தான் முளைத்தெழுந்த தரு

சென்ற டிசம்பரில் அஜிதனின் திருமணம் கிட்டத்தட்ட உறுதியாகியது. திடீரென அவன் தன் காதலை அறிவித்தான். அதற்கு முன் நான் உக்கிரமாக அவனுக்குப் பெண் பார்த்துக் கொண்டிருந்தேன். திருமணமான பின் அவன் குடும்பத்துடன் வாழ சென்னையில் வீடு ஒன்றும் வாங்கினேன். ஆனால் திருமணம் ஒன்றும் அமைந்து வரவில்லை. அதைப்பற்றி ஒரு நண்பர்குழுவில் ஏதோ சொன்னேன். சோதிடரான நண்பர் ஒருவர் அங்கிருந்தார். அவர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அது ஸ்பேமுக்குள் செல்ல நான் அதை படிக்கவே இல்லை.

திருமணம் நிச்சயமான பின்னர் அழைப்பிதழ்களை மின்னஞ்சல் செய்ய மின்முகவரிகளை தேடியபோது அவருடைய மின்னஞ்சலைப் பார்த்தேன். அதில் அவர் இரண்டு ஆலோசனைகள் சொல்லியிருந்தார். ஒன்று, வீட்டை தூய்மை செய்து வண்ணம் பூசி புதுப்பிக்கவேண்டும். இரண்டு, வீட்டில் பூச்செடிகள் வைக்கவேண்டும். ஆச்சரியமென்னவென்றால், நாகர்கோயிலில் என் வீட்டை மூன்று மாதம் முன்னால் அருண்மொழி புதுப்பித்து செடிகளும் வைத்திருந்தாள். பூக்கள் பூத்துக் கொண்டிருந்தன. அருண்மொழியிடம் அந்த மின்னஞ்சலை அவர் அவளுக்கும் அனுப்பியிருந்தாரா என்று கேட்டேன். இல்லை என்றாள். ஆச்சரியமாக இருந்தது.

திருமணம் நிச்சயமாகி அதை நடத்தி எடுப்பதென்பது ஓர் இனிய அவஸ்தை. அதை சென்ற ஒரு மாதக்காலமாக நிகழ்த்தி முடித்துவிட்டேன். திரும்பத் திரும்ப ஒவ்வொருவர் வாழ்விலும் நிகழும் அனுபவம்தான். பல ஆயிரமாண்டுகளாக, பலகோடிப்பேருக்கு நிகழ்ந்தது. ஆனால் நமக்கு நிகழும்போது நாம் அதை பெரும் பரவசத்துடன், புத்தம் புதியதாக உணர்கிறோம்.

அஜிதன் பிறந்த செய்தியை நான் அறிந்த கணம் முதல் நினைவுகள். ‘என்ன இது, மூக்கையே காணோம்? நீ கர்ப்ப காலத்தில் ஜாக்கிச்சான் படம் ரொம்பவே பார்த்துவிட்டாயா?” என்று அருண்மொழியிடம் கேட்க “உளறாதே” என்று அவள் என்னை திட்டினாள். அப்போது எனக்கு தமிழில் எழுத ஊடகங்கள் இல்லை. மலையாளத்தில் மாத்ருபூமி நாளிதழில் “காற்றில் விளைந்த கனி” என்னும் கட்டுரை ஒன்று எழுதினேன். ஒரு குழந்தை பிறப்பது இன்மையில் இருந்து ஓர் இருத்தல் உருவாகி நம் முன் வந்து நிற்பதுபோன்ற விந்தை.

அஜிதன் பிறந்ததை நான் குரு நித்ய சைதன்ய யதியிடம் சொன்னேன். “உனக்கு குரு பிறந்திருக்கிறார். உன்னுடன் இருக்கப்போகிறார்” என்று அவர் சொன்னார். அப்போது அவர் சொன்னது புரியவில்லை. ஆனால் மிகச்சில நாட்களிலேயே அதை உணரத் தொடங்கினேன். அஜிதன் பிறந்த மூன்றாம் நாளே அவனை நான் தான் என் கையால் மடியில் படுக்கவைத்துக் குளிப்பாட்டினேன். வழக்கமாக தந்தையர் கை நடுங்கும் என்பார்கள். அப்படி ஒன்றும் நிகழவில்லை. என் கைகள் அவனை முன்னரே அறிந்திருந்தன. எங்கோ எப்போதோ.

அருண்மொழியின் விருப்பப்படி என் விஷ்ணுபுரம் நாவலின் மையக் கதாபாத்திரம் அஜிதனின் பெயரை அவனுக்குச் சூட்டினேன். ஞானத்தின் வடிவென வந்த பௌத்த பிக்‌ஷு . அஜிதன் என்பது புத்தரின் பெயர்களுள் ஒன்று. எனது கைகள் வழியாக அவன் வளர்ந்தான். நம் குழந்தைகளை நாம் நம் கைகளிலேயே வளர்க்கவேண்டும் என அனைவருக்கும் சொல்லி வருகிறேன். (நமது கைகளில்….) ஒவ்வொருநாளும் அவனுடன் இருந்தேன். அவனுடனான ஒவ்வொரு தருணமும் கதையாகியிருக்கிறது. என்னை அவன் அடையாளம் கண்டுகொண்ட கணம். அவன் என்னை அப்பா என்றழைத்த தருணம் (அப்பாவும் மகனும்) அவனுடைய முதல் பள்ளி. அவனுடைய கல்வித்தருணங்கள்.  (பத்தாம் வகுப்பு தமிழாசிரியைக்கு பையனின் அப்பா எழுதிக்கொண்டது) கல்வியை அவனுக்காக நான் வளைத்துக்கொண்டது (தேர்வு)

இன்றும் நினைவுகூர்கிறேன். மிகச்சரியாக இரவு பன்னிரண்டு மணிக்கு எழுந்து அமர்ந்துகொண்டு “அப்பா பாவு” என்று கேட்டு பால் வாங்கி பருகிவிட்டு “நீயும் பத்துக்கோ” என்று சொல்லிவிட்டு படுத்துக்கொண்டு தன் தொப்பையை தானே தட்டி ‘வாவாவோ’ என தாலாட்டு பாடி தூங்கும் அஜிதன். அருண்மொழி கண்விழிப்பதே இல்லை. அவனுக்கும் அதெல்லாம் அப்பாவின் கடமைகள் என்னும் புரிதல் இருந்தது. பேருந்தில் ஒரு பலகையை எங்கள் இருவர் மடியில் விரித்து அதன்மேல் அவனை படுக்கவைத்து நானும் அருண்மொழியும் பயணம் செய்வோம்.ஒருநாள் பேருந்தின் நீல வெளிச்சத்தில் அஜிதன் கண்விழித்து, சற்றே ஒதுங்கிப் படுத்து, ‘அப்பா நீயும் பத்துக்கோ’ என்றான். அழகிய துடுக்கான அந்தக் குழந்தை என்றும் என் நெஞ்சில் இருக்கும். எனக்குரிய எல்லாவற்றையும் கற்பித்தவன் (குதிரைவால் மரம்) அவனுடன் என் இளமை நிகழ்ந்துள்ளது (சாப்ளின்)

சிறுவனாக அஜிதன் இரண்டு முகங்கள் கொண்டவன். எந்நிலையிலும் எதற்காகவும் அடம்பிடிப்பதில்லை. எதையும் புரிந்துகொள்ள மறுப்பதில்லை. அவனிடம் ஒன்றை விளக்கினால்போதும், அதை மீறுவதில்லை. பிரியமும், பெருந்தன்மையும்கொண்ட குழந்தை. திகைக்கவைக்கும் அறிவுக்கூர்மை. பொழுதெல்லாம் கனவுகள். விந்தையான கற்பனை உலகங்கள். அவனுக்கு 7 வயதில் முழு பகவத்கீதையையும் சுருக்கமாக விளக்கியிருக்கிறேன். அத்வைதத்தை அவனுக்குரிய வகையில் சொல்லியிருக்கிறேன். எந்த நூலையும் முழுவீச்சில் படித்து உடனே சுருக்கத்தைச் சொல்லிவிட முடியும்.

ஆனால் அவன் பள்ளியில் மந்தக்குழந்தை. கற்க, எழுத பெரும் சிக்கல்கள். பள்ளிக்குள் நுழையும்போதே உடல் குறுகி, ஒரு மண்ணாந்தைத்தனமான பார்வையுடன் செல்லும் அவனை நெஞ்சு பதைக்க பார்த்து நின்றிருக்கிறேன்.அங்கே முதலில் மூளையில்லாதவன் என்னும் பாவனை கொண்டிருந்தான். அதன்பின் உதாசீனமான, பொறுப்பற்ற சிறுவன் என்னும் பாவனை. ஆனால் என்றும் அவனுடைய புரிந்துகொள்ளும் திறன்மேல் பெரும் பிரமிப்பு எனக்கிருந்தது. இன்றும் நான் நானறிந்த ஒருவரின் அறிவார்ந்த நுண்ணுணர்வு சார்ந்து பெரும் பிரமிப்பு கொண்டிருக்கிறேன் என்றால் அது முதன்மையாக அஜிதனிடம்தான்.

அவனுடைய உருவாக்க நாட்களின் அலைச்சல்களை, பதற்றங்களை, குழப்பங்களை, துயர்களையும் நான் அணுகிக் காணவேண்டியிருந்தது. எந்த இளைஞனும் அப்படியொரு காலகட்டத்தைக் கடந்து வந்தாகவேண்டும். அறிவின் பாதையில் செல்பவன் தனித்த பயணி. முன்னுதாரணங்கள் அவனுக்குப் பயன்படுவதில்லை. அவனுடைய சிக்கல்களை அவனே தீர்த்துக் கொள்ளவேண்டும். அஜிதன் கலைகளில் இருந்து கலைகளுக்கு தாவினான். இந்தியாவெங்கும் அலைந்தான். எங்கும் எதுவும் ஆகாமல் இருந்துவிடக்கூடும் என்னும் தவிப்பு கொண்டிருந்தான். மறுபக்கம் நம் சூழலில் இருந்து வந்துகொண்டே இருக்கும் கண்காணிப்பின் நெருக்கடிகள். பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் உருவாக்கும் சங்கடங்கள்

அஜிதன் சென்ற இரண்டு மூன்றாண்டுகளாகவே கொந்தளிப்புடன் இருந்தான். எப்போது எரிச்சல் அடைவான் என்று சொல்லமுடியாது. அந்த எரிச்சலின் ஊற்று என்ன என எனக்கு தெரியும். ஆழ்ந்த உளச் சோர்வுக்குள் செல்வான். அவனை எரிச்சல் அடையச் செய்யலாகாது என சற்று விட்டுப்பிடிக்கவேண்டும். அவன் உளச்சோர்வடையலாகாது என தொடர்பிலும் இருந்தாகவேண்டும். அவ்விரு நிலைகள் நடுவே நான் தொடர்ந்து ஊசலாடிக்கொண்டிருந்தேன்.

சட்டென்று 2022ல் என் அறுபதை ஒட்டி நான் மனமகிழும்படி எதையேனும் செய்யவேண்டும் என்பதற்காக ஒரு கட்டுரையை எழுதினான். (பற்றுக பற்று விடற்கு) அது அவனை எழுத்தாளனாக அவனுக்கே காட்டியது. அவ்வாண்டே மைத்ரி எழுதினான். தன்னை எழுத்தாளனாக அடையாளம் கண்டுகொண்டான். பேச, எழுத தொடங்கினான். திரையில் எழுதும் வாய்ப்பு அமைந்துள்ளது. அவன் தன்னை விரித்துக்கொள்ளும் காலகட்டம் இது. இந்நாட்களில் எல்லாம் நானும் உடனிருந்திருக்கிறேன், தந்தையும் தோழனுமாக.

மகன் மணம்புரிந்து செல்வதென்பது ஒரு தருணம். அவனுக்கான இல்லம் அமைகிறது. இனி அவன் நாகர்கோயில் வந்து நாட்கணக்கில் தங்கினாலும் இது அவன் வீடு அல்ல. இது அவன் குடும்பமும் அல்ல. இன்றுமுதல்தான் ஒருவேளை அவன் எனக்கு இன்னொரு ஆண்மகன் ஆகிறான். இழப்பும் நிறைவும் கலந்த , இனிய துயர் நிறைந்த ஒரு தருணம். மகளை மணம்புரிந்து அனுப்புதல் பற்றி பலரும் எழுதியுள்ளனர். அன்றெல்லாம் மகன்கள் அனேகமாக முதுமை வரை தந்தைக்கு சிறுவர்களே. கூட்டுக்குடும்பம் அத்தகையது. இன்று அது மாறிவிட்டது. இன்று மகன்களுக்கும் அதே அயலாதல் நிகழ்கிறது. திரும்பத் திரும்ப நெஞ்சு வாழ்த்துச் சொற்களால் நிறைகிறது. நீடூழி வாழ்க, எண்ணிய எய்துக, நலம் சூழ்க. 

நேற்று இன்னொருவனாக என்னையறியாமலேயே மாறிவிட்டிருக்கிறேன். என்னையும் சேர்த்து வாழ்த்திக்கொள்கிறேன். நன்று சூழ்ந்தாய், நலம் திகழ்க

அந்த அறை

தலையீடு

அவரவர் வழிகள்

காலமின்மையின் கரையில்…

பாகுலேயன் பிள்ளையும் நானும் அஜிதனும்

முந்தைய கட்டுரைமண்டயம் திருமலாச்சாரியார்
அடுத்த கட்டுரைநுண்அரசியல் – கடிதங்கள்