உரை, கடிதம்

பதிவுசெய்ய இணைப்பு 

அன்புள்ள ஜெ

பெங்களூரில் இருபெருநிலைகள் உரை அறிவிப்பைக் கண்டேன். அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளது. இடம் இருக்கிறதா? என்னால் உடனடியாக முடிவு செய்யமுடியவில்லை. வேலைச்சுமை. ஆனால் பங்குகொள்ளலாம் என்னும் எண்ணமும் உள்ளது. இந்த உரை இதுவரை ஆற்றிய உரைகளின் தொடர்ச்சி என்று சொல்லியிருந்தீர்கள். ஆகவே ஆர்வமாக இருக்கிறேன். இதுவரை ஆற்றிய உரைகளை இணையத்தில்தான் கேட்டிருக்கிறேன்.

சந்திரசேகர்

அன்புள்ள சந்திரசேகர்,

இணையத்தில் உரைகளைக் கேட்கலாம். வகுப்புகளை பயிலலாம். பிழையில்லை. ஆனால் அவற்றுக்கு எல்லைகள் உள்ளன.

இணையம் அண்மையில் நாம் கேளிக்கைக்காக பார்க்கும் ஊடகமாக ஆகியுள்ளது. இணையம் ஒரு வணிகவெளியும்கூட. ஆகவே நாம் கவனமில்லாமலேயே பார்க்கிறோம், கேட்கிறோம். இணையம் நம்மை வெவ்வேறு திசைக்கு இழுத்துக் கொண்டும் இருக்கிறது. நீங்கள் ஒன்றை பார்க்கையில் பத்தை கொண்டுவந்து முன்னால் தள்ளுகிறது.

நீங்கள் ஆடை எடுக்க கடைக்குச் சென்றால் விரும்பியதை எடுக்க முடியாமல் ஆக்குவார்கள். மேலும் மேலும் ஆடைகளை எடுத்து போட்டு மூளையை ஸ்தம்பிக்கவைத்துவிடுவார்கள். அவர்கள் உத்தேசிப்பதையே பெரும்பாலும் எடுக்கச் செய்வார்கள் (நானும் இதை துணிக்கடை ஒன்றில் ஒரு காலத்தில் செய்துள்ளேன்) இணையத்தில் நிகழ்வது இதுதான். அங்கே நம் கவனம் குவிவதில்லை. ஆற்றில் கையால் அள்ளுவதுபோல. பெரும்பகுதி வழிந்தோடிவிடும்.

நேரில் உரைகேட்பது, நேரில் வகுப்புகளுக்கு வருவது இரண்டும் முற்றிலும் வேறான அனுபவங்கள். அங்கே அதற்கெனவே வருகிறோம். அகம் குவித்து அமர்கிறோம். அதேபோன்ற உளநிலை கொண்டவர்கள் சூழ அமர்ந்திருக்கிறார்கள். அங்கே நிகழும் கல்வி முற்றிலும் வேறுவகையானது.

இன்றைய இணையச் சூழல் அளிக்கும் மேலோட்டமான கல்விக்கு நேர் எதிராக ஓர் இயக்கத்தை சிறு வட்டத்திற்குள்ளேனும் உருவாக்கவேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு எங்கள் வகுப்புகளும் உரைகளும் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இதற்கும் சிலர் வந்துகொண்டுள்ளனர். இன்று இவற்றின் இடம் தெரியாது. எதிர்காலத்தில் புரியும். அன்று இந்த தொடர்ச்சி அறுந்துவிடலாகாது.

முன்பதிவு நடந்துகொண்டுதான் உள்ளது.

ஜெ

கட்டண உரை, கடிதம்

பெங்களூர் கட்டண உரை

முந்தைய கட்டுரைஓர் இலக்கியம் முளைத்தெழுதல் – கடிதம்
அடுத்த கட்டுரைதிருக்கண்டியூர்