கல்விச்சூறையாடல்

நமது கல்வி

கல்வி பற்றி மேலும்…

நமது மாணவர்கள்

தேர்வு

பொதுவாக நம் சூழலில் தமிழகம், கேரளம் ஆகியவற்றின் கல்வி வளர்ச்சி பற்றிய ஒரு பெருமிதம் உண்டு. நாம் நம்மைவிட பல வகையிலும் கீழ்நிலையில் இருக்கும் மேற்குவங்கம், பிகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களை ஒப்பிட்டு இந்தப் பெருமிதத்தை அடைகிறோம். இதை ஓர் அரசியல் பிரச்சாரமாகவே முன்னெடுக்கின்றன ஆளும்கட்சிகள். கேரளத்தில் ‘கல்விக்கேரளம்’ (சாக்ஷர கேரளம்) என்னும் கோஷம் எழாத நாளே இல்லை.

தமிழகம், கேரளத்தின் கல்வி வளர்ச்சிக்கான காரணங்கள் பல. முதன்மைக் காரணம் வலுவான அடித்தளம். அதன் தொடக்கத்தை அமைத்தவை தொடக்ககால கிறிஸ்தவ கல்விநிறுவனங்கள். அதன்பின் பேரலையாக எழுந்த காந்தியின் ‘தேசியக் கல்வி இயக்கம்’. சுதந்திரத்திற்கு பின்னர் தமிழகத்தில் காமராஜ் முன்னெடுத்த கிராமக்கல்வி இயக்கம்.

கேரளத்தில் நாராயணகுருவின் பேரியக்கம் ஒரு கல்வி அலையை உருவாக்கியது. சுதந்திரத்திற்கு முன்னரே பட்டம் தாணுபிள்ளை (அவருடைய அமைச்சரும், மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் மகனுமான நடராஜ பிள்ளை) ஆகியோர் முன்னெடுத்த கிராமக் கல்வி இயக்கம் முக்கியமானது. பின்னர் இ.எம்.எஸ். தலைமையிலான முதல் கம்யூனிஸ்டுக் கட்சி ஆட்சியின் கல்விச் சீர்திருத்தங்கள்.

இன்று அந்த அலையின்மேல் ஏறி அமர்ந்துகொண்டு போலிப்பெருமிதம் அடையும் நாம் கல்வியை மிக வேகமாகச் சீரழித்துக் கொண்டிருக்கிறோம். நம் ஆரம்பக் கல்வி இயக்கம் பெரும் தேக்கநிலையை அடைந்துள்ளது. கொஞ்சம் வசதி படைத்தவர்கள்கூட அரசுப் பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்புவதில்லை. ஆகவே அரசுப்பள்ளிகள் பலவும் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. அரசுப்பள்ளிகளிலேயே தொகுப்பூதியம் பெறும் ஆசிரியர்களே மிகுதி.

அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் நடுவே கடுமையான சாதியப்பார்வை, வன்முறை உள்ளது. அதை கட்டுப்படுத்த எண்ணிக்கையில் குறைவான ஆசிரியர்களால் இயலவில்லை விளைவாக அரசுப்பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு நல்ல கல்வி இயல்வதல்லாத நிலை நிலவுகிறது. படிக்கும் மாணவர்களே பாதிக்கப்படுகிறார்கள்.

(இந்த உண்மையை சொல்வதையே தங்கள் கட்சிக்கு எதிரான குரலாக எடுத்துக்கொள்ளும் வீணர்கள் இணையத்தில் நிறைந்துள்ளனர். அவர்கள் இதை நான் சொன்னபோது மூர்க்கமாக வசைபாடினர். என்னை கைதுசெய்யவேண்டும் என்று குரல்கொடுத்தனர். ஆனால் ஒரே மாதத்தில் நான் சொன்னதை கல்வித்துறை அமைச்சரே சொல்லும்படி சூழல் அமைந்தது. பள்ளி மாணவர்கள் நடுவே சாதியக் கொலை நிகழும் நிலை வந்தது நான்குநேரியில். அப்போது இதே வீணர்கள் அரசை பாராட்டினர். எந்தச் சிந்தனைக்கும் எதிரான கட்சிசார்ந்த ஃபாசிச மனநிலை இன்றைய பெரும் சாபக்கேடு)

தனியார் பள்ளிகளில் மிக அதிகக் கட்டணம் வாங்கும் சில நிறுவனங்கள் தவிர எஞ்சிய நிறுவனங்களில் ஆசிரியர்களுக்குச் சம்பளம் மிகக்குறைவு. சென்னையிலேயே மாதம் 10000 ரூபாய். ஒரு வீட்டுவேலை செய்யும் தொழிலாளிகூட இதற்கு இரண்டு மடங்கு ஈட்டமுடியும். விளைவாக திறனற்றோர், அல்லது மிக இளையோர் வேலைக்கு வருகின்றனர். வருபவர்களும் விலகிச் சென்றுகொண்டே இருக்கின்றனர்.

தரமான ஆசிரியர்கள் உள்ள கல்விநிறுவனங்கள் அரிது. பாடத்திட்டத்தை மிகக் கடுமையாக, விரிவாக அமைக்கிறார்கள். இது பெற்றோருக்கு நிறைவளிக்கிறது. ஆசிரியர்களை பிழிந்து வேலைவாங்குகிறார்கள். கல்விநேரம் மிக அதிகம் – பல பள்ளிகளில் 9 மணிநேரம் வரை. இதுவும் பாமரர்களான நம் பெற்றோரை மகிழ்விக்கிறது. கல்வி என்பது ஆசிரியரின் தரம், பொறுப்பு ஆகியவற்றைச் சார்ந்தது என்று அவர்கள் உணர்வதில்லை. தங்களிடம் பணம் வாங்கும் நிறுவனம் ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் அளிக்கிறதா என்று பார்ப்பதில்லை.

இதனால் வெளிப்படையாகவே மூன்று கல்வி வற்கங்கள் உருவாகியுள்ளன. ஒன்று, மிக அடித்தளம். அங்கே அனேகமாக எழுத்தறிவேகூட இல்லை. கல்விநிலையங்களில் அடிதடி, கட்டுப்பாடின்மை. அண்மையில் குடி உட்பட போதைப்பழக்கங்கள் கூட. இரண்டாவது வற்கம் நடுத்தர தனியார் பள்ளிகள். அவற்றில் ஒருவகையான மூர்க்கமான பயிற்சி அளிக்கப்படுகிறது. கல்வி அளிக்கப்படுவதில்லை. மூன்றாவது, செல்வச்செழிப்புள்ள உயர்தர கல்வி நிறுவவனங்கள். அங்கேதான் சர்வதேசத்தரம் கொண்ட கல்வி அளிக்கப்படுகிறது.

இதுவே இங்கு உயர்கல்வியிலும். அரசுக்கல்லூரிகளில்கூட மிகப்பெரும்பாலான ஆசிரியர்கள் மிகமிகக் குறைவான ஊதியம் பெறும் தொகுப்பூதிய ஆசிரியர்கள்தான். தொடர்ச்சியாக அவர்கள் மாறிக்கொண்டிருப்பதனால் அனுபவமுள்ள ஆசிரியர்கள் மிகக்குறைவு. தனியார்க்கல்லூரிகளில் இன்னும் மோசம். ஊதியம் கிடைத்தாலுண்டு, இல்லையேல் இல்லை. தமிழகத்தைவிட கேரளத்தில் நிலைமை இன்னும் பரிதாபம்.

கேரளத்தில் இடதுசாரிகள் ஆட்சியில் இருக்கிறார்கள். இங்கே கூட்டணியில் இருக்கிறார்கள். ஆகவே ஊழியர் சங்கங்கள் எல்லா வகையிலும் அரசின் குரலாக ஒலிக்கின்றன. தமிழகமும் கேரளமும் பட்டம்பெற்ற, கல்வி அற்ற ஒரு தலைமுறையை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன.

கீழ்க்கண்ட குறிப்பை இணையத்தில் இருந்து ஒரு நண்பர் அனுப்பினார். இத்தகைய நடுநிலைக் குரல்கள், பொறுக்கமுடியாத எதிர்வினைகள் அவ்வப்போது வருகின்றன. ஆனால் அரசுகளால் மட்டுமல்ல தொழிற்சங்கங்களாலேயே அவை உடனடியாக ஒடுக்கப்படுகின்றன. அரசின் எல்லா மூர்க்கங்களுக்கும் சப்பைக்கட்டு கட்டும் ஓர் ’ஊடகக்குண்டர்படை’யும் இன்று உருவாக்கப்பட்டுள்ளது.

கல்விச்செயல்பாட்டாளரின் குரல்

எனது மகன் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பயின்று வருகிறார் (M.Sc Geology). சென்னைப் பல்கலைக் கழக வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது குறித்தும் பேராசிரியர்கள் போராட்டம் குறித்தும் நேற்று முன்தினம் என்னிடம் மிக வருந்தி பேசியதுடன், அம்மா, ,(GL)ஒப்பந்தப் பேராசிரியர்கள் தான் பெரும்பாலும் இருக்கின்றனர் என்றும் இந்தச் சூழலில் இவர்களுக்கு சம்பளமே இல்லை என்றால் எப்படி பணியில் நீடிப்பார்கள் என்றும் நீண்ட நேரம் பேசியதுடன் பல்கலைக் கழகத்தில் வகுப்புகள் பாடம் நடத்துவது பற்றி என விரிவாகப் பேசி மிகவும் வருந்தினார்.இதுவரை படிப்பு பற்றியோ பாடம் குறித்தோ கவலைப்படுபவரே அல்ல.

குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் போது கூட, கணக்கில் சந்தேகம் கேட்டுப் படிக்கையில், தன் வகுப்பு மாணவர்கள் வீட்டில் சொல்லிக் கொடுக்க யாருமில்லை, இந்த ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில்லை எனில் எப்படி அவர்களால் படிக்க இயலும் , அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைக் குறித்து விவாதிப்பான். ஆனால் தனது கல்வி குறித்து ஒரு நாளும் கவலை கொண்டதில்லை. ஆனால் இப்போது இங்குள்ள கல்விச் சூழலை எண்ணி மிக வருந்தியது கண்டு நான் கூடுதலாக கவலை கொண்டேன்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் சிலரிடம் பேசும் போது பள்ளிக் கல்வியின் சூழலும் மனதைத் தைத்தது‌.பேராசிரியர் ஒருவரிடம் பேசிக் கொண்டு இருந்தேன். அரசாங்கம் பள்ளிக் கல்வி உயர்கல்வி இரண்டிலும் பயனாளர்களை இத்தனை வஞ்சிக்கப்படும் சூழலில் வைத்துள்ளதே என வருந்தினேன்.

இந்த சமூகத்தில் ஆளுமைகளாகக் கொண்டாடப்படும் பலரும் அல்லது சமூகத்தின் நலனில் அக்கறை கொண்டவர்களாக அறியப்படுவர் பலரும் வாய் திறக்க முடியாமல் அல்லது திறக்க விரும்பாமல் இருக்கின்றனரே என்றேன். இன்னொன்றையும் கூறினேன், இலக்கிய விழாக்கள் , புத்தக விழாக்கள் என்று ஏதேதோ ஆரம்பித்து எல்லோரையும் அதில் பேச வைக்கும் வேலையில் ஈடுபடுகிறதே அரசும் கல்வித்துறையும் (நூலகத் துறை)

அவர்கள் பேச வழியில்லை போலும் என்றேன். பேராசிரியர் அதற்கு இதேக் கருத்தைத் தான் அவரும் ( படைப்புத் தளத்தில் இயங்கும் மிக முக்கிய நபர்)கூறினார் என மறுமொழி கூறினார்.உங்கள் யாருக்கேனும் இந்தக் கருத்தில் உடன்பாடு இருக்கிறதா எனத் தெரியவில்லை.

சில வாரங்களுக்கு முன்பு இயக்கத் தோழர் ஒருவர் எனது வஞ்சிக்கப்படும் பொதுக் கல்வி நூல் சில பிரதிகள் கேட்டிருந்தார். அதை மற்றவருக்கு பரிசாக வழங்கவே கேட்டிருந்தார். இன்னும் அவர் அந்த நூலைப் படித்தாரா என்று தெரியவில்லை, ஆனால் அடுத்த நாள் என்னிடம், உண்மை தான் நீங்கள் எழுதுவது உமா, நானும் தான் இயக்கத்தில் பேசுகிறேன் ஆனால் அதிகாரிகள் அரசு இவர்களுடன் இணைந்து இருப்பதாலோ என்னவோ வெளிப்படுத்த மறுக்கின்றனர். நிறைய பிரச்சனைகள் கல்வியில் இருப்பது உண்மை தான், எங்களுக்கும் புரிகிறது என்றார்.

முகநூலில் இயங்கும் ஏராளமான எழுத்தாளர்கள் ஆசிரியர்களாக இருக்கின்றனர். மற்ற எழுத்தாளர்களுக்கும் சமூகக் கடமை இருக்கிறது தான். இருந்தாலும் ஆசிரியர்களாக இருந்து எழுதத்தாளர்களாக இருப்பவர்களுக்கு கூடுதல் சமூக அக்கறை இருக்க வேண்டும், இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

ஏனெனில் இந்த சமூகம் மேம்படுவதற்காகவும் தான் படைப்புலக மனிதர்கள் (அது எழுத்தாகட்டும், கலைகளாகட்டும் எதுவேண்டுமானாலும்) இருப்பதாக நான் நம்புகிறேன்.எனில் மற்ற காரணிகள் கடந்து, சமூகத்தின் ஆணிவேராக இருக்கும் கல்விச் சூழலை ஏன் கவனப்படுத்த மறுக்கின்றனர்? அல்லது கடந்து போகின்றனர்?

அப்படி சிலருடன் பேசும் போது எங்களுக்கு எழுத்துப் பணி அதிகம் இருக்கிறது. உங்களைப்போல் இது குறித்து இயங்கினால் இலக்கிய செயல்பாடு தடைபடும் என்றனர். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் (பள்ளிக் கல்வி/உயர்கல்வி) பயிலுபவர்கள் யார்? இந்த சமூகத்தில் காலம் காலமாக கல்வி மறுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள் தானே. அவர்கள் வாழ்வு மலர்ந்தால் தானே செழிப்பான சமூகம் உருவாகும். அந்த வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் குழந்தைகள் , முதல் தலைமுறையாக கல்வி பெறும் மக்களின் குழந்தைகள், ஏழை மக்களின் குழந்தைகள், பிற்படுத்தப்பட்ட கல்வி மறுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள் அனைவரும் கல்வி பெறும் பொதுக் கல்வி நிறுவனங்கள் வஞ்சிக்கப்படுகின்றனவே , இதைக் குறித்து எழுதாமல் பேசாமல் விவாதிக்காமல் இருக்கலாமா? அது நியாயமா ?

நான் இங்கு எழுதுவது பேசுவது அனைத்தும் அனைவருக்குமானதே . நீங்கள் வாழும் ஊர்களில் உள்ள குழந்தைகள், உங்கள் சகோதரர்கள் சகோதரிகள் வீட்டுக் குழந்தைகள், உங்களைச் சுற்றியுள்ள சமூகத்தில் வாழும் மக்களின் குழந்தைகள் உங்களை நாயகர்களாக/ நாயகிகளாக ஏற்றுக்கொண்டு வாழும் மக்களின் குழந்தைகள் பயிலும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தான் அத்தனை அத்தனை புறக்கணிப்பு .

தயை கூர்ந்து அடுத்த முறை நீங்கள் அரசியல் தலைவர்களுடன்/ தமிழ்நாட்டு ஆளுமைகள்/ திரைக்கலைஞர்கள்/ ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்/ இவர்கள் அனைவருடனும் படங்கள் எடுக்கும் போதும் , அவர்களை சந்திக்கும் போதும் சமூகத்தின் ஆணிவேரில் அதாவது கல்வியில் சீழ் பிடித்து இருக்கிறது. உயிர் ஊசலாடிக் கொண்டு இருக்கிறது. அதற்கு முக்கியத்துவம் தாருங்கள் என்று ஒரு நிமிடம் பேசுங்கள் நண்பர்களே.

நாம் எல்லோரும் சேர்ந்து தான் அந்த அழகிய மரத்தைக் ( தமிழ்நாட்டுக் கல்வி) காப்பாற்ற வேண்டும்.சேர்ந்தால் தான் காப்பாற்ற முடியும்.வருத்தத்தில் பங்கு கொள்ளுங்கள்.

ஆனாலும் நம்பிக்கையுடனே

சு. உமா மகேஸ்வரி

கல்விச் செயற்பாட்டாளர்

கல்வி நிலையங்களில் சாதி

அர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை! -பாலா

அஞ்சலி- கல்வியாளர் ஸ்ரீதரன்

அறிவியல்கல்வியும் கலைக்கல்வியும்

கல்வி – தன்னிலையும் பணிவும்

தேசிய கல்விக்கழகத்தில்

கல்வி- மேலுமொரு கேள்வி

கல்வியும் பதவியும்

கல்விக் களைகள்

கல்வி – பதில்கள்

கல்வியும் மாற்றுக்கல்வியும் -சங்கீதா ஸ்ரீராம்

சோற்றுக்கல்வியும் சரியான கல்வியும்

முந்தைய கட்டுரைதீன் விளக்கம்
அடுத்த கட்டுரைகனல்நுழைவு