ரயிலில் இரண்டே இரண்டுபேருக்கான முதல்வகுப்புப் பெட்டியில் எதிரில் ஒரு கனிந்த மூதாட்டி. வெள்ளைவெளேர் என நிறம். மருதாணியிட்ட தலைமுடி. அசப்பில் வெள்ளைக்காரியோ என எண்ணவைக்கும் தோற்றம். கையில் ஒரு ஜபமாலை. கண்களுக்கு மையிட்டிருந்தாரா? இருக்கலாம். உதடுகளில் லிப்ஸ்டிக் இல்லை, ஏனென்றால் உதடுகளே இல்லை. ஒரு ரத்தக்கிழிசல் போல வாய். பச்சை கலந்த மங்கலான கூழாங்கல் போன்ற கண்கள்.
தளர்ந்த கண்களுடன் என்னை ஐயத்துடன் பார்த்தபின் ஜபம் செய்யலானார். நான் பெட்டியை வைத்தபின் கவனித்தேன். அவர் ஜெபம் செய்யவில்லை. விரல்களில் ஜெபமாலை இருந்ததே ஒழிய மணிகள் உருளவில்லை. ஒரே மணியை வருடிக்கொண்டிருந்தார். கண்கள் என்னை வேவுபார்த்தன. நான் பார்த்ததும் திரும்பிக்கொண்டார்.
நான் “குடீவனிங்” என்றேன்
“கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று கண்ணாடிச் சன்னலை நோக்கிச் சொன்னார்.
என்னை மதம் மாற்ற முயலும் ரகம் என முடிவு செய்தேன். எப்படி தடையரண்களை உருவாக்குவது என யோசித்தேன். வழக்கமாக நான் எதிர்மதமாற்றப் பணிகளில் ஈடுபடுவதாக நடிப்பதே உடனடி பலன் அளிப்பது.
சொற்றொடர்களைக் கோத்துக் கொண்டேன். “எப்பவுமே காளி உக்கிரமான தெய்வமாக்கும் பாத்துக்கிடுங்க. மண்டையோட்டு மாலை போட்டிருக்குல்லா… கொலைத்தெய்வமாக்குமே.. நீங்க காளியை கும்பிட்டீங்கன்னா காளி உங்க கூடவே இருப்பா… அவளுக்க நாக்கு ரத்தநாக்காக்கும்…கையிலே நகங்களிலே நிணம்… சங்கக்கடிச்சு ரத்தம் குடிக்குதவளாக்கும் கேட்டுக்கிடுங்க..”
ஆனால் கிழவி என்னிடம் பேசவில்லை. ஒரு ஃபோன் வந்தது. அதை எடுத்து “ஆண்டவரே…சொல்லு மக்கா” என்றாள்
மறுமுனையில் ஏதோ கேள்வி
“ஆமா, நான் நாளைக்கு காலம்பற மெட்ராஸ் போவேன்…ஆமா தாம்பரமாக்கும்… ஆமா யோசேப்பு வாறேன்னு சொன்னான். மக்கா, அவனுக்க கெட்டினவ செரியில்ல. அவளுக்கு வேற தொக்கு இருக்கு பாத்துக்கோ. அவ ஒருநாள் அவனை தள்ளிப்பேசுவாள்னுட்டாக்கும் ஏசுவான ஆண்டவரு சொன்னது. ஆமா, நான் கேட்டேன், என்ன ஆண்டவரே இப்பிடி சொல்றீயன்னு கேட்டேன்… ஆண்டவரு உறப்பிச்சு சொல்லுதாரு… அவரு சொன்னா நான் என்னத்த சொல்லுதது? ஈரேளு லோகமும் ஆட்சி செய்யுதவராக்குமே. அவரு காணாத காட்சியா? நான் சம்மதிச்சேன். அதுகொண்டாக்கும் சொல்லுதது…”
ஏசுவா? நான் கிழவியை குழப்பமாகப் பார்த்தேன். அவர் என்னை கவனிக்காமல் பேச்சில் மூழ்கியிருந்தார்.
ஏசு பேச்சில் வந்துகொண்டே இருந்தார். “…ரெஜிஸ்டிரேசன் நாளிலே காலம்பற எனக்க கிட்ட சொல்லுதான். பாட்டி இப்டியாக்கும் எங்க முடிவுன்னு…நான் சொன்னேன், நான் அப்டி முடிவெடுக்க முடியாது பிள்ளே, ஏசுவானவருகிட்டே ஒரு சொல்லு கேக்கணுமில்லான்னு… நான் உடனே ஏசுவானவரை விளிச்சேன். விசயங்களைச் சொன்னேன். அவரு கேக்காரு, ஏன் குட்டி நீ டாக்குமெண்டை பாத்தியான்னு… நான் எங்க பாக்க ஆண்டவரே. டாக்குமெண்டை அவனுக கண்ணாலே காணவிடேல்லன்னு சொன்னேன்… பின்ன என்னத்துக்குடீ நீ போயி ஒப்பு போடுதேன்னு என்னை அடிக்க வாறாரு ஏசுவானவரு… அவருகிட்ட நான் என்ன சொல்ல….அவனை விளிச்சு சொல்லிப்போட்டேன். இஞ்ச பாரு, நல்லதும் கெட்டதும் எனக்கு கர்த்தராக்கும். அவரு ஒரு வார்த்தை சொல்லாம என்னாலே ஒண்ணும் செய்யமுடியாது. அவரு இந்த நெலை நிக்குதாரு… என்ன செய்யன்னு. அவன் கெடந்து துள்ளுதான்… அவன் சொல்லுதது நியாயமாக்கும். சொத்து அவனுக்குள்ளது. அவன் அதுக்குண்டான பைசாவயும் எனக்க மக கிட்ட குடுத்தாச்சு. ஆனா ஏசுவானவரு அதை சம்மதிக்கணுமே… என்ன நான் சொல்லுதது?”
ஏசு இவ்வளவு கவனமானவர் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை. தச்சர்கள் பொதுவாக கணக்குவழக்கு தெரியாதவர்கள்.
கிழவி “ஆண்டவரே” என ஆசுவாசப்படுத்திக்கொண்டு என்னிடம் “எந்த ஊரு பிள்ளே?” என்றார்
“நாகருகோயிலு, பார்வதிபுரம்”
”நாம இப்ப வந்திருக்கப்பட்ட ஊரு எது?”
“இதுவா, இது வள்ளியூரு…”
“ஆண்டவரே”
அடுத்த அழைப்பை அவரே விடுத்தார். மறுமுனையில் எவரோ ஒரு சிறுமி. “என்ன குட்டி, நல்லா படிக்குதியா? அப்பா எங்க போனாரு? நல்லா படிக்கணும் கேட்டியா? ஏசுவானவருகிட்ட நான் கேட்டேன். டெய்ஸிக்கு அட்மிசன் கிட்டுமான்னு. கிட்டும், ஆனா அவ இன்னும் நல்லா படிக்கணும்னாக்கும் சொன்னாரு… நீ இப்பம் கொறே வெளையாட்டாக்கும்…. படிக்குத பிள்ளைகளையாக்கும் ஏசுவானவரு இஷ்டப்படுதாரு… உன்னை பிடிச்சிருக்குன்னு சொன்னாரு. நீ செய்யுத எல்லாத்தையும் அவரு பாத்துக்கிட்டிருக்காரு குட்டி… ஒண்ணொண்ணா எடுத்து சொன்னாரு பாத்துக்கோ….”
நெல்லையை அடைவதற்குள் ஒரு மாதிரி நிலைமையை புரிந்துகொண்டேன். கிழவி எல்லாவற்றையும் ஏசுவானவரிடம் பேசி முடிவுசெய்துதான் செய்கிறார். இடைவெளியில்லாமல் ஃபோனில் பேசிக்கொண்டே இருந்தார்
“அந்த பிளசர் மாத்திரைய எங்க வச்சேன்னு தெரியல்ல… தேடித்தேடிப் பாத்தேன்… ஏசுவானவரு அவரு காணேல்லன்னு சொல்லுதாரு… எடுத்தேனா இல்லேன்னா தெரியல்ல. இப்பம் ஆருகிட்ட கேக்குதது?”
ரத்த அழுத்த மாத்திரையை கூட ஏசு அறிந்து வைத்திருக்கிறார்.
நெல்லையில் ஒரு அலுமினிய சுருளுக்குள் இருந்த இட்லியை சாப்பிட்டார். “ஏசுவே, கர்த்தரே” என கழிப்பிடம் சென்று வந்தார். வரும்போதே ஃபோனில் “அவனுக்க கிட்ட கண்டிசனா சொல்லியாச்சு…பைசா வாங்கினவ எனக்க மவ. அவ அமெரிக்காவிலே இருக்கா.. அவகிட்ட நீ பேசிக்கோ. நான் எந்த ஒரு முடிவையும் ஏசுவானவருகிட்ட சொல்லி அவரு உத்தரவுப்படித்தான் எடுக்குதது. இப்ப அவரு வேண்டாம்னு சொன்னா நான் என்ன சொல்ல?”
நான் அவரிடம் “உங்க பர்த்து கீளேயாக்கும். நீங்க ரெண்டுபேரும் கீளே இருங்க…” என்றேன்
அவர் என்னை கண்களைச் சுருக்கிப் பார்த்து “ஆளு வருதா?” என்றார்
“இல்ல, நீங்க ரெண்டுபேரும்தான்”
“ஆரு”
“இந்நா இப்ப உங்க ஒப்பம் நிக்காருல்லா, இவரு…நீங்க ரெண்டுபேரும்தான்”
“ஆரு?”
”ஆருண்ணு தெரியல்ல… பாத்த மொகமாக்கும். ஆனா உங்க கூட ஏறி வந்தாரே…”
கிழவி என்னை பார்த்தபோது தலைநடுங்கியது
“குட் நைட்” என்றபின் நான் மேல் படுக்கைக்கு சென்றேன். “லைட்டை ஆப் செய்யலாமான்னு அவருகிட்ட கேட்டு சொல்லுங்க… மணி ஒம்பதாச்சுல்லா?”
“ஆரு?” ஒரு நடுக்கம் கிழவியின் குரலில்
“அவருதான்…அந்நா நிக்காருல்லா?” என்றபின் “செரி குட்நைட்” என்றேன்
கிழவி காலை வரை விளக்கை அணைக்கவுமில்லை. படுத்து தூங்கவுமில்லை.