வழி, மார்ச் இதழ்

அன்பு நிறை ஜெ,

மாசி / பிப்ரவரி மாதம், வழி இணையதளத்தில் எழுத்தாளர் தி.ஜா அவரது சொந்த ஊர் சென்ற அனுபவத்தை பற்றி எழுதிய “கீழவிடயல்‌” என்ற பயண குறிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே தி.ஜாவின் காலா பாணி (அந்தமான் பயண அனுபவம்), நம் மொதேரா (குஜராத் பயண அனுபவம்) ஆகியவை வெளியாகி பரவலான வாசகர் கவனத்தைப் பெற்றது. இந்த முறை வெளியாகியுள்ள அவரது பயணக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள “கீழவிடயல்‌” என்னும் ஊர் அவர் பிறந்த தேவங்குடி என்னும் ஊரிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கிழவிடையலில் தி.ஜா. தன் தொடக்க கல்வி பயின்றார். பொதுவாக தி.ஜா. வின் பயணக் கட்டுரைகள் அவர் கண்டுவந்த இடங்களையும், அதன் வரலாற்றுச் செய்திகளையும் பேசுவதை விட, பயணத்தில் சந்தித்த மனிதர்களை பற்றி அதிகம் பேசுபவை என்ற ஒரு கருத்துண்டு. இக்கருத்துக்கு விதிவிலக்காக மொதேரா, கீழவிடயல் போன்ற கட்டுரைகளில் இடம் சார்ந்த வர்ணனைகள் மிக கவித்துவமாக வெளிப்பட்டுள்ளது.

ஓர் எழுத்தாளன் தன் சொந்த ஊரின் நினைவின் ஊடாகவே பல தேசங்களை தன் எழுத்தில் கட்டமைக்கிறான். ஜப்பான், ஆஸ்திரேலியா, ரஷ்யா என பல தேசங்களுக்கு சென்று அவற்றை பற்றி தி.ஜா. எழுதியிருந்தாலும், கீழவிடயலின் சித்திரம் போல் துல்லியமான நில சித்திரிப்பு  வேறெங்கும் பதிவாகவில்லை என்றே தோன்றுகிறது.

இந்த மாதம் வெளியாகியுள்ள “வாழிய நிலனே” தொடர் கட்டுரைகளில் வெண்முரசில் குறிப்பிடப்பட்டுள்ள கடல்கொள் தமிழ்நிலம் துவங்கி வாரணவதம் வரைக்குமான நிலத்தின் சித்தரிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. வாழிய நிலனே கட்டுரைகளுக்கென தனியான வாசகர் பரப்பு ஒன்று உருவாகியுள்ளது, இத்தொடரின் வாசகர்கள் பெரும்பாலும் வெண்முரசின் ரசிகர்கள். இந்த தொடர் வெண்முரசின் நிலத்தினுள் ஓர் நெடும் பயணத்தை செய்யும் அனுபவத்தை அவர்களுக்கு தருவதாக குறிப்பிடுகின்றனர்.மேலும் வெண்முரசு வாசிக்க தொடங்குபவர்களுக்கு இது ஓர் நுழைவாயிலாக உள்ளது, ஓர் வரைபடத்தை அவர்களுக்கு அளிக்கின்றது, பாரத நிலத்தை நேரில் காண்பதற்கான செயலூக்கத்தை இக்கட்டுரைகள் அளித்துள்ளது.

வெண்முரசின் வாசகர்களை தாண்டி போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் பலர் “வாழிய நிலனே” கட்டுரைகளைத் தொடர்ந்து வாசிக்கின்றனர், நிலம் சார்ந்த குறிப்புகளை பாரத கதை மாந்தர்களுடன் தொடர்புபடுத்தி,  நினைவில் தொகுத்துக்கொள்ள இத்தொடர் கட்டுரைகள் உதவுவதாக தெரிவித்துள்ளார்கள்.

இந்த மாதம் முதல் “கிழக்கு நோக்கி” என்ற தலைப்பில் கிழக்காசிய தேசங்களில் நாங்கள் செய்த பயணத்தை ஒட்டிய  அனுபவ கட்டுரைகள் வெளியாகிறது. இந்த தொடரில் அயல் பிரதேச பயணங்களை திட்டமிடுதல் பற்றிய  கட்டுரையும், சாங்கி விமான நிலையத்தை பற்றிய சுவாரசியம் நிறைந்த மற்றொரு கட்டுரை இடம்பெற்றுள்ளது.

சாளை பஷீர் எழுதி, பரிசல் பதிப்பக வெளியீடாக வெளிவந்த வந்த “என் வானம் என் சிறகு”  என்ற பயண அனுபவ பனுவலின் இறுதி அத்தியாயங்களும் வலைப்பக்கத்தில் பதிவேற்றம் கண்டுள்ளது.

நன்றி,

இளம்பரிதி

பதிவுகளுக்கான இணைப்புகள்

கீழவிடயல்‌ – தி.ஜானகிராமன்

வாழிய நிலனே

சாங்கி – இன்ப குவிமாடம் 

முந்தைய கட்டுரைஓர் உரையாடல்
அடுத்த கட்டுரைதூயவன்