தமிழைவிட ஆங்கிலம் கூர்மையான மொழியா?

குன்ஸும் புத்தக மையம் பேட்டி


 அன்புள்ள ஜெ

மொழிகள் பற்றி ஒப்பீடு செய்யும் அவதானிப்புகள் என்றுமே சுவாரசியமானவை. அந்த வரிசையில் உங்கள் இந்த வரிகள் (A fine thread வெளியிட்டு விழாவில் குன்ஸும் புக்ஸ் பேட்டி )

“Similarly, English is a more precise language than Tamil. So, when your work is translated into English, we can find that the text becomes more precise and perfect in the translation”

இதில்பொதுவாக ஆங்கிலம் precise ஆன மொழிஎன்ற கருத்து வெளிப்படுகிறது. இதை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்? இந்தப் precision என்பது மொழியின் தன்மையா அல்லது குறிப்பிட்ட மொழியாக்கத்தின் தன்மையா?

பேஸ்புக்கில் ஒருவர்  ‘தமிழை விட ஆங்கிலம் நுட்பமான மொழிஎன்று நீங்கள் சொல்வதாக எழுதியிருந்தார். உங்கள் ஒவ்வொரு வரியும் படிக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது என்பதற்காக சொல்கிறேன்உங்கள் கருத்தை அறிய ஆவல் 

நன்றி

மதுசூதனன் சம்பத்

A Fine Thread and Other Stories வாங்க

அன்புள்ள மது,

நான் என் கதைகளின் மொழிபெயர்ப்புகளை வாசிப்பதில்லை. என் மொழியில் ஆங்கில சொற்றொடரமைப்பு – ஒலியிசைவு வந்துவிடலாகாது என்பது என் கொள்கைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. தொடக்கத்தில் ஆங்கிலத்தில் கொஞ்சம் எழுதி அசோகமித்திரன் சொன்னதனால் நிறுத்திக்கொண்டேன். ஆரம்பத்தில் இருந்தே ஆங்கிலத்தில் பேசுவதை தவிர்த்தும் வருகிறேன்.

குறிப்பாக, நம் சொற்றொடர்களை நாமே ஆங்கிலத்தில் வாசிப்பது மிகப்பெரிய இடர். தன் படைப்பை தானே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த ஓ.வி.விஜயன் அதன்பின் தன் மலையாள நடையின் அழகை முற்றிலுமாக இழந்தார். அந்த இடர் பலருக்கு நிகழ்ந்திருக்கிறது. மலையாளம் தமிழின் இன்னொருவடிவம்போன்றது. அதன் சொற்றொடரமைப்பும் ஒலியிசைவும் தமிழேதான். ஆயினும் என் தாய்மொழியாகிய மலையாளத்தில் எழுதுவதை தவிர்க்கிறேன்.

காரணம் என் நடையை இழக்கவேண்டியிருக்குமோ என்னும் அச்சம்தான். என்னுள் தமிழ் ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் தாளம் என ஒன்று உண்டு. அது எப்போதும் ஒன்று அல்ல, ஆனால் எந்தவகை மாறுபாடுகளை அது அடைந்தாலும் அது என் தனிமொழி.

ஆனால் அண்மையில் சாப்பிடும்போது பிரியம்வதா- சுசித்ரா மொழியாக்கம் செய்த Elephant! என்னும் என் கதையை சும்மா எடுத்து வாசித்தேன். (ஆனையில்லா கதையின் ஆங்கில மொழியாக்கம். ஆனையில்லா தொகுப்பு வாங்க) நானே வெடித்துச் சிரித்துக்கொண்டே இருந்தேன். அந்த அளவுக்கு புதியதாக, நேர்த்தியாக இருந்தது. அதைத் தொடர்ந்து சுசித்ரா மொழியாக்கம் செய்த ஏழாம் உலகம் நாவலின் ஆங்கில வடிவமான வாசித்தேன். சரசரவென முப்பது பக்கம் தாண்டியதும் விழித்துக்கொண்டு நிறுத்திவிட்டேன்.

ஆங்கிலத்தில் தமிழைவிட சொற்றொடர்கள் கச்சிதமாகவும், கூர்மையாகவும் இருந்தன. தமிழிலிருந்த விளையாட்டுத்தனமும் உரையாடல்நுட்பங்களும்கூட ஆங்கிலத்தில் வந்திருந்தன. மொழியாக்கம் மிக ஈடுபாட்டுடன், நேர்த்தியுடன் செய்யப்பட்டிருக்கிறது என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், ஆங்கிலமொழியின் சொற்றொடரமைப்புகளும் அதன் இயல்பான நேர்த்தியும் சுசித்ராவுக்கு கைகொடுத்திருக்கிறது.

மொழியாக்கம் எதுவானாலும் இழப்பு ஒன்று உண்டு – தமிழிலுள்ள வட்டாரவழக்கு இல்லாமலாகியுள்ளது. ஆனால் கூடுதலாக ஆங்கிலம் என்னும் அழகு கைவந்துமுள்ளது. ஆகவே மூலத்தைவிடவும் சற்றே மேம்பட்டதாகவே மொழியாக்கம் உள்ளது. நான் சொன்னது இதைத்தான்.

THE ABYSS Paperback  வாங்க

மொழியின் கூர்மை அல்லது செறிவு அல்லது நுட்பம் என்பது அதன் ‘தனிப்பெருஞ்சிறப்பு’ அல்ல. அதன் அமைப்பிலோ மரபிலோ அந்த சிறப்பு இல்லை. அதன் வரலாற்றிலோ தொன்மையிலோ அல்லது அதன் சொல்வளத்திலோ அந்த சிறப்பு இல்லை. அது எப்படி பயன்படுத்தப்படுகிறது என்ற தளத்திலேயே உள்ளது. கூர்மை, செறிவு, நுட்பம் என்றெல்லாம் நாம் சொல்வது ஒரு மொழியின் சமகால அறிவுத்தள இயல்பு குறித்து மட்டுமே. அவ்வகையில் ஆங்கிலம் தமிழை விட மிக முன்னிலையில் உள்ள மொழி.

ஆங்கிலம்தமிழ் இரு மொழிகளையும் அறிந்து, அவற்றில் தொடர்ந்து அறிவார்ந்தும் படைப்புத்தன்மையுடனும்  பேசிஎழுதுபவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும் விஷயம்தான் இது. ஆனால் பொதுவாக புழங்குமொழியாக இரு மொழிகளையும் கையாள்பவர்களுக்கு இது தெரியாது, புரிந்துகொள்ளவும் கடினம். ஏனென்றால் அவர்கள் எந்த மொழியிலும் ஆழத்துக்குச் செல்வதில்லை. எந்த மொழியையும் கூர்ந்து கவனித்திருப்பதுமில்லை. ஒரு மொழி நன்றாக தெரியும் என அவர்கள் சொல்வது அதன் மேல்தளத்தில் இயல்பாகவும் எளிதாகவும் புழங்க முடியும் என்ற பொருளில்தான்.

மொழியின் மேல்தளம் என்பது தேய்வழக்குகளால் ஆனது. பெரும்பாலானோர் அதிலேயே வாழ்கிறார்கள். அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பேதுமில்லை. இரு மொழிகளிலும் இலக்கியம் வாசிப்பவர்களுக்கு மட்டுமே ஏதேனும் மதிப்பீடு செய்யும் தகுதி உண்டு. படைப்பாளிகள் கூடுதலாக தங்கள் படைப்பிலக்கியத் திறனைக்கொண்டு மதிப்பிட்டுச் சொல்ல முடியும். அவர்கள் சொல்லும் மதிப்பீட்டுக்கு தனி மதிப்பு உண்டு.

ஆங்கிலம் தமிழைவிடச் செறிவான , கூர்மையான மொழி  என நான் முன்னரும் சொல்லியிருக்கிறேன். மலையாளத்தை விட தமிழ் செறிவான, கூர்மையான மொழி என்றும் சொல்லியிருக்கிறேன். நான் அறிந்த மொழிகள் மூன்று. அவ்வகையில் இந்தப்புரிதல் உருவாகியுள்ளது என்னிடம். ஒரு படைப்பாளியாக இதைச் சொல்கிறேன். 

ஒரு மொழியானது செறிவு, கூர்மை, நுட்பம் ஆகியவற்றை அடைவது எப்படி? மொழிவல்லுநர்களே அறுதியாகச் சொல்லமுடியும். என் பார்வையில் சிலவற்றைச் சொல்கிறேன்

ஒரு மொழி எந்த அளவுக்குத் தன்னை நவீனப்படுத்திக்கொண்டிருக்கிறது என்பது முக்கியமான அளவுகோல். நவீனப்படுத்திக்கொள்வதென்றால் ‘சமகாலத்தன்மையை’ அடைவது என்று பொருள். சொற்றொடரமைப்பு, சொற்கள் ஆகியவற்றில் இது நிகழ்கிறது. மொழி மாறிக்கொண்டே இருக்கிறது என்பதை நாம் அறிவோம். ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய குமுதம், ஆனந்த விகடனை படித்தாலே நமக்கு பழமை நெடி அடிக்கிறது. அந்த மாற்றம் எத்தனை வேகமாக நிகழ்கிறது, எத்தனை முழுமையாக நிகழ்கிறது என்பதே கவனிக்கவேண்டியது.

Stories Of The True Paperback வாங்க

அந்த நவீனப்படுத்தல்தான் மொழியை கூர்மையாக ஆக்குகிறது. பழைய நூல்களை இன்று வாசித்தால் சுருக்கமாகச் சொல்லியிருக்கலாமே என்ற எண்ணமே எழும். சமகாலத்திலேயே கவனியுங்கள். மரபான தமிழறிஞர்கள் நிறைய தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் எதையும் சுற்றி வளைத்து நீட்டி நீட்டிப் பேசுவார்கள், அலங்காரச் சொற்களை அடுக்குவார்கள், எதையும் கூர்மையாகச் சொல்ல அவர்களால் இயலாது. மரபான உள்ளம் கொண்டவர்களுக்கு அந்த வளர்த்தலே பிடிக்கும். அதில் அவர்கள் சொகுசாகத் திளைப்பார்கள்.

நவீன எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களுமே கூர்மையாகவும் சுருக்கமாகவும் சொல்வார்கள். நவீன உள்ளம் கொண்டவர்களுக்கு இந்த கூர்மையே பிடிக்கும். மரபான உள்ளம் கொண்டவர்களால் இந்த சுருக்கம், கூர்மை ஆகியவற்றை புரிந்துகொள்ள முடியாது. நவீன இலக்கியத்தின் கூரிய மொழி பொதுவான மொழிக்களத்தில் புழங்குபவர்களுக்கும் புரியாது. அவர்கள் தங்களை மேம்படுத்திக்கொண்டு வந்து சேர்ந்தாகவேண்டும்.

இந்த நவீனப்படுத்துதல் ஒரு மொழியில் நடைபெற்றுக்கொண்டே இருக்கவேண்டும். ஆனால் இது மொழியியல் செயல்பாடு அல்ல. ஒரு பண்பட்டில் நிகழும் அகமாற்றம். ஆகவே இதை மொழியியலாளர் செய்ய முடியாது. இது முதன்மையாக நவீன இலக்கியம் வழியாகவே நிகழும். இலக்கியவாதிகள் கவிதை, புனைகதை, கட்டுரைகள், உரைகள் வழியாக அதை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.

நவீன இலக்கியத்திலும் முதன்மையாக கவிதையே மொழியை நவீனப்படுத்தி கூர்மையாக்குகிறது. இன்றைய நவீனத்தமிழில் தமிழ்ப்புதுக்கவிதையின் பங்களிப்பு என்ன என்பதை பலர் உணர்ந்திருப்பதில்லை. நவீனக்கவிதையின் தமிழ்தான் மெல்லமெல்ல நவீன உரைநடை ஆகிறது, அங்கிருந்து வணிக இலக்கியமும் இதழியலும் சினிமாக்கவிதையும் ஆக மாறுகிறது, அவ்வாறு பொதுவான மொழியையே மெல்ல மெல்ல மாற்றியமைக்கிறது. 

தமிழ் நவீனமானதில் பிற எவரைவிடவும் பாரதியின் பங்களிப்பு அதிகம். பாரதியின் கவிதைகள் மேல் பெரிய மதிப்பில்லாத க.நா.சுவும் சுந்தர ராமசாமியும்கூட இதை மீளமீள பதிவுசெய்துள்ளன. அதன்பின் வந்த புதுக்கவிஞர்கள் அனைவருமே அதில் பங்களிப்பாற்றியுள்ளனர். தமிழ் நவீன இலக்கியமே தொடர்ந்து தமிழை நவீனப்படுத்தியது.

இந்திய தொல்மொழிகளின் எழுத்துவடிவம் செய்யுளுக்காக உருவானது. இங்கே உரைநடை உருவாகி இருநூறாண்டுகள் ஆகவில்லை. சொற்களைக் கூட்டி எழுதுவதே செய்யுளுக்கு செறிவை அளிக்கும். இன்றும்கூட சம்ஸ்கிருதம் அப்படித்தான் எழுதப்பட முடியும். சம்ஸ்கிருதத்துக்கு நெருக்கமாக இருக்கும் மொழிகளில் சொற்களை  சேர்த்தெழுதும் வழக்கம் உரைநடை உருவான பின்னரும் நீடிக்கிறது. மலையாளத்தில் இன்றும் ‘நிபிந்தாந்தகாரஹோரவனாந்தரம்’ என்பது போன்ற சொல்லாட்சிகளை காணலாம்.

தமிழிலும் சொற்களைச் சேர்த்து எழுதும் வழக்கமே இருந்தது. ‘ஈதிங்கனமிருக்கையிலானதென்னவென்றுரைப்பாம்’  என்பதுபோன்ற சொல்லாட்சிகள் இருந்தன. உரைநடை வந்தபின்னரும் அன்றைய அறிஞர்கள் அப்படித்தான் எழுதிக்கொண்டிருந்தனர். பாரதி உள்ளிட்ட படைப்பாளிகள், மற்றும் இதழாளர்களால்தான் சொற்களை பிரித்தெழுதும் வழக்கம் உருவானது. அதற்கு தமிழிலக்கணத்தில் இடமில்லை. இலக்கணம் மீறி உருவானது அந்த உரைநடை. அவ்வாறு உருவான சீர்திருத்தங்களால்தான் தமிழ் மற்ற இந்திய மொழிகளை விட கூர்மையாக உள்ளது. சொற்களை பிரித்து எழுதுதல், கூடுமானவரை ஒற்று  தவிர்த்தல் என நாம் செல்லவேண்டிய தொலைவு இன்னும் அதிகம்.

இலக்கியம், குறிப்பாகக் கவிதை, சொற்றொடர்களை புதியதாக அமைப்பதை சோதனை செய்துகொண்டே இருக்கிறது. புதிய புதிய வடிவங்களில் முயன்று பார்க்கிறது. அதில் பெரும்பகுதி வீண்முயற்சிகள். பெரும்பகுதி புரிவதுமில்லை. ஆனால் அவ்வப்போது முற்றிலும் புதிய சொற்றொடர்கள் உருவாகின்றன. அவை சட்டென்று மொழிக்கு புதிய வழிகளை உருவாக்கி அளிக்கின்றன. மொழி ஒரு பெரிய தேங்கிய ஏரி என்றால் அதன் கரையில் போடப்படும் நண்டுவளைகள் கவிதைகள். அவ்வழியாக ஏரி எதிர்பாராத திசையில் உடைத்துப் பெருகுகிறது.

ஒரு மொழியில் எந்த அளவுக்குக் கலைச்சொற்கள் புழக்கத்திலுள்ளனவோ அந்த அளவுக்கு அந்த மொழி கூர்மையானதாகிறது.  கலைச்சொற்களை வெவ்வேறு அறிவுத்துறைகள் உருவாக்கிக்கொண்டே இருக்கவேண்டும். இதழியல், அரசியல், சமூகவியல், அறிவியல் என பலதுறைகளிலும் கலைச்சொற்கள் உருவாகி தொடர்புழக்கத்தால் பொதுச்சூழலில் நிலைகொள்ளவேண்டும்அவற்றை பயன்படுத்தும் மனநிலையையும் சொற்றொடர் அமைப்பையும் இலக்கியம் உருவாக்கி இதழியலுக்கு அளித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

கலைச்சொற்கள் கருத்துக்களையும் கொள்கைகளையும் சொற்களாகச் சுருக்கிவிடுகின்றன. அவை புழக்கத்தில் இருக்கையில் மொழி கூர்மையாகிறது. அச்சொல்லே ஒரு கருத்தை அல்லது கொள்கையை புரியவைத்துவிடுகிறது . ஆனால் அக்கலைச்சொற்கள் புழக்கத்தில் இருந்தாகவேண்டும். உதாரணமாக deconstruction ன்னும் சொல் ஆங்கிலத்தில் தெரிதாவுக்கு பின் சாதாரணமாகப் புழங்கும் ஒரு கலைச்சொல் ஆகிவிட்டது. இன்று அச்சொல்லே அந்தக் கருத்தை புரியவைக்கும். அரசியல், பொருளியல், கலை எல்லா இடத்திலும் அச்சொல் புழங்குகிறது.

தமிழில் அச்சொல்லுக்கு இணையான கலைச்சொற்களான கட்டுடைப்பு, கட்டவிழ்ப்பு, தகர்ப்பமைப்பு போன்றவை தீவிர இலக்கியவாதிகளால்கூட அறியப்பட்டவை அல்ல. ஆகவே அந்தக் கருத்தையே இன்று தொடர்புறுத்துவது மிகக் கடினம். அதைச் சொல்ல பல சொற்றொடர்களைச் சொல்லவேண்டும். அது மொழியை நீர்த்துப்போகச் செய்கிறது. 

தமிழில் நவீன சிந்தனைக்களத்தில் ஐம்பதாண்டுகளாக புழக்கத்திலுள்ள படிமம் (Image ) ஆளுமை (Personality ) போன்ற கலைச்சொற்களைக் கூட நம் பொதுச்சூழல் அறிந்திருக்கவில்லை. பலர் மிகப்பிழையாகப் புரிந்துகொள்வதை காணலாம். அண்மையில் ஒரு பிரபலமான பேச்சாளர் ஆளுமை என்ற சொல்லை ஆதிக்கம், ஆட்சி என்னும் பொருளில் பயன்படுத்திக்கொண்டிருந்ததை கேட்டேன். அதை தவிர்க்க நாம் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலச்சொல்லை அளிக்கவேண்டியிருக்கிறது.

கலைச்சொற்கள் மொழியை எந்த அளவுக்கு கூர்மையாக்குகின்றன என்பதை நாம் உணர்ந்திருக்க மாட்டோம். இன்று இலக்கியத்திலோ அறிவார்ந்த விவாதங்களிலோ கலைச்சொற்களைக் கண்டால் ஒவ்வாமை அடைபவர்களே மிகுதி. ஏன் இப்படிச் சொல்லவேண்டும், எளிமையாகச் சொல்லலாமே, எளிமையாகச் சொல்பவனே மெய்யான அறிஞன், ‘பாமரரும் புரிந்துகொள்ளும்படி’ பேசவேண்டும், கலைச்சொற்களைப் பேசுவது அறிவுஜீவிப் பாவலா என்றெல்லாம் இங்கே பொதுச்சூழலில் எண்ணம் உள்ளது

ஆனால் அந்தப் பொதுச்சூழலிலேயே சென்ற நூறாண்டுகளில் புழக்கத்துக்கு வந்த பல ஆயிரம் கலைச்சொற்கள் வழியாகவே அன்றாடத் தொடர்புறுத்தல் நிகழ்கிறது. வேட்புமனு, வேட்பாளர், வாக்காளர் எல்லாம் நாம் புழக்கத்திற்கு கொண்டுவந்த கலைச்சொற்களே. அவை நம் பேச்சை எவ்வளவு கூர்மையாக்கியுள்ளன என்று அறியவேண்டுமென்றால் பாட்டியிடம் அதே அரசியல் கருத்துக்களைப் பேசிப்பாருங்கள். அக்கலைச்சொற்களை புரியவைக்க பல சொற்களை மேலும் சொல்லவேண்டியிருக்கும்.

ஒரு மொழியில் வெளியே இருந்து மொழியாக்கங்கள் வந்துகொண்டே இருக்கவேண்டும். பலமொழிகளில் இருந்து. ஒவ்வொரு மொழிக்கும் அதற்கான  சொற்றொடர்க்கட்டமைப்பு இருக்கும். அதை நம் மொழி சந்திக்கும்போது நம் மொழி நெருக்கடிக்குள்ளாகிறது. அதன் வழியாக புதிய சாத்தியக்கூறுகள் உருவாகின்றன.

தமிழில் இந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகியவற்றிலிருந்து மொழியாக்கங்கள் செய்யப்படுகின்றன. ஆனால் பெரும்பகுதி ஆங்கிலம் வழியாகவே மொழியாக்கம் நிகழ்கிறது. தமிழிலுள்ள புதிய சொற்கோவைகள், சொற்கள் ஏராளமானவை ஆங்கில மொழியாக்கங்கள் வழியாக வந்தவை.

1. புத்திலக்கிய ஆக்கம், அதன் பரவல்.

2. கலைச்சொல்லாக்கம், அதன் பரவல்

3. மொழியாக்கம்

ஆகிய மூன்று அம்சங்களும் ஆங்கிலத்தில் தமிழை விட பல மடங்கு என்பதை கொஞ்சம் வாசிப்பவர்கள் உணரலாம். ஆகவேதான் ஆங்கிலம் தமிழைவிடக் கூரிய மொழியாக உள்ளது

(மேலும்)

Jeyamohan interview: Ezhaam Ulagam, or The Abyss, is a spiritual inquiry into beggars’ lives

‘The Abyss’ – an English translation of Jeyamohan’s Tamil novel ‘Ezhaam Ulagam’

முந்தைய கட்டுரைகி.ச.திலீபன்
அடுத்த கட்டுரைகிளம்புக!