“ஆயிரம் மணி நேர வாசிப்பு சவால்” நூல் வாங்க
ஆயிரம் மணிநேர வாசிப்புச்ச் சவால்- சாந்தமுர்த்தி
ஆயிரம் மணிநேர வாசிப்பு சுனீல் கிருஷ்ணன்
ஆயிரம் மணி நேர வாசிப்பு சவால் போட்டியில் தன்னுடைய 63-வது வயதில் கலந்து கொண்டு வென்ற சாந்தமூர்த்தி தனது அனுபவத்தை சிறு நூலாக எழுதியிருக்கிறார்.
போட்டி நடந்த காலகட்டத்தில் ஒரு கூடுதல் சவாலாக பேத்தியை வளர்த்தெடுக்கும் பொறுப்பும் அவருக்கு வந்து சேருகிறது. முதுமையின் சவால்கள், புத்தகங்களை சேகரிப்பதில் இருக்கும் சிரமங்கள், திட்டமிட்டதை செயல்படுத்த இடையூறாக இருந்த நேர உண்ணிகளிடமிருந்து விடுபடுதல், தனது அன்றாடங்களைப் பகுத்துக் கொண்ட விதம் ஆகியவற்றை ஒரு நேரடி உரையாடல் போல இந்நூலில் சாந்தமூர்த்தி விவரிக்கிறார்.
இளமையில் அப்பாவின் மளிகைக் கடையில் அமர்ந்து வாசித்தது, உள்ளூர் நூலகத்தில் தவம் கிடந்தது,நீண்ட கால ஆசிரியப் பணி வாழ்வின் அனுபவங்கள், கல்வித் துறையில் உயரதிகாரியான பிறகு எதிர் கொண்ட விஷயங்கள், பிள்ளை வளர்ப்பு குறித்த அவதானங்கள்,வெளி நாட்டு வாழ்க்கையின்போது அங்கிருந்த நூலகங்களைப் பயன்படுத்திக் கொண்டது,மனைவியையும் வாசிப்பாளராக்கியது உள்ளிட்ட விவரணைகளால் ஒரு தன் வரலாற்று நூலை வாசித்த அனுபவம் கிட்டுகிறது.
சராசரியாக நாளொன்றுக்கு 7 மணி நேரம் வாசித்திருக்கிறார். அதே வேகத்தை போட்டி முடிந்த பிறகும் தொடர்கிறார். தற்போது ஆண்டொன்றிற்கு சுமார் 150 முதல் 180 புத்தகங்களை வாசிக்கிறார். இந்தியாவில் இவரளவு வாசிக்கும் பிறிதொரு வாசகர் இருப்பது சந்தேகமே.
நேரம் கிடைத்தால் வாசிப்பேன் என சொல்கிறவர்களால் ஒருபோதும் கணிசமான அளவு வாசித்துவிட முடியாது. நவீன வாழ்வில் பிழைத்தலைத் தவிர பிற காரியங்களுக்கு நேரம் சிறிதும் கிடையாது. தான் விரும்புகிற ஒன்றிற்காக நேரம் செலவழிக்க சிலவற்றை நிராகரிக்கத்தான் வேண்டும். சாந்தமூர்த்தி தனக்கான நேரத்தை உருவாக்க அதிகாலை 4 மணிக்கு எழத் தொடங்கியுள்ளார். தேவையற்ற பயணங்கள்,சமூக ஊடகங்கள், சினிமா, தொலைக்காட்சி,அரட்டை என பலவற்றைக் கவனமாக நிராகரித்துள்ளார்.
இன்னொரு முக்கியமான அம்சம், தனக்கான வாசிப்புப் பட்டியலை உருவாக்கியுள்ளார். இலக்கற்ற வாசிப்பு இருமுனைக் கத்தி. ஒன்று அது வாசிக்கும் பழக்கத்தைப் பாதிக்கும். அல்லது வாசிப்பவனைப் பாதிக்கும். தன்னுடைய அகம் ஆர்வம் கொள்ளும் துறையின் ஆகச் சிறந்த நூல்களை வாசித்து முடிக்கவே ஓர் ஆயுள் போதாதென்றிருக்கையில் கண்டதையும் கற்று பண்டிதனாக வேண்டியதில்லை. அவரது நூல் பகுப்பு முறையும் சுவாரஸ்யமானது. அவரைப் பொருத்தவரை இரண்டே பிரிவுகள்தான். Light/ Heavy
தான் வாசித்தவற்றை தன்னுடைய மூன்று பேத்திகளுடன் பகிர்வது சாந்தமூர்த்தியின் வழக்கம். தீபத்தைக் கொண்டு தீபங்களை ஏற்றுவது போல அடுத்த தலைமுறைக்கு அறிவைக் கடத்துகிறார். எந்த மொழியில் இலக்கியங்கள் எழுதப்படுகிறதோ,எந்த மொழியில் இலக்கியங்கள் வாசிக்கப்படுகிறதோ,எந்த மொழி உலக இலக்கியங்களை மொழிபெயர்த்து தனதாக்கிக் கொள்கிறதோ அம்மொழி வாழும். அம்மொழி பேசும் மக்கள் வாழ்வார்கள். அவர்களது வாழ்வு செழிக்கும்.
தன் வாழ்க்கையில் புத்தகங்களும் இருக்க வேண்டுமென விழைபவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது. கண்சோர்ந்த முதுமையில் திண்ணைக் கிழமாக வாழ்ந்து கழிக்காமல் ஓய்வுக் காலத்திற்கும் அர்த்தமும்,அழகும் சேர்ப்பதற்கான கையேடு என்றே இந்நூலைக் கருதுகிறேன்.
சாந்தமூர்த்தி வாசித்த அபூர்வமான நூல்களைப் பற்றியும், அவற்றை வாசித்த தருணங்களைப் பற்றியும் தொடர்ந்து புத்தகங்கள் எழுத வேண்டுமென அவரைக் கேட்டுக் கொள்கிறேன். எனதிந்த முன்னுரையை வாசிக்கும் நண்பர்கள் தங்கள் பகுதியிலிருக்கும் பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடையே சாந்தமூர்த்தியைப் போன்றவர்களை உரை நிகழ்த்தச் செய்ய வேண்டும். வாசியுங்கள்,வாசியுங்கள் என்று சொல்வதை விட எப்படி வாசிக்க வேண்டும் என்று சொல்வது வாசித்தவற்றை சொல்லி ஆர்வத்தை தூண்டுவதும் மிக அவசியம் என நினைக்கிறேன்.
செல்வேந்திரன்