பெருமதிபிற்குரிய ஆசிரியருக்கு,
நாம் ஐடி துறையில் கடந்த 15 வருடங்களாக பணியிலிருக்கிறேன். கல்லூரி முடித்த காலத்தில் இருந்தே ஓரளவு இலக்கியம் வாசித்து வருகிறேன். 10 ஆண்டுகளுக்கும் மேலாக உங்களின் தளத்தை வாசித்து வருகிறேன். கொஞ்சம் தனித்துவமான ரசனை மற்றும் சிந்தனை கொண்டவனாகவும் என்னை உணர்கிறேன்.
சமீப காலமாக எனக்கு குறிப்பாக அதிகாலை நேரங்களில் பலதரப்பட்ட சிந்தனைகளும், எண்ண ஓட்டங்களும் கட்டுப்பாடில்லாமல் தோன்றுகின்றன. கிட்டத்தட்ட அனைத்தும் நேர்மறையானவைகளாகவும், ஆக்கபூர்வமவையாகவும் இருக்கிறன. பெரும்பாலும் குடும்பம் மற்றும் தொழில் சம்பந்தமானவை. சில நேரங்களில் இவை என் தினசரி சிக்கல்களுக்கு தீர்வாகவும், இவற்றை செயல்படுத்தும் போது மரியாதையும், வெற்றிகளும், பாராட்டுகளும் கூட அமைகின்றன.
ஆரம்பத்தில் நான் இதை சரியாக உணரவில்லை. மறந்தும் விட்டுருக்கிறேன். தற்போது, கைப்பேசியில் குரல்பதிவு செய்து அல்லது எங்கேயாவது எழுதி வைத்துக்கொள்கிறேன்.
இது சரிதானா? இதை எப்படி கையாள்வது?
உங்களின் பதிலை எதிர்நோக்கி,
டி
அன்புள்ள டி,
எளிமையான கேள்வி. ஆனால் சுவாரசியமானது. ஏனென்றால் இன்று காலைதான் இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்.
நல்ல தூக்கத்திற்குப் பிறகான காலை என்பது மிகமிக அரிய ஒரு பொழுது. அது நமக்கே நமக்கானது. முந்தைய நாளின் நினைவுக்கசடுகள் அகன்றுவிட்டிருக்கின்றன. பிரபஞ்சம் நமக்காக புதியதாக பிறந்து வந்து நின்றுள்ளது. நம் உடல் புதியதாக உருவாகி வந்துள்ளது. புதிய சிந்தனைகள், புதிய கற்பனைகள் உருவாவதற்கான தருணம் அது.
அதை ஒருபோதும் வீணடிக்கலாகாது என்பது என் அறிதல். முப்பதாண்டுகளுக்கும் மேலாக இதைக் கடைப்பிடித்து வருகிறேன். பயணங்களில் இல்லை என்றால் காலையிலேயே நான் என் எழுத்துக்களை எழுதிவிடுவேன். காலையில் எழுந்து அமர்ந்தால் யோசிக்கவே வேண்டாம், இயல்பாகவே எழுத முடியும். முந்தைய நாள் மிக கடினமாக, கடக்கவே முடியாதவையாகத் தோன்றியவை அனைத்துமே மிக எளிதாக அவிழ்ந்து கொள்வதை அறிந்திருக்கிறேன்
காலை எழுந்ததுமே நேரடியாக உலகியல்செயல்பாடுகளுக்குள் செல்வதென்பது ஒருவகையில் வாழ்க்கையை வீணடிப்பது. காலை எழுந்ததும் குறைந்தது ஒரு மணிநேரமாவது நமக்கேயாக வைத்துக் கொள்ளவேண்டும். நம் உலகியல்செயல்பாடுகளுக்கு வெளியே அப்பொழுதை நிறுத்திக்கொள்ளவேண்டும். சிந்திக்க, தியானிக்க. அப்போது அடையப்பெறுவனவற்றை நாம் வேறெப்போதுமே அடைய முடியாது
ஆகவேதான் நான் காலை எழுந்ததும் காலைநடை செல்வதில்லை. ஒன்று, வெவ்வேறு மனிதர்களைச் சந்திக்கவேண்டும். அது என் எண்ணத்தை திசைதிருப்பி விடலாம். காலையில் நாளிதழ் வாசிப்பது, செய்திகளைக் கேட்பது இல்லை. காலை எழுந்ததும் மின்னஞ்சல் பார்ப்பதும் இல்லை. எனக்கான பொழுதை முடித்தபின்னரே மின்னஞ்சல் பார்ப்பேன்.
எனக்கான பொழுது எனக்குள் இருந்து வருவதாகவே இருக்கவேண்டும். அவ்வாறு நிகழ இன்னொன்றையும் செய்யவேண்டும். காலையில் நாம் எழும்போது முந்தையநாள் இரவு துயில்கையில் எதை கடைசியாக எண்ணிக்கொண்டிருந்தோமோ மிகச்சரியாக அங்கிருந்து காலையின் முதற்சிந்தனை தொடங்குவதைப் பார்க்கலாம். ஆகவே முந்தையநாள் துயில்கையில் நாம் நமக்கேயான உலகில்தான் நம் துயில்நேரத்தை செலவிடவேண்டும்.
நான் எழுதுபவன் என்பதனால் எழுத்தை எண்ணிக்கொள்வேன். ஒன்றுமில்லையென்றால் இசையால் என்னை தூய்மைப்படுத்திக் கொள்வேன். ஒருபோதும் உலகியல் சிக்கல்களை எண்ணியபடி தூங்குவதில்லை. கடும் உலகியல் சிக்கல்கள் வந்த பொழுதுகள் சென்ற சில ஆண்டுகளிலேயே கூட அமைந்துள்ளன. அப்படி எண்ணங்கள் எழுந்து துயில் கலைந்தால் உடனே எழுந்து தீவிரமாக படிக்க அல்லது எழுத ஆரம்பிப்பேன். எனக்கான பொழுதிலேயே என் துயிலை அடைவேன். அதிலேயே விழித்தெழுவேன்.
காலையில் நல்லெண்ணங்கள் வரவேண்டும் என்றால் இரவில் நல்ல துயில் அமையவேண்டும். நல்ல துயிலே காலையில் உடலையும் உள்ளத்தையும் ஊக்கநிலையில் வைத்திருக்கிறது. ஊக்கநிலை கொண்ட உள்ளமே நல்லெண்ணங்களை உருவாக்குகிறது. உடலும் உள்ளமும் சோர்ந்திருந்தால் எதிர்மறை எண்ணங்களே உருவாகும். கசப்பும் அவநம்பிக்கையும் பெருகும். உண்மையில் உடல்சோர்வு எதிர்மனநிலையை உருவாக்குகிறது, எதிர்மனநிலை எல்லா எண்ணங்களையும் எதிர்மறைத்தன்மை கொண்டதாக ஆக்குகிறது, நம் மூளை எல்லாவற்றையும் எதிர்மறையாகச் சித்தரித்துக்கொள்கிறது. அதற்கான தர்க்கங்களை அது உருவாக்கிக்கொள்ளும்.
நல்ல துயில் அமையவேண்டும் என்றால் இயல்பான உடல்நிலை வேண்டும். மாத்திரைகள், போதைப்பொருட்களுக்குப்பின் நிகழ்வது நல்ல துயில் அல்ல. இயல்பாக அமைவதே நல்ல துயில். எவ்வளவு நேரம் துயிலவேண்டுமோ அவ்வளவு நேரம் துயிலவேண்டும். ஆகவே முந்தையநாள் இரவு தேவையில்லாமல் சமூக வலைத்தளங்களிலோ காணொளிகளிலோ நேரத்தை வீணடித்து பொழுதேறியபின் தூங்கி வெயிலேறியபின் விழித்துக்கொண்டால் விழித்தெழும்போது உடல் நல்ல நிலையில் இருக்காது. உள்ளம் உடலுக்கு முழுக்க முழுக்க கட்டுப்பட்டது.
காலையில் தூயமனதுடன் எண்ணங்களை அடைவது என்பது சிறப்பு. ஆனால் அதிகாலையில் நாம் இருக்கும் ஊக்கநிலையில் உருவாகும் எல்லா திட்டங்களும் கனவுகளும் முற்றிலும் நடைமுறை சார்ந்தவை அல்ல. அப்போது உருவாகின்றவை கனவுகள். கனவுகள் ஒரு விமானத்தின் புரப்பல்லர் விசிறிகள் போல. எஞ்சிய நாளின் நடைமுறைத் தர்க்கம் என்பது விமானத்தின் உடல். அக்கனவுகளை நம் எஞ்சிய பொழுதின் நடைமுறைப் பார்வையால் பரிசீலனையும் மறுபரிசீலனையும் செய்துகொள்ளவேண்டும். அதன்பின்னரே முடிவெடுக்கவேண்டும்
வாழ்த்துக்கள்
ஜெ