மதம் கடந்த ஆன்மிகம்

அன்புள்ள ஜெ,

மேற்குலகில் “சமயமற்ற ஆன்மீகம்” (spiritual but not religious) என்னும் பதம் பிரபலமாக உள்ளதைப் பற்றி என் கேள்வி. அவரவருக்கான ஆன்மீகப் பாதையை தனி நபர்களே தேர்ந்தெடுத்தலின் மூலம் ஓர் இலட்சிய மத துவேஷமற்ற சமூகத்தை உருவாக்க சாத்தியம் உண்டு எனக் கருதுகிறேன்.

இதற்க்கான வாய்ப்பு அடுத்த நூறு – இருநூறு வருடங்களில் சாத்தியமானால் சாதிய – மத மேட்டிமைவாதம், மதத் திணிப்பு, நெறி நூல்கள் எல்லா காலத்திற்கும் உரியவை என்னும் மனப்பாங்கு குறையக் கூடும். உங்கள் கருத்தை அறிய விழைகிறேன்.

அன்புடன்,

கிருஷ்ணமூர்த்தி

***

அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி.

சமயமற்ற ஆன்மிகம் என்னும் கருத்து ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவானது. அக்கருத்தில் இருந்து உருவான மேலும் பல கருத்துருக்கள் உண்டு.

ஐரோப்பாவில் செல்வாக்குடன் இருந்த கத்தோலிக்கக்  கிறிஸ்தவ மதம் ஒரு முழுமையான அதிகார அமைப்பு. நேரடியாக அது அரசு நடத்தியது. வரிவசூல் முதல் போர்கள் வரை போப்பாண்டவர் நிகழ்த்தினார். சமூகவாழ்க்கையின் எல்லா அம்சங்களுமே மதத்தால் தீர்மானிக்கப்பட்டன. நீதிவழங்குதல் மதகுருக்களால் நடத்தப்பட்டது.

அதன்பின் அந்த மைய அதிகாரத்துக்கு எதிராக சீர்திருத்தக் கிறிஸ்தவம் உருவாகி வந்தது. போப்பாண்டவரின் அரசாட்சி இல்லாமலாகியது. சீர்திருத்தக் கிறிஸ்தவச் சபைகள் மதத்தை உண்மையில் இன்னொருவகை அடிப்படைவாதம் நோக்கிக் கொண்டுசென்றன. ‘தூய கிறிஸ்தவம்’ என்னும் கருத்தை முன்வைத்தன. அவையும் தனிமனிதன் மீது மதத்தின் ஆதிக்கத்தை உருவாக்கின.

இச்சூழலில்தான் மதம்கடந்த ஆன்மிகம் என்னும் கருத்து பதினேழாம் நூற்றாண்டில் உருவானது. அது மூன்று படிநிலைகளாக உருவானது.

அ. கிறிஸ்தவ மதிப்பீடுகளை கிறிஸ்தவ மத அமைப்பில் இருந்து பிரித்துப் பார்ப்பது. ஏசுவை மதத்துக்கு அப்பாற்பட்ட ஒரு ஞானவடிவமாக அணுகுவது. இந்தப்பார்வை தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, மேரி கெரெல்லி, ரோமென் ரோலந்து, விக்டர் யூகோ போன்ற இலக்கியவாதிகளிடம் காணலாம்.

ஆ, அறம், ஒழுக்கம், நீதி ஆகியவற்றை மதம் அல்லது கடவுள் சார்ந்ததாக இல்லாமல் தனிமனிதனின் மனசாட்சி சார்ந்தவையாகவும், சமூக ஒழுங்கு சார்ந்தவையாகவும் பார்ப்பது. ஷோப்பனோவர் இம்மானுவேல் காண்ட் முதலிய தத்துவ ஞானிகள் அதன் பல நிலைகளை விவாதித்து உருவாக்கினர்.

இ. அரசு, சமூகம் கலை அறிவியக்கம் ஆகியவற்றின் செயல்பாடுகளில் நேரடியாக மதம் ஆதிக்கம் செலுத்தலாகாது, அவை சுதந்திரமாகச் செயல்படவேண்டும் என்னும் கொள்கை. வால்டேர், ரூஸோ, ஜே.எஸ்.மில் போன்ற பல அறிஞர்களால் விவாதித்து நிறுவப்பட்டது இது

அக்காலச் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் இவற்றை முன்வைத்து விரிவாக எழுதியுள்ளனர். விளைவாக ஏராளமான தத்துவக் கொள்கைகள் உருவாகி வந்தன. அவற்றில் முக்கியமானவை மூன்று.

அ. தன்தேர்வு கொள்கை ( Free Will) மனிதன் நன்று-தீது என தானே அறிந்து தேர்ந்துகொள்ளும் உரிமையும் கடமையும் கொண்டவன், அதற்கான அறிவை அவன் தேடிக்கொள்ளவேண்டும்

ஆ, தனிமனிதவாதம் (Individualism ) மனிதனின் ஆன்மா சுதந்திரமானது. அந்தச் சுதந்திரமே மெய்யான ஆன்மிகம்.

இ.  மனிதனுக்கு இன்னொருவரின் இன்பத்தை பறிக்காமல் தனக்கான இன்பத்தை தேடிக்கொள்ளும் உரிமை உண்டு ( Pursuit of Happiness)

இந்த விவாதத்தின் ஒரு பகுதியாக உருவானது மதம் கடந்த ஆன்மிகம் என்னும் கருத்து. அதன் அடிப்படைகளை இவ்வாறு வகுக்கலாம்

அ. மனிதன் தன் ஆன்மிக விடுதலையை தன் நுண்ணுணர்வு, தன் அறிதல்கள் வழியாக தானாகவே தேடிக்கொள்ளலாம். அதற்கு நிறுவனங்களின் உதவியோ ஆதரவோ இன்றியமையாதவை அல்ல. தனிமனிதனின் மீட்பு அவனிடமே உள்ளது.

ஆ. இயற்கை, பிரபஞ்சம், வாழ்க்கை ஆகியவற்றுக்கான விடைகள் தத்துவம், அறிவியல், கலைகள் என பிற துறைகளாலும் அடையத்தக்கவை.

இ. மதத்தின் குறியீடுகள், ஆழ்படிமங்கள், வழிமுறைகள் ஆகியவற்றை தனிமனிதன் தனாக்கான ஆன்மிகத் தேடலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அவன் மதத்தின் அடையாளங்கள், மத அமைப்பு ஆகியவற்றுக்கு கட்டுப்படவேண்டியதில்லை.

இந்த மூன்று அடிப்படைகளில் சிந்திப்பவர்களையே ’மதம் கடந்த ஆன்மிகம்’ என்னும் வழியை மேற்கொள்பவர்கல் என்கிறோம். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அவ்வாறு மதம்கடந்த ஆன்மிகத்தை முன்வைக்கும் பலநூறு அமைப்புகள் உள்ளன. ஏராளமான கொள்கைகளும் உள்ளன.

அவற்றில் மூன்று பார்வைகளை பொதுவாக முக்கியமானவை என கருதுவதுண்டு. அவற்றை உலகளாவிய தளத்தில் இலக்கியவாதிகள் முன்வைப்பதும் வழக்கம்

அ. இயற்கைவாதம் (Naturalism)

இயற்கையில் இப்பிரபஞ்சத்தின் எல்லா உண்மைகளும் அடங்கியுள்ளன, இயற்கையை அறிதலும் ஒன்றுதலுமே மெய்யான ஆன்மிகம் என்னும் பார்வை. நாம் பிரிட்டிஷ் கவிஞர்களான வேர்ஸ்வெர்த் போன்றவர்கள் வழியாக அதை அறிந்துள்ளோம்.

ஆ. மனிதாபிமானம் (Humanism)

மனிதனின் மெய்யான ஆன்மிகம் என்பது சகமனிதனுடனான நல்லுறவும், மானுடத்தின் ஒட்டுமொத்தமான நலத்திற்காக தன்னை அளித்தலுமே என்னும் பார்வை. ஜனநாயக தாராளவாதம், மார்க்ஸியம் போன்றவற்றின் சாராம்சம் இதுவே.

இ. ஆழ்நிலைவாதம் (Transcendentalism)

மனிதன், இயற்கை, பிரபஞ்சம் ஆகிய அனைத்திலும் ஊடாடும் ஒருமையை உணர்ந்து அதற்கு இயைப வாழ்வது. எமர்சன், தோரோ போன்றவர்களால் முன்வைக்கப்பட்டது.

இவற்றை ஒட்டி, இன்னொரு முக்கியமான கருத்து அறிவுச்சூழலில் பேசப்படுகிறது. அது இஸ்லாமிய நாடுகளில் தொடங்கியது. ‘பண்பாட்டு இஸ்லாம்’ என அது பெயரிடப்பட்டது. அதாவது இஸ்லாமிய மதம் உருவாக்கிய இலக்கியம், கலைகள், வாழ்க்கைமுறைகள் மற்றும் அடிப்படையான பண்பாட்டு அடையாளங்கள் ஆகியவற்றை ஏற்றுக்கொள்வது. ஆனால் நாத்திகராகவோ, தனிப்பட்ட ஆன்மிகத்தேட்டம் உடையவராகவோ நீடிப்பது. இஸ்லாமிய மதத்தின் இறைநம்பிக்கையையோ அதன் நிறுவன அமைப்பையோ ஏற்காமலிருப்பது.

அந்த கருத்து பின்னர் இந்தியாவுக்கும் வந்தது. ’பண்பாட்டு இந்து’ என தன்னைச் சொல்லிக்கொள்பவர்கள் சிலர் உருவானார்கள். அது குறித்து என்னிடம் கேட்கப்பட்டபோது அதற்கான விடையை நான் சொல்லியிருக்கிறேன். *(கலாச்சார இந்து)

இந்தியச் சூழலில் மதம் சாரா ஆன்மிகம், பண்பாட்டு இந்து ஆகிய சொற்றொடர்களுக்கு என்ன பொருளும் மதிப்பும் இருக்க முடியும்?

முதல் விஷயம் இந்து மதம் இந்தியாவில் நிறுவனமயமாக்கப் பட்டது அல்ல. சைவ, வைணவ மடங்கள் போல சில நிறுவனங்கள் உள்ளன. ஆனால் அவற்றுக்கு சராசரி சைவர், வைணவர் மேல் எந்த அதிகாரமும் இல்லை.

ஒரு இந்து தன் ஆன்மிகத்தை தானே முடிவுசெய்பவராகவே பலநூற்றாண்டுகளாக இருக்கிறார். இந்து ஆன்மிக மரபின் அடிப்படையே அதுதான் – தனிநபர் தன் ஆன்மிக நிறைவை தானே தன் அதம் காட்டும் வழியினூடாக தெரிவுசெய்துகொள்ளுதல். இந்து மூலநூல்களில் இருந்து பல்லாயிரம் வரிகளை, பலநூறு உதாரணகதைகளை அதற்கு ஆதாரமாகச் சுட்டிக் காட்டமுடியும். இந்து மதம் முன்வைக்கும் இறைவழிபாடு, தியானம், யோகம் ஆகிய அனைத்துமே தனிமனிதனாகச் செய்யவேண்டியவை, அந்தரங்கமாக நிகழ்த்திக்கொள்ள வேண்டியவை.

அப்படி இந்து மரபு ஓர் இந்துவுக்கு அளிக்கும் மெய்ஞான வாய்ப்புகள் பல. சைவம் வைணவம் போன்ற பெருமதங்களுக்குள்ளேயே ஒருவர் தனிப்பட்ட விருப்பதெய்வ வழிபாட்டுடன் இருக்கமுடியும். பெருமாளை வணங்காமல் ஆஞ்சநேய உபாசனை மட்டும் செய்யும் வைணவர் இருக்க முடியும். சிவனை வழிபடாமல் முருகனை மட்டும் வழிபடும் சைவரும் இருக்கமுடியும்.

அந்தப் பெருமதங்களுக்கு வெளியே பலநூறு நாட்டார் தெய்வங்கள் உள்ளன. நாட்டார் தெய்வங்களிலேயே பல வகைகள் உண்டு. அவையனைத்துக்கும் இந்து மெய்ஞான மரபின் ஏற்பும் தத்துவ விளக்கமும் உண்டு. ஆறுகளை, மலைகளை, மரங்களை , விலங்குகளைஎன இயற்கைக் குறியீடுகளை வழிபடுவதும் இந்து மெய்ஞான மரபுக்கு ஏற்புடையதுதான். அதாவது இங்கே ஒருவர் இயற்கைவாதத்தை ஏற்றுக்கொண்டால் அதுவும் இந்து மெய்ஞான மரபுக்குள் வருவதாகவே அமையும்.

மனிதாபிமானமே தன் மதம் என ஒருவர் சொன்னால் அதையும் இந்து மெய்ஞான மரபு ஏற்கும். ‘நரநாராயண சேவை செய்பவர்’ என அவரை அடையாளம் காட்டும். காந்தியும் வினோபாவும் அவ்வாறுதான் தங்களைச் சொல்லிக்கொண்டனர். தீவிர இந்துவாக இருந்தனர். எந்த ஆலயங்களுக்கும் செல்லவில்லை. எந்த மதச்சடங்குகளையும் செல்லவில்லை.

அத்துடன் இங்கே பல்வேறு சித்தர்களும் ஞானகுருக்களும் தோன்றி தங்களுக்கான தனிப்பாதை காண்கின்றனர். பலர் அதற்கு முன்பிருந்த அனைத்து அமைப்புகளையும் நம்பிக்கைகளையும் நிராகரிக்கின்றனர். அவர்களை பின் தொடரும் திரளும் உருவாகிறது. அவர்களும் இந்து மெய்ஞான மரபுக்குள் ஏற்கப்படுகின்றனர். எல்லா வழிகளும் இதிலிருந்து கிளைத்து முன்செல்ல இதன் நீண்ட மரபு அனுமதிக்கிறது.

அத்தனைக்கும் மேலாக, இந்து மெய்ஞான மரபின் சாராம்சமாக இருப்பது வேதாந்தம். அது ‘தூய ஞானத்தை’ முன்வைக்கும் தரிசனம். அதற்கு இறைவழிபாடுகூட கிடையாது. எந்தச்சடங்கும் இல்லை.எ எந்த அமைப்பும் இல்லை. ஒருங்கிணைந்த அறிவு என எதை ஆழ்நிலைவாதம் சொல்கிறதோ அதை இன்னும் தீவிரமாக முழுமையறிவு என அது சொல்கிறது. வேதாந்தி தன்னை முழுமைவாதி என்றுதான் சொல்லிக்கொள்வார். ஆழ்நிலைவாதத்தை முன்வைத்த எமர்சனே வேதாந்த நூல்களான உபநிடதங்களைத்தான் சுட்டிக்காட்டுகிறார்.

ஆகவே மதம் கடந்த ஆன்மிகம் என்பது இந்து மெய்ஞான மரபில் தனியாக உருவாகி வரவேண்டிய ஒரு கருத்து அல்ல. அது இந்து மெய்ஞான மரபுக்குள் எப்போதுமே அனுமதிக்கப்பட்டுள்ளதுதான். வரலாறு முழுக்க எந்த மதச் சடங்கும் செய்யாத, எந்த மத அமைப்புக்கும் கட்டுப்படாத பல லட்சம் துறவிகள் இங்கே இருந்துள்ளனர். பல லட்சம் வேதாந்திகள் வாழ்ந்துள்ளனர். என் ஆசிரியர் நித்ய சைதன்ய யதியோ அவர் மரபினரோ மதம் சார்ந்தவர்கள் அல்ல. மதச்சடங்குகளைச் செய்தவர்கள் அல்ல. அவர்கள் தூயவேதாந்திகள். நானும் அவ்வழி தொடர்பவனே. என் எல்லா கட்டுரைகளிலும் ஆன்மிகம் என்று சொல்லும்போது (மதம்சார்ந்த பொருளில் அல்ல) என்றும் சொல்வதுண்டு.

அதேபோல பண்பாட்டு இந்து என்னும் சொல்லும் இங்கே பொருளற்றது. இந்து மெய்ஞான மரபு நாத்திகத்தையும் தன்னுள் ஒரு மெய்த்தேடலாக ஏற்கிறது. எல்லா காலகட்டத்திலும் நாத்திகர் அல்லது பொருள்முதல்வாதிகள் இங்கே இருந்துள்ளனர். இந்து வாழ்க்கைமுறை அல்லது இந்து இலக்கியம் அல்லது இந்து கலைகளில் தனக்குரியவற்றை மட்டுமே தெரிவுசெய்து பிறவற்றை நிராகரிக்க ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. அவ்வாறு எத்தனையோ பேரறிஞர்கள், பெருங்கலைஞர்கள் இருந்துள்ளனர். அவர்களை கலாச்சார இந்து என்று சொல்லலாம். தனியாக ஒரு புதுச் சிந்தனையாக இனி அது உருவாகி வரவேண்டும் என்பதில்லை

இவ்வாறு நெகிழ்வாகவும், உள்விரிவு கொண்டதாகவுமே இந்து மெய்ஞானம் என்றும் இருந்துவந்துள்ளது. இன்று இருபக்கமும் நெருக்கடிகளால் அது இறுகிக்கொண்டிருக்கிறது. ஒருபக்கம் அதை ஒட்டுமொத்தமாகத் தாக்கி, இழிவுசெய்து, அழிக்கும் பெருமுயற்சிகள் நிகழ்கின்றன. மறுபக்கம் அதை ஒற்றைப்படையாக்கி, மைய அதிகாரமும் மையநம்பிக்கையும் கொண்ட நிறுவனமாக ஆக்கும் அரசியல் நிகழ்கிறது. இந்த கடும் சோதனைக் காலகட்டத்தை இந்து மெய்ஞான மரபு கடக்க அதில் உருவாகும் ஞானிகளின் வழிகாட்டல் அமையவேண்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைஜே.டி.ஆர்
அடுத்த கட்டுரைநீலம் நிகழ்ந்தபோது…