வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு
எங்கிருந்து துவங்குவது? வாசித்து முடித்து இரண்டு நாட்கள் ஆனபிறகும் மனகொந்தளிப்பின் உச்சத்திலேயே இருக்கிறேன். இதுகாறும் நான் வாசித்த, பருவம், இரண்டாம் இடம், கௌரவன், இன்னும் சில மகாபாரத வரிசைகளின் வழி முதற்கனல் மிகப்பெரும் அடுத்த நிலையை தொட்டிருக்கிறது. மேற்சொன்ன மகாபாரதத்தின் நவீன வடிவங்கள், அதனதன் தன்மைக்கேற்ப வெவ்வேறு வடிவில் மனித உணர்வுகளின், அதிகாரத்தின் கோரப்பசியை, மனித அமைப்பின் குரூரங்களை வெளிச்சமிட்டு காட்டியவை. முதற்கனல் துவங்கும்போது இது எப்படியிருக்குமோ, எதை எனக்கு கொடுக்கப்போகிறது? நான் இதில் என்னவாக இருக்கப்போகிறேன் என பல சிந்தனைகள் மனதில் ஓடிக் கொண்டே இருந்தன. குறிப்பாக இது வெறும் துவக்கமே என்னும்பொழுது ஆரம்பம் எங்கிருந்து துவங்கும்? ஜெயமோகன் எதையெல்லாம் வைத்து இந்தக் கதையை துவங்குவார் என்று பல யோசனைகள்…
விசித்திரவீரியன் என்னும் மன்னன் மீது பெருங்காதல் கொள்ள வைத்த தருணத்தை எப்படி விளக்குவேன். இதுவே இந்த நாவலின் முதல் வெற்றிகரமான தருணம் என்பேன். இதுநாள் வரை விசித்திரவீரியனை பற்றி எந்தக் கணமும் நான் யோசித்ததில்லை. அம்பிகையும், விசித்திரவீரியனும் காதல் கொள்ளும் தருணம் என்பது வெறுமனே காதல் காட்சி மாத்திரம் மட்டுமல்ல. அம்பிகை விசித்திரனை நோக்கிக் கூறுவாள், உன் கண்களில் ஆண்மை இல்லை, அதுவே உன்னிடம் அனைத்தையும் கூறத் தூண்டுகிறது என்று. முதற்கனலின் மகத்தான தருணமாக நான் உணர்ந்த நொடி அது. நோய்வாய்பட்ட, தன் வாழ்வின் இறுதித்தருணத்தில் இருக்கிற ஒருவனுகே வாழ்வின் மகத்துவம் புரிந்திருக்கிறது. காதலின் வலிமை புரிகிறது. தன் மரணத்தின் முன்னான சில தினங்களில் அவன் அம்பிகையின் புன்னகையை பெறுகிறான். பீஷ்மர் ஓரிடத்தில் சொல்கிறார். விசித்திர வீரியன் அரியணை ஏறியதில்லை, போர்க்களம் கண்டதில்லை, ஆனால் அஸ்தினாபுரம் கண்ட மாமன்னன் அவனே என்கிறார். ஏனெனில் விசித்திரவீரியன் ஆண்மைதுறந்து அன்பென்னும் நல்லூழ் வாய்க்கப்பெற்றவன்.
பீஷ்மர் என்னும் பெயரை கேட்கும்போதெல்லாம் எனக்குள் தோன்றுவது கட்டற்ற வலிமைக் கொண்ட ஒரு மகத்துவமான புலியின் தோற்றமே. நாம் பீஷ்மருக்கு இணையானவர் என சமக்காலத்தில் எவரையேனும் புகழ்கிறோம் என்றாலே அது அவரது மகத்துவமான வலிமையையும், மூத்தோர் என்னும் பொருள்படும்படியே அமைந்திருக்கும். ஆனால் முதற்கனலின் பீஷ்மரை வாசித்தபிறகு இதுநாள் வரை எனக்கிருந்த பீஷ்மர் மீதான பிம்பங்கள் உடைந்து ஒரு சகோதரனாக அவரை தழுவிக் கொள்ள வேண்டும் என்றே நினைத்தேன். அஸ்தினாபுரத்தில் மட்டுமல்ல, பாரதவர்ஷத்தில் எவராலும் வீழ்த்த முடியாத ஒரு மாபெரும் வீரன் தனிமையில் உழல்கிறார். தன் வாழ்க்கையில் பழிசூழ்ந்து, எக்கணமும் அன்பு என்பதே இல்லாமல் அதிகாரத்திற்கு அடிபணிந்து மாத்திரமே வாழ்வதும் அதற்காக அவர்படும் அவமானங்களும், என தான் ஏற்ற வாக்கிற்காக தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார். வாக்கு என்பது எதனை சார்ந்தது? அறம் சார்ந்ததா? விஸ்வாசம் அறத்தின் பகுதியாகுமா? பீஷ்மரை மையமாக வைத்து யோசித்து பாருங்களேன்.. மிக முக்கியமாக ஒரு விஷயத்தை தவிர்க்கிறேன், அது என்னவெனில் அம்பை – பீஷ்மர் – சிகண்டியின் பகுதி. என்னவொரு அற்புதமான தருணங்கள். பீஷ்மர் தன் வாழ்வில் சம்பாதித்த பெருங்காதலும், பெரும் சாபமும் அம்பையும், சிகண்டியுமே… இதற்காகத்தான் உமக்கு இந்த பிறவியோ பீஷ்மரே… குறிப்பாக முதற்கனலின் இறுதிக்காட்சி, அத்தருணம் பீஷ்மர் எடுக்கும் முடிவு… பீஷ்மரின் அறம் என்னவென்பதை நம்க்கு போதிக்கிறது.
மகாபாரதம் ஒரு மிகப்பெரும் அரசியல்ப்பிரதி ஏன ஜெயமோகன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். முதற்கனல் அம்மாபெரும் அரசியல் பிரதிக்கு தன் முதல் படிக்கட்டை மிக அழுத்தமாக நிறுவியிருக்கிறது. காலம் காலமாக, அரசினை தக்க வைப்பதற்காக ஒவ்வொருவரும் எடுக்கும் முடிவுகள் எவரையெல்லாம் பாதிக்கின்றன. அதில் தனி மனிதர்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் சிதறுகிறது. அப்படியென்றால் அறம் என்பதுதான் என்ன? வாழ்வின் ஆகச்சிறந்த முரண் நாம் நம் வாழ்க்கை முழுவதும் அறத்தை தேடுவதுதான், ஆனால் அறம் என்னவென்பதை எவராலும் தீர்மானிக்க இயலாது. ஏனெனில் அறம் என்பது அவரவர் நியாயமே, அதைக் காண்போர் எவர் பக்கம் நிற்க விரும்புகிறார்களோ, அவரவர்க்கு அது அறம். ஒவ்வொரு அறத்தின் பின்னும் அரசியலின் வழி குவியும் பிணங்களை யார் அறிவாரோ?
அம்பிகையும் – விசித்திரவீரியனும்
அம்பையும் – பீஷ்மரும் – சிகண்டியுமே
எனக்கு முதற்கனல்,…
பால கணேஷ்