படகில் ஒரு குரங்கு

கல்வித்துறை ஊழல்

கால்வின்களுடன் வாழ்வது குரங்குடன் படகில் செல்வதுபோல என்பது என்னவோ உண்மைதான். அவர்களுக்கு அழிப்பதிலும் எதிர்ப்பதிலும் மட்டுமே ஆர்வமிருப்பதாக நாம் உணர்கிறோம்.அழிக்கமுடியாத இடங்களில் ஆவேசமாக எதிர்க்கிறார்கள். உண்மையில் அவர்களின் பிரச்சினைதான் என்ன? (ஆகவே இக்கட்டுரையை குரங்குடன் படகில் செல்வது எப்படி என்று வடிவமைத்திருக்கிறேன்)

கால்வின்களைப் புரிந்துகொள்ள சில எளிமையான தத்துவ அடிப்படைகள் உள்ளன. நம் இல்லம் என்பது என்ன? ஒழுங்கற்ற, அல்லது புரிந்துகொள்ள முடியாத பேரொழுங்கு கொண்ட, உக்கிரமான செயலூக்கம் கொண்ட, அளவில்லாத பிரம்மாண்டம் கொண்ட இப்பிரபஞ்சத்தை நம்மால் கையாள முடிவதில்லை. ஆகவே நாம் நமக்கொரு குட்டிப் பிரபஞ்சத்தை உருவாக்கிக் கொள்கிறோம். அதை வீடு என்று அழைக்கிறோம்.

சட்டம் ஒழுங்கு

இந்தக் குட்டிப்பிரபஞ்சம் முற்றிலும் நம் ஆளுகைக்கு உட்பட்டது. நம்மால் உருவாக்கப்பட்டு அளிக்கப்பட்ட அர்த்தங்கள் கொண்டது. நம் பார்வைக்குச் சிக்கும் எல்லைகள் கொண்டது. இங்கே எல்லாமே விளக்கத்தக்கவை, சீரமைக்கத் தக்கவை. ஆகவேதான் நாற்காலியை இழுத்து சரியாகப்போடவும், விரிப்புகள் சுருங்காமல் இருக்கவும் முயற்சி மேற்கொள்கிறோம். ‘குப்பைக்கூடை எப்பவுமே வீட்டு மூலையிலே இருக்கணும்…’ என ஆணை பிறப்பிக்கிறோம்.

இவ்வாறு எல்லாவற்றையும் முழுமையாக்கியபின் ‘ஃப்யூ…ஒரு குட்டிப்பிரபஞ்சம்… நமக்கே நமக்கு’ என நாம் நீட்டி நிமிர்கையில் ஒரு குறையுணர்வை அடைகிறோம். அது கொஞ்சம் செயற்கையாக இருக்கிறதோ? உயிர்த்துடிப்பற்றிருக்கிறதோ? ஆகவே நாம் ஒரு ’சமத்தான’ ‘நல்ல’ குழந்தையைப் பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறோம். ஆனால் விதிவசமாக நமக்கு கால்வின்கள் ’டெலிவரி’ செய்யப்படுகிறார்கள்.

படைப்புச் சுதந்திரம்!

கால்வின்கள் நேரடியாக அந்த பெரிய பிரபஞ்சத்தில் இருந்து வந்தவர்கள். நம்முடைய சொந்தப் பிரபஞ்சத்திற்குள் அந்த பெரிய பிரபஞ்சம் அத்துமீறி நுழைவதுதான் அவர்கள். நரி சிதல்புற்றுக்குள் வாலை விடும். சிதல்கள் வாலில் கவ்வித் தொற்றிச் செறிந்ததும் வெளியே இழுத்து சிதல்களை உண்ணும். பிரபஞ்சம் நம் வீட்டுக்குள் செலுத்தும் வால்தான் கால்வின். ஒன்றும் செய்ய முடியாது.

ஆகவே கால்வின்கள் பிரபஞ்ச நெறிகளை கடைப்பிடிக்கிறார்கள். அதாவது தெய்வீக விதி அல்லது கண்டமானிக்கு எனப்படும் விதி.  நெப்டியூனுக்குப் பின் ஏன் புளூட்டோ அமைந்திருக்கவேண்டும் என எவரிடமும் கேட்கமுடியாது. ஷூக்கள் வைக்கப்படும் இடத்தில் நம் மூக்குக்கண்ணாடி எப்படிச் சென்றது என்பதற்கோ, வார்ட்ரோபுக்குள் வடை ஏன் வைக்கப்பட்டுள்ளது என்பதற்கோ அதே காரணம் அல்லது காரணமின்மைதான் என அறிந்தால் நாம் கால்வின்களை அறிகிறோம்

’கற்பனையின் எல்லைக்கோட்டில்!”

கால்வின்கள் எல்லா அமைப்புகளுக்குள் இருந்தும் வெளியே மீறி நிற்கிறார்கள். அவர்களின் சட்டை கால்சட்டைக்கு வெளியே கிடகிறது. பள்ளிவேன்களில் இருந்து கை வெளியே கிடக்கிறது. படுக்கையில் இருந்து கால் வெளியே தொங்குகிறது. தொட்டிலில் படுத்திருக்கும்போதே அந்தக் கால் வெளியேதான் கிடந்தது. தட்டில் இருந்து சாப்பிடுவதை விட உதிர்ந்தவற்றை சாப்பிடுவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் தலைமயிரை எண்ணைபோட்டு படியச் சீவ முடியும் என்றால் அவர்களையும் வழிக்கு கொண்டுவரலாம். ஆனால் அவர்களின் மண்டை அமைப்பே அதற்கு எதிரானது. விந்தையான இரட்டைச்சுழி. அல்லது பின் மண்டையில் ஒட்டடை அடிக்கும் தூரிகை போல ஒரு பிசிறல். அவர்கள் எல்லா முறைமைகளுக்கும் எதிரானவர்கள். நீராடுவதும் பல்தேய்ப்பதும் அரசுமுறையாகத் தடைசெய்யப்பட்டால் ஒழிய அவர்களை அவற்றைச் செய்யவைக்க முடியாது.

  காலப்பதிவு

கால்வின்களின் மூளைக்கூர் அபாரமானது. எதையும் அவர்களால் புரிந்துகொள்ள முடியும். விண்வெளி ரகசியங்கள் முதல் அத்வைதம் வரை. இன்றியமையாதவை அவர்களிடமிருந்து தடுத்தோ ஒளித்தோ வைக்கப்பட்டாகவேண்டும். அவர்களால் நெடுஞ்சாலைகளில் செல்லமுடியாது. ஏனென்றால் அவர்களின் மண்டை ஊடுவழிகளை மட்டுமே தேடுகிறது. கால்வின்கள் கற்றுக்கொண்டே இருக்கிறார்கள், பொதுவாக அவர்கள் எவற்றையெல்லாம் கற்றுக்கொள்ளலாகாது என நாம் நினைக்கிறோமோ அவற்றை.

ஆகவேதான் கால்வின்கள் கல்விநிலையங்களின் கொடுங்கனவு என அழைக்கப்படுகிறார்கள். அக்கல்விநிறுவனங்கள் அவர்களின் பெற்றோருக்கும் கொடுங்கனவாக ஆகின்றன. கால்வின்களின் எழுத்துக்கள் கோடுகளுக்குள் நிற்பதில்லை. எழுத்துக்கள் என்னும் அடையாளங்களுக்கும் அவை தாங்கிநிற்கும் அர்த்தங்களுக்குமிடையே மாறாத இரும்புவிதிகள் இருப்பதை கால்வின்கள் ஏற்பதில்லை.  B என்னும் எழுத்து E என்னும் எழுத்துக்கு அருகில் இருக்கையில் அவை ஒன்றையொன்று பார்ப்பதுதானே முறை? அதற்கு கால்வின்களின் தந்தையர் பள்ளிமுதல்வரிடம் ஏன் மன்னிப்பு கோரவேண்டும்?

 

அப்பால் ஓர் இடம்

கால்வின்களின் கற்பனைதான் அவர்களை பெஞ்சுமேல் நிற்கவைக்கிறது- வகுப்புக்கு வெளியே நிற்கவைக்காத நேரங்களில். 4 இல் இருந்து 2 கழிக்கப்படும்போது கால்வின்களின் கற்பனையில் இருந்து ஒன்று வந்துசேர்ந்து அது 3 ஆவதில் என்ன பிழை? அவ்வாறு எல்லாவற்றிலும் ஒரு கற்பனையை கலக்காவிட்டால் கால்வின்களின் மூளையை எப்படித்தான் உலகுக்குப் பயன்படுத்துவது? அதன் பொருட்டு கால்வின்களின் அன்னையர் கால்தொட்டு மன்றாடிக் கடிதம் எழுதி அனுப்பவேண்டும் என கல்வியமைப்புக்கள் குரூரமாக எதிர்பார்க்கின்றன.

ஆனால் கால்வின்களையே கல்வியமைப்புகள் நினைவுகூர்கின்றன. படியத் தலைசீவிய குழந்தைகள் முறையாக வாழ்க்கையில் அமைந்திருக்க,கால்வின்கள் அப்படியே சுதந்திரமாகப் பெரிதாகி, குரல்வளையும் மீசையுமாக தெருவில் செல்கையில், கிழவிகளாக ஆகிவிட்ட பழைய ஆசிரியைகளான திருமதி வார்ம்வுட்கள் “லேய் கால்வின், ஓர்மை இருக்காலே. வளந்துபோட்டியே. இப்பமெங்கிலும் எழுத்தும் வாசிப்பும் தெரியுமா? இல்ல பளையது மாதிரித்தானா?” என்று கேட்காமலிருப்பதில்லை.

உழைப்பெனும் சுமை

 

கால்வின்கள் பொதுவாகச் சோம்பேறிகள். சுருண்டமைந்து ’மனோராஜ்ய’ச் சுற்றுலா செல்பவர்கள். எதையாவது வாசித்துக்கொண்டோ, ஏதாவது உடைசல்களை நோண்டிக்கொண்டோ இருக்க விரும்புபவர்கள். ஆகவே அவர்கள் குப்பைமலைகள் நடுவே வாழ்கிறார்கள். அந்தக் குப்பையில் ஒரு பொருளை இடம் மாற்றினாலும் அவை அனைத்துமே முறைப்படி வைக்கப்பட்ட பயன்படு பொருட்கள் என தெரியவருவதன் விந்தையில் இருந்து கால்வின்களின் அன்னையருக்கு விமோசனம் இல்லை.

கால்வின்களை வளர்க்கும் பெற்றோர் அவர்கள் வாழும் சூழலில் தீவிரக் கண்காணிப்புக்கு ஆளாகிறார்கள். உலகிலுள்ள அனைவருமே குழந்தை வளர்ப்பு குறித்து தங்களுக்கு வகுப்பெடுக்கலாம் என்றும், அவை அனைத்தையும் தலைகுனிந்து மன்னிப்புத் தோரணையுடன் கேட்பதற்கு தாங்கள் முற்றிலும் தகுதியானவர்கள் என்றும் அப்பெற்றோர் நம்புகிறார்கள். கால்வின்கள் சுற்றிலுமுள்ள பிற பெற்றோர் தங்கள் குழந்தைகளை எண்ணி ஆறுதல் பெற முடிவில்லா வாய்ப்புகளை அளிப்பவர்கள். கால்வின்களை வளர்ப்பதற்கான எல்லா வழிமுறைகளும் புதிய கால்வின் மண்ணில் பிறந்த கணமே காலாவதியாகிவிடுவன என்பதனால் கால்வினியம் என்னும் அறிவுத் துறை உருவாகவே இல்லை.

அறிவின் எதிர்க்குரல்

கால்வின்களைச் சமாளிக்க அவர்களின் பெற்றோர் இரண்டு வழிகளை கையாள்கிறார்கள். அதை குரங்குப்படகு முறை என யுனெஸ்கோ கல்விமுறை வகுத்துள்ளது. குரங்கு இருக்கும் படகில் அன்னை ஒரு பெரிய எடைமிக்க நங்கூரமாக ஆகிவிடவேண்டும். படகை அவள் அசையாமல் காக்கவேண்டும். தந்தை இன்னொரு குரங்காக மாறி படகின் மறுஎல்லையில் இருக்கவேண்டும். குட்டிக்குரங்கு இந்த முனையில் செய்யும் தாவல்களுக்கு நேர் எதிரான தாவல்களை அவர் அந்த முனையில் மிகச்சரியாகச் செய்துவிட்டால் படகின் அலைவு நிகர்செய்யப்பட்டு விடுகிறது.

ஆனால் உரியகாலம் வந்து குட்டிக்குரங்கு கரைதாவி தன் மரம்தேடிச் சென்றுவிட்ட பின்னரும் மேற்படி தந்தையரில் எஞ்சும் குரங்குச்சேட்டைகள் வாழ்நாள் முழுக்க நீடிக்கும் என்பது இந்த முறையின் தீய அம்சம் எனப்படுகிறது

முந்தைய கட்டுரைதிருக்கோவையார்
அடுத்த கட்டுரைஇன்று…