அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
அஜிதன் தன்யா மண நிகழ்வில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. நான் இப்படி எந்த விழாவிலும் அத்தனை நிறைவாக மகிழ்வாக இருந்திதல்லை. பெண் வீட்டாரை தவிர எல்லோரையும் எனக்கு தெரிந்திருந்தது. எங்கு பார்த்தாலும் நண்பர்கள், வேண்டியவர்கள் தெரிந்தவர்கள். எல்லா முகங்களிலும் புன்னகை, ஒவ்வொருவரும் அவர்கள் வீட்டு நிகழ்விலிருப்பதைபோலவே பெருமிதமும் நிறைவு மாக இருந்தோம்.
நாகர்கோவில்,மற்றும் சென்னையில் சிறப்பாக நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்வின் புகைப்படங்களையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.
சென்னை நிகழ்வில் உச்ச நட்சத்திரங்களும் உயர்மட்ட பிரபலங்களும் விஷ்ணுபுரம் நண்பர்களுமாக நிறைந்து இருந்தார்கள். ஆகச்சிறந்த உடையும் ஆபரணங்களுமாக கலந்துகொண்டவர்களின் புகைப்படங்கள் வண்ண மயமாக இருந்தன.
பனையோலை தொப்பியுடன் வாய் கொள்ளாச் சிரிப்புடன் காட்சன் சாமுவேல் ஒரு புகைப்படத்தில் இருந்தார். அப்படியான ஒரு நிகழ்வில் அனைவரும் அவரவர் உன்னதமென்றும் உயர்ந்ததென்றும் கருதும் உடையும் ஆபரணங்களுமாக இருக்கையில் காட்சன் அவருக்கு அரியதும் ஆகச்சிறந்துமான பனையில் செய்யப்பட்ட ஒரு தொப்பியை அணிந்து கொண்டு வந்திருந்தார். அங்கிருந்தோருக்கு பொன்னும் வைரமும் முத்தும் பவளமும் விலையுயர்ந்த உடைகளையும் போல அல்லது அவை அனைத்திற்கும் மேலானதாக காட்சனுக்கு பனை இருந்திருக்கிறது,இருக்கிறது
காட்சன் தான் செய்துகொண்டிருப்பதின் பொருளை உணர்ந்திருப்பவர், அவர் மீது, அவர் ஈடுபட்டிருக்கும் அரும்பணியின் மீது அவருக்கு அன்பும் மரியாதையும் இருக்கிறது எனவேதான் அப்படியான ஒரு பனையோலை தொப்பியை பிரபலங்கள் கலந்துகொள்ளும் ஒரு நிகழ்வில் அணிந்துவந்ததின் பெருமை அவர் உடல்மொழியில் தெரிந்தது.
பொள்ளாச்சிக்கு அந்த பனையோலை தொப்பியை அணிந்து வந்த அவரை பிறர் வேடிக்கை பார்ப்பதை நான் கவனித்திருக்கிறேன். அழிந்து வரும் ஒரு மரம் அடியோடு வெட்டப்பட்டு சாலையில் கிடப்பதை எந்த குற்றவுணர்வுமின்றி கடந்துசெல்வதுதான் ஏளனத்துத்குரியது. அம்மரத்தை பாதுகாக்க அதன் எதிர்காலத்தை பேண மக்களிடையே அம்மரம் குறித்த விழிப்புணர்வு உருவாக்க அதன் ஓலையில் செய்யப்பட்ட ஒரு தொப்பியை தலையில் அணிந்துகொண்டுவருவது ஏளனத்துக்குரியதல்ல.
காட்சனுக்கு பனையே இறை, பனையே செல்வம் பனையே எல்லாமும் எனவே அவருக்கு பனையோலைப் பொருட்களை பயன்படுத்துவதிலும் அணிந்துகொள்வதிலும் பனையுடன் இணைந்த வாழ்விலிருப்பதிலும் எந்த விலக்கமும் ஆட்சேபணையும் இல்லை. அவர் அதில் எத்தனை மகிழ்ந்திருக்கிறார் என்பதை வாய்கொள்ளாத அச்சிரிப்பு காட்டுகிறது.
சிலநாட்களுக்கு முன்னர் விமானப்பயணத்தின்போது விமானப்பணிப்பெண்கள் அவரது பனையோலை தொப்பியை அணிந்து அழகு பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படங்களையும் பார்த்தேன்.
நானும் தாவரங்களை விரும்புகிறவள், மதிப்பவள், ஆராதிப்பவள் கற்றுக்கொள்பவள் கற்றுகொடுப்பவள்தான் எனினும் காட்சனை போல இத்தனை அர்ப்பணிப்புள்ளவளல்ல என்பதில் எனக்கு சிறிது குற்ற உணர்வு இருக்கிறது.
பனை நமது மாநில மரம் அழிந்துவரும் தாவரவகை என்பதில் யாருக்குமே இல்லாத அக்கறை காட்சனுக்கு இருக்கிறது. தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் பனையின் பொருட்டு பயணிப்பதும், பனைப்பொருட்களின் பயன்கூட்டுதல் குறித்து கருத்தரங்குகளில் பேசுவதும், பனை மரங்களை நடுவதும், பனை இரவை முன்னின்று நடத்துவதும், இரண்டு பாகங்களாக பனைமரச்சாலை என்னும் நூலை எழுதி வெளியிடுவதுமான செயல்களில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருக்கும் காட்சனை நினைக்கையில் ஒரு தாவரவியலாளராக எத்தனை பெருமிதம் கொள்கிறேனோ அத்தனை பொறாமையும் கொள்கிறேன்.
நான் பணிபுரியும் துறையின் முகப்பில் மாநில மலரான செங்காந்தள் மாநில மரமான பனை , இவை இரண்டின் பெரிது பண்ணப்பட்ட புகைப்படங்களை வைக்கும் முயற்சியில் இருக்கிறேன். தினமும் மாணவர்களின் கண்ணில் படும் இப்புகைப்டங்களின் மூலம் அவற்றின் முக்கியத்துவம் காலப்போக்கிலாவது உணரப்படும் என்று நம்புகிறேன்.
அரசு அலுவலகங்கள் அனைத்திலும் முதல்வரின் புகைப்படம் இருப்பதுபோல பனையின் புகைப்படமும் கட்டாயம் இருந்தால் அதன் முக்கியத்துவம் மெல்ல மெல்ல அனைவருக்கும் புரியும் .
பள்ளிக்கல்வியிலும் பனை குறித்த பாடங்களை கொண்டு வரலாம் ஏன் பனை மாநில மரமாக தெரிவு செய்யப்பட்டது,ஏன் செங்காந்தள் மாநில மலரானது என்பதை ஒரு சிறு பத்தியாக பள்ளிப்பாட நூல்களின் முகப்பில் அச்சிடலாம்.
இப்போது தேர்தல் காய்ச்சல் அடித்துகொண்டிருக்கிறது . புதிய/அடுத்த ஆட்சியாளர்களின் செவியில் இதுபோன்ற ஆலோசனைகள் கேட்குமேயானால் இவற்றின் முக்கியத்துவத்தை மாநிலமெங்கும் எளிதாக உணரச்செய்யலாம். அதன் பிறகாவது பயணங்களின் போது வெட்டப்பட்ட பனைமரத்தடிகள் நிறைந்த பாரவண்டிகள் நம் முன்னே செல்வதை பார்க்கும் பலரில் சிலருக்காவது அவை சூழல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் கொண்ட நம் மாநிலமரங்கள் என்னும் உணர்வும் அக்கறையும் வரக்கூடும்.
காட்சன் அவர்களின் அனைத்து பனைசார்ந்த பணிகளுக்கும் என் வாழ்த்துக்கள். நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டே இருக்கிறேன்.
அஜிதனுக்கும் தன்யாவுக்கும் அன்பும் ஆசிகளும்,
அன்புடன்
லோகமாதேவி
அன்புள்ள லோகமாதேவி
காட்சனைப் பார்த்ததும் விஜய் சேதுபதி சட்டென்று அவரே நின்றுவிட்டார். அதன்பின் காட்சன் அருகே வந்து தன்னை அறிமுகம் செய்துகொண்டார். சிறிய ஓர் உரையாடல் நிகழ்ந்தது. அதைக் கண்டு நான் அருகே சென்று காட்சனை விரிவாக அறிமுகம் செய்தேன். அவருடைய கிறிஸ்தவப் போதகர் பணி, அவர் உருவாக்கி வரும் பனை இயக்கம் ஆகியவற்றைப்பற்றிச் சொன்னேன்.
விஜய் சேதுபதியை காட்சனை நோக்கி ஈர்த்தது அவருடைய தொப்பிதான். பனையோலையில் அவரே செய்துகொண்டது. எப்போதும் அவர் அதை அணிந்திருப்பார். பனையாலான தோள்பை, கைப்பை ஆகியவற்றையும் பயன்படுத்துவார். நாகர்கோயிலில் என் இல்லத்திற்கு வரும்போதும் அப்படியே தான் வருவார்.
நாகர்கோயில் போன்ற ஒரு நகரின் சாலையில் அது எப்படி விந்தையாகத் தெரியுமோ அப்படித்தான் சென்னையில் ஒரு நட்சத்திர விடுதியிலும் தெரியும். காட்சனுக்கு அது பொருட்டல்ல. எளியவர்கள் அதைக் கண்டு சிரிக்கக்கூடும் என்றும் அவருக்குத் தெரியும். ஆனால் அவர் தன்னை தன் கொள்கைகளின் ஒரு நடமாடும் விளம்பரமாக ஆக்கிக்கொண்டுவிட்டார். அந்த தொப்பி பற்றி ஒருவர் கேட்பாரென்றால் அதைப்பற்றிப் பேசமுடியும். அதற்கான வாய்ப்பாகவே அவர் அந்த தருணத்தை உருவாக்கிக் கொள்கிறார்.
விஜய் சேதுபதி சொன்னது நினைவுள்ளது. “ஒரு அபாரமான சினிமா கதாபாத்திரம் போல இருக்காருங்க” .அவர் சொன்னதன் பொருள் காட்சனை அது உடனடியாக மற்றவர்களிடமிருந்து பிரிக்கிறது, அவரை ஓர் தனியாளுமையாகக் காட்டுகிறது, அவர் யார் என்பதை வரையறை செய்கிறது என்றுதான். சினிமாக்கதாபாத்திரம் கண்களால் பார்க்கப்படும் முதற் காட்சியிலேயே அதன் குணச்சித்திரம் துலங்கிவருவதாக அமையவேண்டும்.
காட்சன் இன்றைக்கு 20 ஆண்டுகளுக்கு முன் நாகர்கோயில் அருகே ஓர் சி.எஸ்.ஐ. ஆலய போதகராக இருந்தபோது அவர் ஆற்றவிருந்த ஒரு கிறிஸ்துமஸ் உரையை எழுதி அதை ஒருமுறை வாசித்துச் சொல்லமுடியுமா என்று கேட்க என்னை அணுகினார். அதன்பின் மார்தாண்டம் பனை கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றினார். இன்று அவர் மும்பையில் போதகராகப் பணியாற்றுகிறார்.
பனைப் பாதுகாவலே தன் வாழ்வென அவர் கொண்டது மார்த்தாண்டத்தில் பணியாற்றும்போதுதான். தமிழகம் முழுக்க பனைகளை தேடி பயணம் செய்துள்ளார். மாணவர்களுக்கும் பிறருக்கும் பனைகளை அறிமுகம் செய்யும் பனைப்பயணங்கள் ஒருங்கிணைத்துள்ளார். 2016ல் மும்பையில் இருந்து குமரிவரை நீண்ட பைக் பயணம் ஒன்றை பனைகளை தேடிப் செய்தார். பனைகள் இந்தியா முழுக்க எங்கெங்கு உள்ளன, எந்நிலையில் உள்ளன என்று அறிவதற்கான பயணம் அது. பனைப்பாதுகாப்பை ஓர் இயக்கமாக முன்னெடுத்தார். அதை என் தளத்தில் பதிவுசெய்துள்ளேன் (பனை இந்தியா! – ஒரு மகத்தான பயணம்)
காட்சன் நிகழ்த்திய பனைப்பாதுகாப்புப் பயணம் அவர் இணையப்பக்கத்தில் தொடராக வெளிவந்து பின் நூலாகியது. பனைமரச்சாலை என்ற பேரில் நற்றிணை வெளியீடாக அருண்மொழிநங்கை முன்னுரையுடன் பிரசுரமாகியது. மேலதிகத் தகவல்களுடன் பனை எழுக என்ற பேரில் தன்னறம் வெளியீடாக மறுபதிப்பு வந்துள்ளது. பனை பற்றிய தகவல்களின் தொகுப்பு என்பதற்கு மேலாக வாழ்வின் மேல் மிகுந்த நம்பிக்கையும் அக ஊக்கமும் அளிக்கும் ஒரு வகையான ஆன்மிகநூல் அது.
இன்றைய அரசு பனைப்பாதுகாப்புக்கான அறிவிப்புகளை வெளியிட காட்சனின் தொடர் பணிகள் முதன்மையான காரணம். அவர் ஒரு தனிநபர் இயக்கம். அந்த தொப்பி அவருடைய மணிமுடி. பனை இருக்கவேண்டிய இடம் அவருடைய தலைதான்.
தன்னையே தன் கொள்கைகளின் அடையாளமாக ஆக்கிக்கொள்வதென்பது பல சமூகப்பணியாளர்களும் செய்வது. அதற்கு தன் கொள்கைகளில் உறுதியும், வாழ்வே அதுவாக ஆக்கிக்கொள்ளும் பற்றும், வெளிப்படைத்தன்மையும் தேவை. எந்நிலையிலும் தன் பணியே தான் என அறிவிப்பது மிகுந்த துணிவு தேவையாகும் செயல். அப்படி தன்னை அறிவித்துக்கொள்ளுதலே அக்காலத்தில் துறவு என அறியப்பட்டது. பொதுப்பணியில் அதைக் கொண்டுவந்த ஒருவர் இவர்கள் அனைவருக்கும் முன்னோடி- காந்தி
ஜெ
பனை எழுக- தன்னறம் பதிப்பகம்
போதகரின் வலைப்பூ