காவியத்தின் காலடியில்

ஓவியம்: ஷண்முகவேல்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

அன்புள்ள ஆசிரியருக்கு ,

வணக்கம்.

வெண்முரசு ஒரு கடல் அதில் இறங்கினால் வேறு எந்த வாசிப்பையும் நிகழ்த்த முடியாது என்பது நான் எனக்கே போட்டுக்கொண்ட வேலி. ஆனால்  நண்பர் திரு.கதிரவனின் கடிதத்தை ஆசானின் தளத்தில் பார்த்ததும் ஏதோ ஒரு வேகத்தில் நானும் பதிவு செய்து உள்வந்தேன். வேகமும் ஆர்வமும் ஒரு புறம் இருந்தது என்றாலும் . முக்கிய காரணியாக என்னை உள்ளிழுத்தது ஐந்தாண்டிற்கான அதன் பாடத்திட்டம். ஆனால் அது பாடதிட்டமல்ல ஒரு தியானத்திட்டம் என்பது முதற்கனலில் சில அத்தியாயங்கள் கடந்ததுமே கண்டு கொண்டேன். அதே போல மற்ற வாசிப்பு மட்டுமல்ல நாட்களும்  இன்னும் செம்மையடைகிறது வெண்முரசுடன்.

முதலில் பகலில் வாசிக்க தொடங்கிய நான். பின்பு அதிகாலையில் மறுக்க முடியா ஒரு மனப்பயிற்சிபோல , தியானம் போல வாசிக்க தொடங்கினேன். முதலில் சற்று கடினமாக இருந்ததுபோல ஒரு காட்சிப்பிழை என்னுள் தோன்றினாலும் ..நாட்கள் செல்ல செல்லத்தான் உணர்ந்தேன் அதன் நாயகர்களாய் வாழ்ந்து அல்லது வாழ முயற்சித்து வருகிறேன் என. அதோடு முதல் வாசிப்பாய் வெண்முரசு ஒரு அத்தியாயம் என தொடங்கும் என் நாட்கள் முன்னிலும் நேர்த்தியாய் நகர்கிறது என்றால் அது சற்றும் மிகையல்ல.

முதற்கனலில் என்னில் முதல் கனல் விழுந்தது என்றால் மானசா தேவியை திரும்பிப் பார்க்காமல் ஆஸ்திகன்  சென்ற தருணம். அதில் தொடங்கி இருள் பாதாளத்தில் இருந்து பெருநதிகளாய் கிளம்பி புன்னகை செய்தது வரை எண்ணற்ற தருணங்கள் வியக்க , உணர, வாழ, எதிர்பார்க்க என.  ஒவ்வொருவராகவும் வாழ்ந்தேன் அல்லது வாழ முயற்சித்தேன் என சொன்னேன் அல்லவா. அதில் இப்போதும் என்னில் மேலெழுந்து வருபவர்கள் சிலர் ..அதில் முதலிடம் சிகண்டிக்கே. என்னவோ தெரியவில்லை ஆடியின் ஆழம் அத்தியாயம் 43 வாசித்த அன்று மற்ற 49 நாட்களிலும் வேறு பட்டது என்று உறுதியாக சொல்ல முடியும். சிகண்டி ஆடியின் முன் நிற்பது போன்ற ஒரு ஓவியம் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் அதை என் செல்பேசியில் screen saver ஆக வைத்து தனியாக லேமினேட் செய்யும் அளவுக்கு சென்றுவிட்டிருந்தேன்.

இதுவரையில் சிகண்டிக்கு அடுத்தபடியாக என்னை ஆட்கொண்டது பீஷ்மர். அவரின் ஆற்றலை விட இயலாமையே முன் வந்து நம்ம அச்சுறுத்துகிறது. அதிகாரத்தின் வல்லமையை , குரூரத்தை , அடக்குமுறையை என அதன் அத்தனை பக்கங்களையும் அலசுகிறது வெண்முரசு சத்தியவதி , பீமதேவன், புராவதி , அம்பை, வியாசர் , அம்பாலிகை , சியாமை , சிவை , அம்பாலிகை , நிருதன், விசித்திர வீரியன் , ஸ்தானகர் என அனைவர் மூலமும்.

ஆடியின் ஆழம் 43 க்குப் பிறகு என்னை தொந்தரவு செய்தது. இல்லை முன்னோக்கி நகர்த்தியது விசித்திரவீரியன் ஸ்தானகரிடமும், அவனது தாயாரிடமும் , இறுதியாக அவனது மனைவியான அம்பிகையிடமும் கொள்ளும் உரையாடல்கள். எந்த சுய முன்னேற்ற அல்லது தத்துவ நூல்களும் சொல்லிக்கொடுத்து புரியவைத்திட முடியாது  அந்த பாடங்களை.

அக்னிவேசர் மாணவர்களுக்குரைத்த அறிவுரைகளை எனக்கான பொன் விதிகள் என எழுதத்தொடங்கினேன் என் பாக்கெட் நோட்டில் . கிட்ட தட்ட அந்த முழு அத்தியாயத்தையும்  பொன் விதி 1, 2 என எழுதிவிட்டிருந்தேன். எதையும் அதிலிருந்து ஒதுக்க முடியாதவாறுள்ளது அவை.

இறுதியாக தட்சனும் தட்சகியும் நிகழ்த்தும் ஒன்பது யோகங்களை என்னவென்று சொல்வது. இன்பத்துப்பாலுக்கு இணையானதொரு விவரணைகள்.

முதல் நாவலை வாசித்து முடித்த இப்போது சொல்கிறேன். முழுதும் வாசித்துவிட முடியுமென.

என்னை இந்த காவிய வாசிப்பில் முன் அழைத்து செல்லும் ஆசானுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள்.

அன்புடன்

-கே.எம்.ஆர்.விக்னேஸ்

முந்தைய கட்டுரைஈழ இலக்கியம் – ஓர் உரை
அடுத்த கட்டுரைகல்வி, ஆசிரியர்- விவாதம்