தமிழில் தத்துவம் உண்டா?

நடனமிடும் பூசாரி – தேன்வரந்தை குகைச்சித்திரம்

ஐயா வணக்கம்

எனது பெயர் யோகேஷ்வரன் . தற்போதய காலத்தில் தமிழ்நாட்டில் அதிகமாக தமிழ் மொழிதான் அனைத்து  இந்திய தத்துவ மூலம் என்றும் அனைத்துமே  தமிழில் இருந்துதான் பிரிந்தது என்றும் உலகின் மூத்த மொழி தமிழ் அதனால் தமிழ் வார்த்தையில் இருந்து தத்துவம் வளர்ந்து வந்தது  என்று பேசியும், இணையத்தில் எழுதியும் வருகிறார்கள் .எங்களை போன்ற மாணவர்கள் இது தான் உண்மை என்று நம்பி அனைவருடனும் வாதிடுகின்றனர்

ஆனால் நீங்கள் எழுதிய கட்டுரையில் சம்ஸ்கிரதம் ஒரு தத்துவ மற்றும் அறிவுத்துறையின் மொழியாக பல ஆண்டுகள் உள்ளது என்றீர்கள்  அதற்கான நூல்களும் உள்ளது. அது போன்ற தத்துவம் தமிழில் இல்லையா அல்லது இலக்கியத்தில் எதுவும் உள்ளதா? தமிழ் மொழிக்கு என்று தத்துவநூல்  உள்ளதா ? தமிழில்  இறைஞான தத்துவக் கோட்பாடு இல்லை ?  என்று எனக்கு தயவுடன் கூறுங்கள் , தங்கள் பதிலுக்காக நான் காத்திருப்பேன் நன்றி

யோகேஸ்வரன்

கொற்றவை

அன்புள்ள யோகேஸ்வரன்,

இன்று அறிவுத்துறையில் கால்பதிக்கும் இளைஞர்கள் பலருக்கும் இக்கேள்வி உண்டு. தொடர்ச்சியாக வெவ்வேறு வகையில் இதற்குப் பதில் சொல்லி வருகிறேன்.

நாம் கொஞ்சம் வாசிக்கவும் சிந்திக்கவும் ஆரம்பிக்கும்போது நம்மை வந்தடைவது அரசியலமைப்புகள் முன்வைக்கும் சிந்தனைகள்தான். ஏனென்றால் அரசியல் கட்சிகளுக்கு மிகப்பெரிய அமைப்பு வல்லமை உண்டு. பிரச்சார வீச்சு உண்டு. அவற்றிடம் தேவைக்கு மீறிய  பணபலமும் உண்டு.

அவை நாம் நின்றிருக்கும் இடத்தில் இருந்து நம்மை மேலே தூக்குகின்றன, நம்மை வளர்க்கின்றன என்பது ஓர் உண்மை. ஓர் எளிய தமிழ் இளைஞன் ஈ.வெ.ரா அல்லது கார்ல் மார்க்ஸ் அல்லது தேவநேயப் பாவாணர் பற்றித் தெரிந்துகொள்வது அவர்கள் வழியாகவே. அவனுக்கு இலக்கிய அறிமுகம் நிகழ்வதும் அவ்வாறே.

ஆனால் அது தொடக்கப் படிநிலை. அங்கே ஒருவர் வந்து சேர்வது சமூகத்துக்கு நல்லதுதான். அது ஒரு பெரும் புரட்சிதான். சாமானியக் குடிமகனுக்கு அதுவே நல்ல ஒரு நிலைதான். ஆனால் சிந்திக்கும் இளைஞர் அங்கிருந்து முன்னேறியே ஆகவேண்டும். அப்படி முன்னகர்ந்தவர்களின் கருத்துக்களுக்கே ஏதேனும் மதிப்பு உண்டு. ஓர் அரசியலமைப்பு, ஒரு மதம் , ஒரு கோட்பாடு சார்ந்து நின்று பேசுபவர்களின் கருத்துக்களுக்கு எந்த தனிமதிப்பும் இல்லை. ஒட்டுமொத்தமாக அந்த அரசியலமைப்பின், மதத்தின், கோட்பாட்டின் தரப்பு என்ன என்பது மட்டுமே முக்கியம். அதன் முதன்மைத் தலைவர்களை மட்டும் நாம் பொருட்படுத்தினால் போதும்.

இங்கே கணிசமானவர்கள் அந்த தொடக்கநிலையிலேயே வாழ்க்கையின் கடைசிவரை நின்றுவிடுவதே வழக்கம். எதையுமே வாசிக்காமல், வாசித்தாலும் உள்வாங்க முடியாமல், இன்னின்னார் இப்படி என்னும் எளிய அடையாளப்படுத்தல்களுடன் அப்படியே  பேசிக்கொண்டே வாழ்ந்து முடிவார்கள். அவர்களே இங்கே சமூகவலைத்தளங்களிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அதுவே இயல்பும்கூட. ஏனென்றால் எங்கும் தனிச்சிந்தனை அரிதானதுதான்.

அரசியலமைப்புகளின் பிரச்சாரம் மிக ஆற்றல் வாய்ந்தது, ஓயாமல் ஒலிப்பது. அது நம்மை எளிதில் வெளியே விடுவதில்லை. அத்துடன் அந்த தொடக்கநிலையிலேயே கட்சிகட்டல்கள், காழ்ப்புகள் உருவாகி விட்டால் அதை நம் சிந்தனையாகக் கொண்டுவிடுகிறோம். நாம் எதிரிகளை உருவாக்கி களமாட ஆரம்பிக்கிறோம். எதிர்மறை மனநிலை மிக ஆற்றல்வாய்ந்தது. நம்மை அதிலேயே கட்டி விடும்.

இலக்கியமும் சரி ,மெய்யான சிந்தனைகளும் சரி, நம்மைத் தேடிவருவதில்லை. நாம் அவற்றைத் தேடிச்செல்லவேண்டும். நாமேதான் பயிலவேண்டும். ஏனென்றால் அவை நிதிபலமோ அமைப்பு வல்லமையோ அற்றவை. ஆனால் ஒரு நல்லூழ் உண்டு. அரசியலமைப்புகள், மதங்கள், கோட்பாடுகள் போன்றவை மெய்யான சிந்தனைகளை எதிர்த்துக் கொண்டே இருக்க்கின்றன. காழ்ப்புகளை கொட்டுவார்கள், சொற்களை திரிப்பார்கள். அவ்வாறு மெய்யான அறிவியக்கவாதிகளை அவர்களே சாமானியர்களுக்கு  அறிமுகம் செய்துவிடுவார்கள்.

நாம் அப்படி எதிர்மறையாகவே இங்குள்ள எழுத்தாளர்களை அறிமுகம் செய்துகொள்கிறோம். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் , சுந்தர ராமசாமி எல்லாருமே அப்படித்தான் நமக்கு அறியவந்தனர். அரசியல்வாதிகள் அளிக்கும் அந்த எதிர்மறை அறிமுகம் வழியாக உள்ளே சென்று, அவர்கள் அளிக்கும் ‘முத்திரைகுத்தல்களை’ புறந்தள்ளி,  அந்தச் சிந்தனையாளர்கள் உண்மையில் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்துகொள்வதே சிந்தனையைப் பயிலவேண்டியவர் செய்யவேண்டிய உகந்த செயல்.

நீங்கள் அந்த தொடக்கநிலையில் இருக்கிறீர்கள். அரசியலியக்கங்கள் அளிக்கும் எளிய கருத்துக்களை அறிந்து, அவற்றை மேலும் அறியமுயன்று, அவற்றைக் கடந்து சிந்தனைக் களத்துக்குள் நுழையும் நிலையில் உள்ளீர்கள்.நல்வரவு.

*

பொதுவாக பண்பாட்டு அரசியல் என்றழைக்கப்படும் ஒன்று உண்டு. அது ஜனநாயகம் உருவான பின்னர், ஐரோப்பாவில், 19 ஆம் நூற்றாண்டில் உருவான ஒன்று. ஜனநாயகத்தில் மக்களின் ஆதரவு அரசியல் அதிகாரத்தை அளிக்கும் என ஒரு சூழல் உருவானது. ஆகவே மக்களை ஏதேனும் பண்பாட்டு அடையாளத்தின் அடிப்படையில் திரட்டி, அவர்களின் ஆதரவு பெற்று, ஆட்சியதிகாரத்தை பிடிக்க முடியும் என ஐரோப்பாவில் நிரூபணமாகியது. ஃபாஸிஸம், நாஸிஸம் மட்டுமல்ல இன்றுள்ள ஏராளமான அரசியலியக்கங்களின் வழிமுறை என்பது அதுவே.

அந்த வழிமுறை உலகமெங்கும் நகல் செய்யப்பட்டு வெற்றிகரமாக உள்ளது. ஐரோப்பாவில் மதமும் மொழியும் இனமும் முக்கியமான பண்பாட்டு அடையாளங்களாக அரசியலில் பயன்படுத்தப்பட்டன. (மதத்திற்கு எதிராக மொழி அங்கே முன்னிறுத்தப்பட்டது.) உலகமெங்கும்  மதம், இனம், மொழி, வட்டாரம், சாதி என பல அடையாளங்கள் அரசியலுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வடையாளங்களை அரசியலாக்குபவர்கள் நான்கு அடிப்படைகளை உருவாக்கிப் பிரச்சாரம் செய்வார்கள்.

அ. அவர்கள் முன்வைக்கும் அந்தப் பண்பாட்டு அடையாளம்தான் (மதம், மொழி, இனம், வட்டாரம், சாதி ஆகியவை)   மிகமிகத் தொன்மையானது என்பார்கள். அதுவே அனைத்துக்கும் அடிப்படையானது, அதுதான் உயர்ந்தது, இந்த ‘உண்மையை’ உலகம் மறைத்துவிட்டிருக்கிறது, இவர்கள் அதை வெளிப்படுத்துகிறார்கள் என்பார்கள். ஆகவே மேலே சொன்ன எல்லா தரப்புமே ‘மறைக்கப்பட்ட வரலாற்றை’ தாங்கள் சொல்வதாகத்தான் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

ஆ. அந்தப் பண்பாட்டு அடையாளத்தின் உள்ளே உள்ள உட்பிரிவுகளும் முரண்பாடுகளும் தேவையற்றவை, அவற்றை தவிர்க்கவேண்டும் என்பார்கள். ஒரே மையமும், கட்டமைப்பும் , ஒரே இயல்பும் கொண்டதாக அந்தப் பண்பாட்டு அடையாளம் இருக்கவேண்டும் என வாதிடுவார்கள்.  மதவாதிகள் சாதியை எதிர்ப்பார்கள். சாதிவாதிகள் அதற்குள் உள்ள உட்பிரிவுகளை எதிர்ப்பார்கள். இனவெறியர்கள் சாதிக்கு எதிராக இருப்பார்கள். இதை ஒரு சீர்திருத்தமாக அவர்கள் சொல்வார்கள். ஆகவே அவர்கள் சீர்திருத்தம் பேசும் முற்போக்கினர் போல தோற்றமளிப்பார்கள்.

இ. இவர்கள் சொல்லும் அந்த பண்பாட்டு அடையாளம் அற்றவர்கள் எல்லாம் அன்னியர்கள் அல்லது மற்றவர்கள் என வகுப்பார்கள். அவர்கள் பண்படாதவர்கள், ஒருபடி கீழானவர்கள், ஆகவே எதிரிகள் என்பார்கள். அவர்களை வெறுக்கவேண்டும். அடக்கவேண்டும் என்று இவர்கள் சொல்வார்கள். ‘எதிரி’ ‘மாற்றான்’ என சிலரை எப்போதும் சுட்டிக்காட்டிக்கொண்டே இருப்பார்கள். அந்த எதிரிக்கு இழிவான பெயர், இழிவான இயல்புகள் ஆகியவற்றை புனைந்து அவற்றைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

ஈ. அந்தப் பண்பாட்டு அடையாளத்தின் எதிரிகள் அந்தப் பண்பாட்டு அடையாளத்தை அழிக்க முயல்கிறார்கள், அதை காக்கவேண்டும்,  அதற்காக போராடவேண்டும் என்பார்கள். அப்போராட்டத்திற்காக ஒன்றுபட்டு அதன் தலைவர்களை ஆதரிக்கவேண்டும் என்று கோருவார்கள். அந்த தலைவர்களே அப்பண்பாட்டின் காவலர்கள் என்றும் ஆகவே அவர்களிடம் அதிகாரம் அளிக்கப்படவேண்டும் என்றும் சொல்வார்கள். அவர்கள் அதிபர்கள், காவலர்கள் என முன்வைக்கப் படுத்தப்படுவார்கள்.. ‘மொழிக்காவலர்’ ‘இனக்காவலர்’ ‘பண்பாட்டுக்காவலர்’  ‘மதக்காவலர்’ என தலைவர்கள் அடையாளப்படுத்தப்படுவார்கள். அவர்களை புகழ்ந்து புகழ்ந்து கிட்டத்தட்ட கடவுள்நிலைக்கு கொண்டுசெல்வார்கள். அவர்களுக்கு மாபெரும் சிலைகள் நிறுவப்படும். உலகமெங்கும் அப்படித்தான்.

மதம், இனம், மொழி, சாதி என எதை அரசியலுக்காகச் சொல்பவர்களும் இந்த நான்கையும் திரும்பத் திரும்ப சொல்வதைக் காணலாம். அவர்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக இருக்கலாம். ஆனால் அவர்கள் சொல்லும் அந்த உணர்வுநிலைகளும், அவர்களின் சிந்தனையின் போக்கும் ஒன்றுபோலவே இருக்கும்.

*

அந்த வகையான அரசியல் சார்ந்த பண்பாட்டு அடையாளமாக மொழி முன்வைக்கப்படும்போது உருவாகும் கருத்துக்களே நீங்கள் சொல்பவை. அவை அரசியல் கருத்துக்கள் மட்டுமே. எந்த வகையிலும் அறிவுத்தளக் கருத்துக்கள் அல்ல.

ஒரு மொழி, அல்லது ஒரு மதம் அல்லது ஒரு பண்பாடுதான் உலகிலேயே தொன்மையானது என்று சொல்வதைப்போல அபத்தமான நம்பிக்கை வேறில்லை. இங்கே உள்ள அரசியல்வாதிகள் தமிழ்மொழியும் நாகரீகமுமே உலகிலேயே தொன்மையானவை என்பார்கள். வடக்கே உள்ளவர்கள் வேதகாலமும், சம்ஸ்கிருதமும் உலகிலேயே தொன்மையானவை என்பார்கள். ஒருவகை மூடப் பிடிவாதங்கள் அவை. ஆழமான தாழ்வுணர்வில் இருந்து வருபவை. உண்மையை அவர்கள் விரும்புவதில்லை.

உலகமெங்கும் தொல்நாகரீகங்கள் கண்டடையப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. வேதகாலத்தை விடவும் எகிப்திய நாகரீகம் தொன்மையானது. அண்மையில் மானுட வரலாற்றிலேயே மிகத்தொன்மையான நாகரீகங்கள் சீனாவில் கண்டடையப்படுகின்றன. இதைப்பற்றி ஏராளமாகவே வாசிக்கக் கிடைக்கிறது.

இந்த நாகரீகங்கள் நடுவே ஏராளமான ஒற்றுமைகள் உள்ளன. இவை மக்கள் இடம் பெயர்ந்து கொண்டே இருந்த கற்காலத்து நாகரீகத்தில் இருந்து உருவானவை. ஆகவே இந்த பொதுத்தன்மை காணக்கிடைக்கிறது. இந்தியாவிலேயே உள்ள பல்லாயிரமாண்டு தொன்மையான கற்கால நாகரீகம் பற்றி நானே நிறைய எழுதியுள்ளேன். அவற்றில் இன்றைய பண்பாட்டுக்கான ஏராளமான அடிப்படைகள் உள்ளன, அவையே எல்லாவற்றுக்கும் அடித்தளம்.

ஆகவே எந்த தொல்நாகரீகத்தையும் இன்னொன்றுடன் ஒப்பிட்டு இதில் இருந்தே அது உருவானது என்று வாதிட முடியும். அந்த வகைப் பேச்சுக்களை மெய்யான தொல்லியல் அறிஞர்கள் அசட்டுத்தனமாகவே எடுத்துக் கொள்வார்கள். தொல்லியல், தொல்பண்பாட்டு ஆய்வுகள் உலகளாவிய முறையில் நிகழ்பவை. அவற்றைச் செய்ய ஓர் ஆய்வுத்தகுதி வேண்டும். உலகளாவிய தளத்தில் அவை பரிசீலிக்கப்பட்டு ஏற்கப்படவேண்டும். அவரவர் இஷ்டப்படி கூறும் முடிவுகளுக்கெல்லாம் எந்த மதிப்பும் இல்லை.

எந்த மொழி தொன்மையானது என்று விவாதிப்பதைப்போல அசட்டுத்தனம் வேறில்லை. மொழிகளின் பரிணாமம் அறிந்தவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள். பல பழங்குடி மொழிகள் இங்குள்ள எந்தச் செம்மொழியை விடவும் தொன்மையானவை. அவை அப்படியே பல ஆயிரம் ஆண்டுகளாக வளர்ச்சியின்றி நிலைகொண்டிருக்கும். அவை பழமையானவை என்பதனால் பெருமை ஏதுமில்லை. சில  தீவுகளில் உள்ள மொழிகள் பல ஆயிரமாண்டுகளாக பிறமொழிக் கலப்பே இல்லாமல் இருக்கும், ஏனென்றால் அம்மக்களுக்கே பிறருடன் தொடர்பிருந்திருக்காது. ஆகவே அந்த மொழி தூய்மையானது என்றும் உயர்ந்தது என்றும் பொருள் இல்லை.

பல மொழிகள் முன்னர் இருந்த முந்தைய மொழிகளில் இருந்து முளைத்து அசுரவளர்ச்சி அடைந்திருக்கும். அவற்றின் இலக்கணம், சொற்களஞ்சியம் எல்லாமே வெவ்வேறு மொழிகளில் இருந்து வந்திருக்கும். மேலும் மேலும் சொற்களை வேறு வேறு மொழிகளில் இருந்து எடுத்துக்கொண்டிருக்கும். ஆங்கிலம் அத்தகையது. அதன் அடிப்படை கிரேக்கம், லத்தீன் உட்பட பல மொழிகளால் ஆனது. ஆகவே ஆங்கிலம் தகுதிக் குறைவானது அல்ல. புதிய மொழி என்பதனால் அது பழைய மொழிகளின் குறைபாடுகள் எல்லாவற்றையும் சரிசெய்துகொண்டது. எளிய இலக்கணமும் எளிய எழுத்துமுறையும் கொண்டது. எல்லா மொழிச் சொற்களையும் எடுத்துக்கொள்வதனால் அதன் மொழிக்களஞ்சியம் உலகிலுள்ள எந்த பெரிய மொழியை விடவும் பலநூறு மடங்கு பெரியது.

எல்லா மொழிகளுக்கும் முன்னோடியாக அடித்தள மொழிகள் என சில இருந்திருக்கும். கற்கால மொழிகள் அவை. அவை இன்று இருக்க வாய்ப்பில்லை. அவற்றிலிருந்து சொற்கள் எல்லா மொழிகளுக்கும் சென்றிருக்கும். மொழிகளின் இப்பரிணாமத்தை அறியாமல், வெறுமே சொற்களை ஒப்பிட்டு, நம் மொழியின் சொற்களுக்குச் சமானமான சொற்கள் வேற்று மொழியில் இருந்தால் அந்த மொழி நமது மொழியிலிருந்து உருவானது என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஆய்வுகள் இன்றுண்டு. அது உண்மையான அறிவுசார்ந்த பணிகளைச் செய்யமுடியாதவர்களின் வெட்டிவேலை. தாழ்வுணர்ச்சியின் விளைவான உளச்சிக்கல்.

இந்தச் சிறு விவாதத்தில் மொழிகளின் பரிணாமமும் வரலாறும் எவ்வண்ணம் உலகளாவிய அறிவுத்தளத்தில் பார்க்கப்படுகின்றன என்று விரிவாகப் பேசமுடியாது. ஆர்வமிருந்தால் நீங்கள் நிறைய வாசித்தறிய முடியும்.

நம்மாழ்வார் – பக்தி இயக்கம்

*

நீங்கள் கேட்ட கேள்விக்கு இறுதியாக வருகிறேன். அடிப்படையான தத்துவக் கேள்விகள் எந்த மானுட இனத்துக்கும், எந்த பண்பாட்டுக்கும் மட்டும் உரியவை அல்ல. எல்லா இடங்களிலும் அவை இயல்பாக உருவாகி வந்துள்ளன. அண்மைக்கால மானுடவியல் – நாட்டாரியல் ஆய்வுகள் காட்டும் செய்திகளின்படி பழங்குடிச் சமூகங்களின் பாடல்களிலேயே அடிப்படையான தத்துவக்கேள்விகள் உள்ளன, அவற்றுக்கான விடைகள் பலவகையான உருவகங்களாக உள்ளன. அவை எவ்வகையிலும் பிற்காலப் பெரிய மதங்களுக்குக் குறைந்தவை அல்ல.

பண்டைக்காலம் முதலே மானுடச் சமூகம் தொடர்ச்சியாக உரையாடிக்கொண்டே இருந்து வந்தது. அறிஞர் என்பவர் தொடர்ச்சியாகப் பயணம் செய்துகொண்டிருக்கும் ஒருவர். வணிகக்குழுக்களுடன் அறிஞர்களை கொண்டு செல்லும் வழக்கம் இருந்தது. போரின்போது அறிஞர்களை கைப்பற்றிக் கொண்டுவரும் வழக்கமும் இருந்தது. ஆகவே ஒரு பண்பாட்டுக்குரிய எந்தச் சிந்தனையும் இன்னொரு பண்பாட்டை அடையும். அவை உரையாடியே வளரும். எந்த ஒரு சிந்தனையையும் இந்தப் பண்பாட்டுக்கு மட்டுமே உரியது என்று இன்று எவராலும் சொல்லிவிட முடியாது.

வேதங்களிலுள்ள ஏராளமான உருவகங்களுக்கும், வரிகளுக்கும் தொன்மையான எகிப்திய, பாபிலோனிய, சுமேரிய நூல்களுடன் அணுக்கமான தொடர்பு உள்ளது. (விரிவாக இவற்றை தத்துவ வகுப்புகளாக எடுத்துக்கொண்டிருக்கிறேன்) தொல்சிந்தனைகள் எவையும் ஒரே இடத்தில், ஒரே மொழியில், ஒரே இனத்தில் உருவாகி அங்கேயே நிலைகொண்டவை அல்ல.

சில மொழிகள் காலப்போக்கில் தொடர்பு மொழி என்னும் இடத்தை அடையும். இன்று தத்துவத்தின் உலகளாவிய தொடர்புமொழி ஆங்கிலமே. சென்ற நூற்றாண்டில் ஜெர்மானிய மொழியே அந்த இடத்தில் இருந்தது.  உலகிலுள்ள தத்துவ சிந்தனைகளெல்லாம் இம்மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படுகின்றன. இந்திய தொல்நூல்களெல்லாம் 18 ஆம் நூற்றாண்டில் ஜெர்மானிய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டன. இன்று, பிரெஞ்சு சிந்தனையாளர் ஃபூக்கோவின் சிந்தனையும் ஜப்பானிய சிந்தனையாளர் ஃபுகோக்காவின் சிந்தனையும் ஆங்கிலத்தில்தான் கிடைக்கின்றன.  எல்லாவற்றுக்கும் ஆங்கிலக் கலைச்சொற்கள் உள்ளன . அப்படி இருப்பதனால் அவை ஆங்கிலச் சிந்தனைகள் அல்ல.

அதேபோல ஒரு காலகட்டத்தில் சம்ஸ்கிருதம் தென்னாசியா முழுக்க தொடர்புமொழியாக இருந்தது. பிராகிருதமும் பாலியும்கூட குறுகிய காலம் தென்னாசியத் தொடர்புமொழியாக இருந்தன. ஆகவே இம்மொழிகளில் தத்துவநூல்கள் மிகுதி. அவை வெவ்வேறு இடங்களில் இருந்து விவாதங்கள் வழியாக அம்மொழிகளுக்கு வந்துசேர்ந்தவை. தமிழ் எப்போதுமே தமிழகத்துக்கு வெளியே அப்படி சிந்தனைக்கான தொடர்புமொழியாக இருந்ததில்லை.

ஆகவே சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம் போன்ற  மொழிகளிலுள்ள தத்துவநூல்கள்  நம் மொழியில் இருந்தாகவேண்டும் என எதிர்ப்பார்ப்பதோ, இல்லை என்றால் குறை என நினைப்பதோ, இருக்கிறது என வீம்புக்கு வாதிடப்புகுவதோ அறிவுடைமை அல்ல.

நம் பண்பாடே முதன்மையானது அல்லது தொன்மையானது என்று எண்ணுவது, நம் பண்பாட்டில் எல்லாமே உண்டு என நம்புவது, நம் பண்பாட்டில் இருந்தே எல்லாம் சென்றது என எண்ணுவது எல்லாம் இன்று இந்து அடிப்படைவாதிகள், மொழிசார் அடிப்படைவாதிகள், இனவெறியர்கள் அனைவருமே சொல்லிக் கொண்டிருக்கும் ஒருவகை மூடநம்பிக்கை. அதை அறிவார்ந்து பரிசீலனை செய்வதில் இருந்தே மெய்யான கல்வி ஆரம்பிக்கிறது.

அந்த மனநிலையைக் கடந்தால் நம் பண்பாட்டில் நமக்குரியதென இருக்கும் தனிச்சிந்தனை என்ன, மானுட சிந்தனைக்கு நம் தனிப்பங்களிப்பு என்ன என்பதை உணரமுடியும். அதைப்பற்றி மிகையாகப் பெருமிதமும் கொள்ள மாட்டோம். அப்படி உலகமெங்கும் எல்லா பண்பாடுகளுக்கும் அவற்றுக்கான தனித்தன்மையும் பங்களிப்பும் உண்டு என்றும் உணர்வோம்.

அத்துடன் எந்த சிந்தனையும் ‘தூயதாக’ , எந்தப் பாதிப்பும் இல்லாமல், எந்த மாற்றமும் இல்லாமல்   இருக்க முடியாது என்றும் அறியவேண்டும். அப்படி இருந்தால் அது தேங்கிப்போன சிந்தனை. மானுடசிந்தனையுடன் உறவாடாத ஒன்று. அதனால் எந்த பயனுமில்லை, அதைக்கொண்டு எந்தப் பெருமையுமில்லை.

ராமானுஜர் – விசிஷ்டாத்வைதம்

*

தமிழுக்குத் தனக்கான தத்துவச் சிந்தனை மரபு உண்டா? உண்டு. உதாரணமாக, ஐந்திணை கொள்கை தமிழ்நிலத்தின் தத்துவப்பார்வைகளில் ஒன்று. நிலத்தை ஐந்தாகப் பிரித்து அவற்றின் அடிப்படையில் மனிதர்கள், குணங்கள் அனைத்தையும் அகவயமாகவும் பிரிப்பது.

அதைப்போல 12 ராசிச் சக்கரம் என்னும் கருத்துருவமும் தமிழருக்குரியதாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகிறார்கள். நம் வானியல் முதல் பண்ணிசை வரை அதனடிப்படையிலேயே வரையறைச் செய்யப்பட்டுள்ளது.

கொற்றவை, மலைநின்ற மால்,  முருகன், சாத்தன் போன்ற நமக்குரிய பல தெய்வ உருவங்களும் தத்துவப்பார்வையின் வெளிப்பாடுகளே. அந்த தத்துவக்கூறுகள் இங்கே வந்த சாங்கியம், வைதிகம், ஆசீவகம், சமணம், பௌத்தம் ஆகிய தத்துவ மரபுகளுடன் உரையாடி வளர்ந்து நாம் காணும் வடிவை அடைந்தன.

அவற்றின் வேர்கள், அவை வளர்ந்த வகை ஆகியவற்றை எல்லாம் அறிஞர்களே சொல்லவேண்டும் – உண்மையான அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். போலிப்பெருமிதமோ அரசியல் நோக்கமோ கொண்டவர்கள் துளிச் செய்திகளை இஷ்டப்படித் திரித்து உருவாக்கும் போலி ஆய்வுகள் இத்தளத்தில் தெளிவை விட தெளிவின்மையையே உருவாக்குபவை.

நம் தத்துவ வேர்களில் இருந்து நாம் உருவாக்கிக் கொண்ட பிற்காலத் தத்துவ வெற்றிகள் பல உண்டு. சமணம், பௌத்தம் ஆகிய இரண்டிலும் ஒரு தமிழ் வடிவம் உண்டு. சீவகசிந்தாமணியில் அந்த தமிழ்ச் சமணத்தைக் காணலாம். தமிழ் பௌத்தம் மணிமேகலையில் உள்ளது.

திருமூலர்

சைவ, வைணவ பக்தி இயக்கம் தமிழகத்தில் உருவானது. இங்கிருந்துதான் அது வடக்கே சென்று இந்தியா முழுக்க பரவியது. சைவத் திருமுறைகள், வைணவ பிரபந்தங்கள் தமிழுக்கே உரிய இறைஞான – தத்துவ நூல்கள்

அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகியவை தொல்தமிழகத்தில் உருவானவை. அதிலும் விசிஷ்டாத்வைதம் மிக விரிவாகவே தமிழ்த்தொல்மரபில் வேர்கள் கொண்ட ஒரு தத்துவம். அவற்றின் மூலநூல்கள் சம்ஸ்கிருதத்தில் இருந்தாலும் அவை தமிழ்ச்சிந்தனையின் வலுவான பங்களிப்பு கொண்டவைதான்.

நாம் உருவாக்கிக் கொண்ட இறுதித் தத்துவ சிந்தனை என்பது சித்தாந்த சைவம். முந்தைய சைவ மரபுகளுடன் தமிழ் மெய்யியல்கூறுகள் இயல்பாக இணைந்து உருவானது அது. இந்தியாவில் உருவான இறுதித் தத்துவமரபு அதுவே.

தமிழுக்கே உரிய முழுமையான இறைஞான – தத்துவநூல் என்றால் சித்தாந்த சைவமும் பிற மறைஞான சைவமரபுகளும் பிணைந்து வெளிப்படும் திருமந்திரம்தான்.

அத்துடன் நமக்கான இலக்கியங்கள், நமக்கான சிற்ப மரபு என ஒரு பெரும் தொகை நமக்குண்டு. அவை நம் மெய்யியலில் இருந்து உருவாகி, இங்கு வந்துசேர்ந்த அனைத்துடனும் உரையாடி பலநூறாண்டுகளாக உருவாகி வந்தவை.

இவற்றை எல்லாம் தாழ்வுணர்ச்சியின் விளைவான போலி இனமொழிப் பெருமிதங்கள் இல்லாமல் நேர்மையாக பயிலலாம். அதற்குரிய நூல்கள் ஏராளமாக உள்ளன. அறிஞர்களும் உள்ளனர். அது உங்கள் அறிதலின் வழி என்றால் அதத் தொடர்க.

தமிழ்ஞானசம்பந்தன்

*

ஆனால் இதெல்லாமே தமிழனுக்கு தத்துவமுண்டு, தமிழனிடமே தத்துவம் இருந்தது என்றெல்லாம் நிரூபிக்கும்பொருட்டு நீங்கள் செய்வீர்கள் என்றால் அது மாபெரும் அறிவுவீணடிப்பு. அந்தப் பெருமிதங்களெல்லாம் அரசியல்வாதிகள் உருவாக்கும் போலி உணர்ச்சிகள். அவற்றுக்கு அறிவுத்தள மதிப்பு ஏதுமில்லை.

நம் தத்துவ மரபைக் கற்று, அதிலிருந்து மேலே சிந்தனைசெய்து, உங்களுக்கான பங்களிப்பை சிந்தனைக்கு ஆற்றவேண்டும் என்றால் தத்துவத்திலுள்ள அடிப்படையான கேள்விகளையே முதன்மையாகக் கருதவேண்டும். அது தமிழனுடையதா இல்லையா என்பதை அல்ல.

ஜெ

முந்தைய கட்டுரைகும்பகோணம் ராமையா பிள்ளை.
அடுத்த கட்டுரைநவீன மருத்துவம், அறிமுக முகாம்.