எண்முக அருமணி

  1. மானஸாவின் காலடியிலிருந்து…
  2. மழைப்பாடகர்கள்
  3. எஞ்சும் நிலங்கள்
  4. தெய்வத்தளிர்
  5. பெண்பேராற்றல்
  6. முகிலில் எழுதல்!  

இந்திரநீலம் வெண்முரசில் கிருஷ்ணனின் கதையைச் சொல்லும் இரண்டாவது படைப்பு. அவ்வகையில் மகாபாரதத்திற்கு வெளியே பாகவதத்தில் வேரூன்றி நின்றிருக்கிறது இது. மகாபாரத கிருஷ்ணன் ஞானமும் உலகியல் நுண்ணறிவும் ஒருங்கே கொண்ட பேரரசன் தெய்வம் அல்ல. பிற்சேர்க்கைகள் வழியாகவே கிருஷ்ணனை தெய்வமென நிறுவும் பகுதிகள் மகாபாரதத்தில் ஊடு கலந்தன. கிருஷ்ணன் தெய்வமான பிறகு உருவான படைப்பு பாகவதம். ஆகவே தான் இந்தியாவில் பல வைணவ மரபுகளுக்கு பாகவதமே முதல் நூல், மகாபாரதம் அல்ல.

வெண்முரசு எழுதுகையில் கிருஷ்ணனை எங்கே வகுப்பது என்னும் சிக்கல் எனக்கு உருவாயிற்று. பல நவீன மகாபாரத மறுஆக்கங்களில் கிருஷ்ணனை வெறும் அரசனாக மட்டுமே சித்தரித்திருக்கிறார்கள். சில படைப்புகளில் கிருஷ்ணனின் ஞானத்தையும் கூட இல்லாமலாக்கி எளிய அரசியல் சூழ்ச்சியாளனாக சித்தரித்திருப்பதும் காணக்கிடைக்கிறது. உதாரணம் எம்.டி.வாசுதேவன் நாயரின் ’இரண்டாம் ஊழம்’ (தமிழில் இரண்டம் இடம் ஆ.மாதவன்).

நான் வெண்முரசை எளிய உலகியல் தளங்கள் நோக்கி கொண்டு செல்ல விரும்பவில்லை. அன்றாட உண்மையை பேரிலக்கியங்களில் தேடுவதும், எளிய உலகியல் அறிதல்களுக்காக புராணங்களுக்குச் செல்வதும் ஒருவகை வீண் முயற்சிகள் என்பது என் எண்ணம். ஆயிரம் ஆண்டுக்காலம் கடந்து வந்திருக்கும் ஓர் இலக்கியப்பிரதி, அதனாலேயே ஆயிரம் ஆண்டுக்காலம் மானுடர் திரட்டிய மெய்ஞானத்தின் தொகுப்பும்  மெய்ஞானத்தின் அடையாளமும் ஆகிறது. ஞானத்தின் பொருட்டன்றி செவ்விலக்கியங்களையோ புராணங்களையோ அணுகுவது அறிவின்மை.

 

நான் மகாபாரதத்தை மறுஆக்கம் செய்ய முயன்றது அதை இன்றைய அரசியல் சமூகவியல் சூழல்களுக்கு கொண்டு வந்து  இன்று செல்லுபடியாகக்கூடிய எளிய உலகியல் உண்மைகளை அதில் கண்டடைந்து நிறுவுவதற்காகவோ இன்று என்னிடம் உள்ள உலகியல் அறிதல்களைக் கொண்டு அப்பெரும் படைப்பை மதிப்பிடுவதற்காகவோ அல்ல. மாறாக இன்றும் என்னைத் தொடர்ந்து வரும் அழியா வினாக்களுக்கான விடைகள் இந்த பல்லாயிரம் ஆண்டுத் தொன்மை கொண்ட படைப்பில் உள்ளனவா என்றறிய. இன்று நான் என்னுள் ஆழ்ந்து செல்லும்போது என்னுடன் வரும் அடிப்படை படிமங்களை வரையறை செய்துகொள்ள, அப்படிமங்களினூடாக என்னை இன்னும் கூராக நான் அறிந்துகொள்ள. என் ஊழ்கத்திற்கு துணை கொள்ளவே மகாபாரதத்தைத் தெரிவு செய்தேன். ஏனெனில் நான் பிறந்தபோதே இது என்னுடன் உள்ளது, எனது மொழி போல, எனது கனவு போல.

அந்தக்கனவுப்பரப்பில் இருக்கும் ஒளிமிக்க முகம் கிருஷ்ணன். அதை இன்று என் முன் புழங்கும் மானுடர்களில் ஒருவனாகக் கொண்டு வந்து அமர்த்தினேன் எனில் எனக்களிக்கப்பட்ட வைரம் ஒன்றை கூழாங்கல்லாக மாற்றிய பெரும்பிழையைச் செய்தவனாவேன். ஆனால் இங்கு இன்றுள்ள கிருஷ்ணனின் வடிவை அப்படியே கொண்டு வந்து மகாபாரதத்தில் போடுவதென்பதும் பிழையே.  இது ஒருவகையில் எளிய உலகியல் பக்தியினால் உருவாக்கப்பட்ட முகம். அனைத்தும் அறிந்தவன், அனைத்தையும் இயற்றுபவன், அனைவருக்கும் அருள்பவன் எனும் ஒரு மாறா வடிவத்தை கிருஷ்ணனுக்கு நான் அளித்துவிட்டால் அதன்பிறகு நான் அறியவோ உணரவோ ஒன்றும் இல்லை. இதற்கு இரண்டுக்கும் நடுவில் ஒரு பாதை எனக்குத் திறக்கும் என்று எண்ணியிருந்தேன். வழக்கம் போல எழுதுவதினூடாக அது திறக்கட்டும் என்று கருதினேன். எழுதுவதற்கு முன்பு முடிவு செய்யவில்லை. அவ்வண்ணமே நிகழ்ந்தது.

நீலம் எழுதுகையில் கிருஷ்ணன் ஒரு தெய்வம் என்றும் மானுடன் என்றும் ஒரே சமயம் தோன்றினான். அந்நாவல் இருமுனைகளுக்கும் மிகச்சரியாக ஊசலாடிக்கொண்டு வந்து சென்று முடிந்தது. அது எனக்களித்த நிறைவு கிருஷ்ணனை நான் அணுகிவிட்டேன் என்று தெரிய வந்தது. நடராஜா குரு கிருஷ்ணனை ’The greatest enigma of our culture’ என்கிறார். நமது பண்பாட்டின் அந்த மாபெரும் மர்மத்தை அகலாமலும் அணுகாமலும் சொல்ல முடிந்த நாவல் நீலம். இந்திரநீலம் அதன் தொடர்ச்சி. இந்திரநீலத்தில் இருப்பதும் நீலத்தின் அதே உளநிலைதான் ஒருவகையில் அதே மொழிநடையும் கூட.

நீலத்தில் ஒரு கோபிகை ராதை அவளால் உருவாக்கப்பட்டவன் கிருஷ்ணன். இந்நாவலில் எட்டு மனைவிகள், அஷ்ட பாரியா என்று மரபு சொல்லும் பெண்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆளுமை கொண்டவர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில்  கிருஷ்ணனை அறிந்தவர்கள். அவ்வறிதலினூடாக வெளிப்படும் கிருஷ்ணன் இந்த நாவலில் தன்முழு உருவுடன் தோன்றுகிறான். சத்யபாமை அறிவதும் கண்ணனையே. முழுமையாகவே கோபிகையின் பக்தி மனநிலையில் நின்று காளிந்தி அறிவதும் அவனையே. எட்டு முகங்கள் கொண்ட ஒருவனாக இதில் கிருஷ்ணன் தோன்றுகிறான். தெய்வமெனில் தெய்வம், மானுடன் எனில் மானுடன், ஞானி எனில் அவ்வாறே. அரசனெனிலும் பிழையல்ல.

வீரன், அழகன், அறிஞன், யோகி இவ்வண்ணம் எத்தனை சொற்களிட்டு சொல்லியும் சொல்லில் சிக்காது எஞ்சும் ஒருவன் அச்சித்திரத்தை அளிப்பதனாலேயே வெண்முரசு தொடரின் முதன்மையான நாவல்களில் ஒன்றாக இது மாறுகிறது. இந்நாவலின் முதல் பதிப்பை வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்திற்கும் இப்போது மறுபதிப்பை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

ஜெ

10-01-2024

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : [email protected] 
Phone 9080283887) 

மழைப்பாடகர்கள்

மானஸாவின் காலடியிலிருந்து…

எஞ்சும் நிலங்கள்

தெய்வத்தளிர்

பெண்பேராற்றல்

முந்தைய கட்டுரைஇரும்பிடர்த்தலையார்
அடுத்த கட்டுரைHORSEWHIP YOUR BRAIN!