இலக்கியம், காமம்

யானமும், நம் முதிர் வாசகர்களும்- கடிதம்

வாழ்வும் வாசிப்பும்- மூன்று படிநிலைகள்

இலக்கியம் ஏன் காமத்தை எழுதிக்கொண்டே இருக்கிறது என்று ஒரு நண்பர் நேர்ச்சந்திப்பில் கேட்டார். அண்மையில் அவ்வாறு பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. தமிழ் நவீன இலக்கியத்திற்குள் நுழைபவர்கள் பலர் நவீன இலக்கியம் என்பதே காமத்தைப் பற்றி கொஞ்சம் பூடகமாகப் பேசிக்கொள்ள செய்யப்படும் பாவலாதானா என்ற எண்ணத்தை அடைகிறார்கள். ஏனென்றால் இங்கே பெரும்பாலும் பேசப்படுவது காமமே. வேறெதைப் பேசினாலும் பெரும்பாலானவர்கள் ஆர்வம் காட்டுவதுமில்லை.

காமம் சார்ந்த ஈர்ப்பால், மொழிவழி கற்பனை அளிக்கும் காமக்கிளர்ச்சிக்காகவோ காமம் சார்ந்த பகல்கனவுக்கான புதிய களங்களை கண்டடைவதற்காகவோ வாசிப்பவர்கள் உண்டு. வணிக எழுத்தில் அதன் பல வடிவங்களும் பல படிநிலைகளும் உண்டு. ஆனால் ஒரு வாசகர் இலக்கியப்படைப்பை அதன்பொருட்டு வாசிக்கிறார் என்றால் அவர் ஒரு விடலை. கோயில்சிற்பங்களின் முலைகளை தொட்டுப்பார்த்துக் கிளர்ச்சியடைபவர்களில் அரைக்கிழவர்களைக்கூட கண்டுள்ளேன். அவர்களில் ஒருவர் அந்த வாசகர்.

இலக்கியத்தில் ஆண்பெண் உறவு, காமம் என்பது அதன் பேசுபொருட்களில் ஒன்று மட்டுமே. மானுட இருத்தல், இயற்கை, சாவு என இலக்கியத்தின் பேசுபொருட்கள் அதைப்போல பல உண்டு. காமத்தை அல்லது ஆண்பெண் உறவை மட்டுமே இலக்கியத்தில் தேடுபவர், அல்லது அதை மட்டுமே முக்கியம் என நினைப்பவரை இலக்கிய விடலை என மதிப்பிடுவேன்.

(நாய்க்குட்டிகள் நாலுகால் பரப்பி சிறுநீர் கழிக்கும். ஒற்றைப்பின்னங்கால் தூக்கி சிறுநீர் கழிக்கும்போதுதான் அது முதிர்ந்த நாய் ஆகிறது. விடலைத்தனத்தை ‘நாலுகாலில் மோளுதல்’ என எங்களூரில் சொல்வார்கள். இலக்கிய வாசகர்கள் மட்டுமல்ல எழுத்தாளர்களிலுமே அந்த ‘தூக்கி மோளத் தெரியாத’ வகையினர் உண்டு)

ஓர் இலக்கியப்படைப்பு வாழ்க்கையின் அடிப்படைன் வினாக்கள் அனைத்துக்கும் உரிய இடம்கொடுத்து முழுமைநோக்கை நோக்கிச் செல்லும்போதே அது செவ்வியல் ஆகிறது. அதில் காமம்- ஆண்பெண் உறவு ஓர் அம்சமாக அதற்குரிய இடத்தில் அமைந்திருக்கும். கூடாது, குறையாது.

இங்கே மானுட உறவுகளைப் பற்றி, குறிப்பாகக் காமம்  பற்றி தொடர்ச்சியாக கலை, இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகியவை பேசிக்கொண்டே இருக்கின்றன. அதற்கான காரணம் அதன் ஆதாரவிசை. அதுவே மூலாதாரம் என்று மெய்யியல்- யோக மரபுகள் சொல்கின்றன. அது உயிர்க்குலங்களை இயக்குகிறது. அதன் ஆற்றல் காரணமாகவே அது கட்டற்றது. கட்டற்ற எதுவும் அழிக்கும் விசை கொண்டது. ஆகவே அதன் மேல் கட்டுப்பாடுகள் உருவாயின. அக்கட்டுப்பாடுகளே நாம் காணும் நெறிகளாக ஆயின. அந்நெறிகளே சமூக அடிப்படைகள். எல்லா சமூகங்களும் மானுட உணர்வுகள்மேல் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் விளைவாக உருவானவைதான்.

நெறிகளை வலியுறுத்துவது தொன்மையான இலக்கியங்களின் இயல்புகளில் முதன்மையானது. தொல்நூல்கள் பெரும்பாலும் நெறிநூல்களே. இன்றுவரை இலக்கியத்தில் ஏதேனும் ஒருவகையில் நெறிகளே பேசுபொருளாக உள்ளன. நெறிகளைப் பேசுவது என்ற அடிப்படைக் கடமையில் இருந்து இலக்கியம் வெளியேறவே முடியாது. ஆனால் பேசும் தன்மைகள் காலந்தோறும் மாறிக்கொண்டிருக்கின்றன. நேரடியாக ‘அறன் வலியுறுத்தல்’ தொடக்ககால இலக்கியத்தில் இருந்தது. பின்னர் நெறிகளை கதைகளின் உள்ளடக்கமாக சொல்லும் முறை உருவானது.

நவீன இலக்கியம் உருவான பின்னர் நெறிமீறல்களின் சித்திரங்களை மட்டுமே அளித்து விளைவை நோக்கி வாசகனைச் செலுத்தும் தன்மை உருவானது. நெறிகளின் வழியாக ஒடுக்கப்படும் அகத்தையும் முன்வைக்கும் போக்கு மேலெழுந்தது. நெறியின்மையை மட்டுமே சித்தரிப்பதன் வழியாக நெறிகளை பேசுபொருளாக்குவது ஒரு வகைமையாகியது. நெறிகளின் பல முகங்களை காட்டுவது, நெறிகளை மறுபரிசீலனை செய்வது, புதிய நெறிகளுக்காக விவாதிப்பது ஆகியவை இன்றும் இலக்கியத்தின் பேசுபொருட்களே.

இன்று, பின்நவீனத்துவத்திற்கு பிந்தைய காலகட்டத்தில் அறம் அல்லது நெறிகள் மீண்டும் வலுவான பேசுபொருட்கள் ஆகியுள்ளன. அவற்றின் மேல் முந்தைய கால இலக்கியங்கள் முன்வைத்த எல்லா விமர்சனங்களையும் உள்ளடக்கியபடி அறத்தின் இருப்பை, செயல்பாட்டை, பன்முகத்தன்மையை உசாவும் எழுத்துக்கள் உருவாகி வருகின்றன.

இந்த நீண்ட இலக்கிய- கலை மரபின் பரிணாமத்தில் எவ்வாறெல்லாம் காமம் பேசப்பட்டுள்ளது? முதன்மையாக காமத்தின் மீதான அறக்கட்டுப்பாட்டை கூறும்பொருட்டு. இரண்டாவதாக, காமத்தை காதல் என்றும், வேறுபல நுண்ணுணர்வுகளாகவும் உருமாற்றம் செய்து உன்னதப்படுத்தும்பொருட்டு. இந்த உன்னதமாக்கல் (Sublimation)  மூன்றுவகைகளில் நிகழ்கிறது

அ. நுண்மையாக்கம்

தொன்மையான இலக்கியங்களில் காமம் எப்போதுமே உள்ளத்தின் நிகழ்வாக நுண்மையாக்கம் செய்யப்படுகிறது. உடல்சார்ந்த விழைவுகள், துயரங்கள் எல்லாம் உளநிகழ்வுகளாக காட்டப்படுகின்றன. உள்ளத்தின் வெவ்வேறு நிலைகளாகவும் அலைவுகளாகவும் காமம் உருமாற்றம் செய்யப்படுகின்றது. சாலமோன் பாடல்கள் முதல் சங்க இலக்கியங்கள் வரை முதல் இதைக் காணலாம். திருக்குறளின் காமத்துப்பால் நுண்மையாக மட்டுமே காமத்தைச் சொல்வதன் சிறந்த உதாரணம்.

ஆ. அழகியலாக்கம்

செவ்வியல் நூல்களில் இயற்கையுடன் இணைத்து அழகியலாக்கம் செய்யப்படுகிறது. காமத்தை இயற்கையின் வெவ்வேறு நிலைகளாக விளக்குவது உலகமெங்கும் இலக்கியத்தில் உள்ளது. தமிழ்ச் சங்ககால ஐந்திணை இலக்கணம் அதை முழுமையான ஓர் அழகியலமைப்பாக முன்வைக்கிறது.

இ.உருவகமாக்கம்

காமத்தை பிரபஞ்சக் கருத்துக்களின் உருவகமாக ஆக்கும் பண்பு மிகத்தொன்றுதொட்டே இலக்கியங்களிலுண்டு. வானத்தையும் மண்ணையும் ஆண்பெண்ணாகவும், மழையை காமநிகழ்வாகவும் உருவகிப்பது பழங்குடிகளின் வாய்மொழி இலக்கியங்களிலேயே இருந்து வருகிறது. புனித ஜான் பாடல்கள் முதல் புனித அல்போன்ஸா பாடல்கள் வரை,  நம்மாழ்வார் முதல் பாரதியாரின்  பாடல்கள் வரை, ரூமி கவிதைகள் முதல் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள் வரை பேரிலக்கியங்களின் அகத்துறைச் சித்தரிப்பு என்பது உருவகத்தன்மை கொண்டதே.

இந்த மூன்று வழிகளினூடாகவும் காமம் உன்னதப்படுத்தப்படுகிறது. இலக்கியம் விவாதிக்கும் காமம் என்பது பெரும்பாலும் இந்த உன்னதமாக்கல் நோக்கம் கொண்டதாகவே இருக்கும். நேரடியாகக் காமத்தைச் சித்தரிப்பதும் அதில் திளைப்பதும் உலகமெங்கும் செவ்வியல் இலக்கியத்தின் வழிமுறையாக இல்லை.

நவீன இலக்கியம் உருவான பின்னர் அந்தச் செவ்வியல் அணுகுமுறைக்கு எதிரான போக்குகள் உருவாயின. நவீன இலக்கியம் எதையும் ‘நிறுவும்’ நோக்கம் கொண்டது அல்ல.  ’ஆராயும்’ நோக்கம் கொண்டது. ஆகவே காமம் சார்ந்த செவ்வியல் பார்வையை அது உடைத்து ஆராய்ந்தது. அதன்பொருட்டு காமத்தை ‘நேரடியாக’ ’வெளிப்படையாக’ சித்தரிக்கும் போக்கை அது மேற்கொண்டது. பதினெட்டாம் நூற்றாண்டு முதல் இலக்கியங்களில் காமம் சார்ந்த உளஅலசல்களும், மீறல்களின் சித்திரங்களும் இப்படித்தான் முதன்மைப்பட்டன.

அதன்பின் நவீனத்துவக் காலகட்டத்தில் ‘கறாராக’ ‘உள்ளது உள்ளபடி’ காமத்தை காட்டும் போக்கு கூர்மைப்பட்டது. எந்தவிதமான பூச்சும் இல்லாமல், கனவுகளும் மயக்கங்களும் இல்லாமல், வாழ்க்கையைப் பேசவேண்டும் என்பதே நவீனத்துவ இலக்கியங்களின் கொள்கை. ஆகவே சுந்தர ராமசாமியின் சொற்களில் சொல்லப்போனால் ’அறுவைசிகிச்சைக் கத்தியின் கூர்மை’யுடன் அவை மானுட உள்ளங்களை ஆராய்ந்தன. அதற்கு ஃப்ராய்டியம் அவற்றுக்கு கருவியாயிற்று. விளைவாக காமத்தை அவை சுருக்கமாகவும், உளவியல்சார்ந்தும் ஆராய்ந்தன.

அதற்குப்பின் பின்நவீனத்துவ எழுத்துமுறை நவீனத்துவத்தின் கூர்மை, ஒருமை ஆகியவற்றை நிராகரித்தது. அதன் புறவயத்தன்மை, ஆய்வுநோக்கு ஆகியவற்றை ஐயப்பட்டது. சிதறலான, கட்டற்ற வடிவை முன்வைத்தது. ஒருமைக்கு எதிரான உரையாடல்தன்மையை தன் இயல்பாகக்க் கொண்டது. ஆகவே காமத்தை கட்டற்றச் சித்தரிப்பாக அது கையாளத் தொடங்கியது.

இவ்வாறு காமம் இலக்கியத்தில் எப்போதுமே பேசுபொருளாக உள்ளது. ஆனால் இலக்கியம் எப்போதுமே காமத்தை மையப்பொருளாகக் கொண்டதில்லை. அது காமத்தை வாழ்க்கையின் அடிப்படை விசைகளில் ஒன்றாக, உறவுகளைத் தீர்மானிக்கும் காரணியாக மதிப்பிடுகிறது. இயற்கை பிரபஞ்சம் ஆகியவற்றை விளக்கும் உருவகமாக கையாள்கிறது. எளிய வாசகர்கள் காமத்தை வாசித்து அவற்றிலேயே நின்றுவிடுவார்கள். முன்செல்பவர்களே இலக்கியத்தினூடாகப் பயணம் செய்பவர்கள்.

முந்தைய கட்டுரைவேதாரண்யம் வேதமூர்த்திப் பிள்ளை
அடுத்த கட்டுரைஎன்றுமுள்ள குருதி – கடிதம்