நவீன மருத்துவம், அறிமுக முகாம்.

யோக ஆசிரியர் சௌந்தர்தான் இந்த எண்ணத்தைச் சொன்னார். சௌந்தர் யோகப்பயிற்சியாளர்களுக்கான வகுப்பை நடத்தி வருகிறார். அவர்களுக்கு உடற்கூறியல், நவீன மருத்துவம் பற்றிய ஒரு தொடர் வகுப்பை நண்பர் டாக்டர் மாரிராஜ் அவர்களைக் கொண்டு நடத்தச்செய்தார். மிக உதவிகரமானதாக, மிகச்சுவாரசியமானதாக அந்த வகுப்பு இருந்தது என்றார். அதை பொதுவான பிறருக்காகவும் நடத்தலாமே என்றார்.

மாரிராஜ் என்னுடைய அணுக்கமான நண்பர். என்னுடைய வாசிப்பின் வழிகள் என்னும் நூல் அவருக்குத்தான் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. எம்.டி பட்டம் பெற்ற மாரிராஜ் நவீன மருத்துவ நிபுணர். மருத்துவக் கல்லூரிப் பேராசிரியரும்கூட. சிலகாலம் லண்டனிலும் பணியாற்றியவர். அவரிடம் வகுப்புகள் நடத்தமுடியுமா என்று கேட்டேன். ஒப்புக்கொண்டார்.

இந்த வகுப்புகள் ஒரு சிந்திக்கும் மனிதன் தன் உடல் பற்றி, நோய்கள் பற்றி, மருத்துவம் பற்றி பொதுவாக அறிந்திருக்கவேண்டியவற்றை கற்பிப்பவை. மருத்துவம் செய்வதற்கு அல்ல, செய்துகொள்வதற்கு பயிற்றுவிப்பவை. நவீன மருத்துவம் பற்றிய ஐயங்கள், குழப்பங்கள் ஆகியவற்றுக்கு பதில் அளிப்பவை.

உடற்கூறியல், நோய், சூழல், மருத்துவத்தின் அடிப்படைகள் ஆகியவற்றைப் பற்றி இந்த வகுப்புகள் அமையும். ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் ஏப்ரல் 5,6 மற்றும் 7 ஆம் தேதிகளில் (வெள்ளி சனி ஞாயிறு) இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இது நோயாளிகள் பங்கெடுக்கும் மருத்துவ முகாம் அல்ல. இலவச மருத்துவ ஆலோசனை வழங்குமிடமும் அல்ல. இது ஒரு தீவிரமான பயிலரங்கு. பயணம் செய்வதற்கும், கற்பதற்குமான உளநிலையும் உடல்நிலையும் உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும். நிகழ்வு நடைபெறுமிடம் மலைப்பகுதி. அங்கே எந்தவிதமான மருத்துவ உதவியும் கிடைக்காது. ஆகவே உடல்நிலைச் சிக்கல் கொண்டவர்கள் தவிர்த்துவிடலாம்

ஆர்வமுள்ளவர்கள் எழுதலாம் [email protected]


 வரவிருக்கும் நிகழ்வுகள்

இந்திய தத்துவ வகுப்புகள். இரண்டாவது நிலை. ஏப்ரல் 12,13 மற்றும் 14

இந்திய தத்துவ வகுப்புகளின் மூன்றாம்நிலை அண்மையில் நிறைவுற்றது. முதல்நிலை பயின்ற சிலர் இரண்டாம் நிலைக்கு வரவிரும்பி எஞ்சியுள்ளனர். அவர்களுக்கான வகுப்பு இது. இனி இரண்டாம்நிலை நிகழ வாய்ப்பில்லை. மேற்கொண்டு மூன்றாம்நிலை வகுப்புகள் மட்டுமே நிகழும்.

ஏ.வி.மணிகண்டன் நடத்தும் நவீன ஓவியக்கலை, புகைப்படக்கலை அறிமுகம் ஏப்ரல் 19 20 மற்றும் 21.

நவீன ஓவியக்கலை நிபுணரான ஏ.வி.மணிகண்டன் நவீன ஓவியங்களை புரிந்துகொள்வது, புகைப்படக்கலையை ரசிப்பது பற்றிய வகுப்பை நிகழ்த்துகிறார். இன்றைய கட்டிடக்கலை, பேஷன் டிசைனிங் உள்ளிட்ட பலதுறைகளை புரிந்துகொள்வதற்கான அடிப்படை வகுப்பு இது

 

முந்தைய கட்டுரைதமிழில் தத்துவம் உண்டா?
அடுத்த கட்டுரைஊர்களை எழுதுதல்- கடிதம்