கால்வின், கடிதங்கள்

கால்வின் துளை

படகில் ஒரு குரங்கு

புலித்துணை

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

எனது ஆங்கில ஆதர்சமான கால்வின் ஹோப்ஸ் பற்றி நீங்கள் எழுதி இருந்தது மிகுந்த சந்தோஷத்தை அளித்தது.  நீங்கள் ஏன் அதைப் பற்றியோ அல்லது பீநட்ஸ் கார்ட்டூன் பற்றியோ எழுதவில்லை என்று வெகு நாட்கள் சிந்தித்து இருக்கிறேன்.

இவற்றையெல்லாம் பள்ளிப் பாட வகுப்பில் கட்டாயமாக சேர்க்க வேண்டும் என்று விரும்பினேன்.  ஒவ்வொரு முறையும் அதை திரும்ப படிக்கும் பொழுது விதவிதமான கற்பனைகள் எழும்.

விஷ்ணுபுரம் நாவலை வாங்கிய பொழுது தான் கேல்வின் அண்ட் ஹோப்ஸ்  முழு தொகுப்பையும் நான் வாங்கினேன்.  அஜிதரின் தத்துவ விசாரணைகள் என் தலைக்கு மேலே சென்று கொண்டிருந்த வேளையில் கால்வின் வந்து தான் கை கொடுத்தான்.  பில் வாட்டர் சேன் ஒருமுறை அவர்  கால்வின்/ஹோப்ஸ் பெயர் காரணங்களை கூறிய பொழுதே, வெஸ்டர்ன் பிலாசபி என்று ஒன்று இருப்பதை அறிந்து கொண்டேன்.

கால்வின் தன்னை ஒரு ஸ்பேஸ்மெனாக கற்பனை செய்து கொள்ளும் காட்சிகள் மிகவும் அபாரமானவை. இவற்றின் முன்னோடியான சார்லஸ்  ஸ்சில்ஸ் எழுதிய பீனட்  கார்ட்டூனில் ஒரு மெல்லிய மென் சோகம் இழையோடும். ஆனால் கால்வினில்  அது அறவே இல்லை என்று தோன்றுகிறது.   போகன் சங்கரின் நான்/பாருகுட்டி பதிவுகள்  இவ்வகையைச் சார்ந்தவையோ என்று தோன்றும்.

கால்வின் தந்தை மாதிரியே தான் என் தந்தையும் அவர் ஒரு உயர்நிலைப்பள்ளி  கணக்கு ஆசிரியர். அபாரமான நகைச்சுவை உணர்வு கொண்டவர். என் சிறு வயதில் சிறிய ட்ரான்சிஸ்டரை பார்த்து எப்படி அது பாடுகிறது என்று கேட்டேன்.  என் தந்தை அதற்குள் ஒரு நாய் இருக்கிறது அந்த நாய் தான் எல்லா பாட்டும் பாடுது என்று சொல்லி விட்டார்.  நான் பார்த்த வரையில் நாய் லொள்ளு என்றுதானே சொல்கிறது இதில் மட்டும் எப்படி பாட்டு பாடுது அப்படின்னு கேட்டதுக்கு இதெல்லாம் ஸ்பெஷல் நாய்தான்  இப்படித்தான் பாடும் என்று சொல்லி HMV ரெக்கார்ட்ஸ்  லேபிளையும் காண்பித்தார். அந்த மர்ஃபி ட்ரான்சிஸ்டர் ஒரு தோல் உறை இருந்தது அது சில இடங்களில் பிரிந்து நூல் நூலா தொங்கிட்டு இருந்ததை பார்த்து அதுதான் நாயின் வால் என்று ரொம்ப நாள் நினைத்துக் கொண்டிருந்தேன். ‘ மியாவ் மியாவ் பூனைக்குட்டி இன்று ராஜேஸ்வரி அம்மா பாடும் பாடல் ( படம் : குமுதம்) அப்பொழுது அடிக்கடி வானொலியில் வரும். பூனைக்கும் நாய்க்கும்தான் சண்டை ஆயிற்றே, அப்புறம் எப்படி ஒரு நாய், பூனை மாதிரி கத்தும்? மனுஷங்க மாதிரி கத்துறது ஓகே பூனை மாதிரி எப்படி கத்துது?  எங்கப்பா  அதற்கும் பதில் கொடுத்தார் அதெல்லாம் கந்தர்வ நாய் அதனால  பூனையும் பிரண்டு எலியும் பிரண்டு தான் அதுக்கு, அதனால எல்லாரும் மாதிரியும் பேசும்/பாடும்.  நான் ரொம்ப நாட்களாக நாய் சாப்பிடாம அதுக்குள்ளே உட்கார்ந்து இருக்கே என்று ஒரு கிண்ணத்தில் சோறு வைத்த பொழுது தான் வீட்டில்/தெருவில் மற்றவர்களுக்கு என்னவென்று புரிந்தது.

கால்வனின் அப்பாவின் பதில்கள் எல்லாமே இந்த வகை தான். அதற்கு மிக அழகாக தலைப்பிட்டு இருந்தீர்கள் “தந்தையின் ஞானப் பகிர்வு”

தாங்கள் பீனட்சை/ சார்லஸ் ஸ்சுல்ட்ஸ் பற்றி கருத்துக்களையும் எழுதினால் நான் பிறவி பயனடைந்ததாகவே கருதுவேன்

அன்புடன்,

மீனாட்சி

*

வணக்கம் ஜெ,

இன்று உங்கள் ‘புலித்துணை’ கட்டுரை படித்தேன். எனக்கு ‘கால்வின் அண்ட் ஹோப்ஸ்’ உயர்நிலை கல்வி பயிலும் காலத்தில் அறிமுகம் ஆனது. நண்பர்களின் comic strip எனப்படும் சித்திரக்கதைபட்டை புத்தங்கங்களை வாங்கி படித்தேன். பின்பு, தி ஹிந்து நாளிதழில் தினம் வரும் கால்வின் அண்ட் ஹோப்ஸ் சித்திரக்கதை பட்டையை நான் வெட்டி சேகரித்து வந்தேன். அவ்வளவு இஷ்டம். பெரும்பாலும் நகைச்சுவை ரசம் இருந்தாலும் அவ்வப்போது கால்வின் தன் கேள்விகளாலும் கூற்றுகளாலும் சிந்திக்க வைக்கும் ஒரு சில தத்துவ அவதானிப்புகளை முன்வைப்பான். அதனுடன் அவனின் வயது மீறிய மொழி வளம் அவனை (தன் பெயருக்கு ஏற்றாற்போல) ஒரு குழந்தை வடிவில் தத்துவ மேதை என்றே தோன்றவைக்கிறது. அது சற்றே புன்னகைக்கவும் வைக்கிறது. அவனது கற்பனையும் மேதாவிலாசமும் ஒரு பக்கம் இருந்தாலும் அதே அளவில், சூசியை பனிப்பந்து கொண்டு எரிகையில் slapstick-தனத்தை வெளிப்படுத்துகிறான். இந்த பயலை எதில் சேர்ப்பதென்றே தெரியவில்லை! கால்வின் என்னும் கதாபாத்திரத்தின் அழகு அதுவே.

அன்புள்ள,

ராம்பிரசாந்த்

முந்தைய கட்டுரைபுதுவை வெண்முரசுக்கூடுகை 68
அடுத்த கட்டுரைவாழ்வும் புனைவும்- கடிதம்