ஜெ,
கல்லூரி முடிக்கும்வரைக்குமே எனக்கும் புத்தகங்களுக்கும் எந்தவித தொடர்பும் இருந்ததில்லை. சிறுவயதில் டீவியில் தொடர்களைப் பார்த்துவிட்டு, அதேபோல மந்திரக் கதைகளைக் கைப்பட ஒரு நோட்டுப்புத்தகம் மொத்தமும் எழுதிய நினைவு இன்றும் உள்ளது. பிறகு கல்லூரி காலத்தில் என் நண்பர்களைக் கொண்டு ஒரு கதை. பிறகு முகநூலில் சேர்ந்தேன். அங்குத் தொடராகக் கதை எழுதினேன். இப்படி எழுத்துதான் என்னிடம் முதலில் வந்தது. அதைச் சார்ந்தே – அதை மேம்படுத்தும் பொருட்டே நான் வாசிப்பை நாடினேன்.
பொன்னியின் செல்வன், எழுத்தாளர் சுஜாதா புத்தகங்கள் எனத் தொடங்கி, தீவிர இலக்கியம் என்ற கருதுகோள்தெரியாமலேயே உங்களது புத்தகங்கள்வரை பயணித்து வந்தேன். கொரோனா காலக்கட்டத்தில் நான் உங்களுடைய ‘நாவல்‘ புத்தகத்தை வாசித்தேன். அங்கிருந்துதான் என் அலைக்கழிப்பு தொடங்கியது. அந்தப் புத்தகம் என்னால் புரிந்து கொள்ள முடியாத பலவற்றை தொடர்ந்து முன்வைத்தது. அங்கிருந்து மேலும் மேலும் எழுத்தைச் சார்ந்த புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். உங்களுடைய புத்தகங்களிலேயே எழுதும் கலை, வணிக இலக்கியம், எழுதுக போன்ற புத்தகங்களைப் படித்தேன். எல்லாமே திரும்பத் திரும்ப என்னிடம்வந்து ‘எழுது‘ என்ற சொல்லில்தான் நின்றது.
உண்மையில் நான் எழுத அஞ்சுகிறேன். ஒன்றும் அறியாத காலங்களில் எழுத்தில் நான் கொண்டிருந்த கொண்டாட்டமும், மகிழ்வும் ஐயங்களாலேயே விலகிச் செல்கின்றன. ஒரு தவறான – மோசமான படைப்பை எழுதிவிடுவேனோ என்ற அச்சமே என்னிடம் உள்ளதாக எண்ணுகிறேன். அதற்குத் திரும்பத் திரும்ப எழுத முனைகிறேன். ஆனால் கதையில், உணர்வுகளின் ஆழம் போதவில்லை; நிகழ்வுகளுக்கான காரணங்கள் முறையே அமையவில்லை; இந்த முடிவு – இந்தக் குரல் – இந்தச் செயல் சரியா? போன்ற கேள்விகள் என்னை மீண்டும் பின்னிழுக்கின்றன. இவற்றைச் சரி செய்யப் போராடுகின்றேன்.
அண்மையில் உங்களது பதிவுகளில் ஒன்றில், ‘ஆசிரியர் இல்லையென்றால் அடிப்படையான பிழைகளாலேயே நாம் அதிகம் அலைக்கழிய வேண்டியிருக்கும்‘ என்ற சொற்றொடரை வாசித்தேன். அங்கே அப்படியே நின்று கொண்டேன். நான் அப்படியான பிழைகளால்தான் அலைந்து கொண்டிருக்கிறேன்.
நீங்கள்தான் என் ஆசிரியர். அந்த அடிப்படைப் பிழைகளைச் சரிசெய்து கொள்ள காத்திருக்கிறேன்.
தினேஷ்
அன்புள்ள தினேஷ்,
ஒருவர் ஏன் எழுதவேண்டும்? (சரி, ஏன் தனக்குரிய செயல் என எதையாவது ஏன் செய்யவேண்டும்?). புகழ்,பணம், ஏற்பு, வரலாற்றில் இடம் எல்லாமே வரும்தான். ஆனால் அவற்றை எண்ணி செயல்படுபவர் எவராயினும் கசப்பை, தனிமையை மட்டுமே சென்றடைவார்.
ஒரு செயலைச் செய்வது அடிப்படையில் அது அளிக்கும் மகிழ்ச்சிக்கும் மனநிறைவுக்குமாகவே. செயல் எப்படி மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கிறது? முதல் விஷயம் அத்தகைய ஒரு செயல் வழியாக நாம் நம்மைக் கண்டடைகிறோம். நம்முடைய திறன் என்ன, நம்மால் என்ன செய்ய முடியும் என அறிகிறோம். நாம் கற்பனைத்திறன் கொண்டவர்களா, ஒருங்கிணைப்புத் திறன் கொண்டவரா என்றெல்லாம் நமக்கே தெரியவரும்போது உருவாகும் தன்னறிதலே செயலின் முதன்மையான பயன். செயலாற்றுவோர் தன்னம்பிக்கை கொண்டவர்கள் ஆவது அப்படித்தான்.
உங்கள் செயற்களம் எழுத்து எனக் கொண்டால் அதை முழுமூச்சுடன் செய்யவேண்டியதுதான். நீங்கள் அஞ்சவேண்டியதும் தவிர்க்கவேண்டியதும் அதில் உண்டாகும் தேக்கநிலையைத்தான். அந்த தேக்கம் இரண்டு காரணங்களால் உருவாகும்.
ஒன்று. புதியதாக எதையும் கற்றுக்கொள்ளாமல், உங்கள் செயல்திறனை மேம்படுத்திக்கொள்ளாமல், செய்வதையே திரும்பச் செய்துகொண்டிருத்தல். எழுத்தாளர் என்றால் வாசித்துக்கொண்டே இருக்கவேண்டும். உங்களுக்குரிய தேடல்கொண்ட களங்களில் தொடர்ச்சியாக முழுமூச்சாக வாசிக்கவேண்டும். உங்கள் சமகால இலக்கியங்களை வாசிக்கவேண்டும். என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
அந்த வாசிப்பு வழியாக நீங்களே உங்கள் எழுத்தை மதிப்பிட்டுக்கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக மேம்படுத்திக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு அணுவாவது முன்னகர்ந்திருக்க வேண்டும். எழுத்தில் புதியதாக ஏதாவது நிகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும். அவ்வாறு ஒவ்வொரு புது முன்னகர்வும் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். செயல்படுகிறோம் என்னும் நிறைவை அளிக்கும்.
இரண்டு: எழுத்தை தன் அகம் அறிந்தபடிச் செய்யவேண்டும். வாசகர்களை முன்வைத்து அவர்களை நிறைவுறச்செய்யும் நோக்குடன் எழுதக்கூடாது. அது உங்கள் தனித்தன்மையை இல்லாமலாக்கி, வாசகர் விரும்புவதை உருவாக்கும் தேக்கநிலைக்குக் கொண்டுசெல்லும். எழுத்தாளர் தன் லட்சிய வாசகருடன் அகத்துள் பேசிக்கொண்டேதான் இருக்கிறார். ஆனால் சூழலில் உள்ள சராசரி வாசகரை அவர் கண்டுகொள்ளலாகாது.
அவ்வாறு உங்கள் அகம் அறிய, ஒவ்வொரு முறையும் ஈடுபட்டு எழுதுகிறீர்கள் என்றால், ஒவ்வொரு படைப்பிலும் முன்னகர்வு நிகழ்கிறது என்றால் இயல்பாகவே மகிழ்ச்சியாக உணர்வீர்கள். எழுத்தின்மேல் நம்பிக்கை கொள்வீர்கள். சரியாக எழுதுகிறோமா, தவறாக எழுதிவிடுவோமா, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்னும் குழப்பங்கள் நிரந்தரமானவையாக உருவாகாது.
ஆனால் செயல்தளத்தில் இந்த ஐயமும் குழப்பமும் தற்காலிகமாக எவருக்கும் வந்துகொண்டேதான் இருக்கும். பெரும் சாதனை புரிந்தவருக்கும்கூட அவ்வப்போது அது உருவாகும். விவேகானந்தரும் காந்தியும்கூட அதை பதிவுசெய்துள்ளனர். ஆனால் செயலை நம்பி அந்த உளநிலையில் இருந்து வெளிவரவேண்டும். நம் செயல்களை நாமே கறாராக மதிப்புட்டுக்கொள்ள ஒரு வாய்ப்பாகவே அதை எடுத்துக்கொள்ள வேண்டும்
உங்கள் ஐயங்கள் மேலோட்டமான தளத்தில் இருந்து ஆழமான தளத்திற்கு நகரும்போது உருவாகும் குழப்பங்கள் எனில் அவை தேவையானவையே. நாம் நம்முடைய பயணத்தைச் சரியாக மதிப்பிட அவை உதவும். நாம் நம்மைப்பற்றிக் கொண்டுள்ள பிரமைகள் அல்லது பொய்யான பெருமிதங்கள் இல்லாமலாகும். முறையாகக் கற்பதற்கான பணிவும் கவனமும் உருவாகும்.
புனைவெழுத்தில் இரு களங்கள் உள்ளன. ஒன்று, அதன் தொழில்நுட்பம். வடிவம், மொழிநடை, பார்வைக்கோணம் ஆகியவற்றைச் தொழில்நுட்பம் என்கிறோம். அவற்றை ஓர் ஆசிரியரிடமிருந்து, ஒருசில பயிற்சி முகாம்களில் இருந்து, கற்றுக்கொள்ள முடியும். உலகமெங்கும் ஏராளமான பயிற்சி வகுப்புகள் நடைபெறுவது இதற்காகவே. பல்கலைகளும் , இலக்கிய அமைப்புகளும் அவற்றை நடத்துகின்றன. நானும் தொடர்ச்சியாக நடத்துகிறேன். புதியவாசகர் சந்திப்புகள் எல்லாமே இலக்கியப் பயிலரங்குகள்தான்.
அகத்தூண்டல் எனப்படும் இரண்டாவது களம் ஒரு தனிநபர் உள்ளம் சார்ந்தது. ஒருவரின் வாழ்க்கை, அவருடைய உளநிலை, சிந்தனைப்போக்கு ஆகியவற்றை ஒட்டி இயல்பாக எழுவது. அதை கற்பிக்க முடியாது. ஆனால் அதில் என்னென்ன குழப்பங்கள் நிகழும் , அகத்தூண்டலை தடுப்பவை எவை, அகத்தூண்டலை எப்படி கவனிப்பது என்றெல்லாம் பயிற்றுவிக்க முடியும்.அதற்கும் ஆசிரியர்களும் பயிற்சி வகுப்புகளும் உதவும்.
ஆனால் அத்தகைய கல்விக்கு தேவை அதற்கு நம்மை அளிக்கும் மனநிலை. தயக்கமில்லாமல் கையேந்துபவர்களுக்கே கல்வி அளிக்கப்படுகிறது.
ஜெ