கட்டண உரை, கடிதம்

அன்புள்ள ஜெ,

கட்டண உரை பற்றிய அறிவிப்பை கண்டு மகிழ்ச்சி. இதுவரை நிகழ்த்தப்பட்ட கட்டண உரைகளில் சில யூடியூபில் பகிரப்பட்டன. அவற்றை தொகுத்த இணைப்பு. சென்ற ஆண்டு இந்த உரைத்தொடரை இவ்வாறு தொகுத்து மூன்று நாள் இடைவெளியில் தொடர்ச்சியாக கேட்டது பேரனுபவமாக இருந்தது.

இந்த உரைத்தொடரில் மரபுதன்னிலைசிந்தனைவிடுதலை என்று ஓர் அமைப்பு உள்ளது. மனிதன் மரபை எவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டும். தன் தன்னிலையை எவ்வாறு வகுத்துக்கொள்ள வேண்டும். தன்னிலையை வகுப்பதில் மரபின், சிந்தனையின் பங்கு என்ன. விடுதலை என்றால் என்ன. எதிலிருந்து விடுதலை எதற்கான விடுதலை. இவ்வகை கேள்விகள் வழியாக ஒரு சிந்தனை கட்டமைப்பை உருவாக்குகிறது இந்தத் தொடர். அதை இலக்கியத்தின் கருவிகள் வழியாக எடுத்துக்கொண்டு செல்கிறது. இதன் உருவகங்களுடனும் கருத்துகளுடனும் உரையாடிக்கொண்டே இருந்திருப்பதை இப்போது உணர முடிகிறது.

இந்தத் தொடரின் முதலாம் மற்றும் மூன்றாம் உரைகள் (‘நமது இன்றைய ந்தனை முறை உருவாகி வந்தது எவ்வாறு?’ மற்றும்வரலாறு, பண்பாடு, நாம் என்னும் கற்பனை‘) இரண்டும் இணையத்தில் கிடைக்கப்பெறவில்லை. அவற்றையும் வலையேற்றம் செய்தால் இந்தச் சிந்தனைத் தொடரை பின் தொடர்பவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். ஆகவே அதை கேட்டுக்கொள்கிறேன். கட்டணத்துடன் பார்க்கும்படி அமைத்தாலும் நல்லது.

அன்புடன் 

சுசித்ரா

அன்புள்ள சுசித்ரா,

கோவை உரை பதிவுசெய்யப்படவில்லை. நெல்லை உரையின்போது ஒன்று நிகழ்ந்தது. அதுதான் மிகச்சரியான நெல்லைநாகர்கோயில் மனநிலை. பத்து தடவைக்குமேல் நிகழ்வு மிகச்சரியாக தொடங்கும் என்று சொல்லியிருந்தபோதிலும் அந்த ஒலிப்பதிவுசெய்யவேண்டிய நபர் அரை மணிநேரம் தாமதமாக வந்தார். “பொதுவா இங்க எல்லாம் லேட்டாகும்லா? ஒரு டீயப்போட்டுட்டு வந்தேன்” என்றார். நிகழ்வு முடிந்தபின்மன்னிச்சுக்கிடுங்க சார், ரெக்காட் பட்டன் சரியா வேலை செய்யல போல. அவசரத்திலே கவனிக்கல. நீங்க அவசரப்படுத்தினேள்லா?” என்றார். மறுநாள் வந்து சண்டைபோட்டு அழுது புலம்பி ஒலிப்பதிவுக்கான காசையும் வெட்கமில்லாமல் வாங்கிச் சென்றார்.  

அதன்பின்னர்தான் சுருதிடிவி தவிர எவரையுமே ஒலிப்பதிவுக்கு நம்பமுடியாது என்னும் முடிவை அடைந்தோம். உண்மையில் அவர்கள் ஒருவர் தவிர எவருமே சரியாக இதுவரை எந்த உரையையும் ஒலிப்பதிவு செய்ததில்லை. பெரும்பாலான பிற உரைகளில் பின்னணி இரைச்சல் இருக்கும். காணொளி அலைபாயும். அந்தக் குறைகளை அவர்கள் அடுத்தடுத்த முறைகூட சரி செய்து கொள்வதில்லை. இன்று சுருதி டிவிக்கு இன்னொரு மாற்றே இல்லை – பல லட்சம் செலவிடப்படும் அரசியல் உரைகள் கூட மிகக்கேவலமான முறையில்தான் ஒளிப்பதிவும் ஒலிப்பதிவும் செய்யப்படுகின்றன. தமிழ்ச்சூழலில் இல்லாத ஓர் அருங்குணம் தொழில்நேர்த்தி.  

ஆனால் இந்தக் கட்டண உரைகள் ஒலிப்பதிவுசெய்து பொதுவில் வெளியிடுவதற்காக பேசப்பட்டவை அல்ல. இம்முறையும் சுருதி டிவி வரவில்லை என்றால் காணொளி வலையேறாது. அவை அங்கே அப்போது உருவாகும் ஒரு வகையான உச்சநிலையையே இலக்காக கொண்டவை. பேசுபவரும் கேட்பவர்களும் ஒன்றாகச் சேர்ந்து சிந்தித்து அடையும் ஓர் உச்சம் அது. உலகமெங்கும் நல்ல உரைகள் அப்படித்தான் நிகழ்கின்றன.

ஜெ 

முந்தைய கட்டுரைகொற்றவையும் தமிழ்த்தேசியமும் -கடிதம்
அடுத்த கட்டுரைஆலயக்கலை பயிற்சி – கடிதம்