அன்புள்ள ஆசிரியருக்கு,
ஒரு கட்டுரையில் நீங்கள் “இன்றைய வரலாற்றாய்வு என்பது நுண்வரலாற்றாய்வின் காலகட்டம்” என்று குறிப்பிட்டீர்கள். இது ஒட்டுமொத்த வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட பகுதியை எடுத்துக்கொண்டு அதை முழுமையாக ஆராய்வது இதன் வழி. இத்தகைய வரலாற்று ஆய்விற்கு எடுத்துக்காட்டாக நீங்கள் குறிப்பிடுபவர் குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்களை, ஏறத்தாழ அவர் வயதையொத்த இன்னொரு ஆளுமை ஜார்ஜ் மிஷல் அவர்கள்.
ஆஸ்திரேலியரான இவர், இந்தியாவின் பல பகுதிகளின் கலை மரபை குறித்து எழுதியிருந்தாலும் இன்றைக்கு இவர் முதன்மையாக போற்றப்படுவது தக்காணத்தின் கலைமரபை குறித்த இவரது ஆய்வெழுத்திற்காதான். ஏறத்தாழ 50 ஆண்டுகள் இப்பகுதியில் தொடர்ச்சியாக பயணித்து மிகச் சிறந்த ஆய்வு நூல்களையும் பயண வழிகாட்டி நூல்களையும் எழுதி இருக்கிறார். பெங்களூருவில் உள்ள கலை மற்றும் புகைப்பட அருங்காட்சியகத்தில்(Museum of Art and Photography -MAP) இவரது சமீபத்திய பயண வழிகாட்டி நூலான “மைசூரு ஸ்ரீரங்கபட்ணா” வெளியீட்டு விழாவில்(Jan -17) நானும் நண்பர் ராஜேஷும் கலந்துகொண்டு அவருடன் சிறிது நேரம் உரையாடி, பின் அவரிடம் புத்தகத்தில் கையெழுத்து பெற்று திரும்பினோம்.
கடந்த ஆண்டு ஆலயக்கலை நண்பர்களுடன் ஹம்பி சென்றிருந்த பொது ஜெ.கே விடம் ஒருவர் “ஹம்பியை பற்றி அறிந்து கொள்ள மிகச் சிறந்த புத்தகங்கள் எவை எவை?” என்று கேள்வி எழுப்பினர், அதற்கு ஜெ.கே ஜான் பிரிட்ஸ் மற்றும் ஜார்ஜ் மிஷலின் புத்தகங்கள் ஹம்பி மட்டுமின்றி மொத்த தக்காணத்தையும் பற்றி தெரிந்து கொள்ள உதவுபவை என்று கூறியிருந்தார்.பயணம் முடிந்து வீட்டில் வந்து பார்த்த பொழுது ஜார்ஜ் மிஷலின் பதாமி மற்றும் சரவணபெலகோலா குறித்த பயண வழிகாட்டி நூல்களை நான் ஏற்கனவே வாங்கி பயன்படுத்தியிருந்தேன். அதன் பின் அவரைப் பற்றி கூகுளில் தேடி அவரது பணிகள் குறித்து படித்தேன்.
நான் அவரைப் பற்றி கூகுளில் தேடியிருந்ததால் அவரது பெங்களூர் வருகை குறித்த செய்தி கூகுள் செய்தி தளத்தில் எனக்கு பரிந்துரையில் வந்தது. இந்த “மைசூர் ஸ்ரீரங்கப்பட்டினம்” குறித்த பயண நூலை இவருடன் சேர்ந்து கேலப் சிமன்ஸ்(Caleb simmons) பின் மைசூரை சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளர்களான மாளவிக்கா மூர்த்தி மற்றும் சிவேந்திரா ஆகிய நால்வரும் எழுதியுள்ளனர்.
விழா மேடையில் கேலப் சிம்மன்ஸ் தவிர்த்து மற்ற மூவரும் அமர்ந்திருக்க பங்கேற்பாளர்கள் கேள்விகளை கேட்டனர். பெரும்பாலும் சம்பிரதாயமான கேள்விகளையே கேட்டனர் “இதை ஏன் கன்னடத்தில் எழுதவில்லை? இதை ஏன் ஆடியோ புத்தகமாக வெளியிடக்கூடாது? பின் இதை ஏன் குழந்தைகளுக்கான நூலாக வெளியிடக்கூடாது?” என்று. 90 சதவீத கேள்விகளுக்கு ஜார்ஜ் எந்த பதிலும் அளிக்கவில்லை மற்ற இருவருமே பதில் அளித்து வந்தனர். இவர் அமைதியாகவே இருந்தார்.
கடைசியாக ஒருவர் “உங்களுக்கு வந்த மிகச் சிறந்த எதிர்வினை என்ன?” என்ற கேள்விக்கு ஜார்ஜ் அவர்கள் “எனது முதல் பயண வழிகாட்டி நூலில் இருந்த ஒரு சிறு தகவல் பிழையை பெங்களூருவை சேர்ந்த இருவர் குறிப்பிட்டு எனக்கு மின்னஞ்சல் செய்திருந்தனர். அதை உடனே படித்துவிட்டு அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்வதாக அவர்களுக்கு நான் பதிலளித்திருந்தேன். அப்பொழுது நான் அவர்களிடம் நீங்கள் வரலாற்று மாணவர்களாக என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர்கள் ‘இல்லை நாங்கள் பெங்களூருவில் கணிப்பொறி துறையில் வேலை பார்க்கிறோம், ஒரு பொழுதுபோக்கிற்காக வரலாற்று இடங்களை சென்று பார்ப்பதையும் அதைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் உடையவர்கள்’ என்று கூறினார்கள். அதுதான் எனக்கு கிடைத்த மிகச்சிறந்த எதிர்வினையாக நான் கருதுகிறேன். ஏனென்றால் பெரும்பாலும் எனது எழுத்துக்களை கட்டிட வடிவமைப்பாளர்களும் வரலாற்று மாணவர்களுமே படித்து வருகிறார்கள் என்று நினைத்திருந்தேன். அதையும் தாண்டி பொது வாசகர்களிடம் அது சென்று சேர்ந்ததில் அதை அவர்கள் கவனித்து படிப்பதில் எனக்கு பெருமையாக இருந்தது” என்று கூறினார்.
இறுதியாக அவர்களைப் பற்றி குறிப்பிடுகையில் “I thought they are architects, but they’re hitechs” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார். நான் கவனித்தவரையில் அவர் பேசிய எல்லா சொற்றொடரை முடிக்கும் போதும் ஒரு நகைச்சுவையுடனே முடித்தார். அதன்பின் விழா முடிவுற்று அனைவரும் கைதட்டிக் கொண்டிருந்தபோது மற்ற இருவரும் அமர்ந்திருக்க இவர் தான் முதலில் எழுந்து அனைவருக்கும் இந்திய முறைப்படி வணக்கம் தெரிவித்தார்.இவரைப் பார்த்த பின்புதான் மற்ற இருவரும் எழுந்து வணக்கம் தெரிவித்தனர். தொடர்ச்சியாக இந்நிலத்துடன் தொடர்பில் இருப்பதால் அவரிடம் இந்திய தன்மை மிகுதியாய் வெளிப்பட்டது. அவரது பாவனைகளும் உடலசைவுகளும் கூட பெரும்பாலும் இந்தியரை போலவே இருந்தந.
அவர் இந்நிலத்தின் கலைமரபு மீது கொண்ட காதலால் தான் இதை ஆராய்ந்து எழுதுவதோடு மட்டும் நிறுத்தாமல் “டெக்கான் ஹெரிடேஜ் பவுண்டேஷன்(DHS-Deccan Heritage Foundation)” என்ற அமைப்பை நிறுவி தக்காணத்தில் அழிவு நிலையில் இருக்கும் பல வரலாற்று இடங்களை மீட்டு பாதுகாக்கும் பணியினையும் செய்து வருகிறார். இப்பணிகளை இவர் இந்த நிலத்தின் மீதுள்ள காதலால் தான் செய்கிறார் அதனால் தான் இவரை நான் தக்காணத்தின் காதலன் என்று தலைப்பில் குறிப்பிட்டேன்.
விழா முடிந்து மேடைக்குக் கீழ் வந்து தனியாக நின்றவரை நானும் ராஜேஷம் சென்று சந்தித்து முகமன் கூறிவிட்டு புத்தகத்தில் அவரிடம் கையெழுத்து கேட்டோம், அவர் “ஓ” என்ற வியப்போலியுடன் புத்தகத்தை பெற்று கையெழுத்திடச் சென்றார். சென்றவர் அதை நிறுத்திவிட்டு திரும்பி தனது இளம்பச்சை கண்களால் எங்களை குறும்புடன் பார்த்து “இந்த புத்தகம் உண்மையிலேயே உனக்கு பலனளித்ததா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார். நாங்களும் சிரித்துக் கொண்டே “ஆம் பலனளித்தது” என்று கூறினோம்.
அதன் பின் அவர் இந்த புத்தகம் பாதாமி பற்றி அவர் வெளியிட்ட ஆரம்பகால பயண வழிகாட்டி நூல் என்று குறிப்பிட்டு. எங்களை பற்றி கேட்டார். நாங்கள் எங்களை குறித்து கூறியவுடன் அவர் “அப்படி என்றால் மேடையில் நான் குறிப்பிட்ட ஹைடெக் ஆட்களை போன்றவர்கள் தான் நீங்களும்” என்று கூறி சிரித்தார்.
அதன் பின் அவரிடம் “தமிழ்நாட்டு கலைமரபை பற்றி நீங்கள் ஒரே ஒரு புத்தகம்தான் எழுதி இருக்கிறீர்கள் ஏன் மேற்கொண்டு எழுதவில்லை?” என்று கேட்டோம். அதற்கு அவர் “மொழி பிரச்சனை தான் காரணம், தமிழ்நாட்டுக் கோவில்களை ஆராய்ந்து எழுத வேண்டும் என்றால் தமிழ் நன்கு தெரிந்திருக்க வேண்டும், அதற்கு நேரம் அமையாததால் அதை மேற்கொண்டு செய்யவில்லை” என்று கூறினார்.
அதன் பின் ஸ்ரீரங்கம் தஞ்சாவூர் கும்பகோணம் ஆகிய இடங்களுக்கு அவர் வந்ததை பற்றி நகைச்சுவையாக கண்களில் அத்தனை ஆர்வத்துடன் கூறினார். அவருடன் பேசுவது ஒரு முதிர்ந்த குழந்தையுடன் பேசுவதை போலவே இருந்தது.இந்த குழந்தைத்தனம் தான் அவரை இத்தனை வருடம் செயலூக்கமுடன் வைத்திருக்கிறது போலும்.
அதன் பின் ஒருவர் வந்து “உங்களது எதிர்கால திட்டம் என்ன?” என்று கேட்டார். 80 வயது நிரம்பிய ஒருவரிடம் எதிர்கால திட்டம் பற்றி கேட்பதே எனக்கு முரணாகப்பட்டது. அதற்கும் அவர் குறும்புடன் தனது திட்டங்களை பற்றி விவரிக்க தொடங்கினார். அதன் பின் அவரிடம் விடைபெற்று திரும்பினோம்.
அறிவுத்துறை செயல்பாட்டயே தனது வாழ்வேன அமைத்துகொண்ட ஒரு ஆளுமையை நேரில் சந்தித்தது உவகையூட்டும் அனுபவமாய் அமைந்தது. நிறைவான நாள்.
தினேஷ் ரவி