எழுத்தாளர் ஆகவேண்டும் என்னும் பெருவிருப்புடன் எழுதப்படும் கடிதங்கள் மாதம் ஒன்றேனும் எனக்கு வந்துகொண்டிருக்கின்றன. ரெய்னர் மரியோ ரில்கே ‘இளங்கவிஞனுக்கு’ என்னும் புகழ்பெற்ற கடிதத்தொகுப்பு ஒன்றை எழுதியிருக்கிறார். (Letters to a Young Poet) ரில்கேயின் கடிதங்கள் என்ற பேரில் அவை தமிழிலும் வெளிவந்துள்ளன (ரில்கேயின் கடிதங்கள்)
அவை ஒரு படைப்பாளியாகத் திகழ்வதன் உச்சநிலை இலட்சியம் பற்றியவை. தமிழ்ச்சூழலில் மூத்த எழுத்தாளனாக மேலும் நேரடியான, மேலும் நடைமுறைசார்ந்த சிலவற்றையே சொல்லவேண்டியிருக்கிறது.
முதலில் எழுத்தாளனாக இருப்பது வெறும் சமூகக் கௌரவம் மட்டுமல்ல என்று உணர்க. உண்மையில் சமூகத்தில் இருந்து அந்த கௌரவம் பெரும்பாலும் வருவதில்லை. ஓர் எளிய அரசியலாளனுக்கு, ஒரு யூடியூப் பிரபலத்துக்கு இருக்கும் இடம்கூட எழுத்தாளனுக்கு தமிழ்ச்சமூகத்தில் இல்லை. ஆனால் வசைகளும் அவமதிப்புகளும் நிறையவே கிடைக்கும்.
ஏனென்றால் இங்கே எழுத்தாளனின் இடம் ஏற்கப்படுவதில்லை. எழுத்தாளன் எந்தக் கருத்து சொன்னாலும் ‘கருத்து சொல்ல இவன் யார்?’ என்ற வினா நம் சூழலில் இருந்து எழுவதைக் காணலாம். நம் சூழலுக்கு வேண்டியதெல்லாம் அவர்கள் நினைப்பதையே சொல்லும் பிரபலங்கள்தான். அவர்கள் நினைக்காததை, நினைக்கவேண்டியதைச் சொல்பவன் அவர்களின் எதிரி.
எழுத்தாளன் என்னும் ஆளுமை, இலக்கியம் என்னும் அறிதல்நிலை இங்கே படித்தவர்களுக்கே தெரியாத ஒன்று. எழுத்தாளனின் அவதானிப்புகள் அவன் தன்னை கருவியாக்கி தன் அனுபவங்கள் வழியாக, தன் நுண்ணுணர்வு வழியாக அடைபவை. எந்தச் சிந்திக்கும் சமூகத்திற்கும் அவை முக்கியமானவை.
ஆனால் தமிழ்ச்சூழலில் இலக்கியவாதியின் கருத்து ஒன்று முன்வைக்கப்பட்டதுமே இரண்டுவகை எதிர்வினைகள் உருவாகின்றன. எழுத்தாளனை ஓர் அரசியல்வாதியாக மட்டுமே மதிப்பிட்டு, பிற அரசியல்வாதிகள் அவனை எதிர்கொள்கிறார்கள். அரசியல்வாதிகளுக்கு எல்லாமே அரசியல்தான்.
இன்னொரு பக்கம் ‘இப்படிச் சொல்ல தரவுகள் எங்கே? எப்படி இப்படியெல்லாம் பொதுப்படுத்தலாம்?’ என்னும் கூச்சல் எழுகிறது. தரவுகளை சேகரித்து, அலசி ஆராய்ந்து, பொது உண்மைகளைக் கண்டடைவது அறிவியலின் வழி. அதற்கு நேர்மாறானது இலக்கியத்தின் வழி. அது இலக்கியவாதியின் அனுபவம், உள்ளுணர்வு ஆகியவற்றை மட்டுமே சார்ந்தது.
இலக்கியவாதி சொல்லும் உண்மை வாசகனின் தர்க்கபுத்தியால் எதிர்கொள்ளப்பட வேண்டியது அல்ல. வாசகன் தன் அனுபவத்தால், தன் நுண்ணுணர்வால் அதை எதிர்கொள்ளவேண்டும். இலக்கியம் வாசகனில் அளிப்பது உண்மைநோக்கிய ஒரு தூண்டலைத்தான். evocation என்று அதைச் சொல்வார்கள். வாசகன் தன் கருத்தை தானேதான் உருவாக்கிக் கொள்கிறான். இலக்கியப்படைப்பு அல்லது இலக்கியக் கருத்து அதற்கு ஒரு தூண்டுதல் மட்டுமே. இலக்கிய உண்மையைப் பொறுத்தவரை வாசகன் ஏற்கலாம் அல்லது பொருட்படுத்தாமல் கடந்துசெல்லலாம். அதை மறுக்க முடியாது. ஏனென்றால் அது நிரூபணமுறைமை இல்லா உண்மை.
அந்த இந்த வேறுபாடு நாகரீகச் சமூகங்களில் புரிந்துகொள்ளப்பட்ட ஒன்று. இந்தியாவில் அப்புரிதல் இன்னும் உருவாகவில்லை. ஆகவே இலக்கியவாதி இங்கே எந்நிலையிலும் வசைகளையே எதிர்கொள்வான். தல்ஸ்தோய் தமிழில் ‘மகிழ்ச்சியான குடும்பங்களெல்லாம் ஒன்றுபோல. மகிழ்ச்சியற்றவை ஒவ்வொன்றும் தங்கள் வழியில் மகிழ்ச்சியற்றவை’ என்னும் வரியை எழுதியிருந்தால் அது குடும்ப அமைப்புக்கு எதிரான அரசியல் சதி என சிலர் சொல்லியிருப்பார்கள். தல்ஸ்தோய் எத்தனை குடும்பங்களைப் பார்த்தார் என சிலர் கேட்டிருப்பார்கள்.
ஆகவே இங்கே ஓர் எழுத்தாளனாக இருப்பதென்பது நமக்கு நாமே அளித்துக்கொள்ளும் கௌரவம். நமக்கே அகத்திலிருந்து ஒரு தன்னம்பிக்கை, நிமிர்வு வரவேண்டும். அதை இச்சமூகம் திமிர் என்று சொல்லும். ஆனால் அந்த நிமிர்வு இல்லையேல் மெல்ல மெல்ல தன்னிரக்கம் நோக்கி செல்வோம். பல எழுத்தாளர்களின் வாழ்கை அப்படி தன்னிரக்கத்தால் நிறைந்ததாகவே முடிகிறது.
நாம் இங்கே நிகழும் அறிவியக்கத்திற்கு ஒரு பங்களிப்பை ஆற்றுகிறோம். அது சிறிதாக இருக்கலாம். ஆனால் நம்மளவில் அதைச் செய்கிறோம். அதன் விளைவை நாம் காணமுடியாமல் இருக்கலாம். ஆனால் செயல் எனில் விளைவும் உண்டு. நாம் செய்வது நன்று. அந்த நம்பிக்கை நமக்கு வேண்டும்.
அந்த நம்பிக்கை இருந்தால் எழுத்தாளன் என்பது ஒரு சிம்மாசனம். அதில் அமர்வது ஒரு பிறவிநற்கொடை. காலத்தின் மேல் நமக்கொரு இருக்கை அமர்கிறது. நம் காலடியில் வரலாறு ஒழுகி மறைவதை நாம் காண்போம். நம் சூழலில் கொண்டாடப்படும் பல மனிதர்கள் அதில் கணக்குமிழிகளென மறைய நாம் விண்மீன்களென இருப்போம் என அறிவோம்.
எழுத்தாளன் ஆக முதன்மைத்தகுதி என்பது வாசிப்பதே. வாசிப்பினூடாகவே நாம் இங்குள்ள அறிவியக்கத்தை அறிகிறோம். அதை முழுதறிய முடியாது. ஆனால் முடிந்தவரை அறிந்தாகவேண்டும். அறிந்துகொண்டே இருக்கவேண்டும். ஆகவே நல்ல வாசகனே நல்ல எழுத்தாளன். தன் இடமென்ன, தன்னால் ஆவதென்ன என்பதை வாசிப்பின் வழியாகவே எழுத்தாளன் உணரமுடியும்.
வாசித்தான் பிறச் செல்வாக்குக்கு ஆட்படுவோம் என சொல்லும் முட்டாள்கள் உண்டு. அச்சொற்களுக்குப் பொருள் ஒன்றே. தன் சூழலில் இருந்து தன்னிச்சையாக கிடைத்த செல்வாக்குகளுக்கு ஆட்படுவோம், அறிவார்ந்த செல்வாக்குகளை தவிர்ப்போம் என்பதுதான் அது. உலகின் நல்ல எழுத்தாளர்களில் நல்ல வாசகர் அல்லாத எவருமில்லை.
முந்தையவர்களின் செல்வாக்குக்கு உட்படுதலே எழுத்தாளனாவதற்கான தகுதி. முந்தையவர்களில் எவர் முதன்மையானவர்களோ, எவர் உங்களுக்குரியவர்களோ அவர்களின் செலவாக்குக்கு உங்களை முழுதும் அளியுங்கள். அவரை ஆழ்ந்தறியுங்கள். அறிய அறிய அவரை கடப்பீர்கள். அவர்வழியாக உங்களை அறிவீர்கள். அவரை கடந்து செல்லும்போது நீங்கள் மெய்யென நிகழ்வீர்கள்.
எழுத்தாளன் ஆவதற்கான இரண்டாவது தகுதி சிந்திப்பதற்கான பொறுப்பை இன்னொருவரிடம் ஒப்படைக்காமலிருப்பது. எந்த அரசியலமைப்புக்கும் தன் விசுவாசத்தை அளிக்காமலிருப்பது. பிறருடைய நோக்கங்களுக்காக சிந்திக்காமலிருப்பது. என் நோக்கில் ஏதேனும் ஓர் அரசியல்- அல்லது மத அமைப்பைச் சார்ந்து சிந்திப்பவர் அக்கணமே எழுத்தாளரல்லாமல் ஆகிவிடுகிறார். எனக்கு அவர் சொல்வதென்ன என்பதே முக்கியம்.
இலக்கியவாதி ஒருபோதும் பிறன் என்பதை உருவாக்கிக்கொள்ளலாகாது. மதம், சாதி, இனம், மொழி, வட்டாரம் சார்ந்து அயலான் என ஒருவனை உருவகிப்பவன் இலக்கியவாதி அல்ல. அவன் பிறருடைய அரசியல்நோக்கங்களின் ஆயுதம் மட்டுமே.
ஆகவே காழ்ப்பின், வெறுப்பின் மொழியில் பேசுதல் இலக்கியவாதிக்குரிய இயல்பல்ல. எதிர்நிலைபாடு கொண்டவன் பொருட்படுத்தும்படி எதையும் எழுதமுடியாது. எந்த அடிப்படையில் எதிர்நிலைபாடு எடுத்தாலும் சரி. கொள்கை சார்ந்த எதிர்ப்பு என்பார்கள். எதிர்ப்பு என்பதே தன்னளவில் ஒரு பார்வைக்குறுக்கம்தான். எதை எதிர்க்கிறோமோ அதற்கு கீழே நின்றிருப்பதுதான்.
ஆகவே இடைவிடாமல் எதிர்நிலைகளை, கசப்பை, காழ்ப்பை விரித்துக்கொண்டே இருக்கும் சமகால அரசியலில் இருந்து முடிந்தவரை விலகி நில்லுங்கள். இலக்கியவாதியின் அரசியலென்பது சமகால அதிகார அரசியல் அல்ல. அது அவனுடைய அறநிலைபாட்டின் அரசியல். அவனுடைய படைப்புகளில் வெளிப்படவேண்டியது. அவன் எவருடைய கட்சியிலும் நின்று கோஷமிடலாகாது.
இலக்கியவாதியின் தேடல் நேர்நிலையானது. அவன் தேடும் வினாக்கள் அவனுள் இருந்து எழுவன. அவற்றுக்கு வாழ்வில், தத்துவத்தில், ஆன்மிகத்தில் அவன் விடைநாடலாம். அவனே அவனுக்கான சான்றும் அளவுகோலும் ஆவான்.
எழுத்து என்பது இலக்கிய வடிவங்களை உருவாக்குவதல்ல. எந்தப் புதிய இலக்கிய வடிவமும் பத்தாண்டுகளுக்குள் பழையதாகும். ஆகவே புதியதாக என்ன என்று தேடுபவன் எழுத முடியாது. எதை தேடுகிறீர்களோ, எதை அடைந்தீர்களோ அதை நேர்மையாக, முழுமையாக, நேர்த்தியாக முன்வைக்க முயல்க அதற்குரிய வடிவங்களை கண்டடைக. மொழியும் வடிவமும் எல்லாம் அதன்பொருட்டு மட்டுமே இலக்கியத்தில் தேவையாகின்றன
உங்கள் எழுத்து சூழலில் பலரால் பழையதென்றோ, பொருத்தமற்றது என்றோ சொல்லப்படலாம். அது செவிகொள்ளத்தக்க கருத்தல்ல. எழுத்தாளனின் தனிப்பட்ட உண்மையே முக்கியம். அதற்கு எந்நிலையிலும் மதிப்புண்டு. அது ஒருபோதும் பழையது அல்ல. அதன் நேர்மையும் நேர்த்தியுமே இலக்கியத்தின் அளவுகோல்.
இலக்கிய வடிவங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். இலக்கிய அழகியலைக் கற்றுக்கொள்ளுங்கள். இலக்கியத்தை உருவாக்கும் பயிற்சிகள் சில உண்டு. கற்கத்தக்கவை அவை. அவற்றுக்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள். உள்ளுணர்வும் அகத்தூண்டலுமே இலக்கியப்படைப்பின் சாரம். அவற்றைக் கற்கமுடியாது. ஆனால் அவற்றில் என்ன பிழைகள் நிகழுமென கற்றுக்கொள்ள முடியும். அவற்றுக்கான ஆசிரியர்களை, வகுப்புகளை அடைய முடிந்தால் நல்லது.
இலக்கிய வம்புகள் உங்களைச் சூழலாம். ஏனென்றால் இலக்கியத்தை வம்பாகவே காணும் பெருங்கூட்டம் இங்குண்டு. இலக்கிய விவாதங்களில் ஓர் எல்லைவரை வம்புகளை தவிர்க்கவும் முடியாது. இலக்கியம் அதை எழுதுபவர்களின் வாழ்க்கையை விட மேலானது. ஆகவே பொறாமையும் கசப்புகளும் இலக்கியத்தின் இன்னும் தீவிரமானவை.
ஆனால் இலக்கியவாதி வம்புகளுக்குச் செவிகொடுக்கலாகாது. முழுமையாகவே தவிர்த்துவிடவேண்டும். இல்லையேல் எழுதமுடியாது. நான் என்றும் வம்புகளில் அடிபடுபவன். அவற்றை நான் செவிகொடுப்பதில்லை என்பதற்கு என் எழுத்தின் அளவும் தரமுமே சான்றாகும்.
எழுத்தாளன் தன்னை எழுதியே கண்டடைய வேண்டியவன். ஆகவே எழுதிக்கொண்டே இருங்கள். நாள் தோறும். திரும்பத் திரும்ப. எழுதுவதை மேம்படுத்திக் கொண்டே இருங்கள். அந்த மேம்பாடு என்பது எழுத்தில் நிகழ்வதல்ல, உங்கள் சிந்தனையிலும் ஆளுமையிலும் நிகழ்வது. இலக்கியத்தில் வெளிப்படும் எல்லா உண்மைகளும் ஆசிரியனின் தற்கண்டடைதல்களே.
அந்த முன்னகர்விலுள்ள இன்பமே இலக்கியவாதியாக இருப்பதன் மிகப்பெரிய நன்மை. அதை எண்ணி நிறைவுகொள்கையிலேயே இலக்கியம் பொருள் கொண்டதாக ஆகிறது. வாசகர்கள் இருப்பது நன்று. ஆனால் எழுத்தாளனுக்கு வெளியே இருந்து பெரிய சான்றிதழொன்றும் மெய்யாகவே தேவையில்லை.
ஆகவே எழுத்தை மட்டும் முன்வையுங்கள். தன்னை முன்வைக்காமலிருங்கள். எனக்கு அங்கீகாரமில்லை என ஓர் எண்ணம் ஒரு துளியேனும் அகத்தே வந்துவிட்டதென்றால் தமிழகத்தில் எழுத்தாளனாக இருப்பது பெருந்துன்பமென்றே ஆகிவிடும். முதுமையில் அந்நரகத்தில் உழன்று மறைந்த பலரை நான் அறிவேன். அங்கிருந்து கற்றுக்கொண்ட விவேகம் இது.
இலக்கியவாதியென எழுவது தன்னைத்தானே தான் வாழும் சூழலில் இருந்து மேலெழுப்பிக் கொள்வது. நம் சூழல் அறிவுச்செயல்பாட்டுக்கும் கலைக்கும் எதிரானது. அறிவுச்செயல்பாடு மேல் ஆழ்ந்த ஏளனம் கொண்டது. அதன் நடைமுறைப் பயன்மதிப்பென்ன என்று மட்டுமே கேட்டுக்கொண்டிருப்பது. அதை விட்டு மேலேறவேண்டும். அதற்கு சிறகுகள் வேண்டும். மேலேறும் விழைவே சிறகுகளாக ஆகிறது.
சிறகுகள் முளைக்கட்டும். வாழ்த்துக்கள்
ஜெ
எழுத்தாளனுக்கான பாதை
நவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை?
விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடுகள் வாங்க