ஆன்ம பலம், யோகம்- கடிதம்

ஆன்மபலத்தின் ஊற்றுமுகம் – நரம்பியல் பார்வையில்

ஜெ ,

ஒவ்வொரு துறையிலும் அந்த துறைக்கே உண்டான புதிய முயற்சிகளும், முன் நகர்ந்தாலும் ஒரு எழுச்சி போல உருவாகும், அந்த குறிப்பிட்ட காலம் ஒரு புது யுகத்தின் பிறப்பு என்றே சொல்வோம் இல்லையா? அப்படித்தான் இன்றைய யோகத்தின் வடிவத்திற்கும் ஒரு கால கட்டம் அமைந்தது, அது 1920 களில் தொடங்கி 1980 வரையிலான காலம்

குண்டலினி, பிராணசக்தி, சூரிய சக்தி, வைபரேஷன், போன்ற வார்த்தைகள் சூயிங்கம் போல வாயில் மென்று கொண்டிருப்பவர்களுக்கு, இந்த எழுச்சி காலகட்டம் பற்றி எதாவது தெரியுமா என்பதே சந்தேகம் தான்

நான் ஏற்கனவே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டது போல, உலகம் முழுவதும் 8 லட்சம் யோக ஆசிரியர்களும், 214 விதமான பாட திட்டங்களும் இருந்தாலும், அவற்றில் நான்கே நான்கு மரபுகள் தவிர மற்றவை எல்லாமே, ஹாலிவுட்டை பார்த்து பாலிவுட் படங்கள் எடுப்பதும், பாலிவுட்டை பார்த்து கோலிவுட் படம் எடுப்பதும் போல, ரசிக மனதை கவர்வதும், மீண்டும் மீண்டும் தியேட்டருக்கு வரவழைப்பதுமான உத்தி போலத்தான்

1920களில்  சுவாமி கைவல்யானந்தா, சுவாமி சிவானந்தா, திருமலை கிருஷ்ணமாச்சாரி, போன்ற முதல் தலைமுறை யோகா குருமார்கள் வெளியே வருகிறார்கள், அதுவரை யோகமென்பது குறிப்பிட்ட குழுவுக்குள் அல்லது ஒரு குறிப்பிட்ட சித்திகளை அடைத்தலை மையமாக வைத்தே புழக்கத்தில் இருந்திருக்கிறது. ஆனால்  16ம் நூற்றாண்டு முதலே சம்ஹிதைகளும், துல்லியமான பாடத்திட்டங்களும், 21 யோக உபநிதத்துகள், கிடைத்தாலும் அதை சாதகனுக்கு உரியதாக மாற்றித்தர குறிப்பிட்டு சொல்லும்படி ஒரு குருநிலை இருக்கவில்லை.

மேலே சொன்ன, குருமார்கள் தான் முதன்முதலாக மேற்சொன்ன நூல்களிலிருந்தும், வேத வேதாந்த பின்னணியிலும், நவீன கல்வியை இணைத்தும், பல முயற்சிகளை செய்து பார்க்கிறார்கள். அதில் நவீன மருத்துவம் படித்த சுவாமி சிவானந்தரும் முக்கியமானவர்

இவர்களுடைய புதிய முயற்சியும், யோக மரபின் எழுச்சியும் இங்கிருந்த ஐரோப்பியர்களை யோகத்துறையின் மீது ஆர்வம் கொள்ளச்செய்கிறது, அந்த காலகட்டத்தில் தான், யோகத்தை சிகிச்சையாக, மாற்று மருத்துவமாக முன்வைக்க முடியும் என மேற்கு  உலகம் ஏற்றுக்கொள்ள செய்கிறது.   அங்கு தொடங்குகிறது யோகத்தின் நவீன வடிவம்

இந்த முதன்மை ஆசிரியர்கள், தங்கள் மாணவர்களை உலகம் முழுவதும் அனுப்புகிறார்கள், ஒரு திக்விஜயம் போல சென்ற இடங்களிலிலெல்லாம், வென்று வந்தார்கள் என்றே சொல்லவேண்டும்

சுவாமி சிவானந்தரின் சீடர் சச்சிதானந்தர் லட்சக்கணக்கான ஹிப்பிகளுக்கு முன்னால் ஒரு மேடையில் அமர்ந்து உரையாற்றும் காட்சி இன்றும் மெய்சிலிர்க்க வைக்கும் ஒன்று.

இந்த இரண்டு தலைமுறை துறவிகளும், யோகத்தை பரப்பும் அதே வேளையில் நவீன அறிவியலிலும் புலமை பெற்றவர்களாக இருந்தனர், நவீன மருத்துவத்தை முழுவதுமாக கற்று  உள்வாங்கி, அதை ஒட்டியே தங்களுடைய யோகக்கல்வியையும் அமைத்துக்கொண்டனர்

அது ஒருவகையில் இந்திய பாடத்திட்டமும் தான், அந்தந்த காலகட்டத்தில் எது அறிவுத்துறையின் உன்னதமான விஷயமாக இருக்கிறதோ அதையும் இணைத்துப்புரிந்து கொள்வது என்பது நமது மரபு

16ம் நூற்றாண்டில் எழுதப்பட்டஹத யோக பிரதீபிகாபோன்ற நூல்கள் அன்றைய அறிவுத்துறையும், மருத்துவத்துறையுமான, ஆயுர்வேதத்தை முதன்மையாக வைத்தே, சூத்திரங்கைளையும், பாடங்களையும் எழுதியது

அதன் பின்னர் இருபதுகளில் தான் நவீன அறிவியலுடன் இணைத்து புரிந்துகொள்ளும் போக்கு உருவானது, அந்த வகையில்யோக  தெரப்பிஎனும் வெற்றிகரமான பாடத்திட்டம் உலகுக்கு அறிமுகமானது.

அதை முன்னெடுத்த முதன்மை சீடர்கள் அனைவரும் நவீன மருத்துவம் கற்றவர்களாக இருந்தனர்,அல்லது அந்த துறையை கற்றுக்கொண்டனர்

அதில் சுவாமி சத்யானந்தர், தனது குருநாதரிடம் தீட்சை பெற்று, குருநிலையை விட்டு வெளிவந்து 12 வருடங்கள் பாரதம் முழுவதும் பரிவ்ராஜகனாக அலைந்து திரிந்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் அவர் தீவிரமாக நவீன உளவியலையும், நவீன மருத்துவத்துடன் இணைந்த யோகக்கல்வி திட்டத்தையும் உருவாக்குகிறார், 1963ல் தான் மேற்கிலும், கிழக்கிலும் தனது பணியை முழுமையாக வெளிப்படுத்திக்கிறார்

இந்திய வேத சடங்கு மரபில், அங்கந்யாசம் , கரந்யாசம் என இருக்கும் ஒரு மானசீக சுத்திகரிப்பு பயிற்சியை அதன், சடங்குத்தன்மையை மாற்றியமைத்து, நவீன வடிவமான, யோகநித்ரா எனும் பயிற்சியை வடிவமைத்தவர் சுவாமி சத்யானந்த சரஸ்வதி அவர்கள். இப்படி நவீன உளவியலில் பேசப்படும் பெரும்பாலான சிக்கல்களுக்கு மாற்று திட்டமாக,  12 பயிற்சிகளை உருவாக்கியவர். அவை பிரத்யேகமானவை என்பதால் பொதுவில் வைக்கப்படுவதோ, அனைவருக்குமானதோ அல்ல. எனினும் அடிப்படைகளை நாம் முடிந்தவரை கற்கலாம்

ஆண்ட்ரு ஹுபர்மேன் போன்ற நரம்பியலாளர்கள் சமீப காலமாக யோகநித்ரா போன்ற பயிற்சியை நேரடியாகவே பரிந்துரை செய்கின்றனர். ஹூபர் மென் பத்தில் நான்கு இடங்களில் யோகநித்ரா பற்றியும், இந்திய தியான முறைகள் பற்றியும் குறிப்பிட்டு விடுவார்

அதே போல, பி கே எஸ்  ஐயங்காரின் நேரடி வகுப்புகள் ஒரு நவீன மருத்துவத்துறை பேராசிரியரின் உரை போல இருக்கும், ஒரு பயிற்சியை சொல்லி, செய்து காண்பித்து, அதனை மாணவர்களை செய்ய வைத்து, அந்த பயிற்சி எந்த தசையில் எத்தனையாவது அடுக்கில் என்னவிதமான மாற்றத்தை ஏற்படுகிறது, எந்த நரம்புடன் இணைகிறது, எந்த எலும்பின் இணைப்பு எந்த இடத்தில் நகர்கிறது என மிகத்துல்லியமாக அதன் மருத்துவப்பெயருடன் விவரிப்பார்

சில வீடியோக்களில் அவரை சுற்றி மயங்கிய நிலையில் மாணாக்கள் அமர்ந்திருக்க,  {ஆல்பா மேல்}  ‘இன்னும் என்ன பார்வை, எந்திரிச்சு வேலைய பாருங்கடேஎன அதட்டலும் சிரிப்புக்காக வகுப்பு தொடங்குவதை காணலாம்.

அப்படியே, கைவல்யானந்தரின் யோகக்கல்வி நிலையும் ஒவ்வொரு பயிற்சியையும்  ஆராய்ச்சிக்கு உட்படுத்தி, ஆவணப்படுத்தி, மிகத்தீவிரமான கட்டுரைகள் எழுதி விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுரைகள்  அனைத்தும், யோகத்துறையில்  மேற்கில் இன்றும் விதந்தோதப்படுவதுஇப்படி, சில மரபுகளே யோகத்தின் ஆழத்தையும், அகலத்தையும் கண்டவை.

நவீன நரம்பியலாளர்கள் கூறும் அனைத்தும் எந்த அளவிற்கு முக்கியமானதோ அவற்றிக்கு இணையாகவே, அந்தந்த சிக்கல்களை அகற்ற கண்டு பிடிக்க வேண்டிய மருத்துவமும், மாற்று திட்டங்களும் அவசியம். அதைத்தான் ஹூபர் மேனுமே முன் வைக்கிறார்அவருடையஸ்பான்சர்கள்பட்டியலை பார்த்தாலே தெரியும். நிம்மதியான தூக்கத்திற்கு மெத்தை தயாரிப்பவர்கள், மல்டி விட்டமின்தயாரிப்பவர்கள், மற்றும் நம்மை தொடர்ந்து கவனிக்கும்மின்னணு கருவிகள்தயாரிப்பாளர்கள்இவர்களுடன் சேர்த்துத்தான்ஹுபர்மேன்  ‘யோகநித்ராவையும் பரிந்துரை செய்கிறார்.

யோகநித்ரா போன்ற பயிற்சிகள் ஏதோ, ஒரு குரலை ஒலிக்கவிட்டு படுத்துக்கொள்வதல்ல, அதில் ஏழு பல்வேறு நிலைகளை யோகமரபு முன்வைக்கிறது, யோகநித்ராவில் ஒலிக்கும்குரல்ஆன்மபலத்தின் உற்று முகத்தில் மிக முக்கியமான ஒன்றை செய்கிறது

ஹூபர்மேனை  நான், சுரேஷ் பாபு, ரவி போன்ற நண்பர்கள் நீண்ட காலமாக  தொடர்ந்து  வருகிறோம்உடலின் அத்தனை அங்கமும் மூளையில் இணைந்திருப்பது போலவே, ஒவ்வொரு மனித இயல்புக்கும் ஒரு சுரப்பியோ, உடலுறுப்போ நேரடி காரணமாக அமைகிறது.    ‘அமீக்தலாஎன அடித்து தேடிபாருங்கள், ஹுபர்மேன் மட்டுமே 20, 30 இடங்களில் பேசியிருக்கிறார்

இப்படி நவீன உளவியல் நரம்பியல் சார்ந்த முன்நகர்வுகளை நாம் தெரிந்து கொள்வது எந்த அளவிற்கு முக்கியமோ, அதைவிட முக்கியம் இந்த நமக்கு நிகழ்ந்தால் செய்யவேண்டியது என்ன? என்பதே. ஆகவே யோகம், ‘இதை நம்புஎன்று சொல்வதில்லை, சாதனாவின் மூலமாக அனுபவமாக மாற்றிக்கொள் என்கிறதுநமது வகுப்புகளுக்கு வந்த அனைவருக்கும் தெரியும் இங்கேசாதனாஎன்பது எவ்வளவு முக்கியம் என்று

நண்பர்களே மரபார்ந்த யோகமென்பதுநரம்பியலையும், உளவியலையும்உள்வாங்கித்தான் செயல்படுகிறது, அந்த தரப்புகளை நிராகரிக்கவோ, ஒதுக்கவோயில்லை, மாறாகசாதனாஎனும் உறுதி மொழியை நம்மிடம் கோருகிறது

யோகம் அமையட்டும்.

அன்புடன் 

சௌந்தர்.  G

யோகப்பயிற்சி முகாம் மார்ச் 15

முந்தைய கட்டுரைதாராசங்கரின் கவி- மணிமாறன்
அடுத்த கட்டுரைவேதாரண்யம் வேதமூர்த்திப் பிள்ளை