வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு
பெருமதிப்பிற்குரிய ஜெ,
உங்கள் தளத்தை வாசிக்கத் தொடங்கியிருக்கும் புது வாசகி நான். பல கட்டுரைகள், சில கதைகளை வாசித்து உள்ளேன். உங்களின் சில புத்தகங்களை வாங்கி வீட்டில் குடும்பமாக வாசிக்கத் தொடங்கியுள்ளேன். வெண்முரசு வரிசையில் முதற்கனல் படித்து முடித்து மழைப்பாடல் படித்துக் கொண்டிருக்கிறேன்
தற்போது ஒரு ஐயம், அச்சம், அதனை தீர்க்கவே இக்கடிதம்.
குடும்பத்தினரும், சுற்றமும் வீட்டில் மஹாபாரதம் மற்றும் ராமாயணம் படிக்கக் கூடாது, படித்தால் குடும்பத்திற்கு ஆகாது என்றும், நோய்,சண்டைகள், உயிரிழப்புகள், தீப்பிடித்தல் (ராமாயணம் டிவி யில் ஒளிபரப்பிய போது ,மதுரை கோயிலில் சில வருடங்களுக்கு முன் ஏற்பட்டார் போல் ) மேலும் கெட்ட விஷயங்கள் ஏற்படும் என அச்சுறுத்துகிறார்கள். நானும் அஞ்சுகிறேன்.
இருப்பினும் வெண்முரசு மூலம் கற்றுக்கொள்வதற்கு ஏராளமாய் இருப்பதும் தெரிகிறது, படிக்கவும் பிடித்து இருக்கிறது. தாங்கள் தான் இதை தெளிவுப் படுத்தவேண்டும். உங்களின் பதிலை கண்டப் பின் மேலே படிக்கலாம் என்று இருக்கிறேன்
நன்றி, வணக்கம்,
கோமதி
அன்புள்ள கோமதி,
இந்த நம்பிக்கை தமிழகத்தில் கிராமப்புறங்களில் மட்டுமே உள்ளது. இந்தியாவெங்கும் இதற்கு நேர்மாறாக மகாபாரதம், ராமாயணம் ஆகியவை இல்லங்களில் படிக்கவேண்டும் என்னும் நம்பிக்கையே உள்ளது. தொடர்ச்சியாக பலகோடி இல்லங்களில் படிக்கவும் படுகின்றன.
அதிலும் ராமாயணம் கண்டிப்பாக படித்தாகவேண்டும் என்றே மரபு சொல்கிறது. ராமனின் கதை ஒரு மங்கலநூல் என்றே சொல்லப்படுகிறது. கேரளத்தைப் பொறுத்தவரை ஆடி (கர்கிடக) மாதத்தில் ராமாயணத்தை வீட்டில் வாசிக்காவிட்டால் அது பெரிய இழப்பை அளிக்கும் என நம்பப் படுகிறது. ஒவ்வொருநாளும் அத்யாத்ம ராமாயணத்தின் ஒரு சிறு பகுதியேனும் வாசிக்கப்பட்டாகவேண்டும் என்ற வழக்கமும் இன்றும் பலகோடி இல்லங்களில் உள்ளது.
இந்தியாவிலுள்ள நான்கு வைணவ மரபுகளில் மத்வரின் மாத்வ மார்க்கம், வல்லபரின் ருத்ர மார்க்கம், நிம்பார்க்கரின் குமார மார்க்கம் ஆகிய மூன்றிலுமே மகாபாரதம் சுருதி எனப்படும் மூலநூல் தகுதி கொண்டது. அவர்களின் நோக்கில் மகாபாரதத்தை எல்லாவற்றுக்கும் ஆதாரநூலாகக் கொள்ளலாம். அந்நூலை அன்றாடம் எல்லாவற்றுக்கும் வாசித்தாகவேண்டும்.
ராமானுஜரின் ஸ்ரீமார்க்கத்தில் மகாபாரதத்திற்கு புனிதமான புராணம் என்னும் தகுதி உண்டு. அதில் சொல்லப்படுவது மற்ற சுருதிகளுக்கு மாறாக இல்லை என்றால் நெறியாக கொள்ளப்படலாம். ஆகவே நான்கு வைணவ மரபுகளும் மகாபாரத வாசிப்பை வலியுறுத்துகின்றன.
சைவர்களுக்கு மகாபாரதத்திலுள்ள அர்ஜுனன் பாசுபதம் தேடிச்செல்லும் பகுதி புனிதமானது. (வெண்முரசில் கிராதம்) இந்து மெய்ஞான மரபுகள் எல்லாமே மகாபாரதத்தையே மூலப்புராணமாகக் கொள்கின்றன. அதிலுள்ள கதைகளை உதாரணமாகக் கொண்டே மெய்ஞானவியல் விளக்கப்படுகிறது. பிற புராணங்கள் அனைத்துமே மகாபாரதத்தில் இருந்து உருவானவை. எல்லா புராணங்களுக்கும் முதல்வடிவம் மகாபாரதத்தில் உள்ளது.
ஆகவே ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை இல்லங்களில் தாரளமாகவே வாசிக்கலாம். ஏற்கனவே இந்த விளக்கத்தை காஞ்சி சங்கராச்சாரியார் முதல் கிருபானந்த வாரியார், கண்ணதாசன் வரை மரபார்ந்த இந்து அறிஞர்கள் விரிவாகவே சொல்லிவிட்டார்கள்.
நீங்கள் சொன்ன அந்நம்பிக்கை எப்படி உருவானது, ஏன் நிலைகொள்கிறது?
நவீன இலக்கியம் அந்தவகையான நம்பிக்கைகளை தர்க்கபூர்வமாகவே அணுகும். மூடநம்பிக்கைகள் என மதிப்பிடும். நான் நவீன இலக்கியவாதி ஆயினும் அதற்குள் நிற்பவன் அல்ல. என் உள்ளுணர்வுக்கும் ஆழுள்ளத்தின் அறிதலுக்குமே மேலதிக இடம் அளிக்கிறேன். ஆகவே என் அகம் சார்ந்து இதற்கான பதிலை தேடி கண்டடைந்தேன். இலக்கியமெனும் யோகம் எனக்கு அளித்த பதில் அது என்று சொல்லலாம்.
மகாபாரதம், ராமாயணம் ஆகியவை முழு வாழ்க்கையளவுக்கே விரியும் பெருங்காவியங்கள். ஆகவே அவை அறம்., பொருள், இன்பம் என பேசி இறுதியில் வீடுபேறை முன்வைக்கின்றன.
வீடுபேறு என்பது வெவ்வேறுவகை உருவகங்களாகவே இந்து மெய்ஞான மரபில் சொல்லப்படுகிறது. தொல்லுருவகம் என்பது நிலம், நீர், எரி, காற்று என்னும் நான்கு பருப்பொருட்களில் ஒன்றில் கரைந்தழிதல். அந்தந்த மனிதர்களின் இயல்பு எந்த பருப்பொருள் சார்ந்ததோ அதனுடன் இணைவார்கள். ராமன் நீரிலும் சீதை மண்ணிலும் சேர்வது அவ்வாறுதான்.
மகாபாரதம் கொஞ்சம் காலத்தால் பிந்தையது. அப்போது ஐந்தாவது பருப்பொருளாக வானம் ஏற்கப்பட்டுவிட்டது. ஆகவே அதில் விண்ணுலகம் ஏகுதல் என்னும் உருவகம் வலுவாக அமைந்துவிட்டது. பெரும்பாலான மகாபாரதக் கதைமாந்தர் எரிதீயில் மாய்கிறார்கள். பாண்டவர்கள் நேராக விண்ணில் கலக்கிறார்கள்.
இந்த வீடுபேற்றுச் சித்திரத்தை உலகியல் பார்வையில் வாசித்தால் அது சாவு அல்லது அழிவு என்றே தோன்றும். சாமானியர்கள் அவ்வாறு எண்ணலாம். சாமானிய கதைசொல்லிகள் அவ்வாறு விளக்கவும் கூடும். அது இல்லறத்தாருக்கு உளச்சோர்வை, நம்பிக்கையின்மையை அளிக்கும். வாசித்தபின் வெறுமையை எஞ்சவிடும்
ராமாயணம், மகாபாரதம் இரண்டிலுமே கடுமையான வாழ்க்கைப் போராட்டம் உள்ளது. தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையேயான போர். தர்மத்துக்கும் இன்னொரு தர்மத்துக்கும் எதிரான போர். மாபெரும் அறச்சிக்கல்கள் உள்ளன. அவற்றின் விளைவான உளக்கொந்தளிப்புகள் உள்ளன.
மகாபாரதமும் ராமாயணமும் காவியங்கள். காமம், குரோதம், மோகம் என்னும் அடிப்படை உணர்ச்சிகள் அவற்றின் பேசுபொருட்கள். அதனடிப்படையில்தான் நவரசங்களும் அவற்றில் பயின்று வருகின்றன. ஆகவே சினம், சீற்றம், வஞ்சம் ஆகியவை விரிவாகப் பேசப்படுகின்றன. துயரும் அழிவும் விவரிக்கப்படுகின்றன.
ஆகவே சரியாக எழுதப்படாத மகாபாரதமோ ராமாயணமோ அந்த எதிர்மறை உணர்ச்சிகளை முன்வைப்பவையாக வாசிக்கப்படலாம். மகாபாரதத்தை வெறுமே ஒரு சகோதரச் சண்டையாக விளக்கும் எளிமையான பார்வையை சில கதைசொல்லிகள் முன்வைப்பதுண்டு. நாட்டுப்புற மரபைச் சேர்ந்த சில மகாபாரதக் கதைகளில் எளிமையான குடும்பச்சண்டை, உறவுக்குள் நிகழும் கொலைகள் என்றே மகாபாரதப்போர் காட்டப்படுவதுண்டு. நவீன இலக்கியத்திலும் அப்படி எழுதப்பட்ட நூல்கள் பல உண்டு.
இவ்வாறு மகாபாரதத்தின் எளிய வடிவங்கள் பெருகியதற்கு ஒரு வரலாற்றுப் பின்புலம் உண்டு. பதினைந்தாம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் மகாபாரதக் கதைகள் கட்டின்றி பெருகின. காரணம், நாயக்கர் ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு ஊரிலும் பாரதமண்டபங்கள் உருவாக்கப்பட்டு மகாபாரதக் கதை சொல்லப்பட்டது. ஏராளமான கதைசொல்லிகள் உருவாயினர்.
அவர்களில் பலர் முறையான பயிற்சி இல்லாதவர்கள். அவர்கள் கதையை எளிமையாக்கி விரித்தெடுத்தனர். பல துணைக்கதைகள் உருவாயின. நாட்டுப்புறக் கலைகளில் மகாபாரதத்திற்கு பல எளிமைப்படுத்தப்பட்ட உள்ளூர் வடிவங்கள் அன்று உருவாயின. அவை மகாபாரதத்தை குடும்பச்சண்டை என்ற அளவிலேயே விளக்கின, ஏனென்றால் அக்கதைசொல்லிகள் அறிந்தது அவ்வளவுதான். அந்த எளிய வடிவங்கள் சாமானியர்களால் எளிதில் புரிந்துகொள்ளப்படுவன. ஆகவே அவை புகழ்பெற்றன. அவற்றை குடும்பங்களில் வாசிப்பது எதிர்மறை மனநிலைகளை உருவாக்கும் என முன்னோர் எண்ணியிருக்கலாம். ஆகவே அந்த தடை உருவாகியிருக்கலாம்.
ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை படிக்கும் வழக்கம் எல்லா காலகட்டத்திலும் இருந்தது. மழை வருவதற்காக மகாபாரதத்தில் உள்ள விராடபர்வம் வாசிப்பது மரபு. மங்கல நிகழ்வுகள் நிகழ்வதற்காக ராமாயணத்தில் சுந்தர காண்டம் வாசிப்பதுண்டு.
கேரள மரபிலேயே கூட மகாபாரதம் வாசிக்கையில் யுதிஷ்டிரனின் பட்டாபிஷேகத்துடனும், ராமாயணம் வாசிக்கையில் ராமனின் பட்டாபிஷேகத்துடனும் நிறுத்திக்கொள்ளலாம் என்னும் வழக்கம் உண்டு. உலகியல் பார்வையில் வீடுபேறு தவறாக புரிந்துகொள்ளப்படும் என்பதனால் தவிர்த்திருக்கிறார்கள்.
ஆனால் இதெல்லாமே பழைய நம்பிக்கைகள். இன்றைய நவீன இலக்கியங்களில் இத்தகைய ஒழுங்குகள் எவையுமே இல்லை. பெரும்பாலானவை அழிவிலும் பெருந்துயரிலும் முடிபவைதான். கடும் உளச்சோர்வை உருவாக்குபவையும் ஏராளமாக உண்டு. அவை பலகோடிப் பேரால் இல்லங்களில் வாசிக்கவும் படுகின்றன. அவை நம் முன்னோர் எண்ணியது போன்ற விளைவுகள் எதையும் உருவாக்கவில்லை.
ஏனென்றால் பண்டு மகாபாரதம் ராமாயணம் ஆகியவற்றை புராணமாக, மெய்ஞானச் சொல்லாக வாசித்தனர். இன்று வெறும் புனைவாக நூல்களை வாசிக்கின்றனர். ஆகவே எதிர்மறையம்சம் கொண்ட நூல்கள் நம் முன்னோருக்கு அளித்த எதிர்மறை உளநிலையை நமக்கு அளிப்பதில்லை. ஆகவே அந்த எச்சரிக்கைகளுக்கு இன்று எந்த அர்த்தமும் இல்லை.
ஓர் எழுத்தாளனாக நான் தொடக்கம் முதலே செவ்வியல் சார்ந்த மனநிலை கொண்டவன். ஆகவே என் படைப்புகள் செவ்வியல் நிறைவுடன் இருக்கவேண்டும் என விரும்பினேன். காரணம் என் சொந்த வாழ்க்கையின் இருளில் இருந்து நான் வெளிவந்து அதையே என் எழுத்தின் தொடக்கமாகக் கொண்டேன் என்பதுதான்.
என் பெருநாவல்களான விஷ்ணுபுரம், கொற்றவை, பின்தொடரும் நிழலின் குரல் ஆகியவை அனைத்து மானுட இருள்களையும், வீழ்ச்சிகளையும் சொல்பவைதான். ஆனால் அவை முடிவது அந்த இருளில் அல்ல. அவை ஒளியை கண்டடையும் கணத்தையே உச்சமாக, முடிவாக முன்வைக்கின்றன. நான் கண்டடைந்த ஒளி அது.
வெண்முரசு நாவல்களைப் பொறுத்தவரை அவை மரபான செவ்வியல் விவேகத்தை அடிப்படையாகக் கொண்டவை. அவை இரண்டு தளங்களில் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளன.
அ. அவை மகாபாரதக் கதையை எளிய குடும்பச்சண்டையாக குறுக்கவில்லை. ஓர் யுகப்புரட்சியாகவே அந்தப்போரை வெண்முரசு காட்டுகிறது. உருவாகி வரும் புதிய காலகட்டத்தின் தர்மமுரசு அது. மகத்தான ஒன்று பிறப்பதன் பிரசவக்குருதியே குருக்ஷேத்திரத்தில் விழுந்தது என்று காட்டுகிறது வெண்முரசு
ஆ. மகாபாரதத்திலுள்ள சினம், காழ்ப்பு, வஞ்சம், சீற்றம் ஆகிய எதிர்மறை உணர்ச்சிகளை அதைவிட மேலான தியாகம், அன்பு, நீதி என்னும் விழுமியங்களால் நிகர்செய்து முன்வைக்கிறது வெண்முரசு. அறமே அதன் மையம்
இ. கட்டமைப்பிலும் வெண்முரசு மகாபாரதத்திற்கு இருக்கும் ஒரு குறையை ஈடுகட்டுகிறது. மகாபாரதத்தில் மங்கலத்தன்மை குறைவு. அதை நிகர் செய்யவே வைணவர்கள் மகாபாரதத்தை பாகவதத்துடன் இணைத்து படிக்கவேண்டும் என்கிறார்கள்.
வெண்முரசு பாண்டவர் பிறப்பு, பாண்டவர் மணம்புரிதல் ஆகிய மங்கல நிகழ்வுகளை மகாபாரதத்தில் இருப்பதைவிட பல மடங்கு விரிவாகச் சித்தரிக்கிறது. அதன் மங்கலத்தன்மையை பெருக்கி முன்வைக்கிறது. கூடவே பாகவதத்தில் இருந்து கிருஷ்ணனின் பிறப்பு (நீலம்) எட்டு மணம்கொள்ளல்கள் (இந்திரநீலம்) ஆகியவற்றையும் விரிவாகச் சித்தரிக்கிறது
மேலும் வெண்முரசு மகாபாரதம்போல வீடுபேறு என்னும் இடத்தில் முடியவில்லை. பாண்டவர்கள் விண்புகுந்தபின்னர் மீண்டும் கிருஷ்ணன் பிறப்பதில் அது நிறைவுகொள்கிறது. வெண்முரசின் முடிவு கிருஷ்ணனுக்கான பிள்ளைத்தமிழ் (முதலா விண்) அது வெண்முரசு இசைக்கோலத்தில் பாடலாக கிடைக்கிறது.
மகாபாரதத்திற்கு மரபார்ந்த உள்ளம் கூறும் சிறு குறைகளைக்கூட ஈடுசெய்தே வெண்முரசு எழுதப்பட்டுள்ளது. உரிய ஆசிரியர்கள், அறிஞர்களுடன் கலந்தாலோசித்து அந்த வடிவம் அடையப்பட்டது. ஆகவே வெண்முரசை வீடுகளில் படிக்கலாம். குடும்பத்தினருடன் அமர்ந்தே பயிலலாம். மங்கலமே பெருகும்.
ஜெ