அன்புள்ள ஆசிரியருக்கு,
வாழ்வே துன்பம் என்று போய்க் கொண்டிருந்தபொழுது உங்களுடைய கட்டுரைகளை அவ்வப்போது வாசித்து வந்தேன்.வாழ்விலேயே மகிழ்ச்சி மதுவில் தான் இருக்கிறது என்று இருந்து சிறு வாசிப்பின் வழியாக மீண்டு வந்தேன்.அறிவுச் செயல்பாட்டுக்கு உடல் மிக அவசியம் என்று நீங்கள் சொன்னது தான் அதன் காரணம்.பின் உங்களின் எழுத்துக்கள்,பேச்சுக்கள் வழியாக தத்துவ அறிமுகம் பெற்று வாழ்வை அறிய வேண்டும் என்று ஞானிகளை தேடிச் சென்றேன்.அதற்கும் தங்களின் வழியே சென்று ஊட்டி நாராயண குருகுலத்தில் சுவாமி வியாச பிரசாத் அவர்களை சந்தித்து பேசி வந்தேன்.பின் சிறு யோக பயிற்சிகள் இந்திய தத்துவ மூல நூல்களின் அறிமுகம் ஏற்பட்டு.அதன் பெருமைகளை பிறர் வாய் சொல்ல கேட்டு நீண்ட நாட்கள் கழித்தேன்.
கடந்த செப்டம்பரில் முதுகலை தத்துவம் படிக்க ஹைதராபாத் பல்கலைகழகத்தில் சேர்ந்தேன்.வகுப்பறைகள் நான் எண்ணுவதை எனக்கு அளிக்கவில்லை என்று தோன்றி சரிவர செல்லவில்லை.காலையில் இருந்து மாலை வரை வெறுமனே அமர்ந்து இருப்பது போல எண்ணம் ஆட்கொண்டு தவறான முடிவாக அதை கருதி வருகிறேன்.என்னையே இழந்து விட்டதாக ஒரு எண்ணம் மூடுபனி போல என்னை மறைத்துக் கொண்டிருக்கிறது.பழைய மாதிரியே திரும்பிக் கொண்டு இருக்கிறேன்.நான் ஏதும் செய்யாமல் இருக்க இயலாது,உலகமோ,உற்றாரோ அப்படி இருக்கவும் விடப்போவதில்லை.அதனாலேயே தவறான முடிவுகளை எடுத்துக் கொண்டே இருக்கிறேன் என்று தோன்றுகிறது.உங்களை வந்து ஒரு முறை சந்தித்த போது வாசிப்பும் எழுத்தும் தீவிரமாக செய்யப் படாமல் ஒழிய கைசேருவது கிடையாது.அதை பயிற்சியாக செய்ய வேண்டும் என்று கூறினீர்கள்.இன்று நான் ஒரு தவறான முடிவில் சிக்கிக் கொண்டதாக உணர்கிறேன்.
எனக்கு ஏதாவது நீங்கள் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.என் சூழலில் நான் யார் பேச்சையும் கேட்காதவன்.ஆணவத்தினால் அல்ல ஏற்க ஒப்புக்கொள்ளாமல்.நீங்கள் சொல்லுங்கள்.நான் நம்பிக்கையோடு பார்க்கும் முதன்மையானவர் தாங்கள் தான்.நன்றி
கே
அன்புள்ள கே,
மீண்டும் மதுவுக்கு திரும்புகிறீர்கள் என்றால் அதற்குக் காரணம் உங்கள் கல்லூரிக் கல்விமுறையோ, உங்கள் சுற்றமோ ஒன்றும் அல்ல என்பதை உணருங்கள். அப்படித் திரும்புபவர்கள் எல்லாருமே இப்படி ஏதாவது காரணங்களைக் கற்பித்துக் கொள்வதே வழக்கம். ஏனென்றால் அவர்களால் பிழை தங்களிடம் இருப்பதை உணர முடியாது.
பிழை என்பது உங்கள் உள்ளத்தில் அல்லது சிந்தனையில் இல்லை. உடலில் இருக்கிறது. உடல் எந்த ஒரு பழக்கத்தையும் எளிதில் விட்டுவிடாது. உடல் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கும். திரும்பத் திரும்ப அதைநோக்கியே செலுத்திக் கொண்டிருக்கும். டீ, காபி உட்பட எல்லா பழக்கங்களும் அவ்வாறே. அவற்றில் மூளையுடன் தொடர்புள்ள மது, சிகரெட் போன்றவை இன்னும் ஆழமாக உள்ளிழுக்கக்கூடியவை. ஏனென்றால் உடலின் மிக நுட்பமான உறுப்பு மூளை.
மூளை மீண்டும் போதையை விரும்பும். அங்கே செல்ல எல்லா காரணங்களையும் உருவாக்கிக் கொள்ளும். உங்கள் சிந்தனைகள் எல்லாம் உடல் உருவாக்கிக்கொள்வதே. அவற்றுடன் ஈவிரக்கமில்லாமல் போராடுவதே நீங்கள் செய்யவேண்டியது. உங்கள் மூளையை இரண்டாக நீங்களே உணரவேண்டும். ஒன்று உங்கள் சிந்தனையால். அறிவால் உருவான ஒரு பகுதி. இன்னொன்று மூளை தன்னியல்பான விழைவால் செல்லும் இன்னொரு பகுதி. முதல் பகுதி இரண்டாம் பகுதியை வெல்லவேண்டும். அந்த போராட்டத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் அதை நிகழ்த்தவேண்டும். ஒவ்வொரு காலையிலும் அதை நினைவுகொண்டு விழிக்கவேண்டும். அதில் வென்றே ஆகவேண்டும்.
கல்வி என்பது இன்று மிக அரிய சூழல்களைத் தவிர ‘ஊக்கமூட்டும்’ அல்லது ‘முழுமையாக ஆட்கொள்ளும்’ தன்மை கொண்டது அல்ல. அதன் இயல்பே படிப்படியாக உங்களை பயிற்சி எடுக்கச் செய்து ஒரு தளத்தில் பரந்துபட்ட அனுபவம் உடையவராக ஆக்குவது மட்டுமே. கல்வி அளிக்கும் சான்றிதழ் ஒரு தகுதி. நீங்கள் வேறு எதைக் கற்றாலும் அந்த தகுதியை நீங்கள் மட்டுமே அறிவீர்கள், ஓர் அறிவார்ந்த சூழலில் ஒருவேளை அது ஏற்கப்படலாம். ஆனால் நிறுவனக் கல்வியின் சான்றிதழ் இந்த உலகத்தால் புறவயமாக ஏற்கப்படுவது. அதற்காகவே கற்கிறோம். அந்தக் கல்வியை தொடர்க. அந்த அடையாளம் மிகமிக முக்கியம்.
ஆனால் அதை நிகழ்த்த உங்கள் மூளையில் 10 சதவீதமே போதும். எஞ்சிய மூளையை சும்மா வைத்திருப்பதே உங்கள் சிக்கல். அதற்கு இரை கொடுங்கள். அதற்கு இன்றைய சூழலில் வாசிப்பு, எழுத்து மட்டும் போதாது. ஏனென்றால் அவை தனிமையை அளிக்கக்கூடும். இப்போது தேவை பலருடன் சேர்ந்து செய்யத்தக்க செயல்கள். அவை எவையானாலும் சரி. ஏதேனும் செயலமைப்பில் சேர்ந்து பெரும்பொழுதை அதற்கு அளியுங்கள்.
இதேபோன்ற ஒரு சூழலில் ஒரு நண்பர் இஸ்கான் (ஹரே ராமா ஹரே கிருஷ்ணா) அமைப்பில் சேர்ந்தார். சில மாதங்களில் முழுமையாக விடுபட்டுவிட்டார். ஏனென்றால் அங்கே ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகளுண்டு, சேவைகளுண்டு. அதைப்போன்ற எந்த அமைப்பானாலும் சரி. அதுவே இன்று முக்கியம். சுயசிந்தனை, வாசிப்பு ஆகியவை இந்த தேக்கநிலை, இந்த திசைதிரும்பல் முழுமையாக அகன்றபின்னர்கூட வந்துசேரலாம்
வாழ்த்துக்கள்
ஜெ