அன்புள்ள ஜெமோ
மனுஷ்யபுத்திரன் தேவநேயப் பாவாணர் அரங்கை மீட்டு அமைத்ததற்கு ஒரு பெரிய பாராட்டைத் தெரிவித்திருக்கிறீர்கள். அவருக்கும் உங்களுக்கும் பல கொடுக்கல் வாங்கல்கள் இருக்கலாம். அவர் இன்றைக்கு அதிகாரத்தில் இருக்கிறார். நீங்கள் அவருக்கான கப்பத்தைக் கட்டலாம். ஆனால் அதை உங்கள் வாசகர்கள்மேல் சுமத்தக்கூடாது.
அவர் செய்த அந்தச் சாதனைதான் என்ன? ஒரு அரசாங்க மராமத்துப் பணி. அவ்வளவுதானே? அரசாங்கம் சாலைபோட்டால், குடிநீர் தந்தால் மக்கள் நன்றி அறிவித்து போஸ்டர் ஒட்டவேண்டும் என்ற மரபு தமிழகத்திலே மட்டும்தான் உள்ளது. கேரளத்திலே உண்டா என்ன? அது நம் வரிப்பணம் வாங்கி அவர்கள் செய்யவேண்டிய கடமை.
அடுத்ததாக அண்ணாசாலையில் சிக்னல் அமைத்ததற்காக சுடாலினுக்கு நன்றி சொல்வீர்களா?
தியாகராஜன் மாம்பாக்கம்
அன்புள்ள தியாகராஜன்
மனுஷ்யபுத்திரன் தேவநேயப்பாவாணர் அரங்கை மேம்படுத்தியது அரசு நிதியில் அல்ல. அரசிடம் அவ்வளவு நிதி இன்று இல்லை. அவருடைய சொந்த தொடர்பால் ஒரு தொழிலதிபரின் கொடையை பெற்று அதைச் சீரமைத்திருக்கிறார். ஆகவே அதை பாராட்டியே ஆகவேண்டும்.
ஓர் உரையில் அதைச் சுட்டிக்காட்டியாகவேண்டும் என்று எனக்குப் பட்டது. அந்த அரங்கில் நிகழும் உரை என்பதனால். அப்பதிவு என்றும் யூடியூபில் இருக்கும். ஏனென்றால் என் உரை அரசியல் கடந்தது, என்றுமுள்ள சிலவற்றைச் சொல்வது. இருபத்தைந்தாண்டுகளுக்குப் பின் இந்த உரையே இச்செயலுக்கான ஆவணமாகவும் இருக்கும்.
எனக்கு அவ்வரங்கு நல்ல நினைவுகள் கொண்டது. எனக்காக மனுஷ்யபுத்திரன் எடுத்த இரு விழாக்கள் அங்கே நிகழ்ந்துள்ளன. அங்கே சிற்றரங்கில்தான் விஷ்ணுபுரம் நாவல் வெளியீட்டுவிழா 1998ல் நிகழ்ந்தது.
மனுஷ்யபுத்திரன் இன்றிருப்பது ஒரு சிறிய பதவி. அப்பதவியில் இருந்தபடி அவர் செய்யும் செயல்கள் மிகுந்த திட்டமிடலும், ஊக்கமும் உடையவை. அரங்குகளை மீட்டு எடுப்பது மட்டுமல்ல, தன் கட்டுப்பாட்டிலுள்ள நூலகங்களில் எல்லாம் தீவிரமான இலக்கியச் செயல்பாடுகளை செய்கிறார். மாணவர்களை பெருவாரியாக பங்களிக்க வைக்கிறார். நீண்டகால அளவில் தமிழ்ப்பண்பாட்டுக்கு பயனளிப்பவை. அவை அரசியல்ரீதியாக திமுகவுக்கு என்ன பயன் அளிக்கும் என எனக்குத்தெரியவில்லை – அந்த கணிப்பு இல்லாமலேயே அதைச் செய்கிறார்.
ஓர் இலக்கியவாதி அரசியலுக்குச் செல்லும்போது நாம் அவரிடம் எதிர்பார்ப்பது இதையெல்லாம்தான். இதைதான் கோருகிறோம். செய்தால் பாராட்டவேண்டியது நம் கடமை. நான் எனக்கான செயல்களை தவறவிடுவதில்லை. அவர் என் ‘நண்பர்’ என நான் தான் சொல்கிறேன். அவர் அப்படி எண்ணவில்லை என அனைவருக்கும் தெரியும். அவருக்கும் எனக்கும் எந்த நெருக்கமும் இன்று இல்லை. ஆகவே என் பாராட்டு மதிப்பு மிக்கது.
என் அணுகுமுறை எப்போதுமே இதுதான். சு.வெங்கடேசன் பற்றி முன்பு ஏதோ எழுதியபோதும் இதே போன்ற ஒரு கடிதம் உங்களிடமிருந்து வந்ததை கண்டடைந்தேன். சு.வெங்கடேசனின் அரசியலோ, கருத்துக்களோ எனக்கு ஏற்புடையவை அல்ல (எனக்கு எந்த அரசியலும் இன்று ஏற்புடையதாக இல்லை). அவருக்கும் எனக்கும் எந்த தனிப்பட்ட அணுக்கமும் இல்லை.
ஆனால் கோவிட் தொற்றுக்காலத்தில் இருபத்துநான்கு மணிநேரமும் (ஆம், மெய்யாகவே நள்ளிரவிலும் பின்னிரவிலும்கூட) அவர் மக்களுடன் நின்றார். செய்யத்தக்க எல்லா உதவிகளையும் செய்தார். அவருடைய தொகுதிக்கு மட்டுமல்ல, நாகர்கோயிலுக்கும்கூட. அதை குறிப்பிடாமலிருக்கும் அளவுக்கு எனக்கு அரசியல் காழ்ப்புகளேதுமில்லை.
நான் திமுக ஆதரவாளன் அல்ல, எதிர்ப்பாளனும் அல்ல. எனக்கு அவர்கள்மேல் பெரிய ஆர்வமில்லை. ஆனால் அண்மைக்காலத்தில் நாகர்கோயில் கண்ட மிகச்சிறந்த மேயர் இன்றிருக்கும் திமுகக் காரரான வழக்கறிஞ மகேஷ்தான் என்று சொல்ல நாகர்கோயில்காரனாக எந்த தயக்கமும் இல்லை. கிட்டத்தட்ட சிரியா லெபனான் அளவுக்கு சீரழிந்து கிடந்த நாகர்கோயிலை மீட்டுவருபவர் அவர். அவரிடம் எந்த ஒரு விஷயத்துக்கும் சென்று நிற்கப்போவது இல்லை என்பதனால் இச்சொல் மதிப்பு மிக்கது என்று நான் நினைக்கிறேன்
அரசியல்சார்புக்கு அப்பால் ‘சாமானியக் குடிமகன்கள்’ என சிலர் உண்டு. அவர்கள் உண்டு என நம்பினாலொழிய நீங்கள் தேர்தல்களில் ஜெயிக்கப்போவதில்லை – உங்கள் அரசியல் எனக்குத் தெரியும். நன்றி
ஜெ