A Fine Thread and Other Stories Amazon
அன்புள்ள ஜெ,
நலமே நாடுகிறேன்.
இம்மாதம் அஜிதன் திருமணத்துக்கு ஒரு நாள் முன்பு நான் வாழும் தெற்கு கரோலைனாவின் கால்ட்டன் கவுண்டியில் இலக்கியத் தேநீர் (Literary Tea – Featuring Palmetto State Authors) என்றொரு நிகழ்வு நடந்தது. ஒரு மாதத்துக்கு முன், எங்களது நீண்ட நாள் நண்பரான ஓவியர்–எழுத்தாளர் எம்பர் எஸ்ட்ரிட்ஜ் இது குறித்த தகவல்களை என்னிடம் பகிர்ந்து கொண்டு, நீ ஏன் கலந்து கொள்ளக்கூடாது என்று கேட்டிருந்தார். இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்காக A Fine Thread and Other Stories குறித்த தகவல்களையும், ஏற்கனவே இதழ்களில் வெளியாகியிருந்த என் மொழிபெயர்ப்புகள், படைப்புகள் குறித்த விபரங்களையும் அனுப்பியிருந்தேன். நமது கவுண்டியில் (நம் ஊர் மாவட்டம் போல) இன்னொரு எழுத்தாளர் என்று மகிழ்ந்து அவர்களது அமைப்பான Writers Who Write என்ற எழுத்தாளர்களின் அமைப்பில் என்னையும் இணைத்துக் கொண்டார்கள்.
இவ்வமைப்பின் உறுப்பினர்கள் மாதம் ஒருமுறை கூடி அவர்களது படைப்புகள் குறித்தும், தற்போது எழுதிக் கொண்டிருப்பவை குறித்தும் உரையாடுகிறோம். கவிஞர்களும், நாவலாசிரியர்களும், புதிதாக எழுதிக் கொண்டிருப்பவர்களுமாக (தன் ஐம்பது ஆண்டு கப்பல் தொழில் அனுபவத்தை புத்தகமாக எழுத கோஸ்ட் ரைட்டர் தேடி வந்திருப்பதாகக் கூறிக் கொள்ளும் அமெரிக்க–இந்திய இனத்தைச் சேர்ந்த எண்பது வயது ஸ்மித்ஃபீல்ட் உள்பட) இந்தக் குழு ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டியபடி வளர்கிறது. ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொள்ளாத ஒரே எழுத்தாளன் அங்கு நான் மட்டும்தான். வேறொரு பண்பாட்டிலிருந்து பரிமாறிக்கொள்ள என்னிடம் செல்வங்கள் உண்டு என்ற பெருமிதமே என்னை அவர்கள் நடுவில் நிமிர்ந்து அமர வைத்திருக்கிறது.
இவ்வமைப்பின் செயலர் பவ்லா பாட்ஸ் A Fine Thread and Other Stories-ஐ வாசிக்க விரும்பினார். விலைகொடுத்து வாங்கிக் கொள்ளவும் விரும்புவதாகச் சொன்னார். இந்த நூல் அமெரிக்காவில் விற்பனைக்கு இல்லை. ஒப்பந்தப்படி விற்கக்கூடாது. விருதுகளுக்கு அனுப்புவதற்காகவும், நூலகங்களுக்கு நன்கொடை அளிப்பதற்காகவும் பனிரெண்டு புத்தகங்கள் வைத்திருந்தேன் (பதிப்பாளர் தினேஷ் அனுப்பித் தந்த ஐந்து பிரதிகள் உட்பட). அவருக்கு கடனாக ஒரு வாரம் நூலை அளித்தேன். வாசித்து விட்டு அத்தனைக் கதைகளும் தன்னைக் கவர்ந்ததாகக் கூறினார். வேறொரு நிலத்தின் பண்பாட்டுக் கூறுகளை தன் மொழியில் வாசிக்கையில் உள்ளத்தில் உருவாகும் மெல்லிய அதிர்ச்சியைக் குறித்துப் பகிர்ந்து கொண்டார். ஜெயமோகன் கதைகளின் பேசுபொருள், தற்கால அமெரிக்கக் கதைகளின் பேசுபொருட்களினின்றும் முற்றிலும் மாறுபட்டு, உயர்தளங்களுக்குப் பயணிப்பதைப் பற்றிக் குறிப்பிட்டார். சில கதைகளை நவீனத்துவ பாணியில் அமைந்த பின்–நவீனத்துவக் கதைகளென்றும் (சிவமயம், தேவதை, கயிற்றரவு), சில எந்த வகைமைகளுக்கும் அடங்காமல் இயல்பாகப் பிரவகிப்பதாகவும் அவதானித்தார். இந்த நூலுக்கு ஒரு விமர்சனக் குறிப்பு எழுத முடியமா என்று அவரிடம் கேட்டிருக்கிறேன்.
இலக்கியத் தேநீர் நிகழ்வில் பதிமூன்று எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் ஒரே ஒரு மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆண், நான்தான். மேற்கில் பெண்கள்தான் அதிகம் எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன். நான், என் மனைவி அனுஷா, என் மைத்துனர் நந்தகுமார் (பிரதர்–இன்–லாவை அப்படித்தானே சொல்வார்கள்?) மூவரும் நிகழ்வுக்கு ஒரு மணி நேரம் முன்னதாகச் சென்று விட்டோம். விழா தேநீர் விருந்துடன் துவங்கியது. எல்லா வகையான தேநீர்ப்பைகளும் வழங்கப்பட்டன. அமெரிக்கர்கள் காஃபிதான் அதிகம் அருந்துகிறார்கள். தேநீர் என்றால் குளிர்–கறுப்பு தேநீர்தான். ஆனால் இந்த நிகழ்வில் ஊன் சாண்ட்விச்சுடன் சூடாகத் தேநீர் பரிமாறப்பட்டது. அனுவும், நானும் ஊனுண்பதை நிறுத்தி விட்டதால் தேநீர் மட்டும் அருந்தினோம். அமைப்பாளர்கள் கோரிக்கைப்படி எல்லாரும் கோட்–சூட் தொப்பி அணிந்து சென்றிருந்தோம். நான் ஷெர்லக் ஹோம்ஸ் போலத் தோற்றமளிப்பதாக ஃபோர் சீசன்ஸ் இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம் அபிப்ராயப்பட்டார். ஹெர்மென் ஹெஸ்ஸே மாதிரி இருக்கிறேன் என்று சொல்லியிருக்கலாம்.
நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். எல்லாரும் இலக்கிய ஆர்வமுடையவர்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அறம் கதையில் வரும் பதிப்பாளரின் மனைவியைப் போல எழுத்தின் மீது மதிப்பு கொண்டவர்கள். மிகுந்த ஆர்வத்துடன் ஒவ்வொரு எழுத்தாளராக சென்று அவர்கள் படைப்பு குறித்துக் கேட்டறிந்தார்கள். என் மாணவர்கள் சிலர் தங்கள் பெற்றோருடன் வந்திருந்தார்கள். தங்கள் ஆசிரியர் ஒருவர் எழுத்தாளர் வரிசையில் நின்றிருந்தது அவர்களுக்குப் பெருமிதம். அவர்கள் என்னைக் கண்டது எனக்குப் பெருமிதம். என் மேஜைக்கு வந்தவர்களிடம் நான் A Fine Thread and Other Stories நூலைக் குறித்தும், ஜெயமோகன் என்ற எழுத்தாளர் குறித்தும் (உலகின் நீண்ட நாவல் வரிசையை எழுதியவரை உடனே இணையத்தில் தேடிப் பார்த்தார்கள்), பொதுவாக இந்திய மற்றும் தமிழ் இலக்கியம் குறித்தும் விளக்கினேன். நூலை வாங்க விரும்பியவர்களிடம் இது விற்பனைக்கு அல்ல; இந்த நூல் குறித்தும், தமிழ் என்ற மொழியில் இயங்கும் உலகின் தலை சிறந்த எழுத்தாளர் குறித்தும் பகிர்ந்து கொள்ளவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன் என்று விளக்கினேன். ஆனாலும் சிலரது அன்புக் கோரிக்கையை நிராகரிக்க இயலவில்லை. ஆறு பேருக்கு தலா இருபது டாலர் அன்பளிப்பு வாங்கிக் கொண்டு புத்தகங்களை அளித்தேன். எங்களது இந்திய நண்பர் வங்காளத்தைச் சேர்ந்த பவுலமி தேவாங்கன் (அவரது பத்து வயது மகன் மீரவ் இவ்வமைப்பு நடத்திய கட்டுரைப் போட்டியில் வென்றிருந்தான்) அமெரிக்கர்கள் மத்தியில் நம்மைப் பெருமைப்படுத்தி விட்டீர்கள் என்று மகிழ்ந்து நூலை வாங்கிக் கொண்டார்.
எழுத்தாளர் எம்பர் எஸ்ட்ரிட்ஜ் நிகழ்வுக்கு வருமுன்னரே தனக்கு ஒரு பிரதி வேண்டும் என்று சொல்லி வைத்திருந்தார். நான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதில் என்னைவிட அவர்தான் அதிகம் மகிழ்ந்திருந்தார். இந்த நிகழ்வுக்காக நாலுமணி நேரம் பயணம் செய்து ஹார்ட்ஸ்வில் என்ற நகரிலிருந்து வந்திருந்தார். நூலைப் பெற்றுக் கொண்டு மிகவும் மகிழ்ந்து சில சொற்கள் கூறினார். அவரிடம் நான் உங்களது படைப்புகள் குறித்துக் கூறினேன். ஓர் எழுத்தாளர் இத்தனை இலக்கியத்தரமுள்ள எழுத்துக்களை எழுதிக்குவித்திருப்பதை அவரால் நம்பவே முடியவில்லை. தற்போது மேற்கில் வணிக எழுத்தாளர்கள் நூற்றுக்கணக்கில் நூல்களை எழுதிக் குவித்துக் கொண்டிருந்தாலும், இங்குள்ள இலக்கிய எழுத்தாளர்கள் ஒப்பு நோக்கக் குறைவாகவே எழுதுகிறார்களென்று சொன்னார். ஜூலியன் பார்ன்ஸ், ஜான் பான்வில் போன்றோரின் புக்கர் வாங்கிய நாவல்கள் இருநூறு பக்கங்களுக்கு மிகாதவை. ஜோனதன் ஃப்ரான்சன் போன்றோர் ஆயிரம் பக்க நாவல்கள் எழுதினாலும் அவர்கள் எழுதிய மொத்த நாவல்களே ஏழெட்டுதான் இருக்கும். ஏழு ஆண்டுகளில் இருபத்தாறு நாவல்கள் கற்பனையிலும் காண முடியாத அளவு என்றும் இவற்றையெல்லாம் மொழியாக்கம் செய்ய ஒரு வாழ்நாள் போதாது என்றும் சொன்னார். உங்கள் படைப்புகளை ஒரு படையே மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதைச் சொன்னேன். (என் குலமூத்தோர் ப்ரியம்வதா மற்றும் சுசித்ரா, அப்புறம் நண்பர்கள் ரெமிதா சதீஸ், விஸ்வனாதன் மகாலிங்கம், பாவனா, ஐஸ்வர்யா, சிவா . . .)
பிற எழுத்தாளர்கள் தாங்கள் பதிப்பித்த நூல்களை விற்பதற்கும், கையெழுத்திடும் நிகழ்வுக்குமே அங்கு வந்திருந்தார்கள். நான் மட்டும்தான் புத்தக அறிமுகம் செய்வதற்காக அங்கு சென்றிருக்கிறேன். அதுவே பலருக்கு வியப்பு. என் அருகில் அமர்ந்திருந்த குழந்தை எழுத்தாளர் ஒருவர் (அவர் குழந்தை அல்ல) அமோகமாகப் புத்தகங்களை விற்றுக் கொண்டிருந்தார். இங்குள்ள குழந்தைகள் நூல்கள் மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்படுபவை. இன, நிற, பண்பாட்டு வேறுபாடுகள் பாராட்டுதல் கூடாது என்ற உள்ளடக்கத்துடன் எழுதப்படுபவை. பெற்றோர்கள் நிறைய நூல்களைத் தங்கள் குழந்தைகளுக்கு வாங்கி அளிக்கிறார்கள். நூல் வாசிக்கும் பழக்கம் இங்குள்ள குழந்தைகளிடம் இயல்பாகவே உருவாகி வருகிறது. என் மாணவர்கள் பலர் எப்போதும் கையில் ஏதோ ஒரு நாவலுடன் இருப்பதைக் கண்டிருக்கிறேன். அதில் பல இலக்கிய நாவல்கள். விஷ்ணுபுரம் குழுவில் நிர்மலின் குழந்தைகள் நினைவுக்கு வருகிறார்கள். அவர்கள் வாசிப்பும், நூல் விமர்சனமும், தீவிர இலக்கிய வாசகர்களுக்குச் சற்றும் குறைந்ததன்று.
விழாவின் அமைப்பாளரும், எழுத்தாளருமான ஷீலா மார்ட்டினாவிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். இந்த நூலை அமெரிக்காவில் பதிப்பிப்பது பற்றி அவரது ஆலோசனைகளைக் கோரினேன். அவரே பதிப்பகம் வைத்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும் அ–புனைவு நூல்கள்தாம் வெளியிடுகிறார். புனைவுகள் சிலவே. மொழியாக்கம் அறவே இல்லை. இருந்தாலும் இது குறித்து விசாரிப்பதாகவும், தொடர்பில் இருக்குமாறும் கூறினார்.
எல்லா எழுத்தாளர்களும் தங்களைக் குறித்த காணொலிகளை முன்னரே அனுப்பியிருந்தனர். நான் இறுதியாகத்தான் நிகழ்வில் இணைந்திருந்தேன். எனவே அனுப்ப முடியவில்லை. எல்லார் முன்னிலையிலும் இரண்டு நிமிடங்கள் பேசினேன். A Fine Thread and Other Stories குறித்தும், தமிழின் மகத்தான எழுத்தாளர் ஒருவர் குறித்தும், நம் பண்பாட்டை இன்னொரு பண்பாட்டுடன் பகிர்ந்து கொள்வது குறித்தும் பேச அமையும் ஒவ்வொரு தருணமுமே பெருமிதத்துக்கும், மகிழ்வுக்கும் உரிய நிறைவான தருணங்களே.
ஜெகதீஷ்குமார்