சைவத்திருமுறை வகுப்புகள், கடிதம்

திருமுறை வகுப்பு – கடிதம்

அன்புள்ள ஜெ,

சைவ திருமுறைகள் அறிமுக வகுப்பு முடிந்து சில வாரங்களாகி விட்டது. கலந்துகொண்ட அனைவருக்கும் போலவே எனக்கும் இந்த வகுப்பு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. ஒரு நல்ல திரைப்படமோ , புத்தகமோ படித்து முடித்துவிட்டு அதிலேயே உழன்று கொண்டிருக்கும் மனதை போல சில நாட்கள் மட்டும் இந்த தாக்கம் இருக்குமென நினைத்திருந்தேன். ஆனால் வகுப்பு முடிந்து இத்தனை நாட்களாகியும் அதனுடைய அனுபவம் குறையவில்லை. உண்மையில் வளர்ந்திருக்கிறது.

திருமுறைகள் பாடும் போது எந்த கெளரவமும் பார்க்காமல் அங்கு கண்ணீர் சிந்திய கண்களில் என் கண்களும் உண்டு. காரைக்கால் அம்மையார் பேய் உரு கொண்டு தலைகீழாக கைலாய மலையில் நடந்து செல்வார்கள். அப்போது பார்வதி அம்மையாரை பார்த்து அதிர்ச்சி அடைந்து ‘யார் இவர்”‘ என கேட்க. உடனே சிவன் சொன்ன வரிகளாக முத்தையா அண்ணா
“வரும் இவள் நம்மைப் பேணும் அம்மை காண்” என உச்சரித்த போது உணச்சிகளின் குவியல் தாளாமல் வெடித்து சிதறிய இதயத்தில் என் இதயமும் உண்டு.

ஒரு தேவார பாடலோ , அதன் இசையோ, அதனின் ஒரு வரியோ இவ்வளவு உணர்வுகளை நமக்குள் கடத்த வல்லது என்பது சத்தியமாக எனக்கு இந்த வகுப்புக்கு வரும் முன் தெரியாது.

நாங்கள் தேவாரமமும் , திருவாசகமும் பாடிக்கொண்டிருந்த அந்த நாள் பௌர்ணமி. வகுப்பு ஏர்படுத்திய அதிர்வலைகளில் , ஆள் அரவமற்ற மலை தொடர்களில் அந்த நிலா என்னுள்ளும் பரவ தொடங்கியது.

அந்த வரிகள் இன்னும் என்னுள் நிறைந்திருக்கிறது.”கண்டேன் அவர் திருப்பாதம், கண்டறியாதனக் கண்டேன்”

நன்றியுடன் ,
கார்த்திக்

முந்தைய கட்டுரைகுருகு இதழ்
அடுத்த கட்டுரைதிருவுந்தியார்