புறப்பாடு நூல் அமெரிக்காவின் முதன்மையான இலக்கிய அமைப்பு ஒன்றின் நிதியுதவியுடன் நண்பர் விஸ்வநாதனால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படுகிறது. அமெரிக்க நிறுவன வெளியீடாக வரவுள்ளது. உலகவாசகர் கவனத்திற்குச் செல்லும் என் முதன்மைநூல்களில் ஒன்றாக அது அமையலாம்.
அந்நூல் பெறும் முக்கியத்துவத்தைக் காண்கையில் ஓரு விந்தையுணர்வே எனக்கு ஏற்படுகிறது. தற்செயலாக நான் எழுத ஆரம்பித்த நூல் அது. ஒரே ஒரு கட்டுரை மட்டுமே எழுத எண்ணினேன். என் இணையதளத்தில் அது வெளியாயிற்று. ஆனால் அங்கே ந்ற்கவில்லை. எழுத எழுத நீண்டு ஓர் இடத்தில் போதுமென நானே நிறுத்திக்கொள்வதாக ஆயிற்று.
புனைவெழுத்து அவ்வண்ணம் திட்டமிடாமல் உருவாவதுண்டு. சொல்லப்போனால் அப்படித்தான் அது உருவாகி வரவேண்டும். ஆனால் ஒரு தன்வரலாறு அவ்வாறு உருவானதென்பது இயல்பில்லாத ஒன்று. ஆனால் இது தன்வரலாறும் அல்ல. நினைவில் தோய்தல்தான். ஒரு புள்ளியில் இருந்து உருவாகி வரும் நினைவுகள் அதைச்சுற்றி ஓடி முடிவதே இதன் வடிவம்.
இவ்வாறு ஒரு மையப்புள்ளி அமைந்தமையால் இந்நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதை என்னும் அமைப்பை தன்னியல்பாக வந்தமைந்தது. பல அத்தியாயங்கள் முழுமையான சிறுகதையாகவே உள்ளன. சிறுகதை என்னும் வடிவம் என் பிரியத்திற்குரியது என்பது ஒரு காரணம். சிறுகதை வடிவில் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு புள்ளியில் தொடங்கி, நிகழ்வுகளாகப் பெருகிச்சென்று இன்னொரு புள்ளியில் முடிவடைகின்றது. தொடக்கம் என் கேள்வி. அதற்கான விடையே முடிவு. அவ்வகையில் இந்நூல் என் இறந்தகாலம் பற்றி என்னுள் இருந்த கேள்விகளை நான் எழுதிக் கண்டடைந்தது போல உள்ளது..
ஆகவே இது வெறுமே சென்றகால நினைவுகளாக அமையவில்லை. அந்நினைவுகளின்மேல் இன்றைய என்னுடைய திறப்பு, கண்டடைதல் ஒன்று உள்ளது. அதுவே இதை இலக்கியமாக ஆக்குகிறது. இவை வெறும் அனுபவங்கள் அல்ல. இவை என் வாழ்வில் நிகழ்ந்தபோது இன்று நான் இவற்றில் எழுப்பிக்கொள்ளும் வினாக்கள் என்னிடம் இருக்கவில்லை. நான் இந்த அனுபவங்களை அன்று எதிர்கொள்ளக்கூட இல்லை. கவனித்தேனா என்பதே ஐயம்தான். நான் இந்த அனுபவங்கள் வழியாக ஒழுகிச்சென்றேன் என்று சொல்லலாம். அரைவிழிப்பு நிலையில். அன்று இவ்வனுபவங்களின் வழியாக வாழ்ந்து நிலைகொள்ளும் சவால் ஒன்றே இருந்தது.
உதாரணமாக, திருவனந்தபுரத்தில் அந்தியில் தலைசாய்க்க ஓர் இடம் தேடும் அலைக்கழிப்பு. அன்று இடம் கிடைப்பது மட்டுமே சிந்தனையில் இருந்தது. ஆனால் முப்பதாண்டுகள் கழித்து அந்த இரவுகளை நினைவுகூர்கையில் அந்நகரில் மையத்தில் அல்லவா அனந்த பத்மநாபன் கால்நீட்டிப் படுத்திருக்கிறார் என்னும் பெருந்திகைப்பு உருவாகிறது. அங்கே கால்நீட்ட முடியாமல் குந்தி அமர்ந்து தூங்கும் சாலைவாழ் மக்கள் அனைவரும் முற்றிலும் வேறொரு ஒளியில் தெரியத் தொடங்குகின்றனர். அவ்வாறுதான் இதிலுள்ள எல்லா அனுபவங்களும் ஒரு உள்ளிணைப்பை அடைந்து கதைபோன்ற கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டன.
என்னால் அப்படி ஓர் உள்ளொழுங்கை, மையத்தை உருவாக்கிக்கொள்ளாத அனுபவங்களை எழுதவே முடியாது. இந்நூலிலேயே மிகச்சாதாரணமான அனுபவங்கள் அவ்வாறு ஓர் அகத்தொகுப்பை அடைந்து பதிவாகியிருக்கின்றன.மிகத்தீவிரமான பல அனுபவங்களை என்னால் எழுத முடிந்ததே இல்லை. ஏன் ஒன்று வளர்கிறது? ஏன் இன்னொன்று முளைக்காத கல்விதை போல் கிடக்கிறது? சொல்ல முடிவதில்லை. வளரும் அனுபவம் ஒரு வைரஸ் கிருமி போல இன்னொரு அனுபவத்தை தொற்றிக்கொள்கிறது. அந்த அனுபவத்தின் சாரமாக இருக்கும் ஒன்று பிற அனுபவங்களுடன் உரையாடுகிறது. அது எதையோ சொல்ல விரும்புகிறது.
ஆகவே இந்நூலை எழுதியதே நல்ல வழிமுறை என எண்ணத்தோன்றுகிறது. அனுபவங்களை அப்படியே தன்னிச்சையாக வளரவிடுதல். எது தன்னுள் வளரும் ஆணையைக் கொண்டிருக்கிறதோ அது நிகழட்டும் என இருத்தல். அவ்வாறு உருவான படைப்பு இது. ஆகவே பலவகையிலும் என் முதன்மையான புனைவிலக்கியங்களுக்கு நிகரானது.
புறப்பாடு மீண்டும் ஒரு புதிய பதிப்பாக விஷ்ணுபுரம் பதிப்பகத்தில் இருந்து வெளிவருகிறது. இதை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கு நன்றி.
ஜெயமோகன்