சமகால பிரெஞ்சிலக்கியக் கதைகள்

கலகம் செய்யும் இடது கை

தமிழில் க.நா.சு ஐரோப்பிய இலக்கியம் பற்றிய ஒரு விழிப்புணர்வை உருவாக்கினார். தமிழ் நவீனநவீனத்துவ இலக்கியத்தின் உருவாக்கத்தில் க.நா.சு. மொழியாக்கம் செய்த ஐரோப்பிய நாவல்களின் பங்கு முக்கியமானது. 

தமிழில் மொழியாக்கங்கள் வரவேற்பு பெற்ற ஒரு காலகட்டம் இருந்தது. அன்று உலகப்போர் முடிந்த சூழலில்உலகம்என்னும் கருத்துரு மக்களிடையே பரவியிருந்தது. அயல்நாடுகளை அறியும் விழைவு மிகுந்திருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் அன்று மிகக்குறைவு. வெறும் நிலக்காட்சிகளைப் பார்ப்பதற்காகவே ஆங்கில திரைப்படங்களை மக்கள் விரும்பிப் பார்த்தனர். மெக்கன்னாஸ் கோல்ட் மாதிரியான படங்கள் இங்கே நூற்றுக்கணக்கான நாட்கள் திரையரங்கில் ஓடின. அதன் பக்கவிளைவே மொழியாக்கங்களுக்கு இருந்த ஆதரவு.

அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு க.நா.சு இலக்கிய நூல்களை மொழியாக்கம் செய்தார். ரா.ஶ்ரீ.தேசிகன் டி.எஸ்.சொக்கலிங்கம், திரிலோக சீதாராம், .சந்தானம்,  எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களின் மொழியாக்கங்கள் பெரிய பங்களிப்பை ஆற்றின. புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், வல்லிக்கண்ணன்,  தொ.மு.சி.ரகுநாதன்  போன்ற படைப்பாளிகளும் மொழியாக்கம் செய்தனர்.

பிரெஞ்சு இலக்கியம் தமிழில் அழுத்தமான செல்வாக்கை உருவாக்கிய ஒன்று. மாப்பசானின் சிறுகதைகள் புதுமைப்பித்தனின் கதைகளை தீர்மானித்த முன்தொடர்ச்சியாக அமைந்தன. விக்டர் ஹ்யூகோவின் லெ மிசரபிள்ஸ் தமிழில் நாவலாகவும் திரைப்படமாகவும் எல்லாம் செல்வாக்கு செலுத்திய படைப்பு.  

அதன்பின் ஐரோப்பிய இலக்கியங்களி இங்கே மொழியாக்கம் செய்யப்படுவது குறைந்தது. அவ்வப்போது சில முயற்சிகள் நிகழ்ந்தனகோணங்கி ஆசிரியத்துவத்தில் கல்குதிரை ஒரு மொழியாக்கச் சிறப்பிதழை வெளியிட்டது. அதில் ஐரோப்பியச் சிறுகதைகள் இடம்பெற்றிருந்தன. மற்றபடி அமெரிக்க கதைகள், லத்தீனமேரிக்கக் கதைகளே தமிழில் அதிகமும் வெளிவந்தன.

ஆங்கிலம் போலவே நமக்கு அணுக்கமாக இருந்திருக்கவேண்டிய ஒரு மொழி பிரெஞ்சு. தமிழகத்தில் புதுச்சேரி, காரைக்கால் என இரண்டு பகுதிகளையும் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்துள்ளனர். பிரெஞ்சு கலாச்சாரம் ஓரளவு புதுச்சேரியில் நீடிக்கிறது. பிரெஞ்சு அரசின் உதவி பெறும் பெரிய இலக்கியபண்பாட்டுப் பரிமாற்ற அமைப்புகளும் , கல்வியமைப்புகளும் புதுச்சேரியில் உள்ளன. ஆரோவில் போல தனிப்பட்ட பெரிய பண்பாட்டு அமைப்புகளும் உள்ளன

ஆனால் இலக்கியப் பண்பாட்டு பரிமாற்றம் மிகச்சிறிய அளவில் மட்டுமே நிகழ்ந்துள்ளது. தமிழர்கள் ஏதிலிகளாக பிரான்ஸுக்கு சென்று பெரும் எண்ணிக்கையில் குடியேறியுள்ளனர். அவர்க்ள் வழியாகவும் நமக்கும் பிரான்ஸுக்கும் ஒரு குறைந்த பட்ச பண்பாட்டுப் பரிமாற்றம்கூட நிகழவில்லை. அங்கு சென்றவர்கள் அந்தப் பண்பாட்டை அறிய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அங்கிருந்துகொண்டு பழைய  நினைவுகளை மீட்டவும், இங்குள்ள அரசியலில் உழலவுமே அவர்களால் இயன்றது. 

(மிகச்சிறந்த உதாரணம் ஷோபா சக்தி. அவருடைய வாழ்க்கை பல பத்தாண்டுகளாக பாரீஸ் நகர் சார்ந்தது. அவருடைய புனைவுலகு முழுக்கமுழுக்க அவர் கொஞ்சம் உண்மை, கொஞ்சம் கற்பனை சார்ந்து உருவாக்கிக்கொண்ட இலங்கை போர்ச்சூழல் மட்டுமே கொண்டது. பிரெஞ்சுக் கலாச்சாரச் சாயலே அற்றது.)

இது  பெற்றுக்கொள்வதில் நமக்கிருக்கும் உதாசீனம் சார்ந்த சிக்கல். நாம் நமது எளிய வம்புகளுக்குள் உழலவே விரும்புகிறோம். மோஸ்தர்களை மட்டுமே  வெளியே இருந்து ஏற்றுக்கொள்கிறோம். ஐயமிருந்தால் ஒரு சராசரி தமிழ் இளைஞனிடம் பேசிப்பார்க்கலாம். உலகம் என அவர் நினைப்பது சமகால மோஸ்தராக மட்டுமே இருக்கும். அறிவியலோ, வரலாறோ, பண்பாடோ அறிமுகம்கூட இருக்காது. அமெரிக்காவிலேயே குடியேறிய இந்திய இளைஞர்களுக்கு அமெரிக்காவின் அரசியலோ பண்பாடோ அறிமுகமே இல்லை என்பதை சாதாரணமாகக் காணலாம்

குறைவாக பிரெஞ்சு இலக்கியம் அவ்வப்போது தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வந்தது. பிரபஞ்சன் மொழிபெயர்ப்பாளர்களின் ஒரு பட்டியலை அளிக்கிறார். காரை ஏ.எம்.அலி முக்கியமான பிரெஞ்சு நூல்களை மொழியாக்கம் செய்தவர் என்கிறார். சுத்தானந்த பாரதியார், வாணிதாசன், பேரா.சச்சிதானந்தம், பேரா.ராஜகோபாலன், மதனகல்யாணி, வெ.ஶ்ரீராம், நாகரத்தினம் கிருஷ்ணா. அந்த வரிசையில் ஒருவர்  வெங்கட சுப்புபராய நாயகர். அவர் மொழியாக்கம் செய்தகலகம் செய்யும் இடது கைபிரெஞ்சு சிறுகதைகளின் ஒரு சிறு தொகுதி.

வெங்கிட சுப்புராய நாயகர்

பியரி கிரிப்பாரி, பெர்நார் வெர்பர், ஹான்ஸ் ழுயுர்ழென் கிரெய்ப், தாகர் பெஞெலூன், ஈசாக் பஷ்வீ சிங்கர்,  ஹான்ரி த்ரோயா, லெ. கிளேஸியோ ஆகியோர் எழுதிய எட்டு கதைகள் கொண்ட தொகுதி இது. இந்த தொகுதியில் ஐசக் பாஷவிஸ் சிங்கர் மட்டுமே தனித்து தெரிகிறார். அவர் பிரெஞ்சு எழுத்தாளர் அல்ல. போலந்தில் இருந்து அமெரிக்காவில் குடியேறி யூதர்களின் யிட்டிஷ் மொழியில் எழுதியவர். அவர் இத்தொகுதியில் இடம்பெற்றிருக்கலாகாது.  அது தொகுதியின் ஒருமையை குலைக்கிறது.

இக்கதைகளைக் கொண்டு பிரெஞ்சு இலக்கியத்தின் சில பொதுத்தன்மைகளை ஊகிக்கலாம். இதில் பிரான்ஸுக்கு குடியேறியவர்கள் பலர் உள்ளனர்.க்ரெய்ப் ஜெர்மானியர், கிரிப்பாரியின் தந்தை கிரேக்கர்.பெஞெலூன் பிரெஞ்சு ஆட்சி நிலவும் மொராக்கோவைச் சேர்ந்தவர், த்ரோயா ரஷ்யர். சரியாகச் சொன்னால் லெ கிளேஸியோ, வெர்பர் இருவரும் மட்டிலுமே பிரெஞ்சுக்காரர்கள். இவர்களில் கிரெய்ப் கனடாவில் குடியேறி பிரெஞ்சில் எழுதுபவர்.  கிரெய்ப் ஜெர்மன் மொழியிலும் எழுதுகிறார்.இத்தாலிய மொழியிலும் சிலர் எழுதுகிறார்கள்

இந்த தொகுதியிலுள்ள எழுத்தாளர்களில் பெர்நார் வெர்பர்  பொதுவாசிப்புக்குரிய கதைகளை எழுதும் கேளிக்கை எழுத்தாளர். அவருடைய ஆழமான படைப்பு எதையும் நான் வாசித்ததில்லை. எளிய வேடிக்கைகள், திகைப்புகளை மட்டுமே அவருடைய எழுத்துக்கள் உருவாக்குகின்றன. த்ரோயா மட்டுமே ஒரு பேரிலக்கியவாதி என்று சொல்லலாம். (சிங்கர் மகத்தான படைப்பாளி, ஆனால் அவர் பிரெஞ்சுக்காரர் அல்ல.) 

இக்கதைகள் சமகால ஐரோப்பிய இலக்கியத்தின் குறைந்தபட்சத் தரம், அடிப்படையான போதாமைகள் ஆகிய இரண்டையுமே சுட்டிக்காட்டுவன. ஜோடிப்பொருத்தம், கலகம் செய்யும் இடது கை, அவளுடைய கடைசிக்காதலன் போன்ற கதைகள் கச்சிதமாக எழுதப்பட்டவை. இந்நூலில் உள்ள எல்லா கதைகளிலுமே அந்த வடிவக்கச்சிதம் உள்ளது. 

ஆனால் அவை அடிப்படையில் ஒரு வேடிக்கை மனநிலையில் உருவகிக்கப்பட்டவை. வாழ்க்கையின் ஒரு துளியை சற்றே கோணலாக்கிப் பார்ப்பது மட்டுமே அக்கதைகளை உருவாக்குகிறது. ஆழமான அகநெருக்கடிகளில் இருந்தோ, தேடல்களில் இருந்தோ அவை உருவாகவில்லை. மானுடவாழ்க்கையின் அடிப்படையான சிக்கல்களையோ மானுடர்களின் குணவிசித்திரங்களையோ அவை சொல்லவில்லை. 

ஆகவேசுவாரசியமானவைஎன்பதற்கு அப்பால் இக்கதைகளை நாம் நம் அகத்தை உலுக்குபவை, நம்முள் நாம் வளரச்செய்பவை என்று சொல்லிவிடமுடியாது. வெங்கட சுப்புராய நாயகரின் மொழியாக்க நடை செறிவும் சரளமும் தேர்ச்சியும் கொண்டது என்பதனால் நல்ல வாசிப்பனுபவத்தை அளிக்கும் நூல் இது.

நாம் உலக இலக்கியத்தில், ஏன் பிரெஞ்சு இலக்கியத்தில் வாசித்துள்ள மகத்தான கதைகளின் வரிசையில் இவற்றை வைக்க முடியாது. ஏன், தமிழிலுள்ள சிறந்த கதைகளுடன் கூட இவற்றை ஒப்பிட முடியாது.   

உதாரணமாக, ஜோடிப்பொருத்தம் கதையை கிருஷ்ணன் நம்பியின் தங்க ஒரு என்னும் கதையுடன் ஒப்பிட்டுப்பார்க்கலாம். இரண்டுமே parable வகையிலானவை. தங்க ஒரு ஓர் ஆழ்ந்த மானுடசோகத்தைச் சொல்லும் கதை. நேரடியாக அது நகரவாழ்வின் துயரைச் சொல்கிறது. குறியீட்டு ரீதியாக மானுடனைச் சுருக்கிக் குறுக்கும் சமகால நாகரீகத்தின் அழுத்தத்தைப் பற்றிப்பேசுகிறது .என்றும் உள்ள ஒரு அடிப்படைச் சிக்கலை நோக்கி நம்மை கொண்டுசெல்கிறது. ஜோடிப்பொருத்தம் ஒரு சாதாரண வேடிக்கை மனநிலைக்கு அப்பால் செல்வதில்.

இத்தொகுதியிலுள்ள ஹான்ரி த்ரோயாவின் இரு கதைகள்அந்த பச்சை டைரி’ ‘நெஞ்சத்தை துளைத்தவள்இரண்டுமே முக்கியமானவை. அவர் ஒரு பெரும் படைப்பாளி என்பதை இக்கதைகளிலுள்ள உளவியல்நகர்வை அவர் சொல்லியிருக்கும் விதம் காட்டுகிறது.  அவருடைய படைப்புகளாக ஆங்கிலத்தில் கிடைப்பவையும் முக்கியமானவையே. 

ஒரு சாமானிய குமாஸ்தாவுக்கு கிடைக்கும் ஒரு டைரி, அதையொட்டி அவருடன் விளையாடும் ஒரு பணக்காரர், ஆசையும் ஐயமுமாக குமாஸ்தாவின் அகப்போராட்டம், குமாஸ்தாவின் வீழ்ச்சி என விரிகிறது. ஒரு கோணத்தில் கடவுளுக்கும் மனிதனுக்குமான போரும், மனிதனின் வீழ்ச்சியும் என அக்கதையைச் சொல்லலாம். (டாக்டர் ஃபௌஸ்டின் வீழ்ச்சி போல) அந்த வீழ்ச்சி என்பது ஒரு நவீனத்துவக் கருத்து என்றாலும் அழகிய கதை

நெஞ்சத்தை துளைத்தவள் ஆண்பெண் உறவில் உள்ள புனைவம்சத்தை விந்தையும் விமர்சனமுமாக சித்தரிக்கும் கதை. உறவு என்பது எளியது என நமக்கு தெரியும். ஆனால் அந்தை நாம் விந்தையாக ஆக்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது. காதலியை தேவதையாக ஆக்கவேண்டிய தேவை சாமானியனுக்கு இருக்கிறது என்றால் ஒருதேவன்அவளை சாமானியப்பெண்ணாக ஆக்கி அங்கே ஒளிபெறச் செய்ய வேண்டியிருக்கிறது.

இந்த இரு கதைகளிலுமே வாழ்க்கையின் அடிப்படை வெறுமைக்கு மேல் ஆசைகளால், பாவனைகளால் நாம் உருவாக்கிக் கொண்டிருக்கும் உணர்வுகளின் சித்திரம் உள்ளது. முற்றிலும் பாவனையாகவே நாம் நம் அகத்தை நிகழ்த்திக்கொண்டே செல்வதன் வேடிக்கையும் அவலமும் உள்ளது.

ஆயினும் தமிழில் சென்ற இருபதாண்டுகளில் இந்த இரு கதைகளை விட மேம்பட்ட நூறு கதைகளேனும் எழுதப்பட்டிருக்கின்றன என்று இலக்கிய வாசகன் சொல்லிவிடமுடியும். 

இது நம் வளர்ச்சியை நமக்குக் காட்டுவது மட்டுமல்ல. சமகால பிரெஞ்சு இலக்கியம் அடிப்படையான நெருக்கடிகளில் இருந்து எழாமல் சற்று மேலோட்டமான வேடிக்கை, முரண்பாடு, விமர்சனம் ஆகிய மனநிலைகளில் இருந்தே உருவாகிறதோ என்னும் ஐயத்தையும் எழுப்புகின்றன. 

ஐரோப்பா வறுமை போன்ற பல புறநெருக்கடிகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளது. புறவுலகின் அவலங்களை அறியாமல் ஒரு சொகுசு வாழ்க்கையை தனக்கென அங்கே உருவாக்கிக் கொண்டுள்ளது. மதம் ,ஆன்மிகம் ஆகியவற்றைச் சாந்த அடிப்படைக் கேள்விகளுக்கு பழைய நவீனத்துவம் சார்ந்த எளிய உலகியல் விடைகளை கொண்டு நிறைவடைந்துவிட்டது. ஆகவே அதற்கு நெருக்கடிகளும் போராட்டங்களும் இல்லை. அடிப்படையான தேடல்களே இல்லை.

அவர்களின் தீவிரமான தேடல்கள் எல்லாமே அறிவியலில்தான் நிகழ்கின்றன. இலக்கியச் சாதனைகளும் அறிவியல்புனைவிலேயே உள்ளன. அதில் மட்டுமே காலம், வெளி, ஒட்டுமொத்தமாக மானுடவாழ்வின் பொருள் என பெருங்கேள்விகளை அவர்களால் சந்திக்கமுடிகிறது

ஆகவே அவர்களின் பிற எழுத்துக்கள் வெறும் அறிவு விளையாட்டாக ஆகின்றன. கொஞ்சம் தீவிரமாக எழுதக்கூட வெளியே இருந்து எவராவது தங்கள் துயர்களுடன் குடியேறவேண்டியிருக்கிறது. அமெரிக்க எழுத்தில்கூட இந்த வெளிறல் உள்ளது. அறிவியல்கதைகள், குடியேறிகளின் கதைகள் மட்டுமே சற்றேனும் புதுமையுடன் உள்ளன.  அந்த நிலைமையையே சமகால பிரெஞ்சு இலக்கியத்திலும் காணலாம்.

சமகால பிரெஞ்சு இலக்கியம் பற்றிய ஓர் சுருக்கமான சித்திரத்துக்காகவும் த்ரோயாவின் இரு கதைகளுக்காகவும் வாசிக்கத்தக்க நூல் இது

சொல்லப்படாத அத்தைகள். வெங்கட சுப்புராய நாயகர்

முந்தைய கட்டுரைதிரு.வி.க
அடுத்த கட்டுரைஅஞ்சலி, முத்தம்மாள் பழனிசாமி- ம.நவீன்