வணக்கம் ஜெ.
நெல்லை அருண்மொழி உரையைக் கேட்டேன். தொடக்கத்தில் மேடை தயக்கம் இருந்தது. ஆனால் போகப்போக அந்தத் தயக்கம் இல்லாமல் ஆனதை அவதானித்தேன்.அவர் தயாரித்து வந்த கருத்துகள் மீதான கவனக்கூர்மை அதிகரிப்பதை பார்க்க முடிந்தது.தான் இலக்கியத்தில் ரசித்ததை அழகாகக் கடத்திக்கொண்டிருந்தார். எடுப்பு சற்று தடுமாறினாலும் தொகுப்பும் முடிவும் ஈர்க்கும் தன்மை கொண்டதாக இருந்தது.கவிதைகள் குறித்த அவர்களுடைய பார்வை புனைவாளனின் கூர்மையான போக்கினை சித்திரம் ஆகக் காட்டியது. கவித்துவமான பேச்சு.
கோ.புண்ணியவான்
அன்புள்ள ஜெ
அருண்மொழியின் உரையை கேட்டேன். அவருடைய ஆளுமையை நீங்கள் எழுதி அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். ஆகவே நேரில் பார்க்கவில்லை என்றாலும் நன்கு தெரிந்தவர் போல தோன்றுகிறார். மிக இயல்பாகப்பேசுகிறார். எங்கள் தஞ்சாவூர் பக்கம் இளம்பெண்கள் இந்தமாதிரி மிகவேகமாக, நிறைய கையசைவுகள் கண்ணசைவுகளுடன் பேசுவார்கள். பழைய தஞ்சை நினைவுகள் வந்து விட்டன.
எழுதப்படாத ஊர் இல்லாமலாகிறது என்பது ஒரு அற்புதமான வரி. அதே சமயம் துயரம்தரும் வரியும்கூட. எங்கள் கீழத்தஞ்சை முன்பு அற்புதமான இலக்கியப் பதிவு கொண்டிருந்தது. கும்பகோணம், திருவாரூர் பகுதி கிராமங்களெல்லாம் பலருக்கும் தெரிந்தவை. இன்றைக்கு பல ஊர்களைப் பற்றிய இலக்கியக் குறிப்புகள் இல்லாமலேயே ஆகிவிட்டன. சோலை சுந்தரப்பெருமாள், சி.எம். முத்து போன்ற சிலர் இன்றைக்கும் எழுதுகிறார்கள். ஆனால் தி.ஜா போன்ற ஒருவர் எழுதிய அந்தப்பொற்காலம் இன்று இல்லை.
எம்.கே.மகாதேவன்