தருதலும் கொடுத்தலும் – தமிழும் மலையாளமும்

அன்புள்ள ஆசிரியருக்கு,

கடந்த விஷ்ணுபுரம் விழாவில் தங்களை முதன்முதலாகக்  காணவும் ஆசிபெறவும் இயன்றது. ஒரு பெரும் கனவு கைகூடியது. அன்றிருந்த பரபரப்பில்/ பதற்றத்தில் அதிகம் பேச இயலவில்லை என்றாலும், சந்தித்த சிலநொடிகள் இன்னும் அதிமதுரமென இனித்துக்கொண்டிருக்கிறது. விழா ஒரு மறக்கவியலாத புதிய அனுபவம். அனைத்திற்கும் நன்றி. கொச்சியிலிருந்து  கோயம்புத்தூர் அருகிலிருந்தும் இத்தனையாண்டுகள் விழாவிற்கு வராமலிருந்தது பேரிழப்புதான். இனி இத்தகு சந்திப்புத் தருணங்கள் மென்மேலும் அமைய  இறை அருளட்டும்.

விழாவில் பல புதிய அறிதல்களையும் திறப்புகளையும் அடைந்தபோதிலும் என்னைப்பற்றிய ஒரு சிறு அறிதலும் நிகழுமென நினைக்கவில்லை. முன்பின் அறிந்திராத நண்பர்களுடனான முதல் உரையாடலிலேயே அவர்கள் என்னை கேரளத்தவரா என்று கேட்டதும் என் பேச்சுவழக்கில் மலையாளச் சாயல் மிகுந்திருப்பதாகச் சொன்னதும் எனக்கே புதிய  செய்திதான். இதுவரை யாரும் இப்படி சொல்லிக்கேட்டதில்லை (தமிழ்த்தன்மை என்னில் குன்றுகிறதோ!). குறையொன்றும் இல்லை. ஏறக்குறைய ஒரு பதிற்றாண்டுக்காலம் ஒரு மண்ணில் வாழ்ந்தால் அதன் தாக்கம் இல்லாமலிருக்க வாய்ப்பில்லைதான். சில ஆண்டுகளுக்குமுன்  நான் உங்களுக்கு முதல் கடிதம் (பண்பாடு- கேரளம் – ஒரு கடிதம்) எழுதியபோது இருந்ததைவிட இன்று இந்நிலமும் மொழியும் மக்களும் எனக்கு மேலும் அணுக்கமாகியிருப்பது உண்மை.

முந்தைய கடிதத்தில், நாம் செவ்வியல் எனக்கருதி சட்டகமிட்டு சுவரில் (ஏடுகளில் மட்டும்) மாட்டிவிட்ட பல சொற்கள் இங்கு மக்களின் பேச்சுவழக்கில் சாதாரணமாகத்  திகழ்வதைக்கண்டு என் வியப்பைத் தெரிவித்திருந்தேன். இன்றும் அத்தகைய அனுபவங்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால் இன்று வியப்பேதும் இல்லை. அவை ஒரு மென்முறுவல் கொள்ளச்செய்யும் இனிய தருணங்கள் அல்லது அன்றாடமென ஆகிவிட்ட வியப்புகள்.

ஆனால் அவ்வளவுதானா? இவ்வாறு இரு மொழிகளுக்கிடையே காணும் ஒத்த சொற்களை இன்று வெறுமனே கடந்துசெல்ல இயல்வதில்லை. இந்த ஒற்றுமையும் வேறுபாடுகளும் ஏன் எங்ஙனம் என சிலநேரங்களில் தோன்றும். மலையாளத்தில் ஒரு பொருந்தாமையோ விடுபடலோ இருப்பின் அது தமிழில் குறிப்பாக பழந்தமிழில் சரிபார்க்கும் ஒரு மரபு அதன் பேரகராதி உருவாக்கக் காலம்தொட்டே உண்டு என நினைக்கிறேன் (சென்ற நூற்றாண்டுகளில் கேரள பண்பாட்டின், அதிகாரத்தின் மையமாக இருந்த திருவிதாங்கூரில் மலையாளத்தோடு தமிழும் இணையாக உரையாடி வந்தது ஒரு காரணமாக இருக்கலாம்). ஆனால் தமிழ்த்தரப்பிலிருந்து  மலையாளத்தைக் கொண்டு சரிபார்க்கும்/ விடைதேடும் மரபு கண்டிப்பாக இல்லை (மைய தமிழ்நிலத்தில் புழங்கிய பண்டிதர்களுக்கு மலையாளத்தைப் பற்றியோ அதன் பண்பாடு குறித்தோ சிறிய அறிமுகம்கூட இருக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே).  ஆனால் தமிழுக்கு இது கருத்தில் கொள்ளப்படவேண்டிய ஒரு முக்கியத்தரப்பு என்றே தோன்றுகிறது.

தமிழில் இன்று பொதுப்புழக்கத்தில் இல்லாத பல பழந்தமிழ்ச் சொற்கள் நாம் கொண்டுள்ள அதே பொருளில் ஏறக்குறைய அதே ஒலிப்பில் அங்கு இயல்பாக வழங்கி வருவதை நாம் பரவலாக அறிந்ததே (விளி, கமுகு, பண்டு, ஆம்பல், தொழுதல் போன்றவை). பலரும் அந்த ஒற்றைத்தரப்பே உள்ளதாக எண்ணுவதும் உண்டு.  ஆனால் எல்லாச்சொற்களும் அப்படியல்ல என உணர்ந்தபின் சில அவதானிப்புகளை இங்கு பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

முதலாவதாக பல பழந்தமிழ்ச் சொற்களை  நாம் மாற்றி ஒலித்தும் மலையாளத்தில் அச்சுஅசலாக அப்படியே பயன்படுத்தியும் வருவதைக்காணலாம். உதாரணமாக ‘செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்’ என்றால் நமக்கு நேரடியாக புரிவதில்லை. செவி கசக்க என்று சொல்லியிருந்தால் எளிதில் புரியும்.  மலையாளத்தில் இன்றும் கசப்பு ‘கைப்பு’ ஆகவே இருக்கிறது.

அடுத்ததாக பல சொற்களின் ஒலிப்பில் பெரும்மாற்றம் இல்லையெனினும் பொருளில் நாம் வேறுபட்டும் மலையாளத்தில் மாற்றமின்றி அப்படியே தொடர்வதைக் காணலாம். உதாரணமாக தூங்கு (தூங்ஙு) என்பதை உறங்கு என்ற பொருளுக்கு மாற்றிவிட்டோம். அங்கோ “சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு” என்று சங்கக்கவிதை கூறும் ‘தொங்கு’ என்னும் அதே பொருளில் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. தமிழிலோ ‘தூக்கில் தொங்கினான்’ போன்ற இடங்களில் மட்டும் மறைமுகமாக அப்பொருள் தொற்றி நிற்கிறது (தூங்குவதால் தூக்கு; நல்லவேளை தொங்குவதால் ‘தொக்கு’ என நம் அறிஞர்கள் இற்றைப்படுத்திக் கொள்ளவில்லை!). மற்றொரு உதாரணம் காவு (நாம் இன்று என்ன பொருளில் பயன்படுத்துகிறோமென நான் கூறத்தேவையில்லை). ‘கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை கொள்ளும்  இளங்குயிலே‘ என்றும் ‘இங்குள்ள காவினில் வாழக் கருதில்’ என்றும் ஆண்டாள்நாச்சியார் மொழியும் ‘சோலை’ என்னும் அதே பொருளில் இன்றும் மலையாளத்தில் வழங்கி வருவதைக் காணலாம்.  சிலசொற்களுக்குத் தெளிவான பழந்தொடர்ச்சி காணமுடியாவிடினும் சற்றே வேறுபட்ட ஆனால் தொடர்புடைய பொருளில் புழங்குவதையும் காணமுடிகிறது. தாங்கள் கூறியதுபோல காதலை ‘சாராம்சமான பகுதி’ (the core) என்ற பொருளிலும், வளம் என்பதை ‘உரம்’ என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுவதைப் போல.

நம் மற்றொரு பொதுநம்பிக்கை இன்று புழங்கும் எல்லாத்  தமிழ்ச்சொற்களும் தொன்றுதொட்டே தமிழில் இருந்து வருவதாக எண்ணுவது. ஆனால் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டுச் சொற்கள் காலப்போக்கில் மற்ற தென்னிந்திய மொழிகளிலிருந்து குறிப்பாக தெலுங்கிலிருந்து (பல்லவர் காலத்தில் பையத் தொடங்கி நாயக்கர் காலத்தில் ஒரு உச்சம் தொடும் வரை) நம் பொதுப் புழக்கத்திற்கு வந்து சேர்ந்தவை. ஆனால் இவற்றைப் பிரித்தறிவதில் ஒரு சிக்கலும் உண்டு. வடமொழியிலிருந்து வரும் சொற்களை பிரித்து இனம் காண்பது என்றுமே தமிழில் உறுதியாக இருந்து வரும் ஒரு மரபு (இன்றைய போலி மொழியியலாளர்களைத் தவிர); ஒப்புநோக்க அது எளிதானதும் கூட. ஆனால் மேற்கூறியவை ஒரே மொழிக்குடும்ப பெறுகைகளாதலால் பழந்தமிழ்ச் சொற்கள்  போன்றே தோன்றும், எனவே கடினம். அவற்றை சரிபார்க்க அவை பழந்தமிழ் நூல்களில் உள்ளனவா என்று பார்ப்பது ஒரு முறைமை. ஆனால் தொடக்கம் தொட்டே செவ்வியல் தன்மையோடும் சுருங்கிய செறிவான நடையோடும் உள்ள பழந்தமிழ் நூல்களில் அன்றைய மக்கள் புழங்கிய எல்லாச் சொற்களுக்கும் இடம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. ஆதலால் சங்கஇலக்கியம் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களில் இல்லையேல் அது தமிழ் மூலம் கொண்டதல்ல  எனக் கூறிவிடவும் இயலாது.

இதற்கான மற்றொரு வழியாகத் தோன்றுவது மலையாளத்தில் அவை உண்டா என நோக்குவது. மலையாளத்தில் தமிழைவிட புறத்தாக்கங்கள் கூடுதல் எனினும் அவை பெரும்பாலும் வடமொழி மற்றும் ஓரளவு வெளிநாட்டு மொழிகள் (அரபி, போர்ச்கீசு போன்ற) சார்ந்தவையே. அவற்றைப் பிரித்தறிவதும் எளிது. ஆனால் தமிழில் சோழர் காலத்திற்கு பிறகு சில நூற்றாண்டுகளாகவே ஆட்சிமொழி, புலம்பெயர் மக்கள், இசைப்பாடல்கள் என பலதளங்களிலும் தமிழ் தெலுங்கோடு உரையாடி கொண்டும் கொடுத்தும் திகழ்ந்தது. ஆனால் மலையாளத்தில் தெலுங்கின் தாக்கம் அறவே இல்லை எனலாம். எனவே அக்காலத்தில்  தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்த சொற்களைக் கண்டறிய அவை மலையாளத்தில் உள்ளனவா என நோக்குவது பயனுள்ளதாக அமையும்.

ஒரு சொல் பழந்தமிழ் நூல்களிலும் இல்லை மலையாளத்திலும் இல்லை ஆனால் பிற்கால தமிழ் நூல்களிலும் இன்றைய பொதுவழக்கிலும் இயல்பாக காணக்கிடைக்குமெனில் அது தெலுங்கின் வரவாக இருக்க வாய்ப்புகள் அதிகம் எனக் கருதுகிறேன்.  உதாரணமாக ஞாபகம், காரம், பண்டிகை, சின்ன, கொஞ்சம், பாப்பா, பொம்மை என பல சொற்கள் நினைவுக்கு வருகின்றன. ஆண்டாளின் “சிற்றஞ்சிறு காலே” விலிருந்து பாரதியின் “சின்னஞ்சிறு கிளியே” வரை தமிழில் ஒரு வளர்சிதை மாற்றம் நிகழ்ந்துதான் இருக்கிறது போலும்.

ஆனால் ‘செப்பு‘ போன்ற சொற்களை இதில் சேர்த்துவிட முடியாது (அவ்வாறு சேர்ப்பினும் அது “தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்”). நம் புழக்கத்தில் பொதுவாக இல்லாமலும் தெலுங்கில் சரளமாக புழங்கினாலும் தொன்றுதொட்டு இன்றுவரை தமிழ் இலக்கியங்களில்  தொடர்பயன்பாட்டில் உள்ள சொற்களும் உண்டு. அவை மூல திராவிடமொழியிலிருந்து நேரடியாக பெறப்பட்டு   பேச்சுவழக்கில் ஒழிந்துபோனாலும் இலக்கியத்தொடர்ச்சி உள்ளவை. ஆகவே அவை பழந்தமிழ்ச் சொற்களே. ஆனால் மேற்சொன்ன பெறுகைகள் வெவ்வேறு திராவிட மொழிகளாக நிலைகொண்டபின் சுமார் ஆயிரம் ஆண்டுகாலம் மொழிபெயர் தேயத்து சொற்களாக விளங்கி பிற்காலத்தில் தமிழுக்கு வந்துசேர்ந்து பின்பு தமிழாகவே மாறிவிட்டவை.

இவற்றையெல்லாம் தாண்டி தமிழ் மலையாளம் என இருமொழிகளிலும் சிலசொற்களின் புழங்குதளங்களிலுள்ள ஒற்றுமை, ஆனால் அதே நேரத்தில் நாம் எளிதில் தவறவிடக்கூடிய மிகநுண்ணிய வேறுபாடுகளை நோக்கும்போது அவை வியப்பளிப்பதோடு மட்டுமல்லாமல் அதில் நாம் சிறிதுதூரம் பயணிக்கவல்ல வாசல்களையும் திறக்கின்றன.  உதாரணமாக சொல்வளம் மிக்க தமிழில் ‘Give’ என்பதற்கு இணையான சொற்களுக்குப் பஞ்சமில்லைதான்.  தா, கொடு, அளி, ஈ, நல்கு, வழங்கு போன்றவை எனக்கு சட்டென நினைவுக்கு வருபவை (நாஞ்சில் நாடன் ஐயாவிடம் வேண்டினால் பல பக்கங்களிலும் காலகட்டங்களிலுமாக நீளும் ஒரு பெருங்கட்டுரையை அவர் அருளக்கூடும்). நாம் மேற்கண்ட எல்லாச்சொற்களையும் ஒன்றுக்கொன்று மாற்றாக எவ்வித வேறுபாடுமின்றி எல்லா இடங்களிலும் பயன்படுத்துகிறோம்.

பொதுவாக கேரளத்தில் ஒன்றைக்காணலாம். அங்கு புழக்கத்தில் இல்லாத ஒரு சொல்லை தமிழர்கள் சொன்னாலும் நம்மை அடையாளம் கண்டுகொண்டு நமக்கு உதவும் பொருட்டு ஒரு படி மேலே சென்று சற்று மெனக்கெட்டு புரிந்துகொள்ள முயல்வார்கள். ஆனால் நான் கேரளம் சென்ற தொடக்கநாட்களில் மலையாளத்தில் வெகுவாக புழக்கத்திலுள்ள ஒரு சொல்லைப் பயன்படுத்தியும், அச்சொல் எங்கள் இருவருக்குமிடையேயான உரையாடலை புரிந்துகொள்வதில் ஒரு குழப்பத்தை உருவாக்கியது.  வீட்டு உரிமையாளரிடம் ஒரு தொகையை அளித்தபின் மீதமுள்ள பணத்தை ‘பின்னே கொடுக்காம்’ எனக்கூறியபோது அவர் குழம்பிப்போய் ‘யாருக்கு கொடுக்கவேண்டும்?’ எனக் கேட்டுக்கொண்டிருந்தார். பிறகு என்னையும் அவரையும் கைகளால் மீண்டும் மீண்டும் காட்டி என் தொடக்ககால தமிழாளத்துடன் சைகை மொழியையும் கொண்டு ஒரு வழியாக எங்களுக்குள் யாருக்கு யார் கொடுக்கவேண்டும் என்பதைத் தெளிவாக்கிக்கொண்டோம்.

சில ஆண்டுகள் கழித்துதான் தெரியவந்தது எங்கள் இருவரின் பணப்பரிமாற்றத்தில் மூன்றாவது நபர் வரும்வரை கொடுத்தல் என்ற சொல்லுக்கு இடமில்லை;  தருதல் என்பதே உரிய சொல் என்று. மலையாளத்தில் தா மற்றும் கொடு என்ற சொற்களை எல்லா இடங்களிலும் நமக்குத் தோன்றியபடி பயன்படுத்தவியலாது. அவற்றைப் பயன்படுத்தும் இடவேறுபாடுகள் நன்கு வரையறுக்கப்பட்டவை.  தன்மை மற்றும் முன்னிலை ஆகிய இடங்களில் தருதலும் படர்க்கையில் கொடுத்தலும் பயன்படுகின்றன என்று நீண்டகால அவதானிப்புக்குப் பிறகுதான் புரிந்துகொண்டேன் (நாமாகத்தான் தெரிந்துகொள்ள வேண்டும்; பொதுவே அவர்கள் மலையாளத்தில் கறாராக கடைபிடிக்கும் சரியான உச்சரிப்பு முறைகளையோ, சொற்களின் பயன்பாட்டிலுள்ள நுண்ணிய இடவேறுபாடுகளையோ வேற்று மொழியினருக்கு சொல்லிக்கொடுப்பதோ/ திணிப்பதோ இல்லை. அடுத்தவர்களிடம் அவர்கள் அதை எதிர் பார்ப்பதும் இல்லை. மற்றவர்களின் பேச்சு முறைக்கு ஏற்ப  தகவமைந்துகொள்வார்கள். ஆகவேதான் இந்தத் தாமதம்).

இன்றைய தமிழில் இந்த வேறுபாடு முற்றிலும் இல்லை என்று தெரியும். ஆனால் பழந்தமிழ் இலக்கியங்கள் கண்ணில் படும்போதெல்லாம் இந்த வேறுபாடு தென்படுகிறதா என்று நோக்கும் வழக்கம் என்னைத் தொற்றிக்கொண்டது. பலவற்றிற்கும் கம்பனே கலங்கரை விளக்கமாதலின் அவர்தன் பெருங்கதையாடலில் இதை எங்ஙனம் கையாண்டிருக்கிறார் என்று பார்த்தபோது, அங்கோ எண்ணற்ற இடங்கள்.  அவற்றில் சிலவற்றை இங்கு உதாரணமாகச் சொல்லலாமென நினைக்கிறேன்.

பலகாண்டத்திலிருந்து தொடங்கினால் மாமுனி விசுவாமித்திரன் தன் முன்நிற்கும் தயரதனிடம்

“நின் சிறுவர் நால்வரினும் காரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி”

எனச்சொல்ல, பெரும் மனப்போராட்டத்திற்குப் பிறகு வசிட்டன் தேற்றவே

“நல்தந்தை நீ தனித்தாயும் நீ இவர்க்கு எந்தை! தந்தனன் இயைந்த செய்க”

எனக்கூறி இராம இலக்குவர்களை தயரதன் அனுப்பி வைக்கிறான்.

ஆனால் அயோத்யா காண்டத்தில் இராமனிடம் ‘முடி சூடவில்லையா?’ என கோசலை கேட்க ‘பரதனே முடி சூடுவான்’ என அவன் கூற

“நன்று நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து ஒன்றி வாழுதி ஊழிபல”

என்று படர்க்கையில் உள்ள பரதனுக்கு கொடுக்கச்சொல்கிறாள் கோசலை.

அடுத்ததாக தனக்கோ முன்னிலையில் உள்ளவர்க்கோ  படர்க்கையில் உள்ளவர் அளித்ததையும் தருதல் கொண்டே மலையாளத்தில் சுட்டுகிறார்கள். யுத்தகாண்டத்தில் கும்பகர்ணன் – வீடணன் சந்திப்பில் வீடணன் இராமன் தனக்கு அளித்த இலங்கை அரசை உனக்கு அளிப்பேன் என்பதை கும்பகர்ணனிடம் கீழ்க்கண்டவாறு உரைக்கிறான்.

“எனக்கு அவன் தந்த செல்வத்து இலங்கையும் அரசும் எல்லாம்

நினக்கு நான் தருவென்; தந்து, உன் ஏவலின் நெடிது நிற்பென்”

மேலும் படர்க்கையில் உள்ள ஒருவர் மற்றொரு படர்க்கையில் உள்ளவர்க்கு அளிப்பதை இங்கு  கொடுத்தலாலே சுட்டுகிறார்கள். உதாரணமாக கம்பன் ஆசிரியன் சொல்வதாக வரும் தருணங்களில் கதாபாத்திரங்கள் படர்க்கையாகி விடுவதால் கீழ்கண்டவாறு உரைப்பார். சுந்தரகாண்டத்தில் சீதை அனுமனிடம்  சூடாமணி வழங்கியதை

“நாடி வந்து எனது இன் உயிர் நல்கினை நல்லோய்!

கோடி! என்று கொடுத்தனள் மெய்ப்புகழ் கொண்டாள்” என்பார்.

முதற் போர் புரி படலத்தில் இராவணன் இராமனிடம் தோற்றுச்செல்லும்போது ஆசிரியன் கூற்றாக வரும் புகழ்பெற்ற ‘வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்’ எனத்தொடங்கும் பாடலில் “சங்கரன் கொடுத்த வாளும்” என்று ஆசிரியர் கூற்றாக உரைப்பார்.

இறுதியாக தான் உள்ளடங்கிய மக்கள்/உயிர்த் திரளுக்கு அளிக்கப்படுவதையோ அல்லது மேலுள்ள பேராற்றல் ஒன்று உலகப்பொதுமைக்கு அளிப்பதையோ தருதல்கொண்டே மலையாளத்தில் சுட்டப்படுகிறது. ‘தெய்வம் தந்ந’   எனத்தொடங்கும் கூற்றுகள் இங்கு ஏராளம்.  சித்திரகூடத்தில் பரதன் முதலாய அனைவரும் சென்று இராமனை ‘திரும்பவா’ என்று  அழைக்கும் தருணத்தில் வசிட்டனைப்பார்த்து “தேன்தரு மலருளான் சிறுவ” (நான்முகனின் மகனே)  என்று இராமன்  அழைக்கிறான்.  உலகிற்கே தேனை வழங்குவது மலராதலால் தேன்தரு என்றார். மலையாளத்தில் ‘பசு பால் தருந்நு’ என்பது பாலபாடம்; ‘பசு பால் கொடுக்குந்நு’ அல்ல (கன்றுக்கோ  அல்லது படர்க்கையில் ஒரு குறிப்பிட்டவருக்கோ வழங்கும் இடங்களில் மட்டும் அதை பயன்படுத்தபலாம்).

வள்ளுவனும் தன்னை உள்ளடக்கிய சமூகத்திற்கு / உலகப்பொதுமைக்கு அறமோ இறையோ பொதுவாய் அளிக்கும் எல்லாவற்றையும் தரும் என்றே பல்வேறு இடங்களில் மீண்டும் மீண்டும் ஈற்றுச்சீராக சொல்லி முடிக்கிறார்; கொடுக்கும் என்றல்ல. கொடுக்கும் என்பதும் குறள் வெண்பாவில் ஈற்றுச்சீராக வரத்தகுதியுள்ள ஒரு சொல்லே (பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில்). ஆனால் இந்த பொருள்வேறுபாட்டின் காரணமாகவே ‘கொடுக்கும்’ என்பது ‘தரும்’ என்பதற்கு மாற்றாக வைக்க பொருத்தப்பாடுடையதன்று.

ஆனால் இவ்வுலகில் சிலர் சிலருக்கு அளிக்கும் ஈகையைச் சுட்ட

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉம் இன்றிக் கெடும்”

எனத்தெளிவாக கொடுப்பது என்கிறார் வள்ளுவர்.

கம்பனுக்கு காலத்தால் சற்றே முன் சென்று ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவையில் சில இடங்களைக் காணலாம்.

தனக்கும் தன் தோழிகளுக்கும் கண்ணன் வழங்கவிருக்கும் பறையைக் குறிப்பிடும்போது

“நாராயணனே நமக்கே பறை தருவான்”

போற்றப் பறைதரும் புண்ணியனால்”

“உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்”

“இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்”

என்று எல்லா இடங்களிலும் தருவதையே கூறுகிறார்.

ஆனால் எதிரிகளுக்கு அவன் வழங்குவதை “செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்” என இனம் பிரித்து கூறுகிறார்.

மேலும் பின்னோக்கி சங்கப்பாடல்களுக்குச் சென்றாலும் இதே வேறுபாட்டைக் காணமுடிகிறது. ஒளவையின் சிலவரிகளை இங்கு மேற்கோளாகக் காட்டவிழைகிறேன்.

மன்னன் அதியமானை நோக்கி அவனையும் அவன் முன்னோரையும் போற்றும் ஒளவை

“அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்,

அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்,

என்று பாடுகிறார்”.

அதுவே அதியமான் மறைந்த பிறகு அவனது நடுகல்லிற்கு பீலி சூட்டி கள்ளைப் படையலிடும் காட்சியைக்கண்டு கையறுநிலையில் ஒளவை கூறுகிறார், சிகரங்கள் உயர்ந்த மலைகளையுடைய நாட்டைவழங்கினாலே கொள்ளாத வள்ளல் அவன், இதையா ஏற்றுக்கொள்ளப்போகிறான்? என்று, கீழ்க்கண்ட வரிகளால்

“நடுகல் பீலி சூட்டி, நார்அரி

சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ

கோடு உயர் பிறங்குமலை கெழீஇய

நாடு உடன் கொடுப்புவும் கொள்ளாதோனே?”

படர்க்கை ஆகிவிட்ட அதியனுக்கு கொடுப்பவும் என்கிறார் (சங்கச்சித்திரங்களில் மனதை உலுக்கிய பாடல்களில் ஒன்று; கல்நெஞ்சையும் கனியவைக்கும் முன்நின்று கல்நின்றவன்!).

இவ்வாறு சங்கக்காலம்தொட்டு கம்பன்காலம்வரை ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் பேணிவந்த ஒரு நுண்ணிய பொருள் வேறுபாட்டை கடந்த சிலநூற்றாண்டுகளில் எங்கோ தவற விட்டுவிட்டோம். கண்ணனிடம் ‘தாராய், தருவான்‘ என்ற ஆண்டாளின் வேண்டுதலிலிருந்து 17/18 ஆம் நூற்றாண்டுக்குள் “ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா” என்று மாறுமளவுக்கு தமிழில் ஒரு அலை பாய்ந்துதான் இருக்கிறது போலும்.

எல்லா இடங்களிலும் வேறுபாடின்றி ஒற்றைச்சொல்லையே பயன்படுத்திய தெலுங்கு மற்றும் கன்னட (தெலுங்கில் இவ்வு, கன்னடத்தில் கொடு) நிலத்து ஆட்சியாளர்களின் வருகையும் அம்மக்களுடனான உரையாடலும் இதை நிகழ்த்தியதா என்பது ஆராயத்தக்கது. காலப்போக்கில் பொதுமக்களின் பேச்சுவழக்கில் இவ்வேறுபாடு மறைந்துபோவது இயல்பானதுதாக இருக்கலாம் (இன்று தமிழகத்தில் இது அறவே இல்லையென்றாலும் ஈழத்து பேச்சுவழக்கில் ஓரளவு இருப்பதாகவே தோன்றுகிறது; திரு. இலங்கை ஜெயராஜ் போன்றவர்களின் உரைகளில் பெரும்பாலும் இந்த வேறுபாடு இயல்பாகவே அமைந்திருப்பதைக் காணமுடிகிறது). ஆனால் பிற்காலத்திய தமிழகத்து கவிகளிடமும் அறிஞர்களிடமும் கூட இது மறைந்துபோனதுதான் வியப்பளிக்கிறது.

சில மேடைகளில், குறிப்பாக கம்பன் கழக மேடைகளில் இவ்விரு சொற்களுக்கான வேறுபாட்டினைக் குறித்து ஒரு கருத்து உலா வருவதைக் காணலாம். அவர்களின் கூற்றுப்படி தா, கொடு, ஈ என்ற மூன்று சொற்களுக்கிடையேயான வேறுபாட்டைக் கீழ்க்கண்டவாறு சொல்லலாம். ஈதல் தனக்கு கீழ் உள்ளவருக்கும், தருதல் என்பது தனக்கு இணையான ஒருவருக்கும் கொடு என்பது தனக்குமேல் உள்ள ஒருவருக்கும் அளிப்பது. இதில் ஈதல் என்பதற்கான விளக்கம் மட்டுமே சரியானது.

ஏய வரங்கள் இரண்டினையும் கேட்ட கேகயன் மானிடம் முதலில் தயரதன்

“நின் மகன் ஆள்வான்; நீ, இனிது ஆள்வாய்; நிலம் எல்லாம்

உன் வயம் ஆமே; ஆளுதி; தந்தேன்; உரை குன்றேன்

…………… (இராமன்) இந்த நாடு இறவாமை நய”

என மரியாதையாக ‘தந்தேன்’ என்கிறான்.

பின்னர் பெரும் மன்றாடலுக்குப் பிறகு இனி ஒன்றும் செய்யவதற்கில்லை என உணர்ந்த தயரதன் கைகேயியை வெறுத்து கடைமகளாகக் கருதும் வேளையில் சொல்கிறான்

ஈந்தேன் ஈந்தேன் இவ்வரம்

………… வசை வெள்ளம்

நீந்தாய் நீந்தாய் நின் மகனோடும் நெடிது”

எனக் கூறாமுன்னம் தேறானாகி செய்கை மறக்கின்றான்.

ஒளவையும் அதியனின் மறைவுக்குப்பின் தன் பழம்நினைவுகளை மீட்டுகையில் அமரனாகிவிட்ட அவனைவிடத் தன்னை ஒருபடி கீழ் வைத்து

“சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே!

பெரிய கட் பெறினே, யாம் பாடத் தான்மகிழ்ந்து உண்ணும்; மன்னே!

………………………

என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும்; மன்னே!”

என்று ஈயும் ஈயும் என ஏங்குகிறார்.

இறுதியாக “வறியார்க்கொன்று ஈதலே ஈகை” என்று வான்புகழ் வள்ளுவனே வகுத்துரைத்தபின் அதனை மறுத்துரைக்க இப்புடவிதன்னில் யாருளார்?

ஆனால் மற்ற இரு சொற்களுக்கான அவர்களின் விளக்கங்கள் எங்கும் பொருந்துவதாகத் தெரியவில்லை. உதாரணமாக

“எனக்கு அவன் தந்த செல்வத்து இலங்கையும் அரசும் எல்லாம்

நினக்கு நான் தருவென்; தந்து, உன் ஏவலின் நெடிது நிற்பென்”

என்ற வீடணனின் சொற்களையே மீண்டும் பார்க்கலாம். இராமன் வீடணனை இணையாகப்போற்றினாலும் பரம இராமபக்தனான வீடணன் இராமனை தனக்கு இணையாகக்கருதி ‘அவன் தந்த’ எனச்சொல்லியிருக்க வாய்ப்பில்லை (அவர்களின் இவ்விளக்கம் உண்மையாக இருப்பின் ‘அவன் ஈந்த’ என்றே சொல்லியிருப்பான்). மேலும் தன் தமையனான கும்பகர்ணனுக்கும் ‘கொடுப்பென்’ என்பானேயன்றி  ‘தருவென்’ எனக்கூறியிருக்கமாட்டான். அவர்களின் விளக்கத்தை மாற்றிப்போட்டு பார்த்தாலும் (தருதல் மேலுள்ளோர்க்கும் கொடுத்தல் இணையானவர்க்கும் என்று) அது மேலும் அர்த்தமற்றதாகி விடுகிறது. இராமனைவிட மேலான எனக்கு ‘அவன் தந்தான்’ என்று வீடணன் சொன்னதாக ஆகிவிடும்.

பழந்தமிழ் இலக்கியங்களை மீட்டெடுக்கத்தொடங்கியபின் கடந்த இரு நூற்றாண்டுகளாக பெரும்கவனத்தையும் உழைப்பையும் செலுத்தி நம் அறிஞர்கள் ஆராய்ந்தறிந்திருக்கிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, அது ஒரு மாபெரும் அறிவியக்க மறுமலர்ச்சிதான். எனினும் இன்னும் அவற்றில் கண்டடையப்படாத பக்கங்களும் நிரப்பப்படாத இடைவெளிகளும் ஏராளம். அதில் மறு/மேல் கண்டடைவுகளுக்கு என்றைக்கும் இடமிருக்கும் என்பதிலோ அல்லது என்றுமே நம்மால் கண்டடையப்படாமலே போகக்கூடிய புதிர்களும் இருக்கும் என்பதிலோ ஐயமில்லை. ஏனெனில் அவை எழுதப்பட்ட நிலமும் வாழ்வியலும் உளநிலையும் மொழியும் வழக்காறுகளும் பலமாறுதல்களுக்கு உட்பட்டு இன்று நம்மிடம் வந்து சேர்ந்திருக்கின்றன. அன்றைய வாழ்வியலையும் மொழியையும் மேலும் புரிந்துகொள்ள நம் அருகிலே உள்ள ஆனால் நம்கண்பாராத பெருங்கருவூலம் ஒன்றுண்டு, ஆம் மலையாளமும் கேரளமும் தான்.  ஏனெனில் பழந்தமிழ் இலக்கியங்கள் உயர்ந்தெழுந்து அதன் தலை வானைத்தொட்டு நின்றதருணத்தில் அதன் கால்களில் ஒன்றை  அது ஊன்றி நின்றது சேரமண்ணில். நமக்கு அது அயல்மண் (இன்றைய தமிழில் அது நமக்கு எங்கோவுள்ள தூரத்து மண் எனப் பொருள்படலாம்; ஆனால் பழந்தமிழிலும் அறுபடாமல் இன்று வரை மலையாளத்திலும் அண்மையது என்றே குறித்து நிற்கிறது! ஆகவே அது அணுக்கமானதும், அணுகி அறியவேண்டியதும் கூட).

மொழியளவில் மட்டுமல்ல பண்பாட்டளவிலும் கூட. உதாரணமாக மதுரைக்காஞ்சியில் கூறுவதுபோல சங்ககாலம் தொட்டு சோழர்காலம் வரை நாமும் பெருவிழாவாகக் கொண்டாடிய ஓணம் இன்று தமிழகம் கைவிட்டாலும் கேரளத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது காலத்தைக்கடந்து திகழும் ஒரு வியன்நிகழ்வு (அவர்களேனும் பேணிக்கொண்டார்களே, நாம் ஏன் விட்டுவிட்டோம் என்று நம்மையே கேட்டுக்கொள்வதற்கு பதிலாக ஒரு புகழ்பெற்ற பேச்சாளர் சொல்கிறார் ‘நம்ம பண்டிக அவங்க எடுத்துக்கிட்டாங்க’ என்று. இது இங்குள்ள மற்றொரு மனநிலை). மேலும் தாங்கள் கூறும் வேலன் வெறியாட்டு, பரணி விழா போல அங்கு தொன்றுதொட்டு அறுபடாது இன்றுவரை நீடிக்கும் எத்தனையோ சடங்குகள் குறியீடுகள்.

தமிழும் மலையாளமும் நவீன இலக்கிய மட்டத்தில் ஓரளவு உரையாடினாலும் (அதுவும் மொழிபெயர்ப்புகளால்), மலையாளமோ நவீனத் தமிழைவிட பழந்தமிழுக்கே அணுக்கமானதாக இருக்கிறது.  ஆனால் பழந்தமிழ் இலக்கியங்களில் புழங்குபவர்களுக்கும் அதில் ஆய்வுகளை நடத்தி வெளியிடும் கல்வித்துறையில் செயல்படுபவர்களுக்கும் மலையாளம் பற்றிய எந்த அறிமுகமும் இல்லாமலிருப்பது வருத்தமளிப்பதே. நம் அறிஞர்கள் சற்று அங்கு எட்டிப்பார்த்தாலே போதும் பல திரைகள் விலகி இதுவரை நமக்கு புலப்படாத பழந்தமிழின் பல புதிய பக்கங்கள் சட்டென தெளியக்கூடும்.  பல குறைபுரிதல்களையும் அபத்தமான விளக்கங்களையும் அது தவிர்க்கும்.   இன்று நம் அறிஞர்களுக்கு வேண்டியது இது குறித்த ஒரு விழிப்புணர்வும் திறந்தமனமும் சிறிது முயற்சியும் உழைப்பும்.

இவற்றையெல்லாம் தாண்டி சங்கக்கவிதைகள் முதலாய பழந்தமிழ் நூல்கள் இன்றைய மலையாள சகோதரர்களின் நேரடி வாசிப்பிற்கு உள்ளானால் அது எவ்வாறு பொருள்படுமென்று சிலநேரங்களில் தோன்றுவதுண்டு. இப்போதைக்கு அதற்கான வாசல் மூடப்பட்டு  இருப்பதாகவே தோன்றுகிறது. அங்கு புழக்கத்தில் உள்ளவை இன்றைய மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பழந்தமிழ் நூல்களே. அவற்றைக்கொண்டே ஒரு ‘நிலம் பூத்து மலர்ந்ந நாள்’ பிறக்கக்கூடுமெனில், சங்கக்கவிகளின் நேரடி சொற்களையே அவர்கள் எதிர்கொள்வார்களேயானால் நாம் எண்ணியிராத வேறுபல திறப்புகள் நிகழ வாய்ப்பிருக்கிறது. நம் பங்காளிகளுக்கும் அவர்களின் தரப்பிலிருந்து சொல்ல ஒருபாடு உண்டாகுமென்றே நினைக்கிறேன். தாங்கள் கூறுவதுபோல இந்திய மொழிகள் ஒரு பொதுஎழுத்துருவை நோக்கிச்செல்லும் காலம் வாய்க்கும்போது இத்தகு வாசிப்பிற்கான சாளரங்கள் எளிதில் திறக்கக்கூடும். காத்திருப்போம்.

ஆக தமிழுக்கும் மலையாளத்திற்குமான வேறுபாடென்பது பழந்தமிழிலிருந்து தமிழ் தக்கவைத்துக் கொண்டதும் மலையாளம் இழந்து வெளியிலிருந்து பெற்றது மட்டுமல்ல பழந்தமிழிலிருந்து மலையாளம் தக்கவைத்துக் கொண்டதும் நவீனத்தமிழ் இழந்து வெளியிலிருந்து பெற்றதையும் உள்ளடக்கியது என்பேன்.

 

அன்புடன்

இரா. செந்தில்

 

முந்தைய கட்டுரைவைணவ இலக்கிய வகுப்புகள் அறிவிப்பு
அடுத்த கட்டுரைA Fine Thread – Review