டெல்லியும் திருவனந்தபுரமும்


A Fine Thread and Other Stories வாங்க

டெல்லியில் 6 பிப்ரவரி 2024 அன்று என்னுடைய A Fine Thread and Other Stories சிறுகதைகளின் ஒரு சம்பிரதாய வெளியீட்டுவிழாவை ரத்னா புக்ஸ் ஏற்பாடு செய்திருந்தார்கள். அமெரிக்க நண்பர் ஜெகதீஷ்குமார் மொழியாக்கம் செய்த இக்கதைகள் ஏற்கனவே முக்கியமான இலக்கிய இதழ்களில் வெளிவந்தவை. நூல் முன்னரே வெளிவந்து மதிப்புரைகள் பலவும் வந்துவிட்டன.

ஜெய்ப்பூரில் இருந்து ஐந்தாம் தேதி கிளம்பி இரவு பத்து மணிவாக்கில் இந்தியா இண்டர்நேஷனல் செண்டருக்கு வந்தேன். அங்கே அறைபோட்டிருந்தனர். 1992 ல் சம்ஸ்கிருதி சம்மான் விருது பெறுவதற்காக முதன்முதலில் அங்கு வந்தேன். அதன் பின்னர் ஒரு முறை சாகித்ய அக்காதமிக்காக வந்திருக்கிறேன். அந்தச் சூழலில் முன்பு ஓர் அறிவுஜீவித்தன்மை இருந்ததாகவும், இப்போது கண்ணில்படுபவர்கள் எல்லாம் ஓய்வுபெற்ற உயரதிகாரிகளாக இருப்பதாகவும் எனக்கொரு உளமயக்கம்

நிகழ்வு மாலை ஆறு மணிக்கு. டெல்லியின் தட்பவெப்பம் ஊட்டி போல் இருந்தது. விடியற்காலை என நினைத்து நான் வெளிவந்து பார்த்தபோது எட்டரை மணி. குளிரில் அருகே லோடிபார்க் வரை ஒரு நடை சென்று வந்தேன். லோடி வம்ச சுல்தான்களின் சமாதிகள் அமைந்த பூங்கா. அந்நேரத்தில் டெல்லி இளைஞர்கள், இளம்பெண்களின் இடமாக இருந்தது. மாணவர்கள் கைப்பந்து, பூப்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். சிலர் தேர்வுகளுக்குப் படித்துக் கொண்டிருந்தனர்.

மாலையில் தினேஷ் சின்கா வந்து என்னை அழைத்துச் சென்றார். குன்ஸும் நூல் மையத்தில் ஏற்கனவே Stories Of the True நூல் விவாதத்திற்காக நானும் பிரியம்வதாவும் வந்திருக்கிறோம். டெல்லியின் முக்கியமான இலக்கிய மையங்களிலொன்று. பல தளங்களைச் சேர்ந்த அறிவுஜீவிகள், நூல் வெளியீட்டுத்துறையில் உள்ளவர்கள் அங்கே வருகிறார்கள்.

நிகழ்வில் கல்வியாளர் ஸ்ரீதர் பாலன் வரவேற்புரையும் என்னைப் பற்றிய ஓர் அறிமுகமும் நிகழ்த்தினார். பேராசிரியர் சி.ஜெ.வி.பிரசாத் தொகுப்பிலுள்ள என் கதைகளப் பற்றி சுருக்கமான ஓர் அறிமுகம் அளித்துவிட்டு நூலை வெளியிட்டார். அதன்பின் நான் பேராசிரியர் பிரசாத் கேட்ட கேள்விகளுக்கும், அரங்கினர் கேட்ட கேள்விகளுக்கும் பதில் சொன்னேன்.

பேராசிரியர் பழைய கணையாழிக் காலகட்டத்திற்குப் பின் அவர் தமிழில் வாசிப்பது அருகிவிட்டது என்றும், அந்நூலை வாசித்தபோது உலக இலக்கியத்தின் மிகச்சிறந்த மாதிரி தமிழில் நிகழ்வதை அறிந்து திகைத்ததாகவும் சொன்னார். நான் ‘இன்று இந்த உலகில் எழுதிக்கொண்டிருக்கும் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவன் நான். அதில் எனக்கு ஐயமேதுமில்லை. எவரும் வாசிக்காவிட்டாலும், எவரும் அதை உணராவுட்டாலும் அது அப்படித்தான்’ என்று சொன்னேன்.

 

அந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் எவ்வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டன என்று கேட்டார். அவற்றை உண்மையில் தேர்ந்தெடுத்தவை வெவ்வேறு இலக்கிய இதழ்கள், அவற்றில் வெளிவந்த கதைகளின் தொகுப்பு அது என்று நான் சொன்னேன். மொழியாக்கம் பற்றிக் கேட்டபோது, மொழிபெயர்ப்பாளரை நம்புவதுடன் சரி. நான் மொழியாக்கத்தை வாசிப்பதே இல்லை என்றேன்.

ஆனால் சிலநாட்களுக்கு முன் என் இரண்டு கதைகளின் மொழியாக்கங்களை சும்மா சாப்பிடும்போது வாசித்தேன். ஒன்று, சுசித்ரா- பிரியம்வதா மொழியாக்கத்தில் வெளிவந்த Elephant. இன்னொன்று ஜெகதீஷ்குமார் மொழியாக்கத்தில் இந்த தொகுதியில் இடம்பெற்றுள்ள வெளிவந்த shadow crow.  முற்றிலும் புதிய, நவீனக் கதை போலிருந்தன அவை. சிரித்தபடியே வாசித்தேன். மொழியாக்கம் வழியாகவே ஒரு நூல் முற்றிலும் புதிய அழகுடன் வெளிப்பட முடியும் என்றேன்

ஏறத்தாழ ஒரு மணிநேரம் கேள்விகளுக்குப் பதில் சொன்னேன். இலக்கிய அழகியல், இலக்கியத்துக்கும் தத்துவத்துக்குமான உறவு, செயற்கைநுண்ணறிவு என பல கேள்விகள் வந்தன. ஏன் என் நாவல்களை நான் காவியம் என்கிறேன் என்று ஒரு கேள்வி. நான் சொன்னேன். சினிமாவில் ஷாட்களை ‘தையல்’ செய்வதுண்டு. சிறுசிறு ஷாட்களை கச்சிதமாக இணைத்து ஒரே நீண்ட ஷாட் போல காட்டிவிடுவார்கள். அதைத்தான் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கண்டேன். வெவ்வேறு அரங்குகள் வழியாகச் சென்றேன். ஆனால் ஒரே பேச்சு தொடர்வதுபோலவே இருந்தது. ஒரே வகை சொற்கள். போஸ்ட் கலோனியலிஸம், நியோ ஃபெமினிசம், தலித்திசம், தேர்ட் வேர்ல்ட், எல்ஜிபிடி…. நான் அந்த உரையாடலில் ஒன்றாக ஒலிக்க விரும்பவில்லை. நான் அவர்களைப்போன்ற ஒரு நாவலை எழுதியவன் என என்னை முன்வைக்கக்கூடாது. ஆகவேதான் என் படைப்புகளை காவியம் என்கிறேன். காவிய அழகியலை நோக்கிச் சென்றேன்

 

ஒரு சிறு சங்கடமான நிகழ்வு. நான் ஆன்மிகத்தின் பொருட்டு உலகியல் துறப்பைப் பற்றி பேசினேன். தாய்மையே பெண்களுக்கு உலகியல்துறப்புக்கான தடையாக இருப்பதைப் பற்றி விளக்கினேன். பார்வையாளர்களில் ஓர் அம்மாள், முன்பு ஏதோ பல்கலையில் துணைவேந்தராக இருந்து ஓய்வுபெற்றவர் என்று சொன்னார்கள், சில நூல்களும் எழுதியிருக்கிறாராம். தமிழர், ஆனால் தமிழிலக்கியமே அறிமுகமில்லை. அவர் எழுந்து எனக்கு உபதேசங்கள் சொல்ல ஆரம்பித்தார். மிக எளிய தகவல்களைச் சொல்லி அவற்றையெல்லாம் நான் அறிந்து மேலே எழுதவேண்டும் என்றார்.

டெல்லி அதிகாரங்களில் இருக்கும் இந்த வகையானவர்கள் இலக்கியவாதி குறித்து என்ன நினைக்கிறார்கள் என எரிச்சல் வந்தது. ‘நல்லுபதேசத்துக்கு நன்றி. இந்தியாவில் எவரும் இலக்கியவாதிக்கு நல்லுபதேசம் செய்யலாம்’ என்றேன். அப்படி ஓர் அடி போடவில்லை என்றால் அது சுந்தர ராமசாமிக்கும் ஜெயகாந்தனுக்கும் கௌரவம் அல்ல என்று தோன்றியது அப்போது. Stories Of The True நூலுக்கு நல்ல மதிப்புரை எழுதிய இதழாளர் வாங்மயி பரகாலா வந்திருந்தார். அவரிடம் ‘கொஞ்சம் outspoken ஆக வெளிப்பட்டுவிட்டேனா?’ என்று கேட்டேன். “அது தேவைதான்” என்று சிரித்தார்.

ஏழாம் தேதி காலை திருவனந்தபுரம் கிளம்பினேன். மாலையில் திருவனந்தபுரம். அங்கே மாஸ்கட் ஓட்டலில் அறை. பழையகால பிரிட்டிஷ் மாளிகை அது. புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த விடுதியில் எனக்குப் பிடித்தது மிகச்சிறந்த, மிகச்சரியான கேரள உணவு கிடைக்கும் என்பது. மறுநாள் காலையில் புட்டு, கடலைக்கறி, ஆவியில் வேகவைத்த நேந்திரம்பழம், பப்படம் என ‘சர்ர்ரியான’ ஒரு ‘திரோந்தரம்’ காலையுணவு சாப்பிட்டேன். அன்று மதியம் ஒரு மணிக்கு என் நிகழ்வு. அது முடிந்து மூன்று மணிக்கு அங்கே இருந்த உணவை மறுத்து ஓட்டல் திரும்பி மரவள்ளிக்கிழங்கு, மீன்கறி, சிக்கன் என மீண்டும் தனி மலையாள உணவு.

இலக்கிய விழாக்களில் அறையில் உத்தரவிட்டு வரவழைத்து உண்பது நம் கணக்குக்கு வந்துவிடும். (இல்லையேல் குடித்தே விழாவை காலிசெய்துவிடுவார்கள் என்றார்கள்) ஜெய்ப்பூரில் மேரியாட் ஓட்டல் அறையில் முதல்நாள் பிட்ஸா சாப்பிட்டேன். மிகச்சரியான இத்தாலிய பிட்ஸா. ஆகவே தொடர்ச்சியாக மூன்றுநாட்கள் சாப்பிட்டேன். கிளம்பும்போது ஏழாயிரம் ரூபாய் பில் வந்தது. (ஆனால் சரியான இத்தாலிய பிட்ஸா என சொல்லி வாங்கவேண்டும். அங்கே பிரபலம் சிக்கன் டிக்கா மசாலா பிட்ஸாவாம். வடக்கர்கள் எல்லாவற்றிலும் மசாலாவை போடுகிறார்கள்.  பிட்ஸாவில் மசாலா. பாவம் எத்தனை வெள்ளைக்காரர்கள் ஆசைப்பட்டு ஆணையிட்டு வரவழைத்து தின்றுவிட்டு இரவெல்லாம் காரம் தாங்காமல் கதறினார்களோ.

மாத்ருபூமி இலக்கிய விழா 80 சதவீதம் மலையாள விழாதான். கே.ஸி.நாராயணன், கல்பற்றா நாராயணன் என எல்லா நெருக்கமான நண்பர்களையும் சந்தித்தேன். வழக்கமான நையாண்டிகள் சிரிப்புகள் என உற்சாகமான பொழுது. மதியம் ஒரு மணி நிகழ்வில் நான் , கே.சி.நாராயணன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் என்னும் தத்துவப்பேராசிரியர் ஆகியோர் மகாபாரதத்தை இன்று ஏன் மறு ஆக்கம் செய்யவேண்டும் என்னும் தலைப்பில் பேசினோம். இ.சந்தோஷ்குமார் தொகுத்தளித்தார்

மகாபாரதம் ஒரு ஆழ்படிமக் களஞ்சியம். அதைக்கொண்டுதான் இந்தியாவின் மொத்த புராணங்களும் எழுதப்பட்டுள்ளன. அது  ‘பில்டிங் பிளாக்’ போல. அவற்றைக்கொண்டு நான் நவீன இலக்கியம் படைக்கிறேன். ஏனென்றால் ஆழ்படிமங்கள் காலமற்றவை. அவைதான் நம் கனவை நிறைத்துள்ளன என்றேன். நான் மகாபாரதத்தை எழுதவில்லை. நான் எழுதியிருப்பது அதன் படிமங்களைக்கொண்டு ஒரு முழுமையான உலகை. அதில் அறங்களையும் விழுமியங்களையும் பரிசீலனை செய்கிறேன் என்றேன்

அதன்பின் கல்பற்றா நாராயணனின் கட்டுரைகள் அடங்கிய ‘எல்லா சலனங்களும் வியதிசலனங்கள்’ (எல்லா அசைவுகளும் எதிரசைவுகள்) என்னும் நூலை வெளியிட்டேன். சுருக்கமாக சில சொற்கள் கல்பற்றா பற்றிப் பேசினேன். பொற்கொல்லர்கள் நுனி விசித்திரமாக வளைந்த கிடுக்கிகளை வைத்திருப்பார்கள். அவற்றைக்கொண்டு மட்டுமே தொட்டு எடுக்கத்த நகைத்துளிகள் உண்டு. அதைப்போல வக்ரோக்தியால் மட்டுமே சொல்லத்தக்க மெய்ஞானமும் உண்டு. அவற்றைச் சொல்லும் கவிஞர் கல்பற்றா நாராயணன் என்றேன்.

மாலை ஐந்து மணி அமர்வு திராவிட அழகியல் என்னும் தலைப்பில்.  பி.எம்.கிரீஷ் தொகுத்தளித்தார். சென்னை பல்கலையில் மலையாளம் துறை தலைவராக இருந்தவர் அவர். அவரும் அரங்கும் கேட்ட வினாக்களுக்கு பதிலளித்தேன். திராவிட என்னும் அடையாளத்தின் பரிணாமம் எப்படி சிற்பநூல்களில் இருந்தும் ஆகமங்களில் இருந்தும் உருவாகி வந்து மொழியியல் அடையாளமாக ஆகியது என்றும், பின்னர் இன அடையாளமாக தமிழகத்தில் மட்டும் அரசியலாக்கம் பெற்றது என்றும் சொன்னேன்.

என் பார்வையில் திராவிட அழகியல் என ஒன்று உண்டு. அது நம் கோபுரங்களிலும் சிற்பங்களிலும் உள்ளது. அது நவீன இலக்கியத்திலும், பார்வையிலும் எல்லாம் தொடரலாம். ஏனென்றால் இன்று உருவாக்கப்படும் தேசியஅளவிலான ஒற்றைப்படையாக்கம், ஒரே பண்பாட்டை செயற்கையாக கட்டமைக்கும் ஆதிக்கம் அழிவுத்தன்மை கொண்டது. அதற்கு எதிரான ஒரு தனித்துவமாக திராவிட அழகியல் நிலைகொள்ளக்கூடும். ஆனால் அதை இன அடையாளமாக, அரசியலடையாளமாக ஆக்கிக்கொள்வதில் எனக்கு எதிர்ப்புண்டு. ஏனென்றால் அது பிறனை கட்டமைக்கிறது, வெறுப்பின் மொழியில் பேச ஆரம்பிக்கிறது. இலக்கியம் அத்தகைய எந்த பிறன் உருவாக்கத்திற்கும் எதிரானதாகவே இருக்கமுடியும். இந்துத்துவ மத அரசியல் எவ்வளவு ஆபத்தானதோ அதேயளவு ஆபத்தானதே திராவிட இனவாத அரசியலும்.

மலையாளம் குறித்தும் என் கடுமையான கருத்தைச் சொன்னேன். மலையாளம் 17 ஆம் நூற்றாண்டில் 80 சதவீதம் தமிழாகவே இருந்தது. எழுத்தச்சனின் ராமாயணத்தை ஒரு தமிழர் காதால்கேட்டால் புரிந்துகொள்வார். ஆனால் 19 ஆம் நூற்றாண்டில் உயர்குடியினரால் அது சம்ஸ்கிருதம் நோக்கி கொண்டுசெல்லப்பட்டது. அது இந்தியாவில் நிகழ்ந்த மாபெரும் பண்பாட்டு மோசடிகளில் ஒன்று. இன்று அது 80 சதவீதம் சம்ஸ்கிருதச் சொற்களுடன் திகழ்கிறது. அதை மீட்க எம்.கோவிந்தன் முதலியோர் தொடங்கிய நாட்டுபாஷா இயக்கம் போன்றவை தோல்வியடைந்தன. அந்த அடிமைத்தனம் இருக்கும் வரை அதனால் இன்றைய ஒற்றைப் பண்பாட்டு ஆதிக்கத்தை எதிர்க்கமுடியாது  என்றேன்

எம்.என்.காரச்சேரி வந்திருந்தார். வைக்கம் முகமது பஷீரின் மாணவர், கே.சி.நாராயணனின் அணுக்கத் தோழர். கேரள இஸ்லாமியச் சீர்திருத்த இயக்கத்தின் முதன்மை ஆளுமை. பேச்சாளர், இலக்கிய விமர்சகர். அவர் கேரள முஸ்லீம்களின் நகைச்சுவைகளை தொகுத்து ‘மாப்பிள ஃபலிதங்கள்’ என்னும் நூலை எழுதியிருக்கிறார். அதை எனக்கு கையெழுத்திட்டு அளித்தார்.

ஜி.எஸ்.எஸ்.வி நவீன் வந்திருந்தார். ஞானசேகரன் என்னும் நண்பர் சிவகாசியில் இருந்து வந்திருந்தார். இரவு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். காலை நான் காரில் நாகர்கோயில் மீண்டேன். 10 நாட்கள் இலக்கிய பயணம்.

முந்தைய கட்டுரைஆரியசங்காரன்
அடுத்த கட்டுரைமருத்துவர் ஜீவா அறக்கட்டளை விருதுகள்