சிங்காரவேலர் – ஒருகடிதம் ,விளக்கம்.

சிங்காரவேலர்

ஜெயமோகன்,

எவனோ ஒருவன் என்றைக்கோ பிராமணனை வெறுத்தான் என்றால் அவன் ஒரு பிராமண அறிஞனை வெறுத்ததுக்கெல்லாம் அதற்கும் பிராமணனே காரணம் என்பதைப்போல எழுதுகிற எழுத்துமுறை எவ்வளவு கழிசடைத்தனமானது. மேலும் நீங்கள் எழுதியிருப்பதெல்லாமே  தவறு . அடிப்படைத்தகவல்கள்கூடத் தவறு. இதையெல்லாம் தெரிந்துதான் நீங்கள் எழுதியிருக்க வேண்டும். கோசாம்பி,அயோத்திதாசரைச் சந்தித்ததெல்லாம் 1900த்திலே. அதேபோல சிங்காரவேலு என்பவர் முதலியாரே கிடையாது. அவர் மீனவர். அரசாங்கமே அப்படிச் சொல்லி அவருக்கு மாளிகை கட்டியிருக்கிறது. முதலில் நீங்கள் சொன்ன விக்கிபீடியா கட்டுரையையே வாசிக்கவும். உலகப்போர் முடிந்த பிறகு சிங்காரவேலு அயோத்திதாசரைச் சந்தித்தார் , உலகப்போரிலே பிராமணர்கள் பிராமணரல்லாதவர்களைச் சுரண்டியதனால்தான் சிஙாரவேலருக்குப் பிராமண வெறுப்பு என்றெல்லாம் உளறி வைத்திருக்கிறீர்கள். பிராமணர்கள்தான் எல்லாத்துக்கும் காரணம் என்று சொல்வதற்கு இவ்வளவு உளறல்கள் தேவையா உங்களுக்கு?

ரமணன் சென்னை

அன்புள்ள ரமணன்,

கடிதத்தைச் சுருக்கியிருக்கிறேன். மையக்கருத்துக்கள் எல்லாம் இருக்கும்படியாக.

என்னிடம் ஐந்து வெவ்வேறு நூல்கள் உள்ளன. நான்கில் மூன்றில் சிங்காரவேலரின் இயற்பெயர்  மயிலாப்பூர் சிங்காரவேலு செட்டியார் என்றும் ஒன்றில் மயிலை. சிங்காரவேலு முதலி என்றும் உள்ளது.  அதில் ஒன்று இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் அதிகாரபூர்வ வரலாறு.

நான் அறிந்தவரை அவரது இயர்பெயர் ம.சிங்காரவேலு செட்டியார் என்றே ஆவணங்கள் சொல்கின்றன. பெரும்செல்வந்தக் குடும்பத்தைச்சேர்ந்தவர்.சட்டம் பயின்றவர். அக்காலகட்டத்தில் பிள்ளை,செட்டி, முதலி ஆகிய பட்டங்கள் மாறி மாறிச் சொல்லப்படுவது வழக்கமே என்பதை ஓரளவு வாசிக்கும் பழக்கம் உடையவர் அறியலாம். ஆகவே என் கட்டுரையில் ஜடாயு சொன்னதை ஒட்டி நானும் முதலியார் என்று சொன்னேன், அது ஒரு நினைவுப்பிழை அல்லது புரிதல்பிழை.

அவர் மீனவசமூகத்தைச் சேர்ந்தவர் என சமீப காலமாகச் சொல்லப்படுவதை நான் இணையச்செய்திகளில் வாசித்தேன். அது எனக்கு இன்னும் குழப்பமாகவே இருக்கிறது. செட்டி, முதலி, பிள்ளை போன்ற அடைமொழிகள் குடும்பப் பட்டங்களாகத் தென்மாவட்டங்களின் மீனவ சமூகத்திலும் உண்டு.  ஒருவேளை இது அந்த வகையான பெயரா எனத் தெரியவில்லை. தென்மாவட்டங்களில் இவ்வாறு பட்டம் கொண்ட  மீனவக்குடும்பங்கள் பட்டக்காரர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் மீனவத்தொழில் செய்பவர்கள் அல்ல. வரிவசூல் உரிமை கொண்டவர்கள், பெருவணிகர்கள், நிலக்கிழார்கள். மீனவச்சாதிக்குள்  ஆதிக்க சாதி என்றே இவர்களைச் சொல்லலாம். பிற மீனவர்களுடன் மண உறவு வைத்துக்கொள்பவர்கள் அல்ல.  தென்னகத்தில் மதம் மாறியபின்னரும் இந்தக் குலமேன்மையைத் தக்கவைத்துக்கொண்டார்கள். இவர்களின் சமூக இடமும்  பிராமணரல்லாத இரண்டாம்நிலை ஆதிக்கசாதிக்குரியதே.

சிங்காரவேலரின்  பிராமணவெறுப்பு என்பது ஒரு தனிப்பட்ட உளச்சிக்கல் அல்ல, அக்காலகட்டத்து சமூகச்சூழலால் உருவாக்கப்பட்டது என்று பார்ப்பதே வரலாற்று நோக்கு என்பதே என் தரப்பு. என் கட்டுரையில் மிகத்தெளிவாகவே அதைச் சொல்லியிருக்கிறேன். பிரிட்டிஷ் அரசு உருவான காலகட்டத்தில் ஒரேசமயம் பிராமணர்களின் எழுச்சியும் நிலவுடைமைச்சாதிகளின் சரிவும் நிகழ்ந்தது. பிராமணர்கள்  ஒரு வடக்கத்தியஅடையாளம் தேடினர். பிறர்மேல் ஆதிக்க உணர்ச்சியையும் காட்டினர். விளைவாக பிராமண எதிர்ப்புணர்வு உருவானது. அது உருவான தொடக்க காலகட்டத்தைச் சேர்ந்தவர் சிங்காரவேலர்.

அதையே ‘இந்த வெறுப்புக்கள் முனைதிரண்டுவந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர் சிங்காரவேலுமுதலியார். அவரது தனிப்பட்ட காழ்ப்பாகவோ அல்லது அவரது ஆளுமையின் இருண்ட பக்கமாகவோ நான் அவரது பிராமண வெறுப்பைக் காணவில்லை. அதற்கான சமூகக் காரணங்கள் அன்று இருந்தன’ என்று திட்டவட்டமாகச் சொல்கிறேன்.

அவருக்கும் திராவிட இயக்கத்துக்கும் என்ன உறவு என்ற ஜடாயுவின் வினாவுக்கு விடையாக அந்த பிராமண எதிர்ப்புணர்ச்சி  மெல்ல சைவஎழுச்சியாகவும் பின் தமிழ் அடையாள மீட்பியக்கமாகவும்  கடைசியாக திராவிட இயக்கமாகவும் உருவானது என்று சொல்கிறேன். இரு உலகப்போர்களின் வரிவசூல் நெருக்கடிகள் வழியாக பிராமண -பிராமணரல்லாதார் பிளவு துல்லியப்பட்டு திராவிட இயக்கமாகப் பரிணாமம் கொண்டது.

இதெல்லாம் ஒன்றும் நான் ஆராய்ந்து சொல்லும் ரகசியத் தகவல்களும் அல்ல. சாதாரணமான வரலாற்றுச்சித்திரம்தான். சிங்காரவேலரை இந்த விரிந்த பின்னணியில் வைத்துப்பார்க்கலாமென்பதே என் சித்திரம்.

இதைவிடவும் தெளிவாக எப்படி எழுதுவதென்று எனக்குத் தெரியவில்லை.

ஜெ

சிங்கார வேலரின் பிராமண வெறுப்பு

முந்தைய கட்டுரைஉங்கள் கதைகள்-கடிதம்
அடுத்த கட்டுரைஅண்ணா ஹசாரே மீண்டும்