தொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு -4

முந்தைய தொடர்ச்சி தொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு -3

ஏதேனும் வடிவில் எல்லா புனைவிலும் வரலாறு உள்ளது. எல்லா வரலாற்றிலும் புனைவும் உள்ளது. புனைவிலுள்ள எந்த வரலாறும் சரியான பொருளில் வரலாறும் அல்ல. வரலாற்றிலுள்ள புனைவு வரலாறேயாகும்.

வரலாற்றுப் புனைவு என நாம் எப்போதுமே கொஞ்சம் பழைய வரலாற்றைச் சொல்லும் கதைகளையே சொல்கிறோம். அதாவது குறைந்தபட்ச ஆதாரங்கள் வழியாக நாம் உருவாக்கிக் கொண்டிருக்கும் வரலாற்றைக் கொண்டு கற்பனையை விரித்தெடுத்தால் அதை வரலாற்றுப் புனைவு என்கிறோம். சமகாலத்து வரலாற்றை புனைவாக்கும்போது அதிலுள்ள வரலாற்றை நாம் காண்பதில்லை, அதை ‘யதார்த்தம்’ என்று நினைத்துக் கொள்கிறோம்.

சமகாலம் என்பதற்கு நாம் ஒரு எல்லையை வரைந்து வைத்திருக்கிறோம். நம்மைப்பொறுத்தவரை சுதந்திரப்போருக்கு முந்தையகாலகட்டம் வரலாற்றுக்காலம். அதற்குப் பின் சமகாலம். ஆகவேதான் நமக்கு சுதந்திரப்போராட்டப் பின்னணி கொண்ட சுதந்திரதாரம் (சி.சு.செல்லப்பா) அன்பே ஆரமுதே (தி.ஜானகிராமன்) ஆகிய நாவல்கள் வரலாற்றுநாவல்களாகத் தெரியவில்லை. அதற்கு கொஞ்சம் பழைய வரலாற்றைச் சொல்லும் சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம் வரலாற்றுப்புனைவாகத் தெரிகிறது.

என்னுடைய எல்லா நாவல்களிலும் வரலாறும் தத்துவமும் இடம்பெற்றுள்ளன. என் கேள்விகளை வரலாற்றையும் தத்துவத்தையும் கருத்தில்கொண்டு விரித்தெடுக்க நான் புனைவுவெளியைப் பயன்படுத்துகிறேன். ஆகவே வெள்ளை யானை மட்டுமல்ல  அந்த முகில் இந்த முகில் கூட ஒரு வரலாற்று நாவல்தான். அந்த முகில் இந்த முகிலில் உள்ளது தென்னிந்திய சினிமாவின் ஒரு வரலாற்றுப் புலம்.

என் திருவிதாங்கூர் வரலாற்றுக் கதைகளில் இளமையிலேயே நான் கேட்டவையும், பின்னர் திவான் வேலுப்பிள்ளை முதல் பி.சங்குண்ணி மேனன் வரை திருவிதாங்கூர் வரலாற்றாசிரியர்கள் எழுதி நான் வாசித்தவையுமான வரலாற்றுநிகழ்வுகளை எடுத்துக் கொண்டு அவற்றினூடாக என் கேள்விகளை முன்னெடுக்கிறேன்.

(மானு பிள்ளையின் திருவிதாங்கூர் வரலாற்று நூல் ivory Throne நல்ல நூல்தான். பொதுவாசிப்புக்கு அது சிறந்தது. ஆனால் வரலாற்றின் மொழியில் அமைந்த முழுமையான நல்ல நூல்கள் சதஸ்யதிலகன் திவான்  வேலுப்பிள்ளையின் The Trivancore State Manual – Veluppillai மற்றும் வி.நாகம் ஐயாவின் Trivancore State Manual V.Nagam Ayya ஆகியவைதான். ஏனென்றால் அவை வரலாற்றை நிலவியல், பொருளியல் ஆகிய பல செய்திகளுடன் இணைத்து அளிக்கின்றன. சங்குண்ணி மேனனின் திருவிதாங்கூர் வரலாறும் நல்ல நூல்)

இளமையிலேயே நான் கௌரி பார்வதிபாய், கௌரி லட்சுமிபாய், வேலுத்தம்பி தளவாய் போன்றவர்களின் வரலாற்றை அறிந்திருக்கிறேன். அவற்றின்மேல் ஏற்றப்பட்ட விழுமியங்கள் என்னை வந்தடைந்துள்ளன. உமையம்மை ராணி பற்றி உள்ளூர் பரமேஸ்வர ஐயர் உமாகேரளம் என்னும் பெருங்காவியத்தையே ஏற்றியுள்ளார். மார்த்தாண்ட வர்மா, தர்மராஜா ஆகியோரைப் பற்றி சி.வி.ராமன்பிள்ளையின் புகழ்பெற்ற நாவல்கள் உள்ளன.

நான் என் விழுமியங்களை மறுபரிசீலனை செய்ய அந்த வரலாற்றினூடாகச் செல்கிறேன். உதாரணமாக, திவான் வேலுத்தம்பி கேரளத்தின் வீரநாயகன். எங்கும் அவர் சிலைகள் எழுந்து நிற்கின்றன. ஆனால் அவர் கேரளத்திற்கு என்ன செய்தா? ஒன்றுமில்லை. வெள்ளையர் ஆதரவுடன் திவான் ஆனார், கப்பம் கட்டினார், அவர்களுடன் முரண்பட்டு போராடி கொல்லப்பட்டார். அந்தப் போராட்டம் பற்றி வரலாறு சொல்வது அவருடைய பரிதாபகரமான தோல்வியைப் பற்றித்தான். முப்பதாயிரம்பேர் கொண்ட படையுடன் சென்று தோற்றவர் வீரர் என்றால் அவரை வென்ற கர்னல் சேமியர்ஸ் யார்?

வீரவழிபாடு நமக்கு சுதந்திரப்போராட்டக் காலத்தில் தேவைப்பட்டது. நாம் வீரநாயகர்களை உருவாக்கி கொண்டோம். ஆனால் ஜனநாயகத்தில் நாம் கொண்டாடவேண்டியவர்கள் மக்கள்நலத்திட்டங்களை முன்னெடுத்த ஆட்சியாளர்கள்தான். கேரளத்தில் அரசிகளே அதில் பெரும்பங்காற்றியவர்கள். தமிழகத்திலும் ராணி மங்கம்மாள் போல அரசிகளே நல்ல ஆட்சியாளர்கள். அவர்களை முன்வைக்கவேண்டியதுண்டு அல்லவா?

என் பார்வையில் எந்த ஆட்சியாளர் மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை அளிக்கிறாரோ அவரே நல்ல ஆட்சியாளர். பெரும்பாலான ஆட்சியாளர்கள் அவர்களின் அகங்காரத்துக்காகத்தான் போரிட்டார்கள். புதின் தேசியநாயகனாக அந்த ஊர் வரலாற்றில் இடம்பெறுவார். அவர் அம்மக்களை அழிக்கும் நோய் என்றே நான் நினைக்கிறேன். ஔரங்கசீபிடம் சமரசம் செய்துகொண்ட மங்கம்மா இல்லையேல் தென்னிந்தியா அழிந்திருக்கும்.

வரலாறு ஒரு குறிப்பிட்ட நோக்கில், குறிப்பிட்ட மையத்தை நோக்கிச் செல்வதாகவே எப்போதும் எழுதப்படுகிறது. பிறிதொரு நோக்கில் அதை எழுதவேண்டும் என்றால் புனைவுதான் அதற்கான வழி. முழுக்கவே புனைவாக எழுதலாமா என்றால் எழுதலாம்தான், ஆனால் அதற்கு வரலாற்றின்மீதான விமர்சனம் என்னும் தகுதி அமையாது. வெறும் கற்பனையாக நிலைகொள்ளும். அப்படிப்பட்ட முயற்சிகளும் உலக இலக்கியத்திலும், சினிமாவிலும் உள்ளன. ஓர் உதாரணம் Inglourious Basterds

நான் என் கதைகள் ஒரு வரலாற்று விமர்சனத்தன்மை கொண்டிருக்கவேண்டும் என நினைக்கிறேன். வரலாற்றை இப்படிப் பார்க்கலாமே என அவை சொல்லவேண்டும். டால்ஸ்டாய் முன்வைக்கும் நெப்போலியன் வீரநாயகன் அல்ல, விதியில் அடித்துச்செல்லப்படும் ஒரு துரும்புதான். அது வரலாற்றின்மீதான இன்னொரு பார்வை. அப்பார்வை வரலாற்றைப் பற்றிய உலகின் பார்வையையே எப்படி மாற்றியது என்பது நாமறிந்ததே.

வரலாற்றில் புனைவெழுத்தாளன் ஊடுருவுவது விழுமியங்களை மறுபரிசீலனை செய்யவும் எக்காலத்திற்கும் உரிய தரிசனங்களை நிறுவவும்தான். நேற்றைய அரசர்களின் வரலாற்றில் எளிய சேடிகள், வீரர்கள் சொல்லப்படாதவர்கள். ஓர் எழுத்தாளன் அவர்களின் வரலாற்றை கற்பனையால் வரலாற்றின் இடுக்குகளை பயன்படுத்தி எழுதி நிரப்பினால் அவன் செய்வது ஓர் விழுமிய மாற்றத்தை. அவன் சாமானியர்களே வரலாறு என்னும் விழுமியத்தை உள்ளே கொண்டுசெல்கிறான்

ஒரு வாழ்க்கைத் தரிசனம் ஆயிரமாண்டுகளில் என்னவாக நிலைகொள்கிறது என்று பார்க்கவும் வரலாற்றை எழுதலாம். அகிம்சை என்னும் தரிசனத்தை முன்வைக்க ஆய் அண்டிரன் காலகட்டத்து அஞ்சினான்புகலிடம் ஒன்றைப்பற்றி நான் ஒரு நாவல் எழுதினால் அதன் நோக்கம் அதுதான்.

இதற்கு குறைந்தபட்ச வரலாற்றுச் சான்று போதும். மாற்றுநோக்கை முன்வைக்க தேவையான அடிப்படை தரவுகள் மட்டும் போதும். ஐயம்திரிபற நிரூபிக்கவேண்டிய தேவை இல்லை – வரலாற்றிலேயே கூட எந்த பார்வையும் அப்படி நிரூபிக்கப்பட்டது அல்ல. உதாரணமாக, ஆய் அண்டிரன் காலகட்டத்து அஞ்சினான் புகலிடம் பற்றி பத்மநாபபுரத்தில் ஒரு நடுகல் சான்று உள்ளது. அதை கொண்டு ஒரு கதை எழுதிவிடலாம்.

ஆயிரம் ஊற்றுகள் கதையில் வரும் நிகழ்வு தொன்மமாக பேசப்பட்டு வரலாற்றில் உள்ளது. உள்ளூர் பரமேஸ்வர பிள்ளை அதை காவியமாக்கினார். பலர் பதிவுசெய்துள்ளனர். மானு பிள்ளை அது கற்பனை, அதற்கு ஆதாரமில்லை என்கிறார். தல்ஸ்தோய் எழுதிய நெப்போலியனின் சித்திரத்துக்கு வரலாற்றுச் சான்றில்லை என்றும் எழுதப்பட்டுள்ளது. அது புனைவை மறுப்பதில்லை. ஓர் ஊகத்தை விரிப்பதே புனைவு. அதற்கான அடிப்படையை மட்டுமே அது வரலாற்றில் இருந்து எடுத்துக் கொள்கிறது

 

ஜெ

முந்தைய கட்டுரைமா.ஆண்டோ பீட்டர்
அடுத்த கட்டுரைஇன்று கோவையில் பிரம்மானந்தர் சந்திப்பு