுத்தி வழிகாட்டுகிறது. நவீன இலக்கியம் சமூகம் மீது, தனிமனிதன் மீது, மதம் அரசு உள்ளிட்ட அமைப்புகள் மீது விமர்சனங்களை முன்வைக்கிறது. அந்த விமர்சனத்துக்கு அடிப்படை எழுத்தாளன் கொள்ளும் முரண்படுதல், ஒவ்வாமை, சீற்றம், அறவுணர்வு, துயரம்  ஆகியவையே.

தன் விமர்சனத்தை எழுத்தாளன் முன்வைக்கையில் அது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு சாமானியன் சீற்றம் கொள்கிறான். அந்த எழுத்தாளனை வெறுக்கிறான். வசைபாடுகிறான். எழுத்தாளனின் நிமிர்வை திமிர் என்றும், சுதந்திரத்தை பொறுப்பின்மை என்றும் புரிந்துகொள்கிறான். ஆனால் எழுத்தாளன் முன்வைக்கும் உண்மை சிற்பான்மையினரைச் சென்றடையும். அது வளரும். அதன்பொருட்டு எழுத்தாளன் தன்னைக்கொடுத்தாகவேண்டும்.

பொங்கன் – ஒரு இணையப்பதிவு

இரண்டு கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டன. ஒன்று, இப்படி முன்னோடி எழுத்தாளர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனரா? இப்படி பொதுமைப்படுத்தலாமா?

கடும் விமர்சனங்களை முன்வைக்காத முன்னோடி எழுத்தாளர்களே இல்லை. பாரதி, புதுமைப்பித்தன், க.நா.சு, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் என. காங்கிரஸ் தலைவர் வி.கிருஷ்ணசாமி ஐயரை ‘சீச்சீ நாயும் பிழைக்கும் இப்பிழைப்பு’ என எழுதினார் பாரதி. ராஜாஜியை  சேமக்கலத்தலையன் என்று புதுமைப்பித்தன் எழுதினார். எம்.ஜி.ஆரை கோமாளி என சுந்தர ராமசாமி எழுதினார். தன் மொழியை தானே புகழ்துகொள்பவர்கள் தன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள் என்றார் ஜெயகாந்தன். அவர்கள் வசைபாடப்பட்டனர், சுந்தர ராமசாமியும் ஜெயகாந்தனும் நேரடியாக மிரட்டப்பட்டனர்.

இங்கே ஒன்று கவனிக்கவேண்டும். ஒரு நாலாந்தர அரசியல்வாதி இழிவாகப்பேசுவதை அனுமதிக்கும் நம் சமூகம் எழுத்தாளன் பேசும்போது அடையும் சீற்றம் ஒரே காரணத்தால்தான். அரசியல்வாதிக்கு அமைப்புபலமும் பணமும் உண்டு. எழுத்தாளன் தனியானவன். ஆகவே எளிய இலக்கு. என்னை சங்கி என்பவர்களுக்கு நான் சங்கி அல்ல, எனக்கு எந்த அமைப்புபலமும் இல்லை என தெரியும். அவர்கள் வசைபாடுவது அந்த நம்பிக்கையால்தான்.

பொதுமைப்படுத்தலாமா? ‘தமிழன் ஈரத்திலேயே வாழ்கிறான். உலர்ந்த தமிழன் மருந்துக்கு கூட அகப்பட மாட்டான்’ என எழுதினார் பாரதி. ‘மூவாயிரமாண்டுகளாக ஒரு சீலைப்பேன் வாழ்க்கை வாழ்ந்துவிட்டோம்’ என எழுதினார் புதுமைப்பித்தன். அவ்வாறு ஒரு கடுமையான பொதுமைப்படுத்தல் கருத்தைச் சொல்லாத ஒரு நல்ல எழுத்தாளனை தமிழில், இந்தியாவில், உலக இலக்கியக்களத்தில் கண்டுகொள்ள முடியாது. அது எழுத்தாளனின் வழிமுறை. எதையாவது வாசிப்பவர்களுக்கு தெரியும் அது.

இந்த பொதுமைப்படுத்தலை ‘தன் விமர்சனம்’ என்ற வகையில் செய்யலாம். பிறனை உருவாக்க செய்யலாகாது. (ஆனால் அதையும் பல இலக்கிய மேதைகள் செய்துள்ளனர்) நான் தமிழன் என , தமிழ்ப்பண்பாட்டின் ஒரு பகுதியே மலையாளம் என்பதனால் மலையாளி என, குமரிமாவட்ட இருமுனைப் பண்பாட்டின் பிரதிநிதி என உணர்பவன். நான் தமிழன். சங்ககாலம் முதல் இன்றுவரை தொடரும் ஒரு பெருமரபின் உறுப்பினன். சேரநாட்டவன். என் மலையாள அடையாளத்தை எப்போதும் மறைத்ததில்லை. நான் குமரிநிலத்தவன். இங்கு நின்று என்னை, என் சமூகத்தை விமர்சனம் செய்கிறேன். இதே விமர்சனத்தை இங்கு வரும் பிகாரி தொழிலாளர்கள் மேல் செய்ய மாட்டேன்.

சென்ற ஆண்டுகளில் பல முறை இந்துமதத்தை, இந்துத்துவ அரசியலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளேன். இந்து தாலிபான் என்னும் சொல்லாட்சியே என்னுடையதுதான். பல கட்டுரைகளை இணையத்தில் காணலாம். ஆனால் எந்த நிலையிலும் அதே விமர்சனத்தை இஸ்லாமியர் மேல் வைத்ததில்லை. எனக்கு  ‘அவர்களின் இந்த நிலைபாடு எனக்கு ஏற்புடையது அல்ல, அவர்கள் தங்களை பரிசீலனை செய்யவேண்டும்’ என்று மட்டுமே சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் நான் இஸ்லாமியனாக என்னை உணரவில்லை.

பல தருணங்களில் என்னிடம் கேட்கப்பட்டதுண்டு. எம்.எஃப்.ஹூசெய்னையும் எம்.எம்.பஷீரையும் ஆதரித்து எழுதிய நீ எர்ணாகுளத்தில் ஒரு பேராசிரியரின் கை வெட்டப்பட்டபோது ஏன் பேசாமலிருந்தாய் என. குண்டுவெடிப்புகள், தீவிரவாத தாக்குதல்களின்போது உடனடியாக ஏன் இஸ்லாமியர்களைக் கண்டிக்கவில்லை என. அந்த மதத்தின் எழுத்தாளர்கள்தான் கண்டிக்கவேண்டும், இந்துக்கள் வன்முறையைச் செலுத்தினால்தான் நான் கடுமையாகக் கண்டிப்பேன் என்பதே என் பதில்

கடைசியாக, ‘உங்கள் மேல் இருந்த மரியாதையே போயிற்று’ என அவ்வப்போது எனக்கு சிலர் எழுதுவர்கள். அவர்களுக்கு என் மேல் மரியாதை இருந்ததே எனக்கு அப்போதுதான் தெரியவரும். அவர்களுக்கே அப்போதுதான் தெரியவந்திருக்கும். 300 நூல்களுக்கு மேல் எழுதியிருக்கிறேன். பெரும் இலக்கிய ஆக்கங்களை உருவாக்கியிருக்கிறேன். முழுவாழ்நாளும் வாசித்தாலும் கடந்துசெல்லமுடியாத படைப்பு வெண்முரசு. கலை, இலக்கியம், அறிவுத்தளம் என விரிவான நாற்பதாண்டுக்காலச் செயல்பாட்டுப்பின்னணி எனக்குண்டு. ஒரு சினிமா பற்றி, அல்லது ஒரு நபர் பற்றி நான் சொன்ன கருத்தால் ஒருவரின் மனதில் என்மேல் இருந்த மதிப்பு இல்லாமலாயிற்று என்றால் அது என்னவகை மதிப்பு? அந்த மதிப்பை வைத்து நான் என்ன செய்வது? அவர்கள் உடனடியாக மதிப்பை ரத்துசெய்துவிட்டு விலகிச்செல்வதே எனக்கு அவர்கள் செய்யும் மரியாதை

ஜெ

 

முந்தைய கட்டுரைமூங்கில் கோட்டை
அடுத்த கட்டுரைகதைத்தொடக்கம்