இலக்கியம் மனிதனை மாற்றுமா?

இதுவரை மனிதனை கொண்டுவந்து சேர்த்த சக்திகள் என்னநம்பிக்கைபோராட்ட உணர்வுஒற்றுமைகருணை ஆகியவற்றுடன் அனைத்துக்கும் மேலாக கற்றுக்கொண்டே இருத்தல்.  இந்தச் சக்திகளையே கலையிலக்கியங்கள் வளர்த்து மானுடனில் நிறுவியுள்ளனஅந்த சக்திகள்  இனியும் மனிதனை கைவிடா.. ‘

அன்புடன் திரு.ஜெமோ அவர்களுக்கு,

தங்கள் கருத்துக்களை ஆழமாகப் படித்து வருபவன் என்ற வகையில், என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில்ஒவ்வாதகருத்து ஒன்றை உங்கள் கட்டுரையில் காண நேர்ந்ததை தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தச் சிறு கடிதம்.

இந்தச் சக்திகளையே கலையிலக்கியங்கள் வளர்த்து மானுடனில் நிறுவியுள்ளனஎன்கிறீர்கள். இந்தச் சக்திகள் மானுடனில் தோன்ற, உருப்பெற, உந்துதல் பெற்று மாற்றங்கள் கொண்டு வர, நீங்கள் மேலே சொன்ன நம்பிக்கைபோராட்ட உணர்வுஒற்றுமைகருணை மற்றும் கற்றுக் கொண்டே இருத்தல் போன்றன காரணமாயின. நிஜம். இதில், கலை இலக்கியங்களின் பங்களிப்பு இருந்ததா என்ன? நிச்சயமாக இல்லை எனலாம். புறநானூறு, வீரத்தை மானுடனில் நிறுவவில்லை; மாறாக, புறநானூறு அன்று நடந்ததை கண்ணாடி போல் காட்டுகிறது. சிறுத்தொண்ட நாயனார் கதை பிள்ளைக்கறி சமைப்பதை அறமாக நிறுவவில்லை (நிறுவியிருந்தால் அவர் வாசகர் பத்து பேராவது ‘டேஸ்ட்பண்ணி இருப்பார்கள்).. அன்றைய நாளில் அறம் என வழங்கப்பட்டதை பதிவு செய்கிறார் சேக்கிழார்; அவ்வளவே. 

(‘பிள்ளைக்கறிஎன்றதும் ஒரு சின்ன distraction: பைபிளும் பிள்ளைக்கறி வழக்கத்தைஆம், வழக்கத்தைகுறிப்பிடுவது கண்டு திகைத்தேன்  (Kings 6:28-29))

இலக்கியங்கள் ஏன் எழுதப்படுகின்றன, அவை என்ன சாதிக்கின்றன என்ற கேள்வி எனக்குள் என்றும் உண்டு. ஷில்லாங் இலக்கிய நிகழ்வு பற்றிய உங்களின் இதே நாளின் பிறிதொரு கட்டுரையில்இலக்கியம்  ஓர் உயர்தரக் கேளிக்கைஅது சார்ந்த  வணிகம்  என்னும் நோக்கே  ஆங்கில பிரசுரங்களைச்   சார்ந்தவர்களிடமுள்ளதுஎன்று சொல்லியிருந்தீர்கள். இலக்கியம் சார்ந்த வணிகத்தை விலக்கிவிட்டு, பொதுஜன  நோக்கில் மட்டும் பார்த்தால், இலக்கியம் உயர்தரக் கேளிக்கை மட்டுமே; அதையும் மீறி இலக்கியத்தின் பங்கு ஏதுமில்லை என்றே தோன்றுகிறது.

 அது வாசகர்களின் வாழ்க்கையை மாற்றும் என்றால் அதன் விற்பனை பற்றிக் கவலைப்படவேண்டியதில்லைஅவ்வாறுதான் என் படைப்புகள்  என் வாசகர்களுக்குச் சென்று சேர்ந்துள்ளன

திருக்குறளும், புறநானூறும், சிலம்பும், கம்ப ராமாயணமும், ஏன் பாரதியுமே யாரையும் எதையும் கிஞ்சித்தும் மாற்றிவிடவில்லை. ‘வாசகர்களின் வாழ்க்கையை மாற்றுவதுஎன்பதெல்லாம் இலக்கை மீறிய மிகைப்படுத்தலாகவே தோன்றுகிறது. சுந்தர ராமசாமிக்கும் அசோகமித்திரனுக்கும், லா..ராவுக்கும், தி.ஜா.வுக்கும், ஜெயகாந்தனுக்கும், சுஜாதாவுக்கும்1 இப்படிவாசகர்களின் வாழ்க்கையை மாற்றும்எண்ணம், கருத்து இருந்ததா தெரியவில்லை.  

(1 சுஜாதாவை பிற இலக்கியவாதிகளுடன் சேர்த்தது தங்களுக்கு ஒவ்வாமல் இருக்கலாம்; ஆனால், சுஜாதாவின் பல சிறுகதைகள் (.ம்நகரம்’, ‘ரேணுகா’, ‘பொய்’, ‘கருணைக்கும் எல்லை உண்டு”, “வந்தவன்”,”மகாபலி” “ஒரு லட்சம் புத்தகங்கள்” ‘இன்டர்வியூ’ ‘வாமற்றும் பல), தங்களின் தலையாய சிறுகதைத் தொகுப்பானஅறம்தொகுப்பில் இடம்பெறத் தக்கவை).

நன்றி,

சு.ரா.

அன்புள்ள சு.ரா,

இந்த வினாவிடையை விட மிகமிகத் தீவிரமான விவாதம் வெண்முரசில் இமைக்கணம் நாவலில் உள்ளது. என்றேனும் நீங்கள் படித்துப்பார்க்கலாம். –வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-5

அவநம்பிக்கைவாதம் அல்லது நம்பிக்கைநோக்கு இரண்டும் அவரவர் அனுபவம், உளநிலை சார்ந்தவை. இன்னொருவர் அவற்றை பெரும்பாலும் மாற்றியமைக்க முடியாது. (அவற்றை உருவாக்குவதில் சம்பந்தப்பட்டவர்களின்  நரம்பியல்நிலைமையும் முதன்மையாகப் பங்கு வகிப்பதை அண்மையில் பல ஆய்வுகள் சொல்கின்றன) ஏனென்றால் ஒருவர் அதைச்சார்ந்து தன் மொத்தச் செயல்பாட்டையும் வரைவு செய்திருப்பார். 

அத்துடன் இலக்கியம் சமூகத்தை மாற்றுவதில்லை போன்ற கருத்துக்கள் 1920 வாக்கில், அன்றைய சோர்வுநிலைக் காலகட்டத்தில், ஐரோப்பிய நவீனத்துவச் (Modernism)  சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்டவை. அவற்றை இங்கு இன்னும் சொல்லிக்கொண்டிருக்கும் சிலர் உண்டு. சமூகப்பண்பாட்டு ஆய்வுநோக்கிலும், நடைமுறை நோக்கிலும், அழகியல் நோக்கிலும் அக்கருத்துக்கள் மறுக்கப்பட்டு ஐம்பதாண்டுகள் கடந்துவிட்டன. அந்த நவீனத்துவ கருத்துக்களைச் சொல்பவர்கள் அவர்கள் புத்தகம் வாசிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் தெரியவந்தவற்றைச் சொல்லிக்கொண்டிருப்பவர்கள்.

ஆகவே உங்களுடன் விவாதிக்க, உங்களை மாற்ற விரும்பவில்லை. தொடக்கநிலையில் இருப்பவர்கள் பலர் நம் சூழலில் ஓங்கி ஒலிக்கும் உங்களுடையது போன்ற கருத்துக்களால் குழம்பியிருப்பார்கள் என்றால் அவர்களுக்காவே இந்தப்பதில். பலமுறை சொன்னதுதான்மீண்டும்.

*

முதலில் எளிமையான ஒரு கேள்வியை நீங்கள் கேட்டுக்கொள்ளலாம். சுந்தர ராமசாமியோ, லா..ராவோ அல்லது உங்கள் அபிமான சுஜாதாவோ எழுதிய கதைகளில் சிலவற்றை ஏன்நல்ல கதைஎன்று சொல்கிறீர்கள்? அவை உங்களுக்குகேளிக்கையை அளித்தன என்பதனாலா?  உங்களுடைய அறவுணர்ச்சியை அவை எழுப்பின. வாழ்க்கை பற்றிய புரிதலை அளித்தன. நீங்கள் கூறியுள்ள கதைகளின் பட்டியல் அதைத்தான் காட்டுகிறது.

கேளிக்கை என்றால் ஏன் லா..ரா அல்லது சுந்தர ராமசாமி மேலானவர்கள்? அதிகமான கேளிக்கையை அளிக்கும் எழுத்தாளர்கள் அல்லவா மேலானவர்கள்? எதன் பொருட்டு அந்த தரப்பிரிவினை செய்யப்படுகிறது? ‘நல்லஎழுத்துநேர்மையானது’ ‘கூரிய அறவுணர்சிச் கொண்டதுஅந்த அறவுணர்வை உங்களிடம் தீவிரமாக எழுப்பும் நோக்கம் கொண்டஅழகியல் வடிவம்கொண்டது. ஆகவேதான் அது நல்ல படைப்பு. ஆகவேதான் ராஜேஷ்குமாரை விட சுந்தர ராமசாமி மேலான படைப்பாளி எனப்படுகிறார்.

வாழ்க்கையைபதிவுசெய்வது இலக்கியம் என்றால் கற்பனையே இல்லாமல் நேரடியாகப் பதிவுசெய்யும் இதழியல் எழுத்து இலக்கியத்தை விட மேலானது அல்லவா? ஆனால் இலக்கியம் பேணிப்பாதுகாக்கப்பட்டு தலைமுறைகளாகப் பயிலப்படுகிறது. இதழியல் எழுத்து பத்தாண்டுக்காலம்கூட வாசிக்கப்படுவதில்லை. ஏன்? 

சேக்கிழார் வரலாற்றைப் பதிவு செய்தார் என்றால் அதைவிட நேர்த்தியான பதிவு ஶ்ரீரங்கம் கோயிலொழுகு அல்லவா? ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு எந்த நவீன இலக்கியத்தை விடவும் நம்பத்தக்க பதிவு அல்லவா? ஏன் இலக்கியம் அந்த பதிவுகளை விட ஒரு படி மேலானதாக உள்ளது?

எந்தக் காரணத்தால் மானுடம் நூல்களை கடும் உழைப்புடன் தலைமுறை தலைமுறையாகப் பேணுகிறது? நூல்களை பிழையில்லாமல் பதிப்பிக்க, நூல்களுக்கு உரை எழுத, அச்சிட்டு வெளியிட பேரறிஞர்கள் செய்யும் கடும் உழைப்பும் வாழ்நாள் தவமும் வெறும் கேளிக்கைக்குத்தான் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால் உங்கள்சிற்றறிவைஎண்ணி வியக்கிறேன்.

லா..ரா , தி.ஜா.பற்றி நேரடியாக தெரியவில்லை. ஆனால் லா..ரா தன் எழுத்து கேளிக்கை என்று சொன்னால் சீறி எழுபவராகவே இருந்தார். தன் எழுத்தை ஒருவகை உபாசனை என்றே சொல்லிவந்தார். எனக்கு சுந்தர ராமசாமியை தெரியும். அசோகமித்திரனையும் தெரியும். இருவரும் நம்பிய, சொல்லி வந்த ஒன்று உண்டு. உங்கள் சிந்தனையில் ஒரு சிறு மாற்றத்தையாவது உருவாக்காத ஒரு நூலை வாசிக்கலாகாது. சுந்தர ராமசாமியின் எழுத்துக்களில்  அந்த கருத்து மீண்டும் மீண்டும் ஓங்கி ஒலிக்கிறது.  

உங்கள் கேள்விக்கு வருகிறேன். வாழ்க்கையை இலக்கியம்அல்லது அறிவுச்செயல்பாடு மாற்றாது என்றால் வேறு எதுதான் மாற்றும்? வாழ்க்கை மாறவே மாறாது என்றோ, மாற்றமே இல்லாமல் நீடிக்கிறது என்றோ சொல்கிறீர்களா?

*

ஒருவருடைய வாழ்க்கை எதனால் தீர்மானமாகிறது? அவருடைய ஆளுமை (பெர்சனாலிட்டி)யாலும் அந்த ஆளுமை வெளியுலகை எதிர்கொள்ளும் விதத்தாலும் என்று சுருக்கமாகச் சொல்லலாம். 

ஒருவருடைய ஆளுமை எதனால் ஆனது? மொழி ஒருவரிடம் வந்துசேரும்போதே அதனுடன் இணைந்து கருத்துக்களும் வந்துசேர்கின்றன. 100 ஆண்டுகளுக்கு முன் ஓர் உயர்சாதிக்குழந்தை ஒரு வயதிலேயே தாழ்ந்தசாதிப்பெரியவரை அடே போட்டு அழைக்க கற்றுக்கொள்ளும். அது ஒரு கருத்தியல்தான். அப்படி பலநூறு கருத்தியல்கள் மொழியில் உள்ளன. குடும்பச்சூழலில் இருந்து கருத்துக்கள் வருகின்றன. கல்வி வழியாக கருத்துக்கள் வந்து சேர்கின்றன. செய்தியூடகங்கள் வழியாக, கேளிக்கைகள் வழியாக கருத்துக்கள் வந்து திரள்கின்றன. அக்கருத்துக்களின் தொகுப்புதான் ஒரு மனிதனின் ஆளுமை என்பது.

மறுபக்கம் சமூகம் என்பது என்ன? ஒரு மனிதக்கூட்டம் சில கருத்துக்களை பொதுவாக ஏற்றுக்கொண்டு தன்னை ஒன்றாக உணர்வதுதான் சமூகம் என்பது. கடன்கொடுத்தால் திருப்பிக்கொடுக்கவேண்டும் என்பதும், பெரியவர்களை மதிக்கவேண்டும் என்பதும் எல்லாமே கருத்துக்கள்தான். எல்லா சட்டங்களும், எல்லா ஆசாரங்களும், எல்லா நம்பிக்கைகளும், எல்லா வாழ்க்கைமுறைகளும் கருத்துக்கள்தான். கற்காலம் முதல் படிப்படியாக திரண்டு வந்தவை அவை. ஒவ்வொரு சமூகத்தையும் உருவாக்கியிருக்கும் கருத்துக்கள் பல்லாயிரம். அவை அச்சமூகத்திலுள்ள அனைவருக்குமே தெரியும். தெரியாமல் எவரும் அதில் வாழமுடியாது. வாழமுற்பட்டால் அச்சமூகம் அவரை தண்டிக்கும் அல்லது ஒதுக்கும். ஓர் அன்னியர் அச்சமூகத்திற்குள் வந்தால் சில நாட்களில் அவற்றை கற்றுக்கொள்வார்கற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

ஆக, மனிதனின் ஆளுமையும் சமூகம் என்னும் கட்டமைப்பும் கருத்துக்களால் ஆனவையே. ஒருவன் வாழ்வதென்பது அவனுக்குள் உள்ள கருத்துக்களும், மறுபக்கம் சமூகமென்னும் கருத்துக்களும் கொள்ளும் உறவாடலால்தான். இசைவும் முரண்பாடுமாக அந்த உறவு நிகழ்கிறது. ஒருவனின் வாழ்க்கைப்பிரச்சினை எதுவானாலும் இந்த  தனிமனிதசமூக உறவாடலிலுள்ள பிரச்சினை என அடிப்படையாக வரையறை செய்ய முடியும். ஆகவே மனிதனாக, சமூகமாக இங்கே இருப்பவை கருத்துக்களே. அக்கருத்துக்கள் கடல், நாமெல்லாம் மீன்கள். கொஞ்சம் தன்னுணர்வு கொண்ட மீனால் அந்தக் கடலைப் பார்க்க முடியும். இல்லாத மீன்கடலா, அப்படி ஏதும் இல்லையே. நான் என் விருப்பப்படி நீந்திக்கொண்டுதானே இருக்கிறேன்என்று சொல்லும்.

அந்தக் கருத்துக்கள் எப்படி உருவாயின? எவர் உருவாக்கினார்கள்? ஒருபக்கம் வாழ்க்கைச் சந்தர்ப்பங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. மறுபக்கம் அந்தச் சந்தர்ப்பத்தில் இருந்து அறிந்தவற்றை கருத்துக்களாக மாற்றி மானுட நினைவில் தொகுக்கும் பணி நிகழ்கிறது. அவற்றைச் செய்பவர்கள் ஆன்மிகச் சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள், இலக்கியவாதிகள். அந்தப் பணி நிகழாத ஒரு கணம்கூட மானுட சிந்தனையில் இல்லை. அது நிகழ்வதனால்தான் நீங்கள் இச்சமூகத்தில் உயிர்வாழ்கிறீர்கள். ஆனால் அப்படி ஒன்று நிகழ்வதை அறியாமலேயே வாழ்ந்து சென்றுவிடமுடியும் என்பதும் உண்மையே. அவர்களைப் பற்றி அறிவுச்செயல்பாட்டில் இருப்பவர்கள் கவலைகொள்வதில்லைஆனால் அவர்களையும் சேர்த்து மொத்த சமூகநலனுக்காகவே யோசிக்கிறார்கள்.

மானுட சமூகத்தின் வரலாற்றை கொஞ்சம் மேலோட்டமாகவேனும் உணர்ந்த ஒருவர், தான் வாழும் சமூகவாழ்க்கையின் வளர்ச்சியை எளிய தகவல் அளவிலாவது தெரிந்து வைத்திருக்கும் ஒருவர், சமூகம் மாறவில்லை, வளரவில்லை என்று சொல்ல மாட்டார். ஏனென்றால் ஓங்கி முகத்திலறையும்படி மாற்றமும் வளர்ச்சியும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. முப்பதாண்டுகளை எடுத்துப் பார்த்தாலே பிரமிப்பூட்டும் அளவுக்கு மாற்றம் கண்ணுக்குப் படுகிறது. இந்த மாற்றத்தை எவர் எப்படி நிகழ்த்துகிறார்கள் என அடிப்படைச் சிந்தனை கொண்டவர்  யோசிக்காமலிருக்க மாட்டார். 

சங்க காலத்தில் இருந்த வாழ்க்கை திருக்குறளுக்கு பின் பிரமிப்பூட்டும்படி மாறியிருப்பதை கொஞ்சம் வரலாற்றைப் பார்த்தால் எவரும் காணலாம். சங்ககால வாழ்க்கை என்பது பழங்குடி வாழ்க்கையின் அடுத்த கட்டம். அரசுகள் உருவாகி, பேரரசுகளை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தன. ஆகவே சங்ககாலம் காட்டும் வாழ்க்கை என்பது உச்சகட்ட வன்முறை நிறைந்தது. ஆண்மையச் சமூகம் அது. ஆண்கள் கட்டற்ற பாலியல் மீறல்கள் கொண்டிருந்தனர். ஆனால் திருக்குறளின் காலகட்டத்திற்குப் பின் சமூகவன்முறை கிட்டத்தட்ட இல்லாமலேயே ஆகிவிட்டது. குடும்பம் என்னும் கருத்து நிலைகொண்டுவிட்டது. ஆணின் ஒழுக்கம் ஒரு ஏற்கப்பட்ட விழுமியமாக ஆகிவிட்டது. அப்படி பல விஷயங்கள் குறளால் தமிழ்ச்சமூகத்தில் நிறுவப்பட்டவை.

நீங்கள் செய்யும் பிழை என்ன? நூல்கள் அல்லது சிந்தனையாளர்கள் உருவாக்கும் மாற்றத்தைஒரு புக்கு படிச்சு உடனே ஒருத்தன் மாறிடுவானா?’ என்னும் ஒருவகை எளிமைப்படுத்தப்பட்ட பொதுப்பார்வையில் அணுகுகிறீர்கள் என்பதுதான். இங்கே கருத்துக்களின் பெருந்தொகுப்புதான் மனம்சமூகம் என்னும் இரு அமைப்புகளாக உள்ளது. இலக்கியம், தத்துவம் ஆகியவை அந்த பெருந்தொகுப்பை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுகின்றன. ஒவ்வொரு ஆசிரியனும் அந்த பெருந்தொகுப்பை தன் முயற்சியால் கொஞ்சம் மாற்றுகிறான். ஒவ்வொரு நூலும் கொஞ்சம் மாற்றுகிறது. அந்த ஒட்டுமொத்த கருத்தமைப்பு  மிகப்பெரியது. ஆகவே அந்த மாற்றம் கண்ணுக்குத்தெரியாது. ஒரு பெரிய மரம் வளர்வதை நாம் கண்ணால் பார்க்கமுடியாது .ஆனால் தொடர்ச்சியாக அந்த மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

இந்த நூலால் இந்த மாற்றம் என்றோ, இந்த ஆசிரியரால் இவ்வகையான மாற்றம் என்றோ உடனடியாகச் சொல்லிவிட முடியாது. ஏனென்றால் எல்லா கருத்தும் அதற்கு எதிரான கருத்தை எதிர்கொள்ளும். ஒரு தொடர் விவாதம் நிகழும். அந்த விவாதத்தின் இறுதியில் வெல்லும் கருத்து ஏற்கப்படும். அந்த வெல்லும் கருத்துக்குள் தோற்ற கருத்தின் ஒரு பகுதி உள்ளே புகுந்தும் இருக்கும். இதைத்தான் முரணியக்கம் (dialectics) என்கிறார்கள். இப்படித்தான் ஒரு தனிமனிதனின் மூளையும் செயல்படுகிறது. அதைப்போலத்தான் சமூகம் என்னும் கருத்துத்தொகுப்பும் செயல்படுகிறது. அந்த முரணியக்கம் வழியாக நாம் வாழும் சமூகம் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கிறது. இலக்கியம் அல்லது தத்துவம் சமூகத்தை மாற்றுவதென்பது அப்படித்தான் நிகழ்கிறது. 

மானுடவரலாற்றை எடுத்துக்கொண்டால் வாழ்க்கை ஒவ்வொரு படிநிலையாக மேலேறி வந்துள்ளதைக் காணலாம். அடிமை முறை எப்படி கைவிடப்பட்டது? எப்படி ஒவ்வொருநாளும் ஒவ்வொரு ஊரிலும் நிகழ்ந்து வந்த போர்கள் இல்லாமலாயின? எப்படி ஒவ்வொரு சாதாரண மனிதனுக்கும் அரசைத் தீர்மானிப்பதில் இடம் கிடைத்தது? எப்படி அரசு சாமானியனின் நலனையும் கருத்தில்கொள்ளவேண்டும், அவனுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்னுன் எண்ணம் உருவானது? (அது உருவாகி இருநூறாண்டு ஆகவில்லை) மனிதர்கள் அனைவரும் உரிமைகளால் சமம் என்னும் கருத்து எப்படி உருவாகி பெரும்பாலானவர்களால் ஏற்கப்பட்டது? தீண்டாமை எப்படி குற்றமாக ஆகியது? சரி, சென்ற நூறாண்டுகளில் பெண்களின் உரிமைகள் எப்படி எப்படி மாறி வந்துள்ளன? பெண்களுக்கு கல்வி, சமமான சொத்துரிமை, வேலைக்குப்போகும் உரிமை எல்லாம் எப்படி வந்தன? உங்கள் பாட்டி வாழ்ந்த வாழ்க்கையைத்தான் உங்கள் மகள் வாழ்கிறாளா? முப்பதாண்டுகளுக்கு முன்புவரை திருநங்கைகள் எப்படி நடத்தப்பட்டனர்? அவர்களுக்கான சட்டபூர்வ உரிமைகள் எப்படி உருவாகி வந்தன? எப்படி அவை சரி என நம் சமூகத்தால் ஏற்கப்பட்டன? 

சென்ற இருபதாண்டுகளுக்கு முன்பு வரை மனவளர்ச்சி குறைவானவர்களை எப்படி நம் அரசும் சமூகமும் பார்த்தது? இன்று எப்படி அந்தப் பார்வை மாறியுள்ளது? இன்று அவர்கள் ஒவ்வொருவருக்கும் அரசு நிதியுதவி வழங்குகிறது. அந்தக்கருத்து எப்படி உருவாக்கப்பட்டது? எப்படி ஏற்பு அடைந்தது? சென்ற இருபதே ஆண்டுகளில் பெண்கள் மறுமணம் செய்துகொள்வது எவ்வளவு தூரம் கூடியிருக்கிறது? வாழாவெட்டிகள் என்னும் முத்திரையுடன் பெண்கள் வீடுகளின் இருட்டுக்குள் வீசப்பட்டதை நாம் இளமையில் எவ்வளவு பார்த்திருக்கிறோம். எத்தனை சினிமாக்கள் அவற்றை பேசியிருக்கின்றன. ஒன்றுமே வேண்டாம், ஒரு பத்தாண்டுகளுக்குள் நாம் பயன்படுத்தும் சொற்கள் எப்படி மாறிவிடுகின்றன என்று பாருங்கள். சர்வசாதாரணமாக நாம் பயன்படுத்தி வந்த பல சொற்கள் இன்னொரு மனிதரின் உரிமைக்கு எதிரனாவை என உணர்ந்து நாம் மாற்றிக்கொண்டிருக்கொறோம்.

எப்படி அம்மாற்றம் நிகழ்கிறது? அவை எல்லாமே கருத்துக்கள். அக்கருத்துக்கள் உலகில் எங்கோ சான்றோர் உள்ளத்தில் உருவாகின்றன. அவை விவாதிக்கப்படுகின்றன. பல்லாயிரம் சான்றோரால் ஏற்கபப்ட்டு மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படுகின்றன. கதைகளாக, செய்திக்கட்டுரைகளாக, சொற்பொழிவுகளாக, உரையாடல்களாக மாறுகின்றன. மெல்ல மெல்ல ஒவ்வொரு சாமானியனையும் சென்றடைகின்றன. சாமானியன் முதலில் துணுக்குறுகிறான், பின் எதிர்க்கிறான், மெல்ல மெல்ல ஏற்றுக்கொள்கிறான். இந்த செயல்பாடு ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கணமும் நிகழ்கிறது. அதுதான் உலகை மாற்றிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தலைமுறைக்கும் இந்த உலகம் இன்னும் ஜனநாயகத்தன்மை கொண்டதாக ஆகிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் அந்த மாற்றம் கண்ணுக்கு தெரிவதாக உள்ளது. அந்த புதிய கருத்துக்களில் மிகப்பெரும்பாலானவை இலக்கியவாதிகளின் உள்ளங்களில் உருவான கனவுகள், மிகப்பெரும்பாலும் இலக்கியவாதிகளால் மக்களிடம் கொண்டுசெல்லப்படுபவை. 

பொதுவாக ஒன்றை கவனிக்கிறேன். இலக்கியத்தை, அல்லது சிந்தனையை மதிக்காமல் ஏளனப்பார்வை கொண்டிருப்பவர்கள் உயர்குடியினர், உயர்சாதியினர். ஏனென்றால் பலரும் அவர்களின் முன்னோர் இருந்த வாழ்க்கையை இழந்துவிட்டதாக உணர்கிறார்கள். நவீன ஜனநாயகம் அவர்களுக்கு அளித்ததை உணர்வதுமில்லை. ஆனால் அடித்தள மக்களுக்கு அவர்களின் சொந்த வாழ்க்கையிலேயே என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என தெரியும். அவர்கள் செருப்பை கையில் எடுத்துக்கொண்டு சென்ற இடங்களுக்கெல்லாம் தலைநிமிர்ந்து செல்லும் வாழ்க்கை சென்ற ஒரு தலைமுறையில் உருவாகியிருப்பது தெரியும். அந்த மாற்றத்தை நிகழ்த்தியவர்கள் சிந்தனையாளர்கள் என தெரியும். அச்சிந்தனையாளர்களில் எவர் அவர்களுக்கு தெரிந்திருக்கிறார்களோ அவர்களை அம்மக்கள் கொண்டாடுவார்கள். 

அறிந்துகொள்ளுங்கள், மானுட சமூகவரலாற்றில் மிக முன்னேறிய ஒரு காலகட்டத்தில் நீங்கள் வாழ்கிறீர்கள். அதன் எல்லா வசதிகளையும் அனுபவித்தபடி எந்த வளர்ச்சியும் இல்லை என்று பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இன்று உங்கள் தனிமனித உரிமைகளை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவற்றில் ஒன்று   சிறிது பறிக்கப்பட்டதாக உணர்ந்தாலும் கொதிக்கிறீர்கள். நீதி கேட்கிறீர்கள். அதற்கான புதிய அமைப்புகள் சென்ற முப்பதாண்டுகளில் எவ்வளவு உருவாகி வந்துள்ளன, எவ்வளவு வழக்குகள் அங்கே நிகழ்கின்றன, எவ்வளவு நீதி வழங்கப்படுகிறது என்று பாருங்கள். அவற்றில் பல குறைகள் இருக்கலாம், பல விடுபடுதல்கள் இருக்கலாம். ஆனால் இந்தவகை உரிமைகள் இருப்பதையே உங்கள் தந்தை அல்லது தாத்தா அறிந்திருக்க மாட்டார். அவற்றுக்கு முறையிட ஓர் அமைப்பே அன்று இருக்கவில்லை. இன்று நாம் வந்திருக்கும் தூரம் மிகமிக அதிகம். உங்கள் தனிமனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வுக்கு, சமூகம் கொண்டுள்ள புரிதலுக்கு நீங்கள் உங்களை அறியாமலேயே எத்தனை சிந்தனையாளர்களுக்குக் கடன்பட்டிருப்பீர்கள் என எண்ணிப்பாருங்கள்.

உங்கள் வீட்டுப்பெண் வேலைக்குச் சென்றுவிட்டு திரும்பி வருகிறார். நூறாண்டுகளுக்கு முன் அவர் சமையலறையை விட்டு வெளியே வந்திருக்க மாட்டார். இந்த எல்லா மாற்றங்களும் படிப்படியாக இலக்கியங்களால், சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்டவை. தொடர்ச்சியான விவாதம் வழியாக படிப்படியாக தனிமனித உள்ளங்களிலுள்ள கருத்துக்கள் மாற்றம் அடைந்தன. சமூகம் கொண்டுள்ள கருத்துக்கள் மாற்றம் அடைந்தன. இன்று உங்கள் மகள் படிக்கிறாள், வேலைக்குச் செல்கிறாள், விரும்பும் வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறாள் என்றால் அதற்கு அ.மாதவையா காரணம், சுப்ரமணிய பாரதி காரணம், புதுமைப்பித்தனும் மு.வரதராசனும் காரணம். அவர்களெல்லாம் கேளிக்கையாளர்கள் என்று ஒரே சொல்லில் அவமதிக்க உங்களுக்கு தார்மீக உரிமை இல்லை. நீங்கள் செய்வது மானுடம் தொடங்கிய காலம் முதல் இன்றுவரை சிந்தித்து உங்களுக்கு நீங்கள் வாழும் வாழ்க்கையை உருவாக்கிக்கொடுத்த அத்தனை முன்னோடிச் சிந்தனையாளர் மீதும் காறித்துப்புவது. அதைப் பலர் செய்கிறார்கள். தங்கள் மூதாதையர் மேல் காறித்துப்பும் மனநிலை சிலரிடம் உண்டு. 

ஒரு வலிமையான நூல் ஒரு வாசகனிடம் உருவாக்குவதுஅப்படியே ஏற்கும்மனநிலையை அல்ல. அவனுடைய ஆளுமையாக அவனுக்குள் உள்ள கருத்துத் தொகுப்பில் ஓர் ஊடுருவலை அது நிகழ்த்துகிறது. அவனை நிலைகுலையச் செய்கிறது. அவனுடைய சிந்தனைகளை தீவிரப்படுத்துகிறது. அவன் கேள்விகளை கேட்டுக்கொள்வான். மறுத்து வாதாடுவான் .விளைவாக  அவன் தொடர்ச்சியாக மேலும் வாசிக்கலாம். ஏற்பும் மறுப்புமாக அவனுடைய ஒட்டுமொத்தச் சிந்தனையை மெல்லமெல்ல அந்நூல் மாற்றியமைக்கிறது. சிந்தனை மாறும்போது அதனடிப்படையில் அவன் வாழ்க்கையும் மாறிவிடுகிறது. அப்படி நூல்கள் நம் வாழ்க்கையை மாற்றியிருப்பதை நாமே பின்னால் திரும்பிப்பார்க்கையில் உணர முடியும். என் வாழ்க்கையை மாற்றிய பல நூல்கள் உள்ளன. என் நூல்களால் வாழ்க்கை மாற்றம் பெற்ற பலநூறு பேரை எனக்கு நேரிலும் தெரியும்.

ஆனால் இலக்கியப் படைப்பு நேரடியாக கருத்துக்களை முன்வைப்பதில்லை- அது பிரச்சாரம். இலக்கியம் வாழ்க்கையனுபவங்களுக்கு நிகரான அனுபவத்தை வாசகனுக்கு அளித்து அவனுடைய சிந்தனைகளை ஊடுருவுகிறது. அவனைச் சிந்திக்கச் செய்கிறது. அவனுடைய வாழ்க்கை நோக்கை மாற்றுகிறது.

ஆனால் அத்தனை பேருக்கும் அப்படி நிகழவேண்டும் என்றில்லை. ஒருவர் எந்த நூலையும் வாசிக்காமல் வாழ்ந்துவிட முடியும். எல்லா நூலையும் வெறும் கேளிக்கை மட்டுமே என முடிவுசெய்துகொண்டு வாசித்துத் தள்ளமுடியும். அப்படிச் சிலரை எனக்குத் தெரியும். இலக்கியத்தை முழுக்க முழுக்க வம்பளப்பதற்காக மட்டுமே வாசிப்பவர்கள் அவர்கள். வெறுமே கல்விப்பணிக்காக மட்டுமே இலக்கியம் வாசிப்பவர்களும் உண்டு. அவர்களிடமெல்லாம் இலக்கியம் எந்த மாற்றத்தையும் அளிப்பதில்லை. காரணம் இலக்கியம் உள்ளே நுழைவதற்கான வாசல்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன. இலக்கியத்துடன் ஓர் உரையாடலை நிகழ்த்துபவர்கள், இலக்கியத்தை வாழ்க்கையை அளவுகோலாக்கி எதிர்கொள்பவர்களிடம் மட்டுமே இலக்கியம் அந்த மாற்றத்தை நிகழ்த்துகிறது. இது தத்துவம் போன்ற எல்லா அறிவுத்தளத்துக்கும் பொருந்தும்.

ஆனால் அந்த சிறுபான்மையினரான வாசகர்களே உண்மையில் பொருட்படுத்த தக்கவர்கள். மற்றவர்கள் இலக்கியம் அல்லது தத்துவம் வாசித்தாலும் அந்த களத்திற்குள் இருப்பவர்கள் அல்ல. அவர்களை இலக்கியமும் தத்துவமும் பொருட்படுத்தவேண்டியதுமில்லை.  எவரை இலக்கியம் பாதிக்கிறதோ அவர்களில் சிந்தனைகளை உருவாக்குகிறது. அவர்களிடமிருந்து அச்சிந்தனைகள் இன்னொரு வட்டத்தினரைச் சென்றடைகின்றன. நீரில் கல்விழுந்தால் உருவாகும் முதல் வட்டம் அது. அடுத்தடுத்த வட்டங்களாக அது விரியும். விரியுந்தோறும் அதன் வீச்சும் குறையும். ஆனால் விரிந்துசென்றபடியே இருக்கும். 

100 ஆண்டுகளுக்கு முன் அ.மாதவையா பெண்கல்விக்காக எழுதினார். சாதிவிலக்கு செய்யப்பட்டார். வாழ்க்கையில் பல துயர்களை அதன்பொருட்டு அடைந்தார் (உயர்தரக் கேளிக்கையை உருவாக்கி மக்களை மகிழ்விப்பதற்காக ஒருவர் அந்த துன்பங்களை அடைவது என்றால் என்ன ஒரு அபத்தம்!) அன்று அவர் செய்வதென்ன என்று அறிந்தவர் மிகச்சிலரே. முக்கால்வாசிப்பேர் அன்றும் ‘புக்கு எளுதி சமூகத்தை மாத்துறதா? ஹிஹிஹி’ என்றுதான் சொல்லியிருப்பார்கள். ஆனால் அவரை வாசித்து, அதனால் பாதிப்படைந்தவர்கள் இருந்தனர். அவர்கள் வழியாகவே அவருடைய செல்வாக்கு தமிழ்ச்சமூகத்தில் பரவியது. பெண்கல்விக்கு ஆதரவான பல்லாயிரம் பக்கங்கள் எழுதப்பட்டன. சமூக மனம் மாறியது. சட்டங்கள் வந்தன. இன்று உங்கள் மகள் கல்விகற்று வேலைக்குச் செல்ல வைத்தவர்களில் அ.மாதவையாவும் ஒருவர். அவரை ஒரு கேளிக்கையாளர் என்று சொல்வது உங்கள் விருப்பம். நான் சொல்ல மாட்டேன். அப்படிச் சொல்பவர் என் உலகிலும் இல்லை. நன்றி

ஜெ 

முந்தைய கட்டுரைகிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
அடுத்த கட்டுரைகடலின் முதல் அலை