முடிவிலி விரியும் மலர்

  1. மானஸாவின் காலடியிலிருந்து…
  2. மழைப்பாடகர்கள்
  3. எஞ்சும் நிலங்கள்
  4. தெய்வத்தளிர்
  5. பெண்பேராற்றல்
  6. முகிலில் எழுதல்!
  7. எண்முக அருமணி
  8. வில்துணை வழிகள்
  9. அளித்துத் தீராதவன்
  10. களம் அமைதல்

  11. படைக்கலமேந்திய மெய்ஞானம்
  12. காட்டின் இருள்

வெண்முரசு நாவல்களில் மாமலர் ஒப்பு நோக்க எனக்கு இன்னும் அணுக்கமானது. ஏனெனில் நான் பெண்மலையாளம் என்று அழைக்கப்பட்ட கேரளத்தின் ஒருபகுதியான குமரிமாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவன். ஆற்றல் மிக்க அன்னையரின் மைந்தனாக என்னை எப்போதும் உணர்ந்து வந்தவன். வெண்முரசு நிறைவுற்று மாமலரின் மறுபதிப்புகள் வந்தபின் விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் இந்தப் புதிய பதிப்பிற்கான முன்னுரையை எழுதுகையில் மீண்டும் என் அன்னையர் முகங்களை நினைவு கூர்கிறேன்.

சில நாட்களுக்கு முன் என் மகன் திருமண அழைப்பிதழை அளிப்பதற்காக மீண்டும் என் குடும்ப உறுப்பினர்களின் இல்லங்களுக்குச் சென்றேன். 99 வயதான எனது பெரியம்மா தாட்சாயணி அம்மாவை, 90ஐ நெருங்கும் எனது பெரிய மாமியை சந்தித்தேன். அவர்களிடமிருந்த நிமிர்வும் பேரியல்பும் என்னை ஆழ்ந்த நிறைவொன்றுக்கு செலுத்தின. தங்களுக்கென உரிமையாக நிலமும் பொருளும் இருந்தமை அவர்களின் அந்த நிமிர்வுக்கு முதன்மைக் காரணம் என்று அருண்மொழியிடம் சொன்னேன். என்றும் எந்நிலையிலும் அவர்கள் இன்னொருவரிடம் கேட்டு எதையும் பெற்றுக்கொள்ளும் வாழ்க்கையை வாழவில்லை. அந்த ஒரு காரணத்தினாலேயே தங்கள்  ஆளுமையை துலக்கிக்கொள்ள அவர்களுக்கு வாய்த்தது. தங்களுடைய வாழ்க்கையை வாழ்பவரிடம் எளிய கசப்புகளும் காழ்ப்புகளும் வஞ்சங்களும் பெருகுவதில்லை. தங்கள் நிறைவு நோக்கிய பயணத்தில் அவர்கள் சிறுமைகளை வென்று கடக்க முடியும் எனது பெரியம்மா நூறு ஆண்டு அகவையை நெருங்கும் இக்காலகட்டத்தில் மகிழ்ந்து சிரித்து தனது நான்காம் தலைமுறை குழந்தைகளை ஒவ்வொருவராக நினைவு கூர்வதைப் பார்த்தபோது மீண்டும் சொல்லிக்கொண்டேன், பேரன்னையரின் நிலம்.

முன்பு கேரளத்தில் எவரும் தங்களை தந்தையர் பெயர் சொல்லி அறிமுகம் செய்து கொள்வதில்லை. தாய்வழி என்று தான் குடும்பத்திற்கு பெயராக சொல்வார்கள். ’நாங்கள் நான்கு அன்னையருக்கு பதினெட்டு பிள்ளைகள்’ என்றுதான் தங்கள் குடும்பத்தை அறிமுகம் செய்து கொள்வார்கள். எந்த அன்னையருக்கு எவர் பிறந்தோம் என்பது ஒரு போதும் வெளிப்படுத்தப்பட மாட்டாது. அன்னையர் திகழும் ஒரு இல்லத்தில் பிறந்தோம் என்பதே அடையாளமாக இருந்தது. இன்று எண்ணுகையில் தந்தை வழி சமூகங்களின் வன்முறை ஒடுக்குமுறை இல்லாத ஒன்றாக பழைய கேரள குடும்பங்கள் இருந்தன என்று தோன்றுகிறது. ’என் அக்கச்சி எனக்கு ஒரு வாய் சோறு தராமல் இருக்கமாட்டாள்’ என்று பூசல்களில்  கூச்சலிடும் பலரை நான் கேட்டிருக்கிறேன்.

திரும்பிப்போக அன்னையர் நிறைந்த ஓர் இல்லம் இருக்கிறது என்ற எண்ணம் அளித்த விடுதலையை ஒரு காலகட்டத்தில் மலையாளிகள் கொண்டாடியிருக்கிறார்கள். எங்கு வேண்டுமானாலும் கிளம்பிச் செல்லலாம்; எதை வேண்டுமானாலும் செய்யலாம். அனைத்தையும் இழந்தாலும் இழக்கப்பட முடியாத அன்னையர் மடிகள் சில இருக்கின்றன என்ற உறுதிப்பாடு அவர்களை உலகமெங்கும் செல்ல வைத்தது. விரியவும் பரவவும் வெல்லவும் நிலைகொள்ளவும் செய்தது.

மாமலர் அன்னையரின் கதை. பீமன் கல்யாண சௌகந்திக மலர் தேடி கிளம்பிச்செல்லும் தருணத்தில் தொடங்கி அம்மலரைக் கண்டடைந்து மீளும் இடத்தில் முடிகிறது. அந்தக்கட்டமைப்புக்கும் அது மகாபாரதத்தில் உள்ள அன்னையர் அனைவரின் கதையையும் இணைத்து செல்கிறது. திரௌபதி அறிந்த அந்த நறுமணம் விண்ணிலிருந்து வந்தது, பெண் மட்டுமே உணரத்தக்கது. காதலின் மணமென்றோ கனிந்த தாய்மையின் மணமென்றோ அதை வரையறுக்கலாம். அதற்கப்பால் இங்கு பெண்மையெனத் திகழும் ஒன்றின் மணமெனலாம். மகாபாரதத்தில் அர்ஜுனன் பெருங்காதலன். கிருஷ்ணன் இறைக்கூறு பொருந்திய காதலன். எனில் அந்த மணத்தை அறிந்த மெய்யான காதலன் பீமனே. அவன் மட்டுமே அந்த மணத்தைத் தேடிச் செல்ல முடியும். மகாபாரத்தில் ஒரு பிற்சேர்க்கை என்று கருதத்தக்க இந்த ஒரு சிறிய கதை கொண்டுள்ள பொருள் செறிவு எழுத எழுத விரிந்து வந்தது.

கல்யாண சௌகந்திகம் என்ற சொல்லுக்கு மங்கல நறுமணம் என்று பொருள். மங்கல நறுமணம் வீசும் ஒரு மலர். அதை தன் காதலியின் குழலில் சூட்டும்பொருட்டு கிளம்பிச்செல்லும் பீமன் பெண்மணம் அறியாத பிரம்மசாரியாகிய அனுமனால் தடுக்கப்பட்டு பின் வழிநடத்தப்படுகிறான். அதுவே ஓர் அழகிய முரண் என்று தோன்றியது. அக்காதலை மெய்மையின் பொருட்டோ  மீட்பின் பொருட்டோ கூட விட்டுக்கொடுக்காத பேராண்மை பீமனிடமே இருந்தது. தன்னுடலில் தான் நிறைந்தவன் என்று பீமனை நான் வரையறுப்பேன்; உடலுக்கு அப்பால் ஒன்றைத் தேடி அவன் சென்று கொண்டிருக்கவில்லை, அர்ஜுனனை போலவோ யுதிஷ்டிரனைப் போலவோ. இங்கு பருப்பொருளில் புற உலகில் நிகழாத ஒன்றின்பொருட்டு தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவில்லை. எது அளிக்கப்பட்டதோ அந்த்கக்களத்தில் முற்றிலும் திகழ்ந்தவன். அதுவே பெருங்காதலன் ஆவதற்கான முதன்மைத் தகுதி என்று தோன்றுகிறது. அப்பால் அப்பால் என்று அக்கரை பசுமை தேடிச்செல்லும் புகையும் தலை கொண்ட ஆண்கள் மெய்க்காதலை உணர முடியாது.

மாமலரை எழுதுவதற்கு முன்பு அதன் மொழியும் வடிவமும் திரண்டு வருவதற்கு உரிய அகத்தத்தளிப்பின்போது நானும் என் நண்பர் கிருஷ்ணனும் பிற நண்பர்களுடன் ஒரு நீண்ட பயணமாக கர்நாடக மாநிலத்தினூடாக மூகாம்பிகை ஆலயத்திற்கு சென்றோம். மழை வழிந்த ஓடையே பாதை என்றாகிய சுழல் வழியினூடாக கோகர்ணம் வரைக்கும் சென்று ஓர் இரவு அங்கு தங்கினோம். அந்தப்பயணத்தில் கன்யாகுமரி முதல் கோகர்ணம் வரை விரிந்திருக்கும் பெண்மலையாளம் என்னும் சித்திரம் எனக்கு வந்தது. அதுவே மாமலர் என்ற தலைப்பாக திரண்டது. கல்யாண சௌகந்திகம் என்பதை மங்கல மலர் என்றல்ல மாமலர் என்று நான் புரிந்துகொண்ட இடத்தில் இந்நாவலின் கருப்பொருள் திரண்டிருக்கிறது.

வெண்முரசில் இரு நாவல்களில் அர்ஜுனன் கதை நாயகன். இந்நாவலில் மட்டுமே பீமன் கதை நாயகன். கேரளத்தின் புகழ் பெற்ற கதகளி கல்யாண சௌகந்திகம். பீமன் செய்த மலர் தேடும் பயணத்தில் அனுமனை சந்தித்து வழி அறிந்து மேற்கொண்டு செல்வது அக்கதை. அதில் வரும் பீமன் என்றும் என் உளம் கவர்ந்தவனாக இருந்தான். காதலன் மட்டுமன்றி ஒரு பேருடல் கொண்ட சிறுவனாகவும் அந்தக் கதகளி பீமனை சித்தரித்தது. இந்நாவலிலும் அவ்வாறே பீமன் சித்தரிக்கப்படுகிறான். இந்நாவலை முதலில் வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்திற்கும் மறுபதிப்பை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் நன்றி.

பெருந்தவத்தால் அறிந்த உண்மையை பேருடல் சிறுவன் ஒருவன் சென்று தொடும் தருணம் கொண்ட இந்த நாவல் இனிமேலும் எனக்கு இனிதாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.

ஜெ

17-02-2024

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : [email protected] 

Phone 9080283887)

பெருங்காதலின்பயணம் – மாமலர்

‘மாமலர்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்

மாமலர்-நடைபிணம்

மாமலர்

முந்தைய கட்டுரை படிமங்களை ஏன் பயில வேண்டும்?- ஏ.வி.மணிகண்டன்
அடுத்த கட்டுரைபறவை பார்த்தல் பயிற்சி