காடு மின்னூல் வாங்க
மூன்றாண்டுகளுக்கு முன்பு நக்கீரனின் காடோடி நாவலை வாசித்தபோது காட்டின் மீது மோகம் அதிகரிக்கத் தொடங்கியது. உடனடியாக ஜெயமோகனின் காடு நாவலையும் வாசிக்க வேண்டுமென்ற ஆவல் உந்திக்கொண்டேயிருந்தது. தொடர்ச்சியாக வாசிக்க முடியாமல் இடையிடையே விட்டுப்போய் இப்போது மீண்டும் முழுமையாகப் படிக்க முடிந்தது.
முதலில் இந்த நூலுக்குள் குறிஞ்சியும் கபிலரும் மெல்ல காட்டுக்குள்ளே அழைத்துச்சென்றார்கள். காஞ்சிமரம் அங்கங்கே அமர இடம் கொடுக்க மிளா வந்து கையைப் பற்றி அழைத்துச்சென்றது . ஒவ்வொரு அத்தியாயமாகக் கடந்து வருகிறேன், காடு எனக்குள் விரிந்துகொண்டே செல்கிறது. பிறகு காதலும் காமமும் கற்பனையும் வாழ்வியலுமாக நகர்ந்தது. மரங்களும், சருகுகளும் பாறைகளும் நிறைந்த நிலத்தினூடாக இந்தக் காடு என்னை முழுமையாக உள்ளே இழுத்துக்கொண்டது. மொத்தமாகக் காட்டுக்குள் சென்றபின் வழிதெரியாமல் திசை தவறி வானத்தின் திசையை நோக்கிய பயணமாக அமைந்தது.
கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கு முன்பு எழுதிய நாவலை இப்போதுதான் படிக்கிறிங்களா என்று நண்பர்கள் கேட்டார்கள். இப்போது படிக்கும்போது எந்த விறுவிறுப்பும் குறையவில்லை. பொதுவாகச் செவ்விலக்கியங்கள் வாசிப்பதற்கான கால நேரம் அமைவதும், அமைத்துக்கொள்வதும் அதனை முழுமையாக உள்வாங்குவதும் அதற்கென ஒரு மனநிலை அமையும்போது தான் நடக்கிறது. உண்மையைச் சொல்லப் போனால் நாவல் வாசிப்பு என்பது விடாப்பிடியாக நம்முடைய நேரத்தை முழுமையாக ஒப்புக்கொண்டால் மட்டுமே சாத்தியமாகிறது. பாதியில் படித்துவிட்டு தொடரமுடியாமல் விட்டுப்போனவை பல உண்டு. எல்லா நாவல்களும் எடுத்தவுடன் முடிக்கும்படி இருப்பதில்லை என்பது வேறு கதை.
காமம் என்ற சொல்லைத் தயங்கியே உச்சரித்துப் பழகிய நமக்கு காதலோடு கலந்த காமம் மனத்துக்குள் விரிக்கும் கற்பனைகளும் சித்திரங்களும் சில்லிடவைத்தன. நீலி நீலி என்று ஆறு குளிர்ந்து ஓடுவதும் கரையோர தாழம்புதர்கள் காற்றில் சலசலப்பதுமாக நீலியின் அழகு நிரம்பி நிற்கிறது. மாசின்றி கழுவப்பட்ட யானையென பெருமழை நனைந்த பாறையெனும் குறுந்தொகைப் பாடல் வருகிறது. இது போல் ஆங்காங்கே நிறைய பாடல்கள் நாவலுக்குள் வருகின்றன. சிறு சிறு குறிப்புகள் வருணனைகள் சங்கப் பாடல்கள் செருகப்பட்டு காட்சிகளின் சுவையைக் கூட்டுகின்றன.
குறிஞ்சித் திணையை மையப்படுத்தி மலையின் நுட்பங்களோடு காடும் காடு சார்ந்த புனைவுகளுமாய் நாவல் நீள்கிறது. உரிப்பொருள்களுடன் கூடிய உணர்வுகளும் இதில் வரக்கூடிய விலங்குகளும் குறிப்பாக மிளா என்பது மான் என்று புரிந்து கொண்ட பொழுதில் காடு குளிரத் தொடங்கியது. இடையிடையே மலைப் பிரதேசத்தில் உலவிய அகிர குரோசோவின் டெர்சு உசாலாவும் கண் முன்னே வந்து கொண்டிருந்தார்.
மலையாளமும் தமிழும் கலந்த மொழி நடை. ஒரு சில இடங்கள் வாசிக்கையில் மலைப்பை உண்டாக்கியது. காட்டு வழியே அசை போட்டபடி நடந்து செல்லும் குறிஞ்சிப் பாடல்கள் காமம் கசியும் சித்தரிப்புகள் அடைந்து தீராதப் பெரும் காமப் பசிக்கு இறையைத் தேடியபடி செல்கின்றன. காமம் உடல் வழியாகவும் உணர்வுகளின் வழியாகவும் சொற்களின் வழியாகவும் கண்டடையப்படுகிறது.
அய்யரின் உரையாடல்கள் சுவாரசியமாக ஒன்றிப் போனாலும் ஒரு சில இடங்கள் வலிந்து திணிக்க முற்பட்டவையாகத் தோன்றியது. இடையிடையே ஆங்கிலச் சொற்பயன்பாடுகள் செயற்கைத் தன்மையைக் காட்டியது. காட்டுக்கும் நகரத்துக்கும் வந்து வந்து செல்லுமிடங்கள் கொஞ்சம் விலகி நிற்கின்றன. வலிந்து திணித்த காமக் கூற்றுகள் அதீதமாய்ப்பட்டது. எதற்கெனத் தெரியாமல் நிறைய கதாபாத்திரங்கள் வருகின்றன.
மலையில் வாழக்கூடிய மக்களுக்கிடைய காமம் என்பது எதார்த்தமாகவும் எதார்த்த மீறலாகவும் இருக்கிறது. நீலியின் அழகை வர்ணிப்பதும் அவள் மீதான காதலைச் சொல்லுமிடங்களும் மிகவும் ரசித்தவை. கூடலும் கூடல் நிமித்தமுமாக இந்த நாவல் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. மிக நுட்பமான கதையோட்டம் தடங்கல் இல்லாமல் நகருகிறது. இறுதியாக அய்யர் சொல்லும் குறிஞ்சிப்பாடலின் கொடி என மின் என அணங்கு என என்ற வரி பேய் மாதிரி சுழண்டுகொண்டேயிருக்கிறது.
தொடக்கம் ஒரு நேரடியான அழகனுபவம். முடிவு ஒரு பித்து நிலை. உண்மைதான்.
இன்பா.