ஜெ
நலமா? கலிஃபோர்னியாவிலிருந்து சாரதா.
(புவனேஸ்வரியின் பள்ளித் தோழி சாரதா என்று இனிமேல் அறிமுகம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். சும்மா சும்மா வெள்ளி மலை சென்றேன் என்று எதையாவது கூறி எரிச்சல் மூட்டுகிறார். சரி, நமக்கும் இப்படி உள்வட்டத்தில் ஒரு ஆள் இருப்பது நல்லதுதான் என்று எண்ணி பொறுத்துப் போகிறேன்).
பூன் முகாமில் தங்களிடம் உங்கள் கதைகளை வாசித்து வலையேற்றுவதற்கு அனுமதி கேட்டிருந்தேன். இப்போது, நான் இதுவரை வாசித்திருக்கும் கதைகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டு உங்கள் ஆசிகளைப் பெற விரும்புகிறேன்.
நான் முதலில் வாசிக்க ஆரம்பித்தது, Stories of the True ஆங்கிலக் கதைகளை எனக்குத் தெரிந்த குழந்தைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது போட்டு கேட்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான். என் எட்டு வயது மகளுக்கு நான் ஒரு இரவு படுக்கைக்கு முன் வாசித்துக் காட்டியது ஒரு உச்ச அனுபவம். ஒரு ஐம்பது நிமிடங்கள் சேர்ந்து பசி, ஆற்றாமை, ஏமாற்றம், வியப்பு, சினம், நன்றி, நெகிழ்ச்சி என அத்தனையும் ஒரு வார்த்தை கூட பேசாமல் சேர்ந்து அனுபவித்தோம். அவளுடைய அந்தச் சிறிய, அழகிய முகத்தில் அத்தனை பாவங்கள். சிரிப்பு, கண்ணீர், பதற்றம், கேள்வி, மகிழ்ச்சி, அமைதி என்று அனைத்தும் அவள் கண்களிலும், உதட்டோரத்திலும், புருவச் சுருக்கத்திலும் மின்னி மின்னி மறைந்தன.
அந்த அனுபவம் அளித்த உந்துதலால் The Meal Tally கதையை முழுவதுமாக வாசித்துப் பதிவு செய்தேன். வாய்ப்பு கிடைத்த போது தெரிந்த சில குழந்தைகளுக்குப் காரில் போட்டுக் கேட்க விட்டேன். கதை அப்படியே உள்ளிழுத்துக் கொள்ள ஆர்வமாகக் கேட்டார்கள். எதிர்பார்த்ததைப் போலவே கேள்விகளும் நல்ல உரையாடலும் தொடர்ந்தன. முக்கியமாக, நான் உணர்ந்து கொண்டது, இப்படி வாசிப்பது எனக்கு மிகவும் களிப்பாக இருக்கிறது என்றுதான்.
ஆனாலும், நான் ஒரு நாள் Walmart வாசலில் காரில் யாருக்கோ காத்திருக்கையில், சும்மா ஒரு உத்வேகத்தில் மாடன் மோட்சம் கதை முதல் பகுதியைப் பதிவு செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட பொழுது கிடைத்த எதிர்வினையை நான் எதிர்பார்க்கவில்லை. சாதாரண வாசிப்பாக இல்லாமல் கொஞ்சம் குரல் நடிப்பு செய்திருந்தது சிலருக்குப் பிடிக்கிறது. பரிச்சயமான மதுரைத் தமிழுடன் சினிமாவிலும், நேரிலும் கேட்ட பல வட்டார வழக்குகளைக் கலந்து கட்டி குமரித் தமிழாக மனதில் இத்தனை வருடம் வாசித்துக் கொண்டு இருந்திருக்கிறேன் என்று தெரிந்தது. அது ஒரு பொருட்டாக இருப்பது போல் தெரியவில்லை. நண்பர் ஒருவர் கொடுத்த ஊக்கத்தில் மொத்தக் கதையையும் வாசித்து வலையேற்றி விட்டேன். இப்போது அம்மையப்பம் கதையையும் வாசித்திருக்கிறேன்.
ஒரு நல்ல வாசகராவது தமிழிலக்கிய உலகைக் கண்டடைய இது ஒரு வாயிலாக அமையும் என்றால், உழைப்புக்குப் பலன் கிடைத்ததாக ஆகும்.
இதைத் தொடர்ந்து செய்ய உங்கள் ஆசிகளைக் கோருகிறேன். நீங்கள் கேட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்வீர்களானால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
அள்ள அள்ளக் பெருகுகிறது, உங்களிடமிருந்து பெற்றுக் கொண்டே இருக்கும் அனைத்துக்கும் நன்றிகள்
https://youtube.com/@sharadan13?si=GihM_sdkfQUkh1Gd
https://youtu.be/JVYwZ6l4I7Q?si=97ySnzdlgkYDApgv
https://youtu.be/bIHJZXg4MZ8?si=ld_rJLeQ05uo12uE
சாரதா, கலிஃபோர்னியா
அன்புள்ள சாரதா
வாழ்த்துக்கள்.
எந்தச் செயலானாலும் அதை முழுமையான தீவிரத்துடன் செய்யும்போது ஏற்படும் இருத்தல் உணர்வுதான் மெய்யான விடுதலை. இக்குரலில் ஒரு நம்பிக்கையும் அதன் விளைவான தயக்கமின்மையும் உள்ளது. வாழ்த்துக்கள்
ஜெ