மருத்துவர் ஜீவா அறக்கட்டளை விருதுகள்

மருத்துவர் வெ.ஜீவானந்தம் அவர்கள் தனது வாழ்க்கை முழுதும் சமூகம், சூழலியல், பொதுவுடைமைச் சித்தாந்தம், காந்தியம், மருத்துவம், படைப்பாக்கம் மற்றும் பொதுச்சேவைகள் சார்ந்த எண்ணற்ற அறப்பணிகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி, அந்தந்த துறைகளில் பல்வேறு சாத்தியங்களை உண்டாக்கிக் காட்டியவர். அவர் உருவாக்கியகூட்டுறவு மருத்துவமனைகள்முன்னெடுப்பு இந்திய அளவில் முன்னுதாரணமானவை. நம் சமகாலத்தில் தோன்றிய முக்கியமானதொரு செயல்விசை மருத்துவர் ஜீவா. செயலூக்கியாக நிறைய இளையவர்களை அறம் நோக்கி வழிப்படுத்திய அவருடைய பெருவாழ்வு என்றுமே வணக்கத்திற்குரியது.

மருத்துவர் ஜீவா அவர்கள் விட்டுச்சென்ற கனவுத் திட்டங்களை உரியவாறு செயல்படுத்துவதற்கு ஏதுவாக, நண்பர்களின் ஒருங்கிணைப்பில்மருத்துவர் ஜீவா அறக்கட்டளைநிறுவப்பட்டது. இவ்வமைப்பின் செயல்நீட்சிகளில் ஒன்றாக, சமகாலத்தில் சமூகக் களமாற்றதிற்கும் சிந்தனைத் தெளிவிற்கும் காரணமாக அமையும் முன்னோடி ஆளுமை மனிதர்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து அவர்களுக்குபசுமை விருதுகள்அளித்து கெளரவிக்கப்படுகிறது. 2022ம் ஆண்டில் பத்திரிகையாளர் சமஸ், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, செயற்பாட்டாளர் விஷ்ணுப்ரியா ஆகியோருக்கும், 2023ம் ஆண்டில் நாட்டாரியல் ஆய்வாளர் அ.கா.பெருமாள் மற்றும் திருநங்கைகள் செயற்பாட்டாளர் சுதா ஆகியோருக்கும் பசுமை விருதுகள் வழங்கப்பட்டன.

2024ம் ஆண்டுக்கான பசுமை விருதுகள் சூழலியலாளர் தியடோர் பாஸ்கரன் மற்றும் ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது. சமகாலத்து இந்தியச் சூழலில் குறிப்பிடத்தக்க சூழலிய எழுத்தாளராகவும் வரலாற்று ஆய்வாளராகவும் தியடோர் பாஸ்கரன் அவர்கள் அறியப்படுகிறார். World Wildlife Fund எனப்படும் உலகக் கானுயிர் நிதியத்தின் அறங்காவலராகவும், தமிழ்நாட்டில் மதிப்புறு கானுயிர் காவலராகவும் பணியாற்றியுள்ளார்

The Dances of Sarus, The Sprint of the Blackbuck, இன்னும் பிறக்காத தலைமுறைக்காக, தாமரை பூத்த தாடகம், வானில் பறக்கும் புள்ளெலாம், கையில் இருக்கும் பூமி, கல் மேல் நடந்த காலம் உள்ளிட்ட முக்கியமான சூழலிய படைப்புகளை எழுதியுள்ளார். மேலும், உல்லாஸ் காரந்தின் The way of the Tiger என்னும் நூலைகானுறை வேங்கைஎன்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். மழைக்காலமும் குயிலோசையும் என்னும் நூலின் தொகுப்பாசிரியர் இவர். தமிழில் சுற்றுச்சூழலியல், கானியல் சார்ந்த எழுத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவராக இவர் போற்றப்படுகிறார்.

ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம், தண்ணீர் தட்டுப்பாடு உள்ள கிராமங்களில் பாழ்பட்டுக் கிடக்கும் பொதுக்கிணறுகளைப் புனரமைத்து மீட்டு, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவந்து மக்களிடம் ஒப்படைக்கிறது. புளியானூர், சிங்காரப்பேட்டை, ஈரோடு அவல்பூந்துறை, அந்தியூர் மலைக்கிராமம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு கிராமங்களில் உள்ள 15 கிணறுகளை இதுவரை இவ்வமைப்பினர் புனரமைத்துக் கட்டித்தந்துள்ளனர். முன்னோர்களின் கூட்டுழைப்பாலும் மரபார்ந்த அறிவாலும் எழுப்பப்பட்டு சமூகத்தின் அலட்சியத்தால் கைவிடப்பட்ட பழங்கிணறுகளைத் தேடிச்சென்று தூர்வாரி நீராதாரமாக மாற்றும் இவ்வமைப்பின் செயல்பாடு மிகுந்த நம்பிக்கைக்குரியது.

ஆகவே, சூழலிய ஆளுமை தியடோர் பாஸ்கரன் மற்றும் ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கத்திற்கு இவ்வாண்டின் மருத்துவர் ஜீவா பசுமை விருதுகள் அளிப்பதில் நிறைமகிழ்வு கொள்கிறோம். விருதளிப்பு விழாவுக்கான தேதி, நிகழ்விடம் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குறித்த தகவல்களை விரைவில் அறிவிக்கிறோம். களச்செயல்பாட்டு மனிதர்களைக் கண்டடைந்து மனங்குளிரப் பாராட்டும் மருத்துவர் ஜீவா அவர்களின் மாறாப்பண்பின் நீட்சியாக இவ்விருதளிப்பும் குணம்கொள்ளட்டும்!

மகிழ்வுடன்,

மருத்துவர் ஜீவா அறக்கட்டளை

முந்தைய கட்டுரைடெல்லியும் திருவனந்தபுரமும்
அடுத்த கட்டுரைஅகவாழ்வின் நெரிசல் – கோ.புண்ணியவான்