நான்குநாள் திருமணம் என்றெல்லாம் அந்தக்காலத்தில் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். எங்களூரில் எல்லா திருமணமும் ஒரே நாள்தான். சொல்லப்போனால் அரைநாள்தான். அதுகூட நூறாண்டுகளாகத்தான். எங்கள் சாதியில் குத்துவிளக்கு ஏற்றிவைத்து பெரியவர்கள் முன்னிலையில் ஒரு புடவையை ஆண் கொடுக்க பெண் பெற்றுக்கொண்டால் அவ்வளவுதான், திருமணம் ஆகிவிட்டது. புடவைகொடை என்றுதான் அக்காலத்தில் பெயரே.
தமிழகத்தில் ஐயர்கள்தான் நான்குநாட்களாகத் திருமணம் செய்துகொண்டே இருப்பார்கள் என அறிந்திருந்தேன். அநுத்தமாவின் ஒரு நாவலில் நான்குநாள் திருமணம் விரிவாக வர்ணிக்கப்பட்டிருக்கும். தி.ஜானகிராமன் பல கல்யாணப்பின்னணிக் கதைகள் எழுதியிருக்கிறார். நான்குநாட்கள்! வேறு வேலையே இல்லையா என வியந்திருக்கிறேன்.
ஆனால் என் மகன் அஜிதனின் திருமணம் ஏழுநாட்கள் நடந்தது. பிப்ரவரி 18, 19 தேதிகளில் கோவையில் திருமணம். பிப்ரவரி 18 நிச்சயதார்த்தம் மற்றும் வரவேற்பு. பிப்ரவரி 19 தாலிகட்டுதல். நான் குடும்பத்துடன் பிப்ரவரி 16 மாலை கிளம்பி கோவை வந்துவிட்டேன். அங்கே வழக்கமான ஃபார்ச்சூன் சூட்ஸில் தங்கினேன். மொத்தக் குடும்பமே அதிமின் விரைவில் இருந்தது. யார் என்னென்ன செய்கிறார்கள் என்பது அருண்மொழிக்கு மட்டுமே தெரிந்திருந்தது. ஆணைகள் பறந்துகொண்டே இருந்தன. நான் அப்பால் இருந்தேன்.
திருமணம் முடிந்தபின் பிப்ரவரி 19 மாலையிலேயே கிளம்பி நாகர்கோயில். பிப்ரவரி 20 அதிகாலை வீட்டுக்கு வந்தால் வீட்டுமுன் ஷாமியானா பந்தல், வரிசைவிளக்கு அலங்காரம் எல்லாம் இருந்தன. உணவு ‘கேட்டரிங்’ ஆட்களால் இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது. பதினொரு மணிக்கு பெண் இல்லம்புகும் சடங்கு. இன்னபிற நிகழ்வுகள். வீட்டில் எல்லா அறையிலும் விருந்தினர்கள். நான் அருகே லாரன்ஸ் லாட்ஜில் ஓர் அறைபோட்டு அன்று இரவு தங்கினேன்.
மறுநாள் பிப்ரவரி 21 அன்று நாகர்கோயிலில் வரவேற்பு நிகழ்வு. வண்ணதாசன் கோவை வருவதாக இருந்தது. உடல்நிலை சரியில்லாமையால் நாகர்கோயில் வந்தார். சோ.தர்மன், சுரேஷ்குமார இந்திரஜித் வந்திருந்தனர். மலையாள இயக்குநர் ஆர்.எஸ்.விமல், உண்ணி ஆகியோர் வந்திருந்தனர். உண்ணி இயக்கிய ஓங்காரா என்ற படம் பெங்களூர் திரைவிழாவுக்காக தேர்வுசெய்யப்பட்ட செய்தி அப்போதுதான் வந்திருந்தது.
நாகர்கோயில் வட்டார எழுத்தாள நண்பர்கள் ஏறத்தாழ அனைவருமே வந்திருந்தனர். அ.கா. பெருமாள், மா. சுப்பிரமணியம், தெ.வே. ஜெகதீசன் யூசுப், ஜி.எஸ்.தயாளன், லக்ஷ்மி மணிவண்ணன், குமரி ஆதவன், போகன் சங்கர், ராகுல்… என் உறவினர்கள் ஏராளமாக வந்திருந்தார்கள். நெல்லையில் இருந்து ராயகிரி சங்கர், மதார், ஶ்ரீனிவாசன் வேதாந்த தேசிகன், பிகு என பல நண்பர்கள் வந்திருந்தனர்.
மறுநாள் வீட்டுக்கு வாழ்த்துவதற்காக வந்துகொண்டே இருந்தனர். மாலையில் ரயிலில் சென்னை. சென்னையில் நான் என் நண்பர் சங்கர் இல்லத்தில் ஒருநாள் தங்கினேன். சங்கர் மகிந்திரா நிறுவனத்தின் ஆராய்ச்சி கிளையில் உயர்நிர்வாகி. அவருடைய இல்லம் ஹயாத் பக்கம்தான். இரண்டு ‘செர்வீஸ்ட் அப்பாட்மெண்ட்கள்’ முழுமையாக அமர்த்தப்பட்டு ஒன்றில் அருண்மொழியும் என் குடும்பமும். இன்னொன்றில் தன்யாவின் குடும்பம். நான் எல்லா சந்தடிகளில் இருந்தும் ஒருநாள் விலகியே இருந்தேன்.
சங்கரின் இல்லத்தின் அருகேதான் ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரி. அங்கே ஆங்கிலத்துறையில் பணியாற்றும் ஆசிரியைகள் என்னை தெருவில் காலைநடை செல்லும்போது பார்த்து சந்திக்க சங்கர் இல்லத்திற்கு வந்திருந்தார்கள். அவர்களுடன் ஓர் உரையாடல். அவர்கள் கல்லூரியில் ஒருமணிநேரம் அனுமதி பெற்று வந்திருந்தனர். மதியம் கிளம்பி ஹயாத் விடுதியில் எனக்கான சூட்டுக்குச் சென்றுவிட்டேன்
ஹயாத் சற்று ஆடம்பரமான விடுதிதான். பொதுவாக திருமணத்திற்கு மிகைச்செலவு செய்வது எனக்கு உடன்பாடானது அல்ல. இது வரை பிறருக்குக் காட்டுவதற்காக எச்செலவும் செய்ததில்லை. இம்முறை இந்த வரவேற்பு அஜிதனுக்காக. அவன் மணி ரத்னத்தின் மாணவன். அவர் திருமணத்துக்கு வந்தாகவேண்டும். மெட்ராஸ் டாக்கீஸிலேயே பலர் வரவேண்டும். மற்றும் திரைநண்பர்கள் வரவேண்டும். அவர்கள் கோவைக்கு வர முடியாது. சினிமாவின் நெருக்கடிகள் அப்படிப்பட்டவை.
உதாரணமாக, வரவேற்பு நிகழ்வுக்கு சங்கர் ஹைதராபாதில் படப்பிடிப்பில் இருந்து விமானத்தில் வந்திறங்கி நேரடியாக ஹயாத் வந்து அங்கிருந்து நேரடியாக மீண்டும் ஹைதராபாத் படப்பிடிப்புக்குச் சென்றார். மணி ரத்னம் ஏ.ஆர்.ரஹ்மானின் ஒலிப்பதிவுநிலையத்தில் இருந்து வந்து மீண்டும் அங்கேயே சென்றார். பாலா வணங்கானின் டப்பிங்கில் இருந்து வந்திருந்தார். சீனு ராமசாமி நான் எழுதிய இடிமுழக்கம் படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழாவில் இருந்து நேரடியாக வந்திருந்தார். ஆகவேதான் சென்னையில் ஒரு வரவேற்பு வைக்கும் எண்ணம் ஏற்பட்டது.
வரவேற்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான இலக்கிய, திரை நட்சத்திரங்கள் வந்தமையால்தான் பெரியதாக தோன்றியதே ஒழிய பெருஞ்செலவில் நிகழவில்லை. உமாமகேஸ்வரி என்னும் வாசகி தொடர்ச்சியாக ஹயாத் போன்ற விடுதிகளில் கார்ப்பரேட் விருந்துகளை ஒருங்கிணைக்கும் நிர்வாகப்பொறுப்பில் இருப்பவர். அவர் உதவியதனால் வழக்கத்தை விட குறைவான செலவிலேயே அரங்கு மற்றும் உணவு ஏற்பாடு செய்ய முடிந்தது.
சென்னையில் பெரும்பாலும் எல்லா தொடர்புகளும் ஏற்பாடுகளும் அகரமுதல்வன் தன் நண்பர் குறிஞ்சிபிரபா உதவியுடன் ஒருங்கிணைத்து உதவினார். கோவையிலும் நாகர்கோயிலிலும் ஜி.எஸ்.எஸ்.வி.நவீன், அருள், ஷாகுல் ஹமீது, யோகேஸ்வரன் ராமநாதன் ஆகியோர் உதவினர்.
ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் அவர் மனைவி கிருபாலட்சுமியை மகப்பேறு டாக்டரிடம் காட்டுவதற்காக கோவை சென்றமையால் சென்னை வரவில்லை. ஷாகுல் விடுப்பு முடிந்து கப்பல்பணிக்காக ஆப்ரிக்கா சென்றுவிட்டார். அவர்கள் இல்லாததை அருண்மொழி குறையாக உணர்ந்துகொண்டிருந்தாள்.
கோவை விழாவில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மேகலாயா முன்னாள் கவர்னர் ஷண்முகநாதன் போன்று முதன்மை ஆளுமைகள் பலர் வந்திருந்தனர். ஏ.வி.வரதராஜன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன், இயகாகோ சுப்ரமணியம், விஜய் ஆனந்த், சௌந்தரராஜன், விஜயா வேலாயுதம் என தொழில்முனைவர்கள் வந்திருந்தார்கள்.
கேரளத்தில் இருந்து என் காசர்கோடு தொலைபேசித்துறை நண்பர்கள் ஒரு குழுவாக வந்திருந்தனர். கல்பற்றா நாராயணன், பி.ராமன் போன்ற எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள். சென்ற பல காலமாகவே அவர்களின் இல்ல திருமணத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறேன். வரும் மே மாதம் புருஷோத்தமன் மகன் திருமணம். முப்பதாண்டுகளாக அந்த உறவு அணுக்கமாகவே தொடர்கிறது என்பது என் நெஞ்சின் இனிமைகளில் ஒன்று. என் பழைய நண்பர்கள் பெங்களூர் மகாலிங்கம் போன்ற பலர் வந்திருந்தமை நாட்களை இனிமையாக்கியாது.
விஷ்ணுபுரம் வகுப்புகள் நடத்தத் தொடங்கிய பின்னர் ஏராளமான புதிய வாசகர்கள் அறிமுகமாகியிருக்கின்றனர். அவர்கள் பல ஊர்களில் இருந்து கிளம்பி வந்து விழாவில் கலந்துகொண்டார்கள். எல்லா முகங்களுமே மிக அணுக்கமானவை. ஒரு பெரும் ஊர்வலத்தில் அவர்களுடன் தோளிணைந்து சென்றுகொண்டிருக்கிறேன் என நான் உணர்வதுண்டு.
நாஞ்சில்நாடன், மரபின் மைந்தன் முத்தையா, கலாப்ரியா, தேவதேவன், யுவன் சந்திரசேகர், பாவண்ணன், சுப்ரபாரதி மணியன், இளங்கோவன் முத்தையா, சரவணன் சந்திரன்,இசை, எஸ்.கே.பி.கருணா, பவா செல்லதுரை, கே.வி.ஷைலஜா, ஆத்மார்த்தி, சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன், சுரேஷ் பிரதீப், ஓவியர் ஜீவா, செந்தமிழ்த்தேனீ , சிறுவாணி பிரகாஷ் என நான் என்றும் என் சுற்றம் என உணரும் எழுத்தாள நண்பர்கள் பலர் வந்திருந்தார்கள். தில்லை செந்தில்பிரபு, யோகா சௌந்தர், ஷத்தர்சன் ஆனந்த் என நல்லாசிரியர்கள் வந்திருந்தனர்.
நண்பரும் வாசகருமான திருவாசகம் அவர் மகனுடன் வந்திருந்தார். மத்திய வரித்துறை அதிகாரி பத்மாவதி போன்று அதிகாரிகள் வந்திருந்தனர். அலெக்ஸுக்கும் எனக்கும் அணுக்கமான நண்பர் பாரிசெழியன் மதுரையில் இருந்து வந்திருந்தார். இளைய படைப்பாளிகள் பலர் வந்திருந்தமையால் கிட்டத்தட்ட விஷ்ணுபுரம் விழா போலவே சிரிப்பும் கொண்டாட்டமும் இருந்தது. ஒவ்வொருவரையாக சென்று பார்த்துப் பேசிக்கொண்டே இருந்தேன். அது உபச்சாரம் அல்ல. இல்லத்திற்கு வருபவர்களை குழந்தைகள் ஒவ்வொருவராக சென்று தொட்டுப்பார்ப்பதைப் போலத்தான்.
கோவை விழாவில் முக்கியமான பங்களிப்பு என் குக்கூ அமைப்பின் நண்பர்கள். அவர்கள் அளித்த பையில்தான் வழிப்பரிசு அளிக்கப்பட்டது. திருமண விழாவுக்கு வந்த அனைவருக்கும் மரக்கன்றுகள், மூலிகைச்செடிகள் குக்கூ அமைப்பின் சார்பில் வழங்கப்பட்டன. குக்கூ நண்பர்கள் அனைவரையும் ஒருசேரப் பார்த்தது நிறைவளித்தது. குக்கூவைச் சேர்ந்த வினோத் பாலுசாமி, மோகன் தன்ஷிக் ஆகியோர்தான் புகைப்படங்களும் எடுத்தனர்.
சென்னையில் அதேபோல எழுத்தாளர் திரள் இருந்தது. சு.வெங்கடேசன் தேர்தல் மும்முரம் நடுவே டெல்லியில் இருந்து மதுரை செல்லும் வழியில் வந்தார். சாரு நிவேதிதா, சந்திரா, ரவி சுப்ரமணியன், எஸ்.ராமகிருஷ்ணன், பா.ராகவன், அ.வெண்ணிலா, இரா. முருகன், மனுஷ்யபுத்திரன், லக்ஷ்மி சரவணக்குமார், கரு ஆறுமுகத்தமிழன், வெயில், வாசு முருகவேல், என ஒவ்வொருவராக பார்க்கையில் அவர்களுடன் இணைந்த நினைவுகள்தான் பெருகிக்கொண்டிருந்தன. இளங்கோ கிருஷ்ணன், அமிர்தம் சூரியா, என நெருக்கமான இளையோர். சுகா, ஷாஜி என என் விளையாட்டுத் தோழர்கள் பலர்.
என் பதிப்பக நண்பர்கள் கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி, சீரோ டிகிரி பதிப்பகம் ராம்ஜி, காயத்ரி, யாவரும் ஜீவகரிகாலன், நூல்வனம் மணிகண்டன் என பல நண்பர்கள். முதலில் அரங்குக்கு வந்தவர் தமிழினி வசந்தகுமார். அவரைப் பார்த்ததுமே அன்றைய மாலையை மிக உற்சாகமாக உணரத் தொடங்கிவிட்டேன். இளைய இயக்குநர்கள் கிங்ஸ்லின், பூபாலன் என நண்பர்கள் .
நண்பர் கே.பி.வினோத் இயக்கிய ஃபோர் சீசன்ஸ் என்னும் மலையாளப் படம் வெளிவரவிருக்கிறது. அதில் இசையமைப்பாளர் நண்பர் ராஜன் சோமசுந்தரம். நண்பர் தனா இயக்கிய விஜய் ஆண்டனியின் படம் வெளிவரவிருக்கிறது. ஒவ்வொருவரும் இலக்கியம் சினிமா வழியாக ஒருவரோடொருவர் இணைந்துள்ளனர்.
இந்த விழாக்களில் என் நண்பர்கள் வெளிநாட்டில் இருந்தும் கலந்துகொண்டனர். அமெரிக்க விஷ்ணுபுரம் அமைப்பினரான ஆஸ்டின் சௌந்தர் – ராதா, இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம், ஸ்வீடனில் இருந்து பிரியத்திற்குரிய செந்தழல் ரவி. அபுதாபியில் இருந்து ஜெயகாந்த் ராஜு- கல்பனா.
எனக்கு தனிப்பட்ட முறையில் பிரியமும் மதிப்பும் கொண்டிருந்த அதிகாரிகளும் சென்னை விழாவுக்கு வந்திருந்தார்கள். அவர்கள் எனக்கு இலக்கியம் வழியாக அணுக்கமானவர்கள். ராஜஸ்தானில் காவல் உயரதிகாரியான செங்கதிர் (இலக்கிய மொழிபெயர்ப்பாளர்), தமிழக உயரதிகாரியான நாகராஜன், ஹைதராபாத் விசாலாட்சி, கோவையின் முன்னாள் ஆளுநர் சமீரன்.
ஒரு முகத்தில் இருந்து இன்னொரு முகம். ஒரு வகை ரோலர்கோஸ்டர் அனுபவம் அது. ஒருகணம் இளமைக்குச் செல்லுதல் இன்னொரு கணம் மீண்டு வருதல். எந்த முகத்தை நினைவுகூர்வதென்றே தெரியவில்லை. ஒவ்வொருவரும் அணுக்கமானவர்கள். மூளை ஏன் ஒரு முகத்தை சட்டென்று நினைவுக்கு கொண்டுவருகிறது, எப்படித் தொகுத்துக்கொள்கிறது என்பது விந்தையானதுதான்.
கௌதம் மேனன், வசந்த், செழியன், வசந்தபாலன், வரதன், சுப்ரமணியம் சிவா, மித்ரன் ஜவகர், கோபி, சீனு ராமசாமி, குமரவேல், என சினிமா ஆளுமைகள் பலரும் எனக்கு மிக அணுக்கமானவர்கள். ஏ.ஆர்.முருகதாஸ், மிஷ்கின், விஜய் சேதுபதி என என் அலைவரிசைக்கு மிக உகந்தவர்கள். நடிகர் சிவக்குமார் அவர்களை நீண்ட இடைவேளைக்குப் பின் நேரில் பார்த்தேன். ராஜ்கமல் பிஸ்மி, குளோபல் ஸ்டுடியோஸ் ரமேஷ், விஸ்வநாதன், சிவா என என் தயாரிப்பாளர்கள் பலர் வந்திருந்தனர்.
நான் அழைத்தவர்கள் அனைவருடனும் எனக்கு ஒரு தனிப்பட்ட அகத்தொடர்பும் இருந்தது. எந்த அழைப்பும் வெறும் தொழில்சார் உபச்சாரம் அல்ல. அழைக்கப்பட்டவர்களில் வருவதாக இருந்த கமல் மட்டுமே கலந்துகொள்ள முடியவில்லை. அவருடைய வாழ்த்துடன் அவருடைய நண்பர்கள் வந்தனர்.
ஒரு திருமண விழாவின்போது வருபவர் ஒவ்வொருவரும் நமக்கு பெரிய கிளர்ச்சியை உருவாக்குகிறார்கள். அவ்வாறு நிகழும் என நான் முன்னர் உணர்ந்ததே இல்லை. என் அறுபது விழாவின்போதும் பலர் வந்திருந்தனர். அன்று ஒருவகை கூச்சமும் சங்கடமுமாக உள்ளூர ஒடுங்கித்தான் இருந்தேன். இந்த விழாவில் அப்படி இல்லை.
இப்படி ஒரு விழாவில் வந்து கலந்துகொண்ட ஒவ்வொருவரையும் பெயர் சொல்லிப் பட்டியலிடுவதென்பது கடினம். மிக அணுக்கமானவர்கள், அவ்வப்போது பார்த்துக்கொண்டே இருப்பவர்கள் நினைவில் இருந்து அகன்றுவிடுவார்கள். பட்டியலிடுவது சரியல்ல என்று நானே சொல்லிக் கொண்டாலும் பத்தாண்டுக்குப் பின் இப்பதிவை நானே படிப்பதாக கற்பனை செய்துகொள்வதனால் இதை எழுதியாக வேண்டியிருக்கிறது.
மெய்யாகவே ஒன்று சொல்லவேண்டும். கோவையிலும் நாகர்கோயிலிலும் நான் நேரில் அழைக்காமல் முந்நூறுபேருக்குமேல் என் இணைய அழைப்பை ஏற்று வந்திருந்தனர். அவர்களே என்னை ஒரு படி மேலாக பெருமிதம் கொள்ளச் செய்தனர். ஏனென்றால் அவர்கள் வருவதற்கு என் எழுத்தினூடாக அவர்களுடன் நான் உருவாக்கிக் கொண்டுள்ள தொடர்பே முதன்மையான காரணம். அது எனக்கு மிகமிக அந்தரங்கமானது. ஒருவகையில் புனிதமானது.
24 அன்று விழா முடிந்து மறுநாள் மதியம் வந்தேபாரத் ரயிலில் நானும் அருளும் கிளம்பி ஈரோடு வந்தோம். அருண்மொழி மணமக்களை தேனிலவுக்காக விமானம் ஏற்றிவிட மணமகள் பெற்றோருடன் சென்னை விமானநிலையம் சென்றார். அவர்கள் சிங்கப்பூர், இந்தோனேசியா சென்று 11 ஆம் தேதிதான் திரும்பி வருகிறார்கள்
ஈரோட்டில் எங்கள் விஷ்ணுபுரம் நண்பர் பிரபு விஷ்ணுபுரம் வாசகியான பவித்ராவை காதலித்து மணம் புரிந்துகொள்ளும் நிகழ்வு. 25 மாலை வரவேற்பில் யோகேஸ்வரன் ராமநாதன் ஒருங்கிணைப்பில் திருவிசநல்லூர் செல்வரத்தினம் குழுவினரின் நாதஸ்வர இசை மிகச்சிறப்பாக இருந்தது. யோகாவின் அப்பா தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன் தவில். யோகா எனக்காகச் சொல்லி வாசிக்கவைத்த ஆபேரி. நானே கேட்டு வாசிக்கவைத்த ஆனந்த பைரவி. மிக நிறைவான ஓர் இசைமாலை.
மறுநாள் 26 பிப்ரவரியில் திண்டல் மலை முருகன் ஆலயத்தில் திருமணம். ஈரோடு நண்பர்களும் கோவை நண்பர்களும் வந்து கலந்துகொண்ட நிகழ்வு. அந்திவரை ஈரோட்டிலேயே இலக்கிய அரட்டை. அப்போது யாரோ சொன்னார்கள். “ஜெ உங்களுக்கு பத்துநாள் கல்யாணச்சாப்பாடு” என்று. மெய்தான். ஒருவழியாக யானைமேல் இருந்து இறங்கியாயிற்று.
ஆனால் நான் ஏதோ ஒரு யானைமேல்தான் அமரமுடியும். 27 அன்று திருப்பூரில் கல்லூரி மாணவர்களுக்காக யான் அறக்கட்டளை ஒருங்கிணைக்கும் வாசிப்புப் பயிற்சி அரங்கு. நேராக மலையேற்றம், மார்ச் 1 முதல் 3 வரை தத்துவ வகுப்புகள். மார்ச் 4 முதல் அடுத்த யானை, சினிமா.