- மானஸாவின் காலடியிலிருந்து…
- மழைப்பாடகர்கள்
- எஞ்சும் நிலங்கள்
- தெய்வத்தளிர்
- பெண்பேராற்றல்
- முகிலில் எழுதல்!
- எண்முக அருமணி
காண்டீபம் என்ற சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டது இந்நாவல். வெண்முரசின் கதையோட்டம் அர்ஜுனனின் பயணங்களை விரித்தெழுதவேண்டிய ஒரு தருணத்தை வந்தடைந்தது. அர்ஜுனன் மணந்த பெண்டிரின் கதை, அவன் சென்ற புதிய நிலங்களின் கதை, அவன் வென்ற களங்களின் கதை. இங்கனைத்திலும் அவனுக்குத் துணையென உடன் சென்றது அவனுடைய வெற்றி வில். அப்பெயரை ஒரு மந்திரமெனக்கொண்டேன். பத்து நாட்களுக்கு மேல் அந்த ஒரு சொல்லையே திரும்பத் திரும்ப ஊழ்க நுண்சொல்லென உளம் நிறைத்துக்கொண்டிருந்ததை நினைவுகூர முடிகிறது. பின்னர் அங்கிருந்து இதன் கதையை விரித்தெடுக்கத் தொடங்கினேன்.
ஒருவீரனின் பயணம் என்பது உலக இலக்கியங்களில் ஒரு முதன்மையான கருப்பொருளாக இருந்துவருகிறது. ஒரு மாவீரன் தன் ஊரிலிருந்து எதையோ தேடி அல்லது வெறும் வெற்றி விழைவினால் அல்லது அரிதாக தன் ஊரிலிருந்து புறக்கணிக்கப்பட்டமையால் ஒரு நெடும்பயணத்தை மேற்கொள்கிறான். புதிய நிலங்களைக் கண்டடைகிறான். வெற்றிகளினூடாக தன்னை மேம்படுத்திக் கொள்கிறான். ஒவ்வொரு நிலமும் ஒரு கல்வியென ஒவ்வொரு வெற்றியும் அக்கல்வியின் நிறைவென அவனுக்கு அமைகிறது. யுலிஸஸின் பயணம் அத்தகையது.
நமது மரபிலேயே காவியங்களுக்கு அந்த இயல்பு உண்டு. சீவகசிந்தாமணி அதற்கு மிகச்சிறந்த உதாரணம். காண்டீபம் சீவகசிந்தாமணியுடன் பலவகையிலும் ஒப்பு நோக்கத்தக்கது. இதன் கட்டமைப்பே ஒரு வீரனின் பயணம் என்பதுதான். புறத்தே அவன் காணும் அந்த நிலம் அவன் வெல்லும் பெண்கள் அவன் நிலைகொள்ளும் அறிதல் தருணங்கள் அனைத்தும் அவனுக்குள் உள்ளவையே என்று எடுத்துக்கொண்டால் இது ஓர் ஊழ்கப்பயணமும் கூடத்தான்.
இந்நாவலில் அர்ஜுனன் நாக குலப்பெண்ணான உலூபியைச் சந்திக்கிறான். நாவலின் இறுதியில் கிருஷ்ணனின் தங்கையான சுபத்திரையை வென்றெடுக்கிறான். இவ்வொரு பெண்களிலும் வெளிப்படுவது அர்ஜுனனின் ஒவ்வொரு முகம். நாகர் உலகுக்குச் செல்லும் அர்ஜுனன் தன்னுள் உள்ள அடங்காத ஆழ்நிலைப்பயணம் ஒன்றை நிகழ்த்துகிறான். சித்ராங்கதையில் அவன் தன்னின் பாதியென என்றும் இருக்கும் பெண்ணைக் கண்டடைகிறான். சுபத்திரையில் முதல் முறையாக தன்னை வென்று அடிமைப்படுத்தும் ஒரு பெண்ணை அடைகிறான்.
வெண்முரசின் கதையோட்டத்தில் அர்ஜுனனால் ஒரு போதும் கடந்து செல்ல முடியாத பெண்ணாக இருப்பவள் சுபத்திரை மட்டுமே. ஏனெனில் அவள் கிருஷ்ணனின் ஒரு பகுதி. அர்ஜுனனில் இருந்து அபிமன்யுவை உருவாக்கிக்கொண்டு அவள் நெடுந்தொலைவுக்கு முன் சென்றாள். இந்த நாவலின் உட்சிக்கல்களை இன்று ஒரு வாசகனாக அமர்ந்து பார்க்கையில் ஆண் பெண் உறவுகளினூடாக ஒரு வாழ்க்கைக்கோலம் உருவாக்கப்பட்டிருப்பதைக் காண்கிறேன்.
அதற்கு இணையாகவே நிலச்சித்தரிப்புகள் வந்துள்ளன. நாகர் நிலமோ மணிப்பூரகத்தின் நிலமோ வெறும் நிலங்கள் அல்ல. புனைவிலக்கியத்தில் குறிப்பாக செவ்விலக்கியத்தில் நிலம் என்பது அகநிலமே தான். அகத்தை விரித்து விரித்து காட்சி வெளியாகக் காட்டுவதே நிலவிவரணைகளினூடாக செவ்விலக்கியத்தில் நிகழ்கிறது. அது சங்கப்பாடல்களாக இருந்தாலும் சரி கம்பராமாயணமக இருந்தாலும் சரி காளிதாசனின் படைப்புகளாக இருந்தாலும் சரி. இந்நாவல்களிலும் அதையே காண்கிறேன்.
அர்ஜுனனினூடாக நான் நிகழ்த்திய இப்பயணம் பலதளங்களில் என்னுடைய ஆழ்நிலையாகவும் அமைந்தது எனது கூர்முனைகள் பல தெளிந்து வந்தன. நான் கண்டடைந்தவை இந்நாவலில் உள்ளன. ஆனால் அது நானல்ல என்று எனக்குத் தெரியும் நான் ஏறிவந்த ஓர் ஊர்தி அந்த ஆளுமை. நான் அமர்ந்திருந்த ஓர் ஊழ்கக் குடில் அது. இன்று வெளிவந்து திரும்பிப்பார்க்கையில் நிறைவென உணர்கிறேன்.
இதன் முதற்பதிப்பை வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்திற்கும் இப்போது வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் என்னுடைய நன்றி.
ஜெ
10-1-2024
(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : [email protected]
Phone 9080283887)