இனிய ஜெயம்
பயணங்களில் பேச்சு வாக்கில் திடீர் தீடீர் என குறிப்பிட்ட இடங்கள் குறித்த நினைவு தோன்றி, அப்படியே போகும் பாதை மாறி நாங்கள் நினைத்த இடத்தை தேடி வண்டியை முடுக்குவது எங்களது வழமைகளில் ஒன்று.
அப்படிதான் இம்முறை விழுப்புரம் நோக்கி வருகையில் அனந்தபுரம் அருகே நேமூர் என்ற கிராமத்தில் ஏரி அருகே பல்லவர் கால கொற்றவை சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட தகவலை நண்பர் இதயத்துல்லா சொல்ல, தொடர்ந்து ஸ்கூட்டரை நேமூர் தேடி திரும்பினோம்.
அந்த கொற்றவை கண்டுபிடிக்கப்பட்ட செய்தியை முன்பே வாசித்திருக்கிறேன். விழுப்புரம் தொல்லியல் ஆர்வலர், தென் பெண்ணை முதல் சங்கராபரணி வரை போன்ற (தொல்லியல் தடங்கள் சார்ந்த) நூல்கள் எழுதிய செங்குட்டுவன் அவர்கள், 2022 ஆண்டு ஜூலை மாதம் அதை நேரில் கண்டு உருவ அமைதியின் படி அது பல்லவர் கால கொற்றவை என்று ஆவணம் செய்திருந்தார்.
விழுப்புரம் சுற்றி உள்ள கிராமங்களில் ஆவணப்படுத்தப்பட்ட 12 கும் மேலான பல்லவர் கால கொற்றவை படிமைகளில் ஆறு ஏழு வரை நேரில் பார்த்திருக்கிறேன். எல்லாமே 5 அடி உயரத்துக்குள் பலகை கல்லில் வடிக்கப் பெற்ற புடைப்பு சிலைகள்.
இங்கே வந்து வரிசையாக இந்த சிலைகளை பார்ப்பது காலத்தை ஊடுருவி பார்க்கும் ஒரு அனுபவமாகவே இருக்கும். களமருதூர், அரசூர் கிராமங்களில் உள்ள சிலைகளில் கொற்றவை காலடியில் ஒருவர் நவகண்டம் அளிக்கும் நிலையில் இருப்பார். மதுராம்பட்டு கிராமத்தில் கொற்றவை வெட்டுண்ட எருமை தலை மீது நின்றிருப்பாள். ஓரத்தூர் கிராமத்தில் கொற்றவை காலடியில் மான் நிற்க பாய்கலை பாவை என இருப்பாள். தென்மங்கலம் கிராமத்தில் கொற்றவை காலடியில் வலது புறம் மானும் இடது புறம் சிம்மமும் நிற்கும்.
கொல்+ தவ்வை= கொற்றவை என்றும், கொற்றம்+ அவ்வை= கொற்றவை என்றும் விளக்கப் பெறும் கொற்றவை, ஆயுதங்கள் ஏந்திய மான் வாகனம் கொண்ட பாய்கலை பாவையாக, பண்டைய தாய் தெய்வமாக பாறை ஓவியங்களில் காணக் கிடைப்பதை அறிவோம். சென்ற தூரன் விருது விழாவில், கொங்கு சதாசிவம் அவர்கள் அமர்வில் அதை விவரித்தார்கள்.
சங்க இலக்கியத்தில் திணை சார் தெய்வமாக கொற்றவை வகுத்து வைக்கப் படுகிறாள். சங்க இலக்கியம் துவங்கி, சிலப்பதிகாரம் தொட்டு பாய்கலை பாவையாகிய கொற்றவயின் சித்திரம் எயினர் போன்ற குடிகள் வசமிருந்து வளர்ந்து, சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, மகிஷாசுர மர்த்தினி என்றெல்லாம் வளர்ந்து உன்னதமாக்கல் அடைவதை காண்கிறோம்.
இந்த விருட்ச வளர்ச்சி யின் விதைகள் என நான் மேற்சொன்ன விழுப்புறம் பகுதி பல்லவர் கால கொற்றவை வரிசையை சொல்லலாம். இதெயெல்லாம் நண்பருக்கு சொல்லிய படியே நேமூர் வந்து சேர்ந்தோம். அங்கே நேமூர் மட்டுமே இருந்தது ஏரியை காண வில்லை.
ஊரில் விசாரித்ததில் கிராமத்துக்கு எதிரே மைய்ய சாலைக்கு எதிர் பக்கம் குன்றுக்கு கீழே ஏரி என்றார்கள். ஏரி இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்த பிறகே மேப் ஒரு மாதிரி பிடி பட்டது. பனைமலை பல்லவர் கோயில் தாள கிரீஸ்வரர் குன்றில் நின்று பார்த்தால் தெரிவது இந்த ஏரிதான்.
இவ்வளவு பெரிய ஏரியில், எங்கே கொற்றவை சிலையை தேடி கண்டு பிடிப்பது என்று விசனித்த போது, நாங்கள் நின்று விசனித்த இடத்துக்கு நேர் எதிரே நீருக்குள் இருந்து தலை காட்டினாள் கொற்றவை. ஆம் நெஞ்சு வரை நீருக்குள் நின்றிருந்தாள்.
இணையத்தை இயக்கி அவள் படத்தை எடுத்துப் பார்த்தோம். அவளேதான் பாய்லை பாவை. படத்தில் எங்குமே காண முடியாத வகையில், அந்த கொற்றவை அருகே ஒன்றன் மேல் ஒன்று என அமைந்த 5 தலைகளால் ஆன தூண் ஒன்று நின்றிருந்தது. (அதற்கு மேலும் தலைகள் இருந்து அவை மண்ணுக்குள் புதைந்திருக்கலாம்). நாங்கள் பார்த்த போது நீருக்கு மேலே ஐந்தாவது தலையின் கொண்டை மட்டும் தெரிந்தது.
வந்தது வந்துட்டோம் போய் ஒரு முறை தொட்டு பாத்துடறேன் என்றபடி நண்பர், அடியில் உளை சேறும் மேலே கலங்கல் நீரும் செறிந்த ஏரியில் இறங்கி பைய்யப் பைய்ய நடந்து சென்று தொட்டுப் பார்த்தார். அப்போது தூரத்தில் இருந்து எழுந்தது மயில் ஒன்று அகவும் ஓசை. ஒரு மெல்லிய அமானுஷ்ய உணர்வு.
அந்த ஒலி உள்ளே எங்கோ தொட்டு மீட்ட, கொற்றவை நாவலில் வரும் நீலி சொல்லும் கதை நினைவில் எழுந்தது. பாலையில் வீசப்பட்ட பாய் கலை பாவை என்று வணங்கப்பட்ட மூதன்னை அவள். அவளது வருமுலையை குடலை செந்நாய்கள் குதறி போட்ட பின்னும், ஒரு கையில் பிடித்த தடியும், மறு கையில் பிடித்த சுட்ட மான் ஊனும் கொண்டு உயிரை கையில் பிடித்து கிடப்பாள். செந்நாய்கள் அவள் குரல் வளையை கடிக்கும் முன் உயிர் போகும் முன்பாக அவள் ஓநாய் போல ஊளையிடுவாள். அவளை போலவே கொற்றவை தெய்வங்களின் நிறை ஒன்று அவளை தொடர்ந்து வரும். உயிர் பிரியும் கணம் எல்லா அன்னை தெய்வங்களும் ஒன்றை ஒன்று கண்டு துயரத்துடன் புன்னகைத்துக் கொள்ளும்.
இந்த நேமூர் கொற்றவையை கண்ட அக் கணம் அந்த சித்திரம் நினைவில் எழுந்தது, மேலே சொன்ன விழுப்புரம் பகுதி கொற்றவை தேவியர் நிறையில் மிக பின்னால் வந்து சேரும் மற்றொரு பாய்கலை தேவி. எங்கோ மானுடர் அறிய இயலா ஆழத்து வெளி ஒன்றில் நின்று ஒருவரை ஒருவர் கண்டும், அவர்கள் இப்போது எங்களைக் கண்டும் புன்னகைத்துக் கொண்டிருக்கிரார்கள்.
கடலூர் சீனு