பயிற்சிகள் பற்றி…

சைவத் திருமுறைகள், அறிமுக வகுப்பு

ஆயுர்வேத அறிமுக வகுப்புகள், அறிவிப்பு

ஜெ,

சைவசித்தாந்தம், ஆயுர்வேதம் ஆகியவற்றைப் பற்றிய பயிற்சி வகுப்புகளின் அறிவிப்புகள் கண்டேன். நீங்கள் தொடர்ச்சியாக ஒரு ஆசிரியர் வரிசையை அறிமுகம் செய்து வருகிறீர்கள். இந்த பயிற்சிகளுக்கு நடுவே ஒரு இணைப்பு உண்டா? அல்லது எந்தெந்த துறைகளில் ஆசிரியர் அமைகிறார்களோ அந்த அடிப்படையில் வகுப்புகளை அமைக்கிறீர்களா?

செந்தில்நாதன்.சி.

அன்புள்ள செந்தில்,

நான் உத்தேசிப்பது ஓர் ஒருங்கிணைந்த கல்வி. அப்படித்தான் கல்வி இருக்க முடியும். கலை- இலக்கியம் – அறிவியல் ஆகிய மூன்றின் கலவையாக. அவை சந்தித்துக்கொள்ளும் ஒரு புள்ளி உண்டு. அதைத்தான் நித்ய சைதன்ய யதி Symphony of Values என்று சொன்னார்.

நம் தமிழ்ச்சிந்தனையில் நான் கண்டுவரும் மிகப்பெரிய பிரச்சினையே இங்குள்ளவர்களுக்கு சிந்தனையில் அடித்தளமே இல்லை என்பதுதான். ஆகவே இலக்கியத்துலோ சமூகசிந்தனையிலோ மேற்கே எது புதியதோ அதை உடனே பாய்ந்து தழுவிக்கொள்வதே இங்கே நிகழ்கிறது. அதேசமயம் அதை ஆழமாக பயிலத்தேவையான சிந்தனைப்பயிற்சியும் இல்லை. ஆகவே உதிரிமேற்கோள்கள் வழியாக அறிந்து அதைக்கொண்டு கற்பனையால் ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை சிந்திக்கும் பொறுப்பு ஐரோப்பியர்களுக்குரியது. நாம் மேற்கோள் காட்டினால் போதும்.

(இப்போது இந்திய அளவிலான இலக்கிய அரங்குகளில் கலந்துகொள்கிறேன். நம்மைவிட மோசம் ஆங்கில எழுத்துலகம். அங்கே எல்லாமே ஞாயிறு இணைப்புகளின் வழி வரும் அறிதல்கள்தான். இந்த இந்திய இலக்கிய விழாக்கள் எனக்களிக்கும் அபாரமான தன்னம்பிக்கையை எண்ணி நானே வியக்கிறேன்)

இன்னொரு பக்கம் இங்கே அடித்தளக் கல்வி உள்ளது. சைவசித்தாந்தம், வைணவ சித்தாந்தம் ஆகியவற்றில் மரபார்ந்த அறிஞர்கள் உள்ளனர். ஆனால் அவர்களைப் பொறுத்தவரை அவையெல்லாம் முன்னோர் சொல். ஆகவே கற்று அப்படியே கடைப்பிடிக்கவேண்டியவை. அவர்களுக்கும் நவீனச் சிந்தனைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆகவே நூல்களை புரிந்துகொள்ளுதல் என்ற அளவிலேயே அச்சிந்தனைப் பயிற்சி உள்ளது.

இங்கே நான் உத்தேசிப்பது ஒரு சிந்தனை இணைப்பை. ஒரே மாணவர் சைவ இலக்கியம், வைணவ இலக்கியம், இந்திய சிந்தனை மரபு, மேலைச்சிந்தனை மரபு, மேலைக் கலைமரபு ஆகியவற்றை ஒரே சமயம் அறிமுகம் செய்துகொள்கையில் அவரில் உருவாகும் ஒரு கூரிய பொதுப்புரிதலை. அது எவ்வகையில் எவரில் நிகழுமென இன்று சொல்லிவிட முடியாது. உருவாகவேண்டுமென விரும்பி செயலாற்றுகிறேன்.

நான் எண்ணியதுபோல இளம் எழுத்தாளர்கள் பரவலாக இவற்றில் கலந்துகொள்ளவில்லை. பெரும்பாலானவர்களுக்கு தெரிந்துகொள்ளும் ஆர்வம் இல்லை. அவர்களின் சிறிய அனுபவ உலகை ஓரிரு ஆண்டுகளில் கற்றுக்கொண்ட இலக்கிய வடிவங்களில் திரும்பத் திரும்ப எழுதிப்பார்க்கவே அவர்கள் விரும்புகிறார்கள். எழுத ஆரம்பித்தபின் எதையுமே கேட்க முடியாமலாகிறது. இதெல்லாம் இங்கே நூறாண்டுகளாக உள்ள போக்குகள்தான். அதில் ஓர் உடைவு நிகழவேண்டுமென எண்ணுகிறேன்.

இந்தக் கோணத்திலேயே ஆயுர்வேதத்தையும் கருதுகிறேன். தன் உடலைப் புரிந்துகொள்ளுதல் எந்த மனிதனுக்கும் தேவையான ஓர் அடிப்படை. உதாரணமாக, இங்கே நாம் சாப்பாட்டைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறோம். இது சூடு, இது குளிர்ச்சி என. அந்த பேச்சுக்கு எந்த ஆயுர்வேத அடிப்படையும் இல்லை. கொஞ்சம் அறிமுகம் அடைந்தாலே நாம் நம் உணவு, நம் வாழ்க்கைமுறை ஆகியவற்றை புரிந்துகொள்ள முடியும். நம் வாழ்க்கையை, உடலை இயல்பாக சரிசெய்துகொள்ள முடியும்.

ஆயுர்வேதம் வெறும் மருத்துவம் அல்ல. அது ஓர் இந்திய அறிதல்முறை. நம் அன்றாட வாழ்க்கையை அறியவே அது உதவும். வாழ்க்கைபற்றி அதற்கென கொள்கைகளும் ஆய்வுமுறைகளும் உண்டு. சிந்திக்கும் எந்த மனிதருக்கும் அவை தேவையானவை. பிற இந்திய சிந்தனைமுறைகளுடன் இணைத்துக்கொண்டால் அவை மேலும் முக்கியமானவை ஆகின்றன

ஒவ்வொரு துறைக்கும் அதற்கான நிபுணர்களையே கண்டடைகிறேன். அவர்களை முன்வைத்து ஒரு வாய்ப்பை உருவாக்கி அளிக்கிறேன். நான் எண்ணிய அளவுக்குப் பங்கேற்பு இல்லை. இயல்பான சோம்பல்கள், அதற்கேற்பச் சொல்லப்படும் சமாளிப்புகளே மிகுதி. ஆனால் நான் எப்போதுமே எதிர்வினைகளால் சோர்வுறுபவன் அல்ல.

ஜெ

 

 

முந்தைய கட்டுரைசுரேஷ்குமார இந்திரஜித்- உரையாடல் பற்றி…
அடுத்த கட்டுரைமுக்தா சீனிவாசன்