2009ல் நான் வகுப்புகள் எடுக்க தொடங்கிய காலகட்டத்தில், ஹூமன் அனாடமி, பிஸியாலொஜி, ந்யூரோ ஸ்ட்ரெக்சர், போன்ற வார்தைகளை உபயோகிப்பதை ஒரு பெருமையாகவும், உயர்வாகவும் கருதிக்கொண்டிருந்தேன். 2009ல் க்ரியா யோகம் எனும் உயர்கல்வி கற்க பிஹார் சென்ற போது, நவீன மருத்துவ அறிவியலை முழுமையாக கற்ற, மருத்துவர்களும், அங்கிருந்து யோக ஆசிரியர்களாக ஆனவர்களும், எங்களுக்கு பாடம் எடுக்க வந்தனர். அவர்கள் மைசூர் யோக மரபையும், கைவல்ய தாமம் எனும் மரபையும் சேர்ந்த மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள்.
அந்த வருடம் தான் முதல்முறையாக, தரமான மருத்துவக்கல்வி அறிமுகம் கிடைக்கப்பெற்றேன். அதுவரை எவ்வளவு மேம்போக்காக மருத்துவ கலைச்சொற்களை உபயோகித்துக்கொண்டிருக்கிறோம் என தோன்றியது.அதன் பின் 3வருடங்கள் ஆயுர்வேத மற்றும் நவீன மருத்து கல்வி சார்ந்த அனைத்து வகுப்புகளிலும் கலந்து கொண்டேன்.
ஒருமுறை , 1மாத பயிற்சி ஒன்றுக்கு செல்ல வேண்டி இருந்தது. நான் வேலை பார்த்த வங்கியில் லீவு தர மறுத்தனர். வேலையை விட்டுவிட்டு கிளம்பி பிஹார் சென்று விட்டேன். (பாலகுமாரன் சார் ஏற்கனவே வேலையை விடச்சொல்லி இருந்தார்).கடந்த 16வருடங்களை திரும்பி பார்க்கையில், நிறைவான கல்விக்காக எதையும் செய்யலாம் என தோன்றுகிறது.
அவ்வகையில் ,போன மாதம் “TEACHER TRAINING COURSE ” ஒன்றை நடத்தி முடித்தேன் அது 18மாத வகுப்பு. அதில் ஆயுர்வேதமும், நவீன மருத்துவ அறிவியலும் இருக்க வேண்டும் என முடிவு செய்தேன், அதன்படி நமக்கு தெரிந்த நல்லாசிரியர்களான சுனீல் கிருஷ்ணனிடமும் மரு.மாரிராஜ் அவர்களிடமும் கேட்டுக்கொண்டேன்.
அதில் மரு.மாரிராஜ் அவர்களின் வகுப்புகள் ஒவ்வொன்றும் தனித்துவமாகவும், சற்றும் தளர்ர்திக்கொள்ளாத விடாபிடியான கறார் தன்மையுடனும், முக்கியமான எதையும் விட்டுவிடக்கூடாது என்கிற அக்கறையுடனும் அமைந்தது, வகுப்பில் கலந்துகொண்ட 12மாணவர்களுக்கும் நல்லூழ். அப்படியான ஆசிரியர் நமக்கு இருக்கையில், வெள்ளிமலை போன்ற இடத்திலும் இது நிகழவேண்டும் என விழைகிறேன்.
யோக ஆசிரியர்களான எங்களுக்கு உடலை அறிந்து கொள்தல் என்பது உள்ளத்தை அறிந்து கொள்வதற்கும், சிக்கலை தீர்ப்பதற்குமான பாதை.இதுவே நமது நண்பர்கள் இந்த கல்வியை தங்களை பற்றி இன்னும் துல்லியமாக தெரிந்து கொள்ளவும் ,கற்கலாம்.
அது அமைந்தால் மகிழ்வேன்.
இப்படிக்கு
செளந்தர்.G