வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு
அன்புள்ள ஜெ,
உங்கள் சொற்களில் இருந்து எனக்கு ஒரு மனப்பதிவு வந்தது (புத்தகமும் விக்ரகமும்) அதாவது நீங்கள் புத்தகத்தை ஓர் அலங்காரப்பொருளாக, இண்டீரியர் டெகரேஷன் போல பார்க்கிறீர்களா என்று. அது புத்தகத்தை அவமதிப்பது அல்லவா? புத்தகம் வாசிப்பதற்குரியது அல்லவா?
ராஜசேகர் பொன்னம்பலம்
அன்புள்ள ராஜசேகர்
நீங்கள் சொல்வது ஒருவகை தூய்மைவாத மனநிலை. தூய்மைவாதம் எப்போதுமே மதிக்கப்படவேண்டிய ஒரு நிலைபாடுதான். அதுதான் கட்டற்ற பாய்ச்சலை கட்டுப்படுத்துவது. ஆனால் அது தேக்கநிலையாகவும் ஆகிவிடக்கூடும்.
அந்த கடிதத்தில் நான் நூல்களை விக்ரகங்களாக (வழிபடுச் சிலைகளாக) சொல்கிறேன். தெய்வம் எங்குமிருந்தாலும், வெறும் சொல்லிலேயே வழிபடப்பட்டாலும், நமக்கு சிலைகள் ஏன் தேவையாகின்றனவோ அதைப்போன்றே மின்னூல்கள் இருந்தாலும் நமக்கு அச்சுநூல்களும் தேவையாகின்றன.
இப்படி யோசியுங்கள். உங்கள் இல்லத்தில் தெய்வச்சிலைகள் அலங்காரப்பொருளாக இல்லையா? நடராஜர், அல்லது புத்தர்? வழிபாட்டுக்குரிய சிலைகள் எப்படி வீட்டில் அலங்காரப்பொருளாக இருக்கமுடியும்? தெய்வப்படங்கள் மாட்டியிருக்காத இல்லங்கள் உண்டா?
அவை வழிபாட்டுக்குரியவை ஆயினும் அலங்காரப்பொருளாகவும் முக்கியமானவை. ஓர் இல்லத்து வரவேற்பறை அடுக்கில் அமைந்திருக்கும் கண்மூடிய புத்தர்சிலை அந்த அறையின் ஒட்டுமொத்த மனநிலையை எப்படியோ மேம்படுத்துகிறது. ஓர் அமைதித்துளி அது. நாம் அதை அனிச்சையாகப் பார்க்கையில் சட்டென்று ஓர் அகம் அமையும் அனுபவத்தை அடைகிறோம். அவை ‘வெறும்’ அலங்காரப்பொருட்கள் அல்ல. அவை கலைப்பொருட்கள், தெய்வீகமான கலைப்பொருட்கள்.
எனில் ஏன் புத்தகங்களும் அப்படி இருக்கலாகாது? புத்தகங்களைப்போல மிகச்சிறந்த அறையலங்காரப் பொருட்கள் மிக அரிது. மிகச்சிறப்பாக அமைக்கப்பட்ட ஒரு வரவேற்பறை நூலக அடுக்கு அந்த இல்லத்துக்கே ஒர் அறிவார்ந்த தன்மையை அளிக்கிறது. அங்கே வரும் விருந்தினர் உள்ளத்தில் அது உருவாக்கும் உளப்பதிவை வேறெந்த அறையலங்காரமும் அளிக்க முடியாது.
நான் அதை உணர்ந்த ஓர் அனுபவம் இருபதாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. ஒரு முறை கேரளத்து உயர்நிலை இதழாளர் ஒருவரின் இல்லத்துக்குச் சென்றிருந்தேன். அற்புதமான வரவேற்பறை. அதன் ஒருபக்கம் முழுக்க நூல்கள். நான் சற்றே கேலியுடன் ‘புத்தகங்கள் இப்போது ‘டெக்கார் டைல்ஸ்’ ஆகிவிட்டன இல்லையா?’ என்றேன்.
ஆனால் அவர் தீவிரமாக விளக்கினார். “எந்த ஒரு அறையலங்காரமும் வெறும் அழகுப்பொருள் அல்ல. அது ஒருவர் தன்னைப்பற்றி தானே நிகழ்த்திக்கொள்ளும் ஓர் அறிவிப்பு. ஆகவேதான் மக்கள் அத்தனை விலகொடுத்து அவற்றை வாங்குகிறார்கள். வசதியாக அமர ஆயிரம் ரூபாய் நாற்காலிகளே போதும். ஆனால் லட்சரூபாய் செலவில் சோபாக்கள் வாங்கி போடுகிறார்கள். கம்பளங்கள் விரிக்கிறார்கள். பணக்காரர்கள் அசல் ஓவியங்களை பல லட்சம் செலவழித்து வாங்கி மாட்டுகிறார்கள். ஏழைகள்கூட ஏதோ சில பொம்மைகளை வாங்கி வைக்கிறார்கள்’
“தன் பொருளியல்நிலையையும் தன் சமூகநிலையையும்ம், தன் வாழ்க்கைமுறையையும் தன் ரசனைத் திறனையும் வீட்டு அலங்காரப்பொருட்கள் வழியாக மக்கள் அறிவிக்கிறார்கள். என்னை நான் இன்னார் என அறிவித்துக்கொள்ள மிகச்சிறந்த வழி இந்த வரவேற்பறை நூலகம். இங்கே நான் அமர்ந்திருக்கையில் என்னைப்பற்றி நான் ஒன்றுமே சொல்லவேண்டியதில்லை. இந்த அறைக்கே ஓர் அறிவார்ந்த அழுத்தத்தை இந்த நூலக அடுக்கு கொண்டுவந்துவிடுகிறது. என் விருந்தினர் மனதில் ஆழமான பதிவை உருவாக்குகிறது. அதை நான் திரும்பத் திரும்ப உணர்ந்திருக்கிறேன். என் தொழிலுக்கே அது மிகப்பெரிய அளவில் உதவியுள்ளது”
நான் கேட்டேன். “உங்களிடம் புத்தகம் வாங்கி காசை வீணாக்கிவிட்டீர்கள் என எவரும் சொல்வதில்லையா?”
அவர் சொன்னார். “எந்த மலையாளியும் அப்படிக் கேட்க மாட்டார். அப்படி கேட்டால் தன்னை பாமரன் என மதிப்பிட்டுவிடுவார்கள் என அறியாத மலையாளியே இல்லை. மலையாளிகள் தங்களைப் பற்றிய பெருமையான எண்ணம் மற்றவர்களிடம் உருவாகவேண்டும் என்றுதான் நினைப்பார்கள். சாமானியர்கள்கூட கொஞ்சம் அறிவுஜீவித்தனத்தை பாவனை செய்வார்கள்”
அவர் தொடர்ந்து சொன்னார். “ஆனால் உண்மையில் இங்கிருக்கும் இத்தனை புத்தகங்களின் மொத்த விலை மூன்று அல்லது நான்கு லட்சம்தான். சாதாரணமாக ஓர் உயர்நடுத்தர வீட்டிலுள்ள சோபாக்களின் விலையே அவ்வளவு இருக்கும். மிகமலிவான அலங்காரப்பொருள் என்றால் அது நூலகம்தான். காட்சியழகு என்று பார்த்தால்கூட வண்ணமயமான ஒரு பின்புலம். குறியீட்டு ரீதியாகவும் நூலகம் முக்கியமானது. நூலகப்பின்னணியில் எவரும் அதிகம் சத்தம் போட மாட்டார்கள். இயல்பாக ஓர் அமைதி உருவாகிறது. என் வரவேற்பறைக்கு ஒரு கம்பீரம் உள்ளது என பலர் சொல்லியிருக்கிறார்கள்
அதன்பின் வரவேற்பறை நூலகங்களை பலநூறு முறை பார்த்திருக்கிறேன். இன்று கேரளத்தில் அது ஒரு மோஸ்தரும்கூட. சில கேரள நடிகர்களின் இல்லத்து நூலகங்கள் மகத்தானவை. அழகிலும், நூல்களின் தரத்திலும். அவற்றை அழகுற அமைத்துக்கொடுக்கும் நிபுணர்களும் உண்டு.
எனக்குப் புரியாதது ஏன் நாம் ஒரு சமூகமாக நூல்களை இந்த அளவுக்கு கூசுகிறோம்? வாசிப்பவர்கள் கூட அவற்றை ஏன் மறைத்து வைக்கிறோம்? ஆம் நான் வாசகன் என்று சொல்வதில் ஏன் தயக்கம்? நூல்களுக்குச் செலவழிப்பதில் ஏன் தயக்கம்? தமிழகத்தில் ஒருவர் வாங்கும் துணிகள், மின்னணுப் பொருட்களின் விலைகளுடன் ஒப்பிட்டால் நூல்கள் மிகமிகமிக மலிவானவை. தமிழகத்தில் ஒரு சட்டையின் விலைகொண்ட நூல்கள் மிகமிகக் குறைவு. ஸ்விகியில் ஒரு பிரியாணி வாங்கும் காசுதான் விஷ்ணுபுரம் நாவலின் விலை. ஏன் நாம் அதை விலைகூடுதல் என நினைக்கிறோம்? ஏன் குற்றவுணர்ச்சி கொள்கிறோம்?
வாங்கப்படும் நூல்கள் எல்லாமே படிக்கப்படுகின்றனவா என்று கேட்கும் படிக்காத பாமரர்க்கூட்டம் இங்கே மிகுதி. அவர்கள் வாங்கும் நுகர்வுப்பொருட்களில் எவற்றை எத்தனை முறை பயன்படுத்தியுள்ளனர் என்று கேளுங்கள். பல புடவைகள், சட்டைகள் மொத்தமே இருபது முறைகூட அணியப்படுவதில்லை. சில தருணங்களுக்காக வாங்கப்படும் ஷூக்கள், கைப்பைகள் போன்றவை ஓரிருமுறைகூட பயன்படுத்தப்படுவதில்லை. அதைப்பற்றிய கணிப்பே நம்மிடமிருப்பதில்லை.
ஆனால் ஓர் அறையலங்கார நூலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் நூல்கள் கூட வீணாக அங்கே இருப்பதில்லை. அவை எப்ப்போதோ எவராலோ வாசிக்கப்படும். அதைவிட அவை அங்கே வாசிப்பதற்கான நிரந்தர அறைகூவலாக இருந்துகொண்டிருக்கும். நாம் எப்போதுமே நூல்களை நோக்கிய மனநிலையில் இருந்து கொண்டிருப்போம்.
இன்னொன்று உண்டு, இதை நான் புத்தகக் கண்காட்சிகள் பற்றியும் சொல்லியிருப்பேன். நூல்களை ஒட்டுமொத்தமாகப் பார்ப்பதே ஒருவகை புரிதலை அளிக்கும். ஒரு நூலகத்தில் வெறுமே நூல்களை பார்த்தபடி நடந்தால், நூல்களை சும்மா எடுத்து அட்டைகளைப் பார்த்தால்கூட நீங்கள் இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கும் அறிவியக்கத்தை அறிந்துகொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குள் ஓர் அறிவார்ந்த சித்திரம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
நான் திரும்பத் திரும்ப அதை உணர்ந்ததுண்டு. சுந்தர ராமசாமி அவருக்கு மிகப்பிடித்த செயலாகச் சொல்வது தன் இல்லத்து நூலகத்தின் நூல்களை துழாவி ஒரு குறிப்பிட்ட வகை நூல்களை எடுத்து அடுக்குவது. அதுவே ஒரு கல்வி. அண்மையில் என் வீட்டிலிருக்கும் சைவ சித்தாந்த நூல்களை மட்டும் எடுத்து பார்த்தேன். ஒரே வீச்சில் சென்ற நூறாண்டுக்கால சைவ அறிவியக்கத்தை உணர்ந்தேன். கைகள் வழியாக, கண் வழியாக.
நூலகமே நம் இல்லத்தை அறிவுதிகழும் இடமாக ஆக்குவது. அறிவே அழகில் உச்சம்.
ஜெ